பிறப்புறுப்பை ஆக்கிரமிக்கும் ஒட்டுண்ணியால் "நத்தைக் காய்ச்சல்" - மலட்டுத்தன்மை ஏற்படுத்துமா?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், கேட் போவி
- பதவி, குளோபல் ஹெல்த், பிபிசி உலக சேவை
- வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்
இந்த ஒட்டுண்ணிகள் தோலின் வழியாக உடலுக்குள் நுழைந்து, ரத்தத்தில் மறைந்து கொள்கின்றன. பின்னர் அதன் முட்டைகள் கல்லீரல், நுரையீரல் மற்றும் பிறப்புறுப்புப் பகுதிகளில் தங்கிவிடுகின்றன. மேலும், இது பல ஆண்டுகளாகக் கண்டறியப்படாமலேயே உடலில் இருக்கக்கூடும்.
'நத்தை காய்ச்சல்' என்று அழைக்கப்படும் இந்த கவனிக்கப்படாத ஒட்டுண்ணி நோய், தற்போது உருமாற்றம் அடைந்து வரலாம் என்றும், இந்த மாற்றம் அதனைக் கட்டுப்படுத்துவதை இன்னும் கடினமாக்கலாம் என்றும் விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர்.
ஒவ்வொரு ஆண்டும் சுமார் 250 மில்லியன் மக்கள் இந்நோய்க்காக சிகிச்சை பெறுகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் ஆப்ரிக்காவில் வசிக்கின்றனர். ஏனெனில், இந்த ஒட்டுண்ணியைப் பரப்பும் குறிப்பிட்ட வகை நத்தைகள் அங்குதான் அதிகமாகக் காணப்படுகின்றன.
ஆனால், சீனா, வெனிசுவேலா மற்றும் இந்தோனீசியா உட்பட உலகம் முழுவதும் 78 நாடுகளில் இந்த ஒட்டுண்ணி பரவல் பதிவாகியுள்ளது.
இந்த ஒட்டுண்ணியில் ஏற்பட்டுள்ள மாற்றம் காரணமாக, இது புதிய பகுதிகளுக்கும் பரவக்கூடும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதனால் உலக சுகாதார அமைப்பு இதனை "உலகளாவிய கவலைக்குரிய விஷயம்" என்று அறிவித்துள்ளது.
உலக சுகாதார அமைப்பு உலக புறக்கணிக்கப்பட்ட வெப்ப மண்டல நோய்கள் தினத்தை அனுசரிக்கும் நிலையில் இந்த எச்சரிக்கை வெளியாகியுள்ளது.
வைரஸ், பாக்டீரியா, ஒட்டுண்ணிகள் மற்றும் பூஞ்சைகளின் காரணமாக உருவாகும் இந்த நோய்கள், வறுமையில் வாழும் பகுதிகளில் இருக்கும் ஒரு பில்லியனுக்கும் மேற்பட்ட மக்களை அதிகமாகப் பாதிப்பதை உலகளவில் எடுத்துக்காட்டுவதே இந்த தினத்தின் நோக்கமாகும்.
நத்தை காய்ச்சல் என்றால் என்ன?
நத்தைகளால் வெளியிடப்படும் லார்வா புழுக்கள் நிறைந்த நீரில், மனிதர்களோ அல்லது விலங்குகளோ இறங்கும்போது இந்த 'நத்தை காய்ச்சல்' ஏற்படுகிறது.
இந்த புழுக்கள் ஒருவித நொதியை வெளியிட்டு தோலை அரித்து, உடலுக்குள் ஊடுருவிச் செல்கின்றன.
உடலுக்குள் சென்ற இவை வளர்ந்து முழுமையான புழுக்களாக மாறி, ரத்த நாளங்களில் குடியேறுகின்றன. பின்னர் பெண் புழுக்கள் முட்டைகளை இடுகின்றன. இந்த முட்டைகள் மலம் அல்லது சிறுநீர் வழியாகக் கடத்தப்படுகின்றன. சில நேரங்களில் இவை உடல் திசுக்களிலேயே சிக்கிக்கொள்ளலாம்.
இந்த முட்டைகளுக்கு எதிராக நமது உடலின் நோய் எதிர்ப்பு மண்டலம் செயல்படும்போது, சுற்றியுள்ள ஆரோக்கியமான திசுக்களும் அழிகின்றன. இது படிப்படியாக உடலின் முக்கிய உறுப்புகளைச் சேதப்படுத்தக்கூடும்.
இந்த முட்டைகள் இடுப்புப் பகுதியின் உறுப்புகளிலும் அல்லது அவற்றைச் சுற்றியுள்ள பகுதியிலும் தங்கிவிடக்கூடும். இதற்கு 'யுரோஜெனிட்டல் சிஸ்டோசோமியாசிஸ்' என்று பெயர். இந்நோய் வயிற்று வலி, புற்றுநோய் மற்றும் தீவிரமான நிலையில் மரணத்தையும் ஏற்படுத்தலாம்.
நத்தை காய்ச்சலை ஒட்டுண்ணி எதிர்ப்பு மருந்துகள் மூலம் குணப்படுத்த முடியும். சிறுவர்கள், விவசாயிகள் மற்றும் மீனவர்கள் போன்ற அதிக ஆபத்தில் இருப்பவர்கள், பல ஆண்டுகளுக்குத் தொடர்ந்து ஆண்டுதோறும் இந்த மருந்துகளை எடுத்துக்கொள்ள வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு பரிந்துரைக்கிறது.
இருப்பினும், இந்த ஒட்டுண்ணியின் புதிய வடிவங்கள் தற்போதைய சிகிச்சை முறைகளில் இருந்து தப்பித்துவிடக்கூடும் என்று மலாவி லிவர்பூல் வெல்கம் மருத்துவ ஆராய்ச்சி திட்டத்தின் இணை இயக்குநர் பேராசிரியர் ஜெனிலிசா முசாயா போன்ற விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
பெரிய ஆபத்தின் தொடக்கமாக இருக்கலாம்
இந்தத் தொடர் பரவலுக்குக் காரணம் என்ன? மனிதர்களையும் விலங்குகளையும் பாதிக்கும் வெவ்வேறு வகை ஒட்டுண்ணிகள் ஒன்றோடு ஒன்று இணைந்து, புதிய "கலப்பின" ஒட்டுண்ணிகளை உருவாக்குவதாக ஆய்வுகள் வெளிப்படுத்துகின்றன.
இந்தக் கலப்பின ஒட்டுண்ணிகள் மனிதர்களையும் விலங்குகளையும் ஒரே நேரத்தில் பாதிக்கக்கூடியவை. இதனால், நோய் பரவுவதைக் கட்டுப்படுத்துவது மிகவும் கடினமாகிறது.
விலங்கு மற்றும் மனிதர்களைப் பாதிக்கக் கூடிய ஒட்டுண்ணிகள் ஒன்றுக்கொன்று இனப்பெருக்கம் செய்வதை விஞ்ஞானிகள் ஏற்கனவே அறிந்திருந்தனர். ஆனால் இந்த கலப்பின முட்டைகள் வெற்றிகரமாக குஞ்சு பொரித்து அவை தங்கியிருந்த உடல்களுக்கு வெளியே உயிர்வாழ்கின்றனவா என்பது குறித்து அவர்களுக்குத் தெரியவில்லை.
இதனை நிரூபிக்க, தேர்ந்தெடுக்கப்பட்ட மாலவி பகுதிகளில் மனிதர்களிடமிருந்தும் விலங்குகளிடமிருந்தும் மாதிரிகளை அவர்கள் சேகரித்தனர். பரிசோதித்த ஒட்டுண்ணிகளில் 7% கலப்பின மாற்றுருக்கள் எனக் கண்டறியப்பட்டது. இது அவர்கள் எதிர்பார்த்ததைவிட மிக அதிகமான அளவாகும்.
இதனால், இந்த மாற்றுரு ஒட்டுண்ணிகள் வெற்றிகரமாகப் பெருகி, எதிர்காலத்தில் பரவக்கூடும் எனத் தெரிய வருகிறது.
"இயற்கையில் பரவல் தொடர்ந்தால், இது மிகப் பெரிய அளவில் பெருக்கக்கூடும்" என்று முசாயா பிபிசியிடம் தெரிவித்தார்.
அவரது குழு சில குறிப்பிட்ட பகுதிகளில் மட்டுமே ஆய்வு செய்துள்ளதால், இது "பெரிய ஆபத்தின் தொடக்கமாக" இருக்கலாம் என்றும், எல்லா சூழ்நிலைகளிலும் பரிசோதனைகளால் இதனைக் கண்டறிய முடியாமல் போவதால், உண்மையான நிலை இதைவிட மோசமாக இருக்கக்கூடும் என்றும் அவர் எச்சரிக்கிறார்.
அதுமட்டுமின்றி, எதிர்காலத்தில், இந்த கலப்பின ஒட்டுண்ணிகள் அசல் வகை ஒட்டுண்ணிகளை விட அதிகரிக்கக்கூடும் என்றும் முசாயா எச்சரிக்கிறார்.
இது ஒரு பெரிய பிரச்னையாக மாறக்கூடும். ஏனெனில், இந்த கலப்பினங்களை உடலில் கொண்டிருக்கும் நோயாளிகளுக்கு எவ்வாறு சிகிச்சை செய்ய வேண்டும் என்பது குறித்து மருத்துவர்களுக்கு இன்னும் தெளிவில்லை என்று அவர் குறிப்பிட்டார்.
மேலும், "இது ஒரு எச்சரிக்கை மணி. கொள்கை வகுப்பாளர்கள் இப்போதே விழித்துக்கொள்ள வேண்டும். இவை மிகப்பெரிய பிரச்னையாக மாறுவதற்கு முன்பு நாம் ஏதாவது விரைவாகச் செய்ய முடியுமா எனச் சிந்திக்க வேண்டும்" என்றும் அவர் தெரிவித்தார்.
இந்த ஒட்டுண்ணிகள் இனப்பெருக்க உறுப்புகளை பாதிக்குமா?
இந்த ஆய்வு, கலப்பின ஒட்டுண்ணிகள் மனிதர்களின் இனப்பெருக்க உறுப்புகளைப் பாதித்து வருவதாகவும் வெளிப்படுத்தியுள்ளது.
ஆனால், கலப்பின நத்தை காய்ச்சல் நோயை கண்டறிதல் கடினமாக உள்ளது. காரணம், அவற்றின் முட்டைகள் நுண்ணோக்கியில் பார்ப்பதற்கு வழக்கமான ஒட்டுண்ணியின் முட்டைகளைப் போல தோற்றமளிப்பதில்லை.
மேலும், அதன் அறிகுறிகளை சுகாதாரப் பணியாளர்கள் பாலியல் வழி பரவும் தொற்று எனத் தவறாக புரிந்துகொள்ளும் அபாயமும் உள்ளது.
ஒருவேளை இதற்கு முறையான சிகிச்சை அளிக்கப்படாவிட்டால், பிறப்புறுப்பில் புண்கள் ஏற்படுதல், மலட்டுத்தன்மை மற்றும் எச்.ஐ.வி தொற்று ஏற்படும் அபாயம் போன்றவை அதிகரிக்கக்கூடும். பெண்களைப் பொறுத்தவரை, இதன் மருத்துவ, சமூக மற்றும் இனப்பெருக்க விளைவுகள் மிக மோசமானவையாகக் கருதப்படுகின்றன.
"ஒரு பெண்ணால் குழந்தை பெற்றுக்கொள்ள முடியவில்லை என்றால் என்ன நடக்கும் என்று சிந்தித்துப் பாருங்கள்... எங்களது கலாச்சாரத்தில் குழந்தை பெற்றுக்கொள்வது என்பது மிக முக்கியமான ஒன்றாகக் கருதப்படுகிறது. குழந்தை இல்லை என்றால் மக்கள் உங்களை ஏளனம் செய்யத் தொடங்குவார்கள். இது உண்மையில் மிக மோசமான மற்றும் வருத்தமளிக்கக்கூடிய ஒரு நோய்," என்கிறார் முசாயா.

அணுகுமுறை மாற்றம்
இந்தக் கலப்பின ஒட்டுண்ணிகள், புதிய பகுதிகளுக்கு நோய் பரவுவதற்கு ஒரு பாலமாக அமைகின்றன என்று விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
காலநிலை மாற்றம், பயணம் மேற்கொள்வோர் மற்றும் மக்களின் இடப்பெயர்வு போன்றவை இந்த நத்தைக் காய்ச்சல் பரவுவதற்கு முக்கியக் காரணங்களாகும்.
தற்போது கலப்பின ஒட்டுண்ணிகள் உருவாகியுள்ளதால், இந்தப் பரவலைக் கட்டுப்படுத்துவதை இன்னும் சவாலானதாக மாற்றியுள்ளது. தெற்கு ஐரோப்பாவின் சில பகுதிகளில் ஏற்கனவே இத்தகைய பரவல்கள் பதிவாகியுள்ளன.
"இது ஒரு உலகளாவிய கவலை," என்கிறார் உலக சுகாதார அமைப்பின் சிஸ்டோசோமியாசிஸ் கட்டுப்பாட்டுத் திட்டத்தின் தலைவர் அமடு கார்பா ஜிர்மாய்.
இந்த மாற்றங்கள் நோயை முற்றிலும் ஒழிக்கும் இலக்கைப் பாதிக்கலாம் என்று உலக சுகாதார அமைப்பு கவலை கொண்டுள்ளது.
"மனிதர்களிடையே பரவல் இல்லாத சில நாடுகளில் கூட, விலங்குகளிடம் இந்த ஒட்டுண்ணிகள் இன்னும் உயிர்வாழ்கின்றன. இது மீண்டும் மனிதர்களுக்குப் பரவும் அபாயத்தை ஏற்படுத்துகிறது," என்று அவர் கூறுகிறார்.
இந்த புதிய அச்சுறுத்தலை எதிர்கொள்ள உலக சுகாதார அமைப்பு தனது அணுகுமுறையை மாற்றி வருகிறது. இந்த ஆண்டு, விலங்குகளிடம் இந்த நோயைக் கட்டுப்படுத்துவதற்கான புதிய வழிகாட்டுதல்களை அது வெளியிட உள்ளது. மேலும், கலப்பின ஒட்டுண்ணிகள் குறித்து நாடுகளுக்கு ஏற்கனவே சர்வதேச எச்சரிக்கைகளை அனுப்பியுள்ளது.
பெரிய அளவிலான ஒட்டுண்ணி எதிர்ப்பு மருந்து வழங்கும் திட்டங்களால், 2006 முதல் 2024 வரையிலான காலப்பகுதியில் நத்தைக் காய்ச்சல் பாதிப்புகள் 60% வரை குறைந்தன.
ஆனால், இந்த முன்னேற்றம் தொடர நிதி உதவி அவசியம்.
2018 முதல் 2023 வரை, இத்தகைய புறக்கணிக்கப்பட்ட வெப்பமண்டல நோய்களுக்கான நிதி உதவி 41% குறைந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு கூறுகிறது.
ஆயினும், இந்த நோயைத் தடுத்து நிறுத்திவிடலாம் என்ற நம்பிக்கையை பேராசிரியர் முசாயா கைவிடவில்லை.
"நாம் இந்த நோயை முற்றிலும் ஒழிக்க முடியும், ஆனால் இது ஒரு நபரால் செய்யக்கூடிய வேலை அல்ல. நாங்கள் முன்னெச்சரிக்கையுடன் செயல்படுகிறோம். 'இது நமக்கான பிரச்னை, இதை இப்போதே கையாள்வோம்' என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்," என்கிறார் அவர்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு












