You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
மேண்டோஸ் புயல்: 85கிமீ வேகத்தில் பலத்த காற்றோடு கரையைக் கடக்கும் - முக்கியத் தகவல்கள்
தென்கிழக்கு வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று முன்தினம் காலை (டிச. 07) ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறிய நிலையில், நேற்று நள்ளிரவு புயலாக வலுப்பெற்றது. இந்தப் புயலுக்கு மேண்டோஸ் எனப் பெயரிடப்பட்டுள்ளது.
இன்று (டிச. 09) நள்ளிரவு புதுச்சேரிக்கும் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவுக்கும் இடையே 65 முதல் 75 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்றுடன் கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மேண்டோஸ் புயல் குறித்து நீங்கள் அறிந்துகொள்ள வேண்டிய முக்கியத் தகவல்கள் இங்கே.
- தென் - மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலை கொண்டிருக்கும் தீவிரப் புயலான மாண்டோஸ் புயல் தற்போது மணிக்கு 13 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது. தற்போது சென்னையிலிருந்து தெற்கு - தென் கிழக்கு திசையில் 270 கி.மீ. தூரத்தில் நிலை கொண்டிருக்கிறது.
- இது அடுத்த மூன்று மணி நேரத்தில் சாதாரண புயலாக வலுவிழந்து, வடமேற்கு திசையில் நகர்ந்து, வட தமிழ்நாடு - புதுச்சேரி, தெற்கு ஆந்திர பிரதேசத்தை ஒட்டிய பகுதிகளில், குறிப்பாக மகாபலிபுரத்திற்கு அருகில் கரையைக் கடக்கும்.
- புயல் கரையைக் கடக்கும்போது, அதாவது இன்று நள்ளிரவு முதல் நாளை காலை வரை 75-85 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும்.
- இந்தப் புயல் காரணமாக தமிழ்நாட்டின் வட கடலோர மாவட்டங்களிலும் அதை ஒட்டிய உள் மாவட்டங்களிலும் புதுச்சேரியிலும் கனமழை பெய்யக்கூடும். சில இடங்களில் அதிக கனமழை பெய்யக்கூடும்.
- இந்தப் புயலின் காரணமாக, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், புதுச்சேரி பகுதிகளுக்குத் தீவிர கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
- சென்னை, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவள்ளூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்களுக்கு கன முதல் மிகக் கனமழைக்கான ஆரஞ்சு வண்ண எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
- தமிழ்நாடு, புதுச்சேரி, தெற்கு ஆந்திர பிரதேசம், மன்னார் வளைகுடாவைச் சேர்ந்த மீனவர்கள் டிசம்பர் 10ஆம் தேதிவரை கடலுக்குச் செல்ல வேண்டாமென எச்சரிக்கப்பட்டிருக்கின்றனர்.
- கடல் சீற்றத்தின் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரியின் கடலோரப் பகுதிகளில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. சென்னை மெரீனா கடற்கரையில், மணல் பகுதிகளில் கடல் நீர் புகுந்துள்ளது. கடற்கரையில் உள்ள உயர் கோபுர மின் விளக்குகள் இறக்கப்பட்டு வருகின்றன. மாற்றுத்திறனாளிகளுக்கு எனப் புதிதாக அமைக்கப்பட்ட பாதை சேதமடைந்துள்ளது.
- சென்னை நகரில் காற்றுடன் கூடிய மழை பெய்து வருவதால் அவசியமான காரணங்களுக்காக மட்டுமே பொதுமக்கள் பயணங்களை மேற்கொள்ள வேண்டும் என சென்னை நகர போக்குவரத்துக் காவல்துறை எச்சரித்துள்ளது.
- இந்தப் புயலின் காரணமாக, தமிழ்நாட்டிலேயே சென்னையில் அதிகபட்சமாக 7 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்