You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
நைஜீரியாவில் ஐ.எஸ் குழு மீது சக்தி வாய்ந்த தாக்குதலை நடத்திய பிறகு டிரம்ப் கூறியது என்ன?
- எழுதியவர், ஜாரோஸ்லாவ் லுகிவ்
வடமேற்கு நைஜீரியாவில் உள்ள இஸ்லாமிக் ஸ்டேட் (ஐஎஸ்) குழுவிற்கு எதிராக அமெரிக்கா 'சக்திவாய்ந்த தாக்குதலை' நடத்தியுள்ளதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, ட்ரூத் சோஷியல் தளத்தில் பதிவிட்ட அவர், ஐஎஸ் குழுவை 'பயங்கரவாதக் கழிவுகள்' என்று விவரித்தார், 'முக்கியமாக அவர்கள் அப்பாவி கிறிஸ்தவர்களைக் குறிவைத்து கொடூரமாகக் கொல்வதாகவும்' குற்றம் சாட்டினார்.
அமெரிக்க ராணுவம் "பல கச்சிதமான தாக்குதல்களை நடத்தியதாக" டிரம்ப் கூறினார், ஆனால் கூடுதல் விவரங்கள் எதையும் அவர் வழங்கவில்லை. இதற்கிடையில், அமெரிக்காவின் பாதுகாப்புச் செயலர் பீட் ஹெக்செத், "நைஜீரிய அரசாங்கத்தின் ஆதரவு மற்றும் ஒத்துழைப்புக்கு நன்றி. மெர்ரி கிறிஸ்மஸ்!" என்று கூறியுள்ளார்.
அதே சமயம், யூஎஸ்-ஆப்ரிக்கா கமாண்ட் (Africom), இந்தத் தாக்குதல் வியாழக்கிழமை (டிசம்பர் 25) அன்று சொகோட்டோ மாநிலத்தில் நைஜீரியாவுடன் இணைந்து நடத்தப்பட்டதாக அறிவித்தது.
நைஜீரிய வெளியுறவு அமைச்சர் யூசுப் மைதாமா துகர் பிபிசியிடம், "இது பயங்கரவாதிகளை குறிவைத்து நடத்தப்பட்ட கூட்டு நடவடிக்கை" என்றும், "இதற்கு ஒரு குறிப்பிட்ட மதத்துடன் எந்த தொடர்பும் இல்லை" என்றும் கூறினார்.
நைஜீரிய கிறிஸ்தவர்கள் குறிவைக்கப்படுகிறார்களா?
டிரம்ப் வியாழக்கிழமை இரவு (டிசம்பர் 25) வெளியிட்ட தனது பதிவில், "எனது தலைமையிலான அமெரிக்கா, இஸ்லாமிய பயங்கரவாதம் செழிக்க அனுமதிக்காது" என்று கூறினார்.
நவம்பரில் விடுத்த எச்சரிக்கையில், எந்தக் கொலைகளைக் குறிப்பிடுகிறார் என்பதை டிரம்ப் கூறவில்லை. ஆனால் நைஜீரிய கிறிஸ்தவர்களுக்கு எதிராக இனப்படுகொலை நடப்பதாகச் சில அமெரிக்க வலதுசாரி வட்டாரங்களில் கடந்த சில மாதங்களாகத் தகவல்கள் பரவி வருகின்றன.
வன்முறையைக் கண்காணிக்கும் குழுக்கள், நைஜீரியாவில் முஸ்லிம்களை விட கிறிஸ்தவர்கள் அதிகமாகக் கொல்லப்படுவதற்கான ஆதாரங்கள் இல்லை என்று கூறுகின்றன. நைஜீரியாவில் இந்த இரு மதங்களைப் பின்பற்றுபவர்களும் ஏறக்குறைய சமமான எண்ணிக்கையில் உள்ளனர்.
நைஜீரிய அதிபர் போலா டினுபுவின் ஆலோசகர் ஒருவர் அப்போது பிபிசியிடம் பேசுகையில், "ஜிஹாதி குழுக்களுக்கு எதிரான எந்தவொரு ராணுவ நடவடிக்கையும் கூட்டாக மேற்கொள்ளப்பட வேண்டும்" என்று கூறினார்.
"இஸ்லாமியவாத கிளர்ச்சியாளர்களைக் கையாள்வதில் அமெரிக்காவின் உதவியை நைஜீரியா வரவேற்கும்" என்று டேனியல் பவாலா கூறினார், அதேசமயம் "நைஜீரியா 'இறையாண்மை' கொண்ட ஒரு நாடு" என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும் ஜிஹாதிகள் ஒரு குறிப்பிட்ட மதத்தைச் சேர்ந்தவர்களை மட்டும் குறிவைக்கவில்லை என்றும், அவர்கள் அனைத்து மதங்களையும் அல்லது எந்த மதத்தையும் சாராத மக்களையும் கொன்றுள்ளதாகவும் அவர் கூறினார்.
நாட்டில் மத சகிப்புத்தன்மை இருப்பதாக அதிபர் டினுபு வலியுறுத்தியுள்ளார். "பாதுகாப்பு தொடர்பான சவால்கள் மதங்கள் மற்றும் பிராந்தியங்களைக் கடந்து மக்களைப் பாதிப்பதாக" அவர் கூறினார்.
முன்னதாக, "நைஜீரியாவில் கிறிஸ்தவ மக்களின் 'இருப்புக்கே ஆபத்து' இருப்பதாகக்" கூறிய டிரம்ப், நைஜீரியாவை 'சிறப்பு கவனம் அளிக்கப்பட வேண்டிய கவலைக்குரிய நாடு' என்று அறிவித்தார். எந்த ஆதாரமும் வழங்காமல், "ஆயிரக்கணக்கானோர் அங்கு கொல்லப்பட்டதாகவும்" அவர் கூறினார்.
இது அமெரிக்க வெளியுறவுத் துறையால் பயன்படுத்தப்படும் ஒரு வகைப்படுத்தல் முறை. 'மத சுதந்திரத்தை கடுமையாக மீறும்' நாடுகளுக்கு எதிராகத் தடைகளை விதிக்க இது வழிவகை செய்கிறது.
இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, அனைத்து மதச் சமூகங்களையும் பாதுகாக்க அமெரிக்கா மற்றும் சர்வதேச சமூகத்துடன் இணைந்து செயல்படத் தனது அரசாங்கம் உறுதிபூண்டுள்ளதாக டினுபு கூறினார்.
நைஜீரியாவில் தொடரும் மோதல்கள்
போகோ ஹராம் மற்றும் 'இஸ்லாமிக் ஸ்டேட் மேற்கு ஆப்பிரிக்க மாகாணம்' போன்ற குழுக்கள் வடகிழக்கு நைஜீரியாவில் ஒரு தசாப்தத்திற்கும் மேலாக அழிவை ஏற்படுத்தி, ஆயிரக்கணக்கான மக்களைக் கொன்றுள்ளன - இருப்பினும் கொல்லப்பட்டவர்களில் பெரும்பாலானோர் முஸ்லிம்கள் என்று உலகம் முழுவதும் நடைபெறும் அரசியல் வன்முறைகளை ஆய்வு செய்யும் குழுவான அக்லெட் (Acled) தெரிவிக்கிறது.
மத்திய நைஜீரியாவில், நீர் மற்றும் மேய்ச்சல் நிலங்களைப் பயன்படுத்துவது தொடர்பாக முஸ்லிம் மேய்ப்பர்களுக்கும், பெரும்பாலும் கிறிஸ்தவர்களாக இருக்கும் விவசாயக் குழுக்களுக்கும் இடையே அடிக்கடி மோதல்கள் ஏற்படுகின்றன.
பழிக்குப் பழி வாங்கும் தாக்குதல்களில் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளனர் - ஆனால் இரு தரப்பினரும் குற்றங்களைச் செய்துள்ளனர். 'கிறிஸ்தவர்கள் மட்டுமே குறிவைக்கப்பட்டதற்கான எந்த ஆதாரமும் இல்லை' என்று மனித உரிமை அமைப்புகள் கூறுகின்றன.
கடந்த வாரம், சிரியாவில் ஐஎஸ் குழுவுக்கு எதிராக அமெரிக்கா 'பெரிய அளவிலான தாக்குதலை' நடத்தியதாகக் கூறியிருந்தது.
அமெரிக்க மத்திய கட்டளையகம் (Centcom), "போர் விமானங்கள், தாக்குதல் ஹெலிகாப்டர்கள் மற்றும் பீரங்கிகள் 'மத்திய சிரியா முழுவதும் பல இடங்களில் 70-க்கும் மேற்பட்ட இலக்குகளைத்' தாக்கின" என்று தெரிவித்தது. இதில் ஜோர்டானின் விமானங்களும் ஈடுபடுத்தப்பட்டன.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு