'மனைவியை காத்து உயிர் நீத்தார்' - ஹிட்லரின் இனப் படுகொலைக்கு தப்பி சிட்னி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்

    • எழுதியவர், ஹெலன் லிவிங்ஸ்டன்

ஆஸ்திரேலியாவின் போன்டை கடற்கரையில் ஞாயிற்றுக்கிழமை நடந்த துப்பாக்கிச் சூடு தாக்குதலில் குறைந்தது 15 பேர் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவர்களில் பலர் ஹனுக்கா எனப்படும் யூத பண்டிகையின் முதல் நாளைக் குறிக்கும் ஒரு நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர்.

பலியானவர்களில் இரண்டு யூத மத ரபிகள், யூத இனப்படுகொலையில் இருந்து தப்பிய ஒருவர் மற்றும் 10 வயது சிறுமி ஆகியோரும் இருப்பதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இதுவரை அடையாளம் காணப்பட்டவர்களைப் பற்றி தெரிந்தவை இங்கே:

மட்டில்டா, 10

10 வயது சிறுமி பலியானவர்களில் ஒருவர் என்பதை அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். அந்த சிறுமியின் பெயர் மட்டில்டா என உள்ளூர் ஊடகங்களிடம் அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.

அந்தச் சிறுமியின் தாயாருக்காக நிதி திரட்டுவதை ஏற்பாடு செய்த அவரது முன்னாள் ஆசிரியை ஐரினா குட்ஹியூ, "அவள் பிரகாசமான, மகிழ்ச்சியான, சுறுசுறுப்பான குழந்தை. அவளைச் சுற்றியுள்ள அனைவருக்கும் ஒளியைக் கொண்டு வந்தவள் என்று எனக்குத் தெரியும்" என்று எழுதியுள்ளார்.

சிட்னியின் ஹார்மனி ரஷ்யன் பள்ளியும், அச்சிறுமி தங்கள் மாணவர்களில் ஒருவர் என்று உறுதிப்படுத்தியது.

"எங்கள் பள்ளியின் முன்னாள் மாணவி ஒருவர் துப்பாக்கிச் சூட்டில் ஏற்பட்ட காயங்களால் மருத்துவமனையில் உயிரிழந்த செய்தியை மிகவும் வருத்தத்துடன் பகிர்ந்து கொள்கிறோம்," என்று அந்தப் பள்ளி ஃபேஸ்புக்கில் எழுதியது.

"இந்த துயர சம்பவத்தால் பாதிக்கப்பட்ட அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் அனைவருக்கும் எங்கள் எண்ணங்களும், ஆழ்ந்த இரங்கல்களும் உரித்தாகட்டும்... அவருடைய நினைவு எங்கள் இதயங்களில் நிலைத்திருக்கும். மேலும் எங்கள் பள்ளி குடும்பத்தின் ஒரு பகுதியாக அவர் கழித்த நேரத்தை நாங்கள் மதிக்கிறோம்," என்று தெரிவித்தது.

இதற்கிடையில், மட்டில்டாவின் அத்தை ஏபிசி செய்திக்கு அளித்த பேட்டியில், சுடப்பட்டபோது உடன் இருந்த மட்டில்டாவின் சகோதரி, இந்த இழப்பைத் தாங்க முடியாமல் தவிப்பதாகக் கூறினார்.

"அவர்கள் இரட்டையர்களைப் போல இருந்தார்கள், அவர்கள் ஒருபோதும் பிரிந்ததில்லை," என்று அவர் ஏபிசியிடம் கூறினார்.

ரபி எலி ஷ்லாங்கர்

"போன்டை ரபி" என்று அறியப்பட்ட 41 வயது எலி ஷ்லாங்கர், ஞாயிற்றுக்கிழமை நிகழ்வின் முக்கிய ஏற்பாட்டாளர்களில் ஒருவர். அவர் புரூக்ளினை தளமாகக் கொண்ட சர்வதேச ஹாசிடிக் யூத அமைப்பான சபாத் மிஷனின் உள்ளூர் தலைவராக இருந்தார்.

ஐந்து குழந்தைகளின் தந்தையான பிரிட்டனில் பிறந்த இவரின் மரணத்தை, இவரது உறவினர் ரபி சால்மன் லூயிஸ் உறுதிப்படுத்தினார்.

சால்மன் இன்ஸ்டாகிராமில், "எனது அன்பான உறவினர், ரபி எலி ஷ்லாங்கர் இன்று சிட்னியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் கொல்லப்பட்டார். அவர் தனது மனைவியையும் இளம் குழந்தைகளையும், அத்துடன் எனது மாமா, அத்தை மற்றும் சகோதர சகோதரிகளையும் விட்டுச் செல்கிறார்.," என்று எழுதினார்.

சபாத், தனது இணையதளத்தில் வெளியிட்ட பதிவில், ஷ்லாங்கரின் இளைய குழந்தைக்கு வயது வெறும் இரண்டு மாதங்களே ஆவதாகக் கூறியுள்ளது.

டான் எல்கயாம்

பிரெஞ்சு நாட்டவரான டான் எல்கயாமின் மரணத்தை, பிரான்ஸின் வெளியுறவு அமைச்சர் ஜீன்-நோயல் பாரோ உறுதிப்படுத்தினார்.

"சிட்னியில் போன்டை கடற்கரையில் கூடியிருந்த யூத குடும்பங்களைத் தாக்கிய பயங்கரவாத தாக்குதலின் பலியானவர்களில் எங்கள் நாட்டுக்காரரான டான் எல்கயாமும் ஒருவர் என்பதை மிகுந்த துக்கத்துடன் அறிந்து கொண்டோம்," என்று அவர் சமூக ஊடகத்தில் எழுதினார்.

லிங்க்ட்இன் சுயவிவரத்தின்படி, எல்கயாம் என்பிசி யுனிவர்சல் நிறுவனத்தில் ஒரு ஐடி ஆய்வாளராகப் பணிபுரிந்தார், மேலும் கடந்த ஆண்டுதான் ஆஸ்திரேலியாவுக்குக் குடிபெயர்ந்துள்ளார்.

அவர் ஒரு கால்பந்து வீரர் என்றும், தங்கள் பிரிமீயர் லீக் அணியில் "ஒரு முக்கிய உறுப்பினர்" என்றும் மேற்கு சிட்னியில் உள்ள ராக்டேல் இலிண்டின் கால்பந்து கிளப் தங்கள் ஃபேஸ்புக் பக்கத்தில் எழுதியுள்ளது.

அவர் "மிகவும் திறமையானவர் மற்றும் அணியின் சகாக்களிடையே பிரபலமான நபர். டானின் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் அவரை அறிந்த அனைவருக்கும் எங்கள் ஆழ்ந்த இரங்கல்கள். அவர் இல்லாதது உணரப்படும்," என்று கிளப் எழுதியது.

அலெக்சாண்டர் கிளீட்மேன்

அலெக்சாண்டர் கிளீட்மேன் யுக்ரேனிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு வந்தவர். இவர் யூத இனப்படுகொலையில் இருந்து தப்பியவர்களில் ஒருவர்.

"எனக்கு கணவர் இல்லை. அவர் உடல் எங்கே என்று எனக்குத் தெரியவில்லை. யாராலும் எனக்குப் பதில் சொல்ல முடியவில்லை," என்று அவரது மனைவி லாரிசா கிளீட்மேன் ஞாயிற்றுக்கிழமை இரவு சிட்னி மருத்துவமனைக்கு வெளியே செய்தியாளர்களிடம் கூறினார்.

"நாங்கள் நின்று கொண்டிருந்தோம், திடீரென 'பூம் பூம்' என்று சத்தம் வந்தது, எல்லோரும் விழுந்தார்கள். அந்த நேரத்தில் அவர் என் பின்னால் இருந்தார், ஒரு கணத்தில் அவர் எனக்கு அருகில் வர முடிவு செய்தார். அவர் எனக்கு அருகில் இருக்க விரும்பியதால், முன்னோக்கி நகர்ந்தார்," என்று அவர் 'தி ஆஸ்திரேலியன்' செய்தித்தாளிடம் கூறினார்.

"ஆயுததாரிகளின் துப்பாக்கி குண்டுகளில் இருந்து மனைவியைக் காப்பாற்றிவிட்டு அவர் உயிரிழந்தார். மனைவியுடன் 2 குழந்தைகள், 11 பேரக் குழந்தைகளை விட்டு அவர் சென்றுவிட்டார்" என்று சபாத் தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது.

இந்தத் தம்பதியினர் தங்கள் வாழ்க்கைக் கதையின் சில பகுதிகளை 2023 இல் ஜூவிஸ் கேர் என்ற அமைப்புடன் பகிர்ந்து கொண்டனர்.

"குழந்தைகளாக, லாரிசா மற்றும் அலெக்சாண்டர் இருவரும் ஹோலோகாஸ்ட்டின்(யூத இனப்படுகொலை) சொல்ல முடியாத பயங்கரத்தை எதிர்கொண்டனர்," என்று அந்த அமைப்பு தனது ஆண்டு அறிக்கையில் எழுதியது.

"குறிப்பாக அலெக்ஸின் அனுபவங்கள் மனதை உலுக்கும் விதமாக உள்ளன; அவரும் தாயும் தம்பியும் உயிர் பிழைப்பதற்காகப் போராடிய சைபீரியாவின் கொடூரமான நிலைமைகளை அவர் நினைவுகூர்கிறார்."

பீட்டர் மீகர்

முன்னாள் காவல்துறை அதிகாரியான பீட்டர் மீகர், ஹனுக்கா நிகழ்வில் புகைப்படக் கலைஞராகப் பணிபுரியும்போது கொல்லப்பட்டார் என்று அவரது ரக்பி கிளப் உறுதிப்படுத்தியது.

"அவரைப் பொறுத்தவரை, அது தவறான நேரத்தில், தவறான இடத்தில் இருந்த ஒரு பேரழிவு சம்பவம்," என்று ராண்ட்விக் ரக்பி கிளப்பின் பொது மேலாளர் மார்க் ஹாரிசன் அதன் இணையதளத்தில் எழுதினார்.

"'மார்சோ' என்று அனைவராலும் அறியப்பட்ட இவர், எங்கள் கிளப்பில் மிகவும் விரும்பப்பட்ட நபர் மற்றும் ஒரு மாபெரும் மனிதர். பல தசாப்தங்களாக அவர் தன்னார்வத் தொண்டு ஈடுபாட்டைக் கொண்டிருந்தார், அவர் ராண்ட்விக் ரக்பியின் இதயம் மற்றும் ஆத்ம உருவங்களில் ஒருவராக இருந்தார்."

அவர் நியூ சவுத் வேல்ஸ் காவல் படையில் கிட்டத்தட்ட நான்கு தசாப்தங்கள் பணியாற்றினார், அங்கு அவர் "சக ஊழியர்களால் மிகவும் மதிக்கப்பட்டார்" என்று கிளப் கூறியது.

ரூவன் மோரிசன்

ரூவன் மோரிசன் 1970களில் தனது பதின் பருவத்தில் முன்னாள் சோவியத் ஒன்றியத்தில் இருந்து ஆஸ்திரேலியாவுக்குக் குடிபெயர்ந்தார் என்று ஒரு வருடத்திற்கு முன்பு ஏபிசிக்கு அளித்த பேட்டியில் கூறினார்.

"ஆஸ்திரேலியா உலகின் பாதுகாப்பான நாடு, யூதர்கள் எதிர்காலத்தில் அத்தகைய யூத விரோதத்தை எதிர்கொள்ள மாட்டார்கள், நாங்கள் எங்கள் குழந்தைகளை ஒரு பாதுகாப்பான சூழலில் வளர்க்கலாம் என்ற பார்வையுடன் இங்கு வந்தோம்," என்று அவர் கூறினார்.

இவரது மரணத்தை உறுதிப்படுத்திய சபாத், அவர் மெல்போர்னின் நீண்டகால குடியிருப்பாளர் என்றும், ஆனால் சிட்னியில்தான் அவர் "தனது யூத அடையாளத்தைக் கண்டறிந்தார்" என்றும் கூறியது.

"ஒரு வெற்றிகரமான தொழிலதிபர், தனது வருமானத்தை தனது இதயத்திற்கு நெருக்கமான தொண்டு நிறுவனங்களுக்கு, குறிப்பாக போன்டை சபாத்துக்கு, வழங்குவதே இவரது முக்கிய நோக்கம்," என்று அந்த அமைப்பு எக்ஸ் தளத்தில் எழுதியது.

ரபி யாக்கோவ் லெவிடன்

ரபி யாக்கோவ் லெவிடானின் மரணத்தை சபாத் உறுதிப்படுத்தியது, அவர் சிட்னியில் அதன் நடவடிக்கைகளின் "பிரபல ஒருங்கிணைப்பாளர்" என்று சபாத் விவரித்தது. மேலும் யூத கற்றல் மையமாகத் தன்னைக் கூறிக் கொள்ளும் BINA மையத்திலும் பணிபுரிந்தார்.

இதுவரை நடந்தது என்ன?

ஆஸ்திரேலியாவின் சிட்னியில் போன்டை கடற்கரையில் ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 14) உள்ளூர் நேரப்படி மாலை 6:47 மணிக்கு யூத சமூகத்தின் ஹனுக்கா (Hanukkah) கொண்டாட்டத்தை குறி வைத்து நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 15 பேர் உயிரிழந்துள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தத் தாக்குதலில் குறைந்தது 20 பேர் காயமடைந்த நிலையில், அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்

துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் குற்றம்சாட்டப்படும் இருவர், தந்தை- மகன் என்றும், சஜித் அக்ரம் (50) மற்றும் அவரது மகன் நவீத் அக்ரம் (24) என்றும் உள்ளூர் ஊடகங்கள் அடையாளம் கண்டுள்ளன. சஜித் காவல்துறையின் பதில் தாக்குதலில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார், காயமடைந்த நவீத் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இது ஒரு 'யூத எதிர்ப்பு பயங்கரவாதச் சம்பவம்' என்று ஆஸ்திரேலியப் பிரதமர் விவரித்துள்ளார். அத்துடன், துப்பாக்கி வைத்திருப்பது தொடர்பான கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.

சம்பவ இடத்தில் இருந்த 43 வயதான அகமது அல் அகமது என்பவர், துப்பாக்கிச்சூடு நடத்திய இரு நபர்களில், ஒருவரை மடக்கிப் பிடித்து அவரிடமிருந்த ஆயுதத்தைப் பறித்தார். அவரது செயலுக்காகப் பாராட்டுகள் குவிந்து வரும் நிலையில், அவருக்காக 10 லட்சம் ஆஸ்திரேலிய டாலர்களுக்கும் அதிகமான நிதி திரட்டப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவத்திற்கு ஒரு மாதத்திற்கு முன்பு துப்பாக்கிச்சூடு நடத்திய நபர்கள் இருவரும் பிலிப்பின்ஸ் நாட்டிற்குச் சென்றது குறித்து ஆஸ்திரேலிய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சஜித் அக்ரம் இந்திய பாஸ்போர்ட்டையும், அவரது மகன் நவீத் ஆஸ்திரேலிய பாஸ்போர்ட்டையும் பயன்படுத்தி பிலிப்பின்ஸ் நாட்டிற்குப் பயணம் செய்ததாக மணிலாவில் உள்ள குடிவரவு அதிகாரிகள் பிபிசியிடம் தெரிவித்தனர்.

துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் குற்றம் சாட்டப்படும் சஜித் அக்ரம் (50) இந்தியாவின் ஹைதராபாத் நகரைச் சேர்ந்தவர் என்று தெலங்கானா மாநில காவல்துறை தெரிவித்துள்ளது.

இந்தத் தாக்குதல் "இஸ்லாமிய அரசு (ஐஎஸ்) அமைப்பின் சித்தாந்தத்தால் தூண்டப்பட்டதாகத் தெரிகிறது" என ஆஸ்திரேலியப் பிரதமர் கூறியுள்ளார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு