காணொளி: ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் இடையே பதற்றம் ஏன்? என்ன நடக்கிறது?
பாகிஸ்தானில் ஆப்கானிஸ்தான் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து ஆப்கானிஸ்தானின் காபூல், கந்தகார் போன்ற பகுதிகளில் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியுள்ளது. மேலும் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக வெளிப்படையான போரையும் பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் அறிவித்துள்ளார்.
கடந்த பிப்ரவரி 22ஆம் தேதி ஆப்கானிஸ்தானின் நங்கர்ஹர் மற்றும் பக்டிகா மாகாணங்களில் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது. ஆப்கானிஸ்தான் எல்லையில் உள்ள உள்ள 'ஏழு பயங்கரவாத மறைவிடங்கள் மற்றும் முகாம்களை' குறிவைத்து தாக்கியதாக பாகிஸ்தான் கூறியுள்ளது. உளவுத் தகவலின் அடிப்படையில் இந்தத் தாக்குதல்களை நடத்தியதாக பாகிஸ்தான் தெரிவித்தது.
அதேநேரம், நங்கர்ஹர் மற்றும் பக்டிகாவில் பாகிஸ்தான் நடத்திய வான்வழித் தாக்குதல்களில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட பலர் கொல்லப்பட்டதாக ஆப்கானிஸ்தானை ஆளும் தாலிபன் அரசாங்கத்தின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.
சரியான நேரத்தில் பதில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தாலிபன் அரசாங்கத்தின் பாதுகாப்பு அமைச்சகம் எச்சரித்தது.
ஆப்கானிஸ்தான் தாக்குதல்
இந்நிலையில்தான், பிப்ரவரி 26ஆம் தேதியான நேற்று பாகிஸ்தான் மீது எல்லைகடந்த தாக்குதலை ஆப்கானிஸ்தான் நடத்தியது.
இந்த தாக்குதலில் 55 பாகிஸ்தான் வீரர்கள் கொல்லப்பட்டதாக ஆப்கானிஸ்தான் கூறியது. இதனை பாகிஸ்தான் பிரதரின் செய்தித் தொடர்பாளர் மறுத்தார், மேலும், 15 ராணுவ நிலைகள் கைப்பற்றப்பட்டதாக கூறும் ஆப்கானிஸ்தானின் கூற்றையும் அவர் மறுத்தார். பின்னர், தங்களின் 2 வீரர்கள் உயிரிழந்ததாக பாகிஸ்தான் கூறியது.
வெளிப்படையான போரை அறிவித்த பாகிஸ்தான்.
பின்னர், ஆப்கானிஸ்தானுக்கு பதிலடி தரும்விதமாக காபூல், கந்தகார், பக்டிக்கா(Paktika ) ஆகிய பகுதிகளில் தாக்குதலை நடத்தியதாக பாகிஸ்தான் கூறியது. காபூலில் அதிகாலையில் வெடிப்புச்சத்தமும் துப்பாக்கிச்சூட்டின் சத்தமும் கேட்டுக்கொண்டு இருந்ததாக எ.எஃப்.பி செய்தி முகமை குறிப்பிடுகிறது.
பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் தனது எக்ஸ் பக்கத்தில், ”நேரடி வழிகளிலும் நட்பு நாடுகள் மூலமாகவும் நிலைமையை இயல்பாக வைத்திருக்க பாகிஸ்தான் எல்லா முயற்சிகளையும் மேற்கொண்டது. முழுமையான தூதரக முயற்சிகளில் அது ஈடுபட்டது.”
“எங்கள் பொறுமைக்கும் எல்லை உண்டு. இப்போது இது எங்களுக்கும் உங்களுக்கும் இடையிலான வெளிப்படையான போர்.” என தெரிவித்தார்.
தங்கள் படை எந்தவொரு தாக்குதல் நோக்கையும் முறியடிக்க முழுமையான திறன் பெற்றது என பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரிப் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் மக்கள் மற்றும் ஆயுதப்படைகள் எப்போதும் நாட்டின் பாதுகாப்பு, இறையாண்மை மற்றுறு ஒருமைப்பாட்டைப் பாதுகாக்கத் தயாராக உள்ளனர் என்றும் அவர் கூறியுள்ளார்.
ஆப்கானிஸ்தானும் பாகிஸ்தானும் அக்டோபரில் ஒரு மெல்லிய போர்நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டன. இருப்பினும் அதன் பின்னரும் இடையிடையே சண்டைகள் தொடர்ந்தன.
இந்த விவகாரத்தில் இருதரப்புமே எதிர்தரப்புக்கு கடும் சேதமும் தங்களுக்கு குறைந்த அளவிலான பாதிப்பும் ஏற்பட்டதாக கூறுகின்றன. எனினும் இதனை உறுதிப்படுத்துவது கடினமாக உள்ளது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



