சென்னையில் பழைய வானிலை ரேடார் தரவுகள் நம்பகமானவையா? மாற்றும் ஏற்பாடுகள் என்ன?

சென்னை, வானிலை ரேடார் தரவுகள், மழை, இயற்கை
படக்குறிப்பு, கோப்புப் படம்
    • எழுதியவர், யாழினியன்
    • பதவி, செய்தியாளர், பிபிசி தமிழ்
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

சென்னையில் 2002-ஆம் ஆண்டு நிறுவப்பட்ட எஸ்-பேண்ட் (S-band) வானிலை ரேடார் 24 ஆண்டுகளாகச் செயல்பட்டு வரும் நிலையில், அதன் தரவுகள் எவ்வளவு நம்பகமானவை என்பது சமீப காலங்களில் விவாதப்பொருளாகியுள்ளது.

ரேடார் பழையதாக இருந்தாலும் அதன் தரவுகள் நம்பகமானவை என சுயாதீன வானிலை ஆய்வாளர் ஶ்ரீகாந்த் கூறுகிறார். அதேநேரத்தில், ரேடாரை மாற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் வானிலை கண்காணிப்பை மேம்படுத்துவதற்காகப் புதிதாக ஐந்து டாப்ளர் வானிலை ரேடார்களை நிறுவும் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இவை பயன்பாட்டுக்கு வந்தால், தற்போது கண்காணிப்பில் இடைவெளிகள் உள்ள பகுதிகளிலும் மழைப்பொழிவு, இடியுடன் கூடிய மழை மற்றும் பிற தீவிர வானிலை நிகழ்வுகளைத் துல்லியமாகக் கண்காணிக்க உதவும்.

வானிலை கண்காணிப்பில் ரேடார் ஏன் முக்கியம்?

டாப்ளர் வானிலை ரேடார் மழை மேகங்கள் எங்கு உருவாகின்றன, எந்தத் திசையில் நகர்கின்றன, அவற்றின் தீவிரம் எவ்வாறு மாறுகிறது என்பதைக் கண்காணிக்க உதவுகிறது.

ரேடார் அனுப்பும் மின்காந்த அலைகள் மழைத்துளிகள் உள்ளிட்ட வளிமண்டலத்தில் உள்ள துகள்களின் மீது பட்டு மீண்டும் திரும்புகின்றன. அவற்றை ஆய்வு செய்வதன் மூலம் மழையின் பரவல், மேகங்களின் நகர்வு, காற்றின் வேகம் மற்றும் திசை குறித்த தகவல்களைப் பெற முடியும்.

சென்னை ரேடார் சுமார் 400 முதல் 500 கி.மீ. தொலைவு வரையிலான வானிலை அமைப்புகளைக் கண்காணிக்கும் திறன் கொண்டது. அதன் தரவுகள் இடியுடன் கூடிய மழை, கனமழை மற்றும் புயல் போன்ற நிகழ்வுகளைக் கண்காணிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன.

சென்னை, வானிலை ரேடார் தரவுகள், மழை, இயற்கை
படக்குறிப்பு, டாப்ளர் வானிலை ரேடார் மழை மேகங்கள் எங்கு உருவாகின்றன, எந்தத் திசையில் நகர்கின்றன என்பதைக் கண்காணிக்க உதவுகிறது.

எஸ்-பேண்ட், சி-பேண்ட், எக்ஸ்-பேண்ட்- என்ன வித்தியாசம்?

வானிலை ரேடார்கள் பயன்படுத்தும் அலைவரிசையைப் பொறுத்து எஸ்-பேண்ட் (S-band), சி-பேண்ட் (C-band), எக்ஸ்-பேண்ட் (X-band) என வகைப்படுத்தப்படுகின்றன.

எஸ்-பேண்ட் (S-band) ரேடார்கள் நீண்ட தொலைவிலுள்ள வானிலை அமைப்புகளைக் கண்காணிக்கப் பயன்படுகின்றன. புயல்கள், கனமழை மற்றும் பெரிய வானிலை அமைப்புகளைக் கண்காணிப்பதில் இவை முக்கியமானவை.

சி-பேண்ட் (C-band) ரேடார்கள் பிராந்திய அளவிலான வானிலை கண்காணிப்புக்கு உதவுகின்றன.

எக்ஸ்-பேண்ட் (X-band) ரேடார்கள் ஒப்பீட்டளவில் குறைந்த தொலைவில் விரிவான தகவல்களைப் பெற உதவுவதால், உள்ளூர் அளவிலான வானிலை கண்காணிப்புக்கும் உடனடி முன்னறிவிப்புகளுக்கும் பயன்படுகின்றன.

பொதுவாக, எஸ்-பேண்ட் (S-band) ரேடார்கள் 400 முதல் 500 கி.மீ. வரையிலும், சி-பேண்ட் (C-band) ரேடார்கள் 250 முதல் 300 கி.மீ. வரையிலும், எக்ஸ்-பேண்ட் (X-band) ரேடார்கள் 180 முதல் 200 கி.மீ. வரையிலும் கண்காணிப்புத் தொலைவைக் கொண்டிருக்கலாம். இவை ரேடாரின் வடிவமைப்பு மற்றும் செயல்பாட்டைப் பொறுத்து மாறுபடும்.

ரேடாரின் தரவுகள் குறித்து எழுந்த கேள்விகள்

சென்னை, வானிலை ரேடார் தரவுகள், மழை, இயற்கை
படக்குறிப்பு, கோப்புப் படம்
வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்அப் விளம்பரம் - படம்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

சென்னை துறைமுகப் பகுதியில் அமைந்துள்ள எஸ்-பேண்ட் (S-band) ரேடார் 2002-ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. அதன் இயந்திரப் பாகங்களில் ஏற்பட்ட பழுதுகள் காரணமாக, கடந்த காலங்களில் அதன் செயல்பாட்டில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன.

2022-ஆம் ஆண்டு இந்த ரேடாரின் சுழற்சி அமைப்பில் உள்ள ஸ்லூ ரிங் பேரிங்கை மாற்றுவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதுகுறித்து மத்திய புவி அறிவியல் அமைச்சகம் நாடாளுமன்றத்தில் அளித்த பதிலில், இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) அந்தப் பணியை மேற்கொள்ள நடவடிக்கை எடுத்ததாகத் தெரிவித்திருந்தது.

ரேடாரின் செயல்பாடு குறித்த விவாதம் அதற்கு முன்னரே எழுந்திருந்தது. 2021 டிசம்பரில் சென்னையில் கனமழை பெய்தபோது, வானிலை முன்னறிவிப்பில் ஏற்பட்ட குறைபாடுகள் குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டன. அப்போது தமிழகத்தை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் தயாநிதி மாறன், சு. வெங்கடேசன் உள்ளிட்டோர் சென்னை துறைமுகத்தில் இருந்த பழைய டாப்ளர் வானிலை ரேடாரின் நிலை குறித்தும், அதைச் சரிசெய்து புதிய ரேடார் அமைக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் கவலை தெரிவித்திருந்தனர்.

தயாநிதி மாறன், 2020 டிசம்பரிலும் 2021 நவம்பரிலும் ரேடாரின் பழுதைச் சரிசெய்வது தொடர்பாகப் பிரதமர் நரேந்திர மோதிக்குக் கடிதம் எழுதியிருந்தார். பழைய எஸ்-பேண்ட் (S-band) ரேடார் முழுமையாகச் செயல்படாத நிலையில், ஸ்ரீஹரிகோட்டா மற்றும் காரைக்கால் ரேடார்களின் தரவுகள் சென்னைக்கான கண்காணிப்பில் பயன்படுத்தப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.

இதற்குப் பதிலளித்த மத்திய புவி அறிவியல் துறை, ரேடார் மட்டுமே வானிலை முன்னறிவிப்புக்கான ஒரே ஆதாரம் அல்ல என்றும், தானியங்கி வானிலை நிலையங்கள், செயற்கைக்கோள் தரவுகள் உள்ளிட்ட பிற தகவல்களும் கணினி மாதிரிகளில் பயன்படுத்தப்படுவதால் முன்னறிவிப்புப் பணிகள் தொடர்வதாகவும் தெரிவித்திருந்தது.

ரேடார் இன்னும் நம்பகமானதா?

சென்னை, வானிலை ரேடார் தரவுகள், மழை, இயற்கை
படக்குறிப்பு, கோப்புப் படம்

சுயாதீன வானிலை ஆய்வாளரும் 'சென்னை ரெய்ன்ஸ்' என்ற பெயரில் சமூக ஊடகங்களில் வானிலைத் தகவல்களைப் பகிர்பவருமான ஸ்ரீகாந்த், பிபிசி தமிழிடம் பேசும்போது, சென்னை ரேடாரின் தரவுகளை நம்பலாம் என்றார்.

"டாப்ளர் ரேடார் நன்றாகச் செயல்படுகிறது. அதன் துல்லியத்தையும் நம்பலாம். நான் பயன்படுத்தும் செயலியில்கூட சென்னை ரேடாரின் தரவுகள்தான் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால், சில நேரங்களில் அது செயல்படாமல் நின்றுவிடுகிறது. அப்போது தரவுகளைப் பெற முடியாது. சரியான நேரத்தில் தரவுகளைப் பெறுவதுதான் சிரமமாக இருக்கிறது," என்றார்.

சென்னை மண்டல வானிலை ஆய்வு மையத்தின் முன்னாள் இயக்குநர் பாலச்சந்திரன், ரேடாரின் தற்போதைய செயல்பாடு குறித்து தமக்குத் தெரியவில்லை என்று கூறினார்.

"இந்த ரேடார் 24 ஆண்டுகளாகச் செயல்பட்டு வருகிறது. நான் பணியில் இருந்தபோது ஒருமுறை அதைச் சரிசெய்தோம். ஆனால், தற்போது ஓய்வுபெற்றுவிட்டதால் அதன் தற்போதைய செயல்பாட்டு நிலை குறித்து எனக்குத் தெரியவில்லை," என்றார்.

சென்னை மண்டல வானிலை முன்னறிவிப்பு மையத்தின் இயக்குநர் துரை, பிபிசி தமிழிடம் பேசும்போது, தற்போது எஸ்-பேண்ட் (S-band) மற்றும் எக்ஸ்-பேண்ட் (X-band) ரேடார்கள் வானிலை கண்காணிப்புக்குப் பயன்படுத்தப்படுவதாகத் தெரிவித்தார்.

"எஸ்-பேண்ட் ரேடார் பழையதுதான். அதை அடுத்த ஓராண்டுக்குள் மாற்றத் திட்டமிட்டுள்ளோம். அதற்கான ஒப்பந்தப்புள்ளிகளும் கோரப்பட்டுள்ளன. சென்னையின் அன்றாட வானிலை கண்காணிப்புக்கு எக்ஸ்-பேண்ட் ரேடார் போதுமானது. புயல் மற்றும் காற்றழுத்தத் தாழ்வு மண்டலங்களைக் கண்காணிக்கும்போது எஸ்-பேண்ட் ரேடார் தேவைப்படுகிறது," என்று அவர் கூறினார்.

புதிய ரேடார்கள் என்ன மாற்றத்தை ஏற்படுத்தும்?

சென்னை, வானிலை ரேடார் தரவுகள், மழை, இயற்கை
படக்குறிப்பு, கோப்புப் படம்

தமிழ்நாட்டில் வானிலை கண்காணிப்பை விரிவுபடுத்துவதற்காக ஐந்து புதிய டாப்ளர் வானிலை ரேடார்களை நிறுவும் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையத்தின் மிஷன் மௌசம் திட்டத்தின் கீழ் மூன்று ரேடார்களும், தமிழ்நாடு பேரிடர் அபாயக் குறைப்பு முகமையின் மூலமாக மாநில அரசின் முன்னெடுப்பில் இரண்டு ரேடார்களும் அமைக்கப்படவுள்ளன.

கன்னியாகுமரி, திருச்சிராப்பள்ளி, நீலகிரி மாவட்டங்களில் ரேடார்கள் அமைப்பதற்கான திட்டங்களுடன், ராமநாதபுரம் மற்றும் ஏற்காட்டில் ரேடார்கள் நிறுவும் மாநில அரசின் திட்டமும் அறிவிக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரத்தில் சி-பேண்ட் (C-band) டாப்ளர் வானிலை ரேடார் அமைக்கப்படவுள்ளது.

புதிய ரேடார்கள் அமைப்பதற்கான பணிகள் தொடங்கியுள்ளதாகவும், பழைய சென்னை எஸ்-பேண்ட் (S-band) ரேடார் மாற்றப்படும் காலகட்டத்தில் புதிய கண்காணிப்பு வசதிகளும் செயல்பாட்டுக்கு வரும் என்றும் துரை தெரிவித்தார்.

"கோயம்புத்தூர், கிருஷ்ணகிரி மற்றும் ஓசூர் போன்ற பகுதிகள் சென்னை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இருக்கும் ரேடார்களின் கண்காணிப்பு வளையத்திற்கு அப்பாற்பட்ட தூரத்தில் உள்ளன. இந்த ஐந்து ரேடார்களும் அமைக்கப்பட்டால், கோயம்புத்தூர், கிருஷ்ணகிரி மற்றும் ஓசூர் போன்ற பகுதிகளிலும் கண்காணிப்பு மேம்படும். இடியுடன் கூடிய மழை, மழையின் அளவு மற்றும் ஆலங்கட்டி மழை போன்றவற்றை முன்பைவிடத் துல்லியமாகக் கணிக்க முடியும்," என்கிறார் ஸ்ரீகாந்த்.

இந்த ஐந்து ரேடார் மையங்களுடன், சுமார் ஆயிரம் தானியங்கி வானிலை நிலையங்களை அமைப்பதற்கும் தமிழ்நாடு அரசு இந்திய வானிலை ஆய்வு மையத்துடன் இணைந்து செயல்பட்டு வருகிறது. புதிய ரேடார்கள் மற்றும் விரிவுபடுத்தப்படும் கண்காணிப்பு வலையமைப்பு பயன்பாட்டுக்கு வரும்போது, மாநிலம் முழுவதும் மழைப்பொழிவு மற்றும் பிற வானிலை நிகழ்வுகள் குறித்த தரவுகளைப் பெறும் திறன் மேம்படும்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு