பிரதமர் மோதி காங்கிரசுக்கு 'நன்றி' தெரிவித்தது ஏன்? நாடாளுமன்றத்தில் தொடர் அமளியின் பின்னணி

பட மூலாதாரம், Getty/ANI
மாநிலங்களவையில் குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தின் போது, பிரதமர் நரேந்திர மோதி காங்கிரஸ் கட்சிக்கு நன்றி தெரிவித்தும் அதே சமயம் தாக்கியும் பேசினார்.
''காங்கிரஸில் உள்ள எனது நண்பர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். கடந்த 10 ஆண்டுகளில், நான் 5-6 முறை பேசப்படுவதில் இருந்து தடுக்கப்பட்டிருக்கிறேன். ஏனென்றால் நான் ஒரு முறை பேச ஆரம்பித்தால், நான் நிறுத்த மாட்டேன் என்பதை அவர்கள் அறிவார்கள். எனவே இந்த முறை அவர்களின் திட்டங்கள் பலனளிக்கப் போவதில்லை என்பதை அவர்கள் அனுபவத்திலிருந்து கற்றுக்கொண்டார்கள். அவர்கள் புத்திசாலித்தனமாகச் செயல்பட்டார்கள், அவர்கள் தொடர்ந்து அத்தகைய புரிதலைப் பெறட்டும்." என மாநிலங்களவையில் பேசினார் நரேந்திர மோதி.
பிரதமர் நரேந்திர மோதி நேற்று, அதாவது புதன்கிழமை மக்களவையில் உரையாற்ற இருந்தார். ஆனால் எதிர்க்கட்சிகளின் தொடர்ச்சியான எதிர்ப்புகள் காரணமாக அவரது உரை நடைபெறவில்லை.
மாநிலங்களவையில் தனது உரையின் போது, பிரதமர் மோதி இதே பிரச்னை தொடர்பாக காங்கிரஸை இவ்வாறு தாக்கி பேசினார்.

பட மூலாதாரம், Sansad TV
ஓம் பிர்லாவின் கருத்து
முன்னதாக, மக்களவையில் ஏற்பட்ட கூச்சல் குழப்பம் காரணமாக, நாளை காலை 11 மணி வரை அவை நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டன. ஒத்திவைப்பு அறிவிப்பை வெளியிட்ட சபாநாயகர் ஓம் பிர்லா, பிரதமர் மோதி தனது வேண்டுகோளின் பேரில் அவைக்கு வரவில்லை என்று கூறினார்.
''எதிர்க்கட்சி உறுப்பினர்களின் நடத்தை நமது நாடாளுமன்ற மரபுகளுக்குப் பொருத்தமற்றது. அது ஒரு கரும்புள்ளி போன்றது. காங்கிரஸ் கட்சியின் பல உறுப்பினர்கள் பிரதமர் இருக்கையை அடைந்து எதிர்பாராத சம்பவத்தை ஏற்படுத்தலாம் என்ற நம்பகமான தகவல் எனக்குக் கிடைத்தது. இதைத் தவிர்க்க, பிரதமரை சபைக்கு வர வேண்டாம் என்று கேட்டுக் கொண்டேன்'' என ஓம் பிர்லா கூறினார்.
பிரியங்கா காந்தியின் பதில்

பட மூலாதாரம், ANI
மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவின் கருத்துக்கு பதிலளித்த காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி, ''முழுக்க முழுக்க பொய். பிரதமருக்கு தீங்கு விளைவிக்கும் எந்த நோக்கமும் இல்லை'' என்றார்.
ஊடகங்களிடம் பேசிய அவர் , "பிரதமர் இப்போது சபாநாயகரின் பின்னால் ஒளிந்து கொண்டிருக்கிறார். நேற்று அவைக்கு வர அவருக்கு தைரியம் இல்லை" என்றார்.
''எதிர்க்கட்சித் தலைவர் ஏன் அவையில் பேச அனுமதிக்கப்படவில்லை? அவர் ஒரு ஆதாரத்தை மேற்கோள் காட்டுவதைத் தடுக்க அவர்களுக்கு ஏதேனும் அடிப்படை இருக்கிறதா? அவர்களுக்கு அந்த உரிமை இல்லை. உண்மை என்னவென்றால், அரசாங்கம் விவாதத்திற்குத் தயாராக இல்லாததால் விவாதம் நடக்கவில்லை." என்றார் அவர்

பட மூலாதாரம், ANI
முழு விவகாரம் என்ன?
மக்களவையில் கடந்த சில நாட்களாக நீடித்து வந்த அமளி வியாழக்கிழமையும் தொடர்ந்தது. மேலும் அவை தொடங்கிய சிறிது நேரத்திலேயே மதியம் 12 மணி வரை அவை ஒத்திவைக்கப்பட்டது.
புதன்கிழமை ஆளும் கட்சி உறுப்பினர்கள் அமர்ந்திருக்கும் பகுதியிற்குச் சென்று எதிர்ப்பு தெரிவித்த எதிர்க்கட்சியினரின் செயலுக்கு, சபாநாயகர் ஓம் பிர்லா தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார்.
செவ்வாய்க்கிழமை விவாதத்தின்போது அமளியில் ஈடுபட்டதாக எதிர்க்கட்சிகளை சேர்ந்த எட்டு எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
முன்னாள் ராணுவத் தளபதி ஜெனரல் மனோஜ் முகுந்த் (எம்.எம்) நரவனே எழுதிய வெளியிடப்படாத புத்தகம் (ஃபார் ஸ்டார்ஸ் ஆஃப் டெஸ்டினி) பற்றி கேரவன் பத்திரிகையில் வெளியான கட்டுரையின் சில பகுதிகளை காங்கிரஸ் எம்.பி.யும் எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் மக்களவையில் படிக்க முயன்றபோது கூச்சல் குழப்பம் தொடங்கியது .
இந்தப் புத்தகம் குறித்து ராகுல் பேசத் தொடங்கியவுடன், அந்தப் புத்தகம் 'வெளியிடப்படவில்லை' என்று கூறி, சபாநாயகர் ஓம் பிர்லா அவரைப் பேசவிடாமல் தடுத்தார்.
ஆளும் கட்சியை நோக்கி சுட்டிக்காட்டி ராகுல் காந்தி, "அவர்கள் பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவதாகச் சொல்கிறார்கள், ஆனால் அவர்கள் ஒரு மேற்கோளைப் பார்த்து பயப்படுகிறார்கள். அதில் எழுதப்பட்டிருப்பது அவர்களைப் பயமுறுத்துகிறது, என்னால் பேச முடியவில்லை. அவர்கள் பயப்படவில்லை என்றால், என்னைப் படிக்க அனுமதியுங்கள்" என்றார்.
ராகுல் காந்தி பேசுவதைத் தடுக்கிறார்கள் என்று பல எதிர்க்கட்சித் தலைவர்கள் குற்றம் சாட்டினர், அதே நேரத்தில் பாஜக தலைவர்கள் ராகுல் காந்தியின் அணுகுமுறையை எதிர்த்தனர் மற்றும் வெளியிடப்படாத புத்தகத்திலிருந்து சில பகுதிகளை எவ்வாறு படிக்க முடியும் என்று கேட்டனர்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு












