'நான் இன்னும் அதிபர்தான், கடத்தப்பட்டுள்ளேன்' - அமெரிக்க நீதிமன்றத்தில் மதுரோ கூறியது என்ன?
கடந்த சனிக்கிழமையன்று அமெரிக்காவால் சிறைபிடிக்கப்பட்ட வெனிசுவேலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவி சிலியா ஃப்ளோரிஸ், திங்கட்கிழமையன்று நியூயார்க் நகர நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
நீதிமன்ற அறைக்குள் என்ன நடந்தது? மதுரோ பேசியது என்ன? இந்த காணொளியில் பார்க்கலாம்.
மதுரோ, நியூயார்க் தெற்கு மாவட்ட நீதிமன்றத்திற்குள் சிறைச்சாலை சீருடையில் நடந்து வந்ததாக பிபிசியின் அமெரிக்க கூட்டு நிறுவனமான சிபிஎஸ் செய்திகள் தெரிவிக்கின்றன.
அவரின் மனைவியும் அதே உடையில்தான் இருந்தார். இருவரின் கைகளும் கட்டப்படவில்லை.
நீதிமன்ற அறைக்குள் நுழைந்த போது, மதுரோ பார்வையாளர்களில் இருந்த பலரை நோக்கித் தலையசைத்து அவர்களை வாழ்த்தினார்.
விசாரணை நடவடிக்கைகள் முழுவதும் அவர் இந்த அமைதியான மற்றும் உணர்ச்சியற்ற தன்மையையே தொடர்ந்தார்.
மதுரோ நீதிமன்றத்திற்குள் நுழைந்த சில நிமிடங்களில், நீதிபதி ஆல்வின் ஹெல்லர்ஸ்டைன், விசாரணை நடவடிக்கைகளை தொடங்குவதற்காக மதுரோவிடம் அவரது அடையாளத்தை உறுதிப்படுத்துமாறு கேட்டார்.
அதற்கு, "நான் நிக்கோலஸ் மதுரோ. நான் வெனிசுவேலா குடியரசின் அதிபர். நான் ஜனவரி 3ஆம் தேதி முதல் இங்கு கடத்தப்பட்டு இருக்கிறேன்" என ஸ்பானிஷ் மொழியில் பதிலளித்தார். தான் வெனிசுவேலாவின் கராகஸில் உள்ள தனது வீட்டில் வைத்துப் சிறைபிடிக்கப்பட்டதாகவும் மதுரோ கூறினார்.
ஒரு மொழிப்பெயர்ப்பாளர் இதனை நீதிமன்றத்தில் மொழிபெயர்த்தார்.
மதுரோ பேசுகையில் குறுக்கிட்ட நீதிபதி, "இவை அனைத்தையும் பற்றிப்பேச ஒரு நேரமும் இடமும் வரும்" என்றார்.
இந்த விசாரணை 40 நிமிடங்கள் நடந்தன. அப்போது மதுரோவும் அவரது மனைவி சிலியா ஃப்ளோரிஸும் போதைப்பொருள் மற்றும் ஆயுதங்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளில் தாங்கள் குற்றமற்றவர்கள் என வாதிட்டனர்.
அப்போது, "நான் நிரபராதி. நான் குற்றவாளி இல்லை. நான் ஒரு ஒழுக்கமான மனிதன், என் நாட்டின் அதிபர்," என அவர் கூறினார்.
தானும் முற்றிலும் நிரபராதி என சிலியா கூறினார்.
நீதிமன்றத்தின் பொது மக்களுக்கான பகுதியில் இருந்த ஒருவர் திடீரென, "மதுரோ தனது குற்றங்களுக்காக விலை கொடுக்க நேரிடும்" எனக் கத்திய போதும் மதுரோ அமைதியை கடைப்பிடித்தார்.
"நான் அதிபர் மற்றும் போர்க்கைதி" என அந்த நபரை நோக்கி ஸ்பானிஷ் மொழியில் கூறினார் மதுரோ. பின்னர் அந்நபர் அறையிலிருந்து வெளியேற்றப்பட்டார்.
நீதிமன்றத்தின் நடப்பவற்றை மதுரோ ஒரு மஞ்சள் நிற சட்டப் புத்தகத்தில் குறிப்பெடுத்துக்கொண்டார். விசாரணைக்குப் பிறகு அதைத் தன்னுடன் வைத்துக்கொள்ளலாமா என்று நீதிபதியிடம் கேட்டு உறுதிப்படுத்திக் கொண்டார்.
மறுபுறம் புளோரஸ்-ம் கண்கள் மற்றும் நெற்றியில் கட்டுகளுடன் அமைதியாக இருந்தார். சனிக்கிழமையன்று கைது செய்யப்பட்டபோது ஏற்பட்ட காயங்களுக்கான கட்டு இவை.
இவருக்கு முறையான சிகிச்சை அளிக்க வேண்டும் என அவரது வழக்கறிஞர்கள் கேட்டுக்கொண்டனர்.
தனது முன்னாள் தலைவர் அமெரிக்க மார்ஷல்களால் சிறைச்சாலை உடையில் நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்படுவதைப் பார்ப்பது மிகவும் கடினமாக இருந்ததாக வெனிசுவேலாவை சேர்ந்த செய்தியாளர் மைபோர்ட் பெட்டிட் கூறினார்.
வழக்கு விசாரணையின் போது மதுரோவும் அவரது மனைவியும் பிணை கோரவில்லை.
போதைப்பொருள் பயங்கரவாத சதி, கோகெயின் இறக்குமதி சதி, இயந்திர துப்பாக்கிகள் மற்றும் அழிவுகரமான சாதனங்களை வைத்திருத்தல் மற்றும் இயந்திர துப்பாக்கிகள் மற்றும் அழிவுகரமான சாதனங்களை வைத்திருக்க சதி செய்ததாக மதுரோ மீது அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது.
மதுரோவின் மனைவி, மகன் மற்றும் பலருடன் சேர்த்து அவர் மீதும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த வழக்கின் அடுத்த நீதிமன்ற விசாரணை மார்ச் 17ஆம் தேதி நடக்கிறது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



