புரிசை கண்ணப்ப சம்பந்தன்: தெருக்கூத்து கலைக்காக வாழ்வையே அர்ப்பணித்த 71 வயது கலைஞர்

காணொளிக் குறிப்பு,
புரிசை கண்ணப்ப சம்பந்தன்: தெருக்கூத்து கலைக்காக வாழ்வையே அர்ப்பணித்த 71 வயது கலைஞர்

தெருக்கூத்து என்பது தமிழ்நாட்டின் தொன்மையான நாட்டுப்புறக் கலைவடிவங்களில் ஒன்று. நாட்டுப்புறக் கதைகள், புராண/இதிகாசக் கதைகளை அடிப்படையாகக் கொண்டு, இரவு நேரங்களில் வீதிகளில் மேடை அமைத்து இது நடத்தப்படும்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள புரிசை கிராமத்தைச் சேர்ந்த கண்ணப்ப சம்பந்தன், தமிழ்நாட்டின் மூத்த தெருக்கூத்து கலைஞர்களில் ஒருவர்.

புரிசை கிராமம், தெருக்கூத்து கலையின் மையமாக உள்ளது. 71 வயதான கண்ணப்ப சம்பந்தன், இந்த கிராமத்தின் ஐந்தாம் தலைமுறை தெருக்கூத்து கலைஞர். அவர் தனது 18வது வயதில் முதன்முதலாக அரிதாரம் பூசினார்.

ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக தெருக்கூத்திற்கு இவர் அளித்த பங்களிப்பிற்காக, பத்மஸ்ரீ விருதை அறிவித்துள்ளது மத்திய அரசு.

"தமிழில் முத்தமிழ் என்று சொல்வோம், இயல், இசை, நாடகம். இந்த மூன்றும் சேர்ந்த ஒரு கலைவடிவம் தான் தெருக்கூத்து. நடிகனே பாட வேண்டும், வசனம் பேச வேண்டும், ஆட வேண்டும். ஒப்பனையும் அவனே செய்ய வேண்டும். எனவே இதுவொரு தனித்துவமான கலைவடிவம்" என்கிறார் கண்ணப்ப சம்பந்தன்.

மெல்ல அழிந்து வரும் தெருக்கூத்து கலையை அடுத்த தலைமுறைக்கும் கொண்டு செல்ல, 2007 முதல் புரிசை கிராமத்தில் 'தெருக்கூத்து பயிற்சிப் பள்ளி' ஒன்றை அவர் நடத்திவருகிறார். இதுவரை 400க்கும் மேற்பட்ட தெருக்கூத்து கலைஞர்களை இந்தப் பள்ளி உருவாக்கியுள்ளது என்றும் அவர் கூறுகிறார்.

1980களில் தொடங்கி, பல்வேறு நாடுகளுக்கு சென்று தெருக்கூத்தை அரங்கேற்றியுள்ளார் கண்ணப்ப சம்பந்தன். மகாபாரதம் மற்றும் ராமாயணக் கதைகள் மட்டுமல்லாது, சில வெளிநாட்டு இலக்கியங்களையும் தெருக்கூத்திற்கு அறிமுகப்படுத்தியுள்ளது இவரது குழு.

ஆண்கள் சார்ந்த ஒரு கலையாகவே பார்க்கப்படும் தெருக்கூத்தை, தனது மூன்றாவது மகள் கௌரிக்கும் கற்றுக்கொடுத்துள்ளார் கண்ணப்ப சம்பந்தன்.

தெருக்கூத்தின் மீதுள்ள ஆர்வத்தால் தொடர்ந்து அரிதாரம் பூசினாலும், வாழ்வாதாரத்திற்கு வேறு பணிகளையே நம்பியுள்ளனர் இவரது குழுவினர்.

தயாரிப்பாளர்: சிராஜ்

ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பு: சாம் டேனியல்

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)