You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
விடுதலை 2: விஜய் சேதுபதியின் 'பெருமாள் வாத்தியார்' கதாபாத்திரம் நிஜ வாழ்க்கையில் யார்?
இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் விடுதலை 2 படத்தில் விஜய் சேதுபதி நடித்திருக்கும் 'பெருமாள் வாத்தியார்' என்ற கதாபாத்திரம் நிஜ வாழ்க்கையில் யார் என்ற விவாதம் சமூக ஊடகங்களில் பரவலாக எழுப்பப்படுகிறது. இதில், அதிகமாக உச்சரிக்கப்படும் பெயர் புலவர் கலியபெருமாள். யார் இந்த கலியபெருமாள்? சற்று விளக்கமாக இந்த காணொளியில் பார்ப்போம்.
கலியபெருமாளின் சொந்தவூர் கடலூர் மாவட்டம் பெண்ணாடம் அருகேயுள்ள சௌந்திர சோழபுரம் என்ற கிராமம். தமிழில் பட்டம் பெற்ற இவர், அரியலூர் மாவட்டம் பொன்பரப்பியில் உள்ள பள்ளியில் தமிழாசிரியராக 1960 காலக்கட்டங்களில் பணியாற்றி வந்திருக்கிறார்.
கலியபெருமாள் தமிழில் புலமை பெற்றிருந்ததால் பள்ளியில் இருந்தவர்கள் அவரை புலவர் என்று அழைத்தனர். பின்னர், இதுவே புலவர் கலியபெருமாள் என்றாகி போனது.
தொடக்கத்தில் பெரியாரின் அரசியலில் ஆர்வம் கொண்டு, திராவிடர் கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டார்.
பின்பு இடதுசாரி தத்துவத்தில் ஏற்பட்ட நாட்டம் காரணமாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து கடலூர், அரியலூர் பகுதியில் அரசியல் பணிகளில் கலிய பெருமாள் ஈடுபட்டு வந்தார்.
சிபிஎம் கட்சியுடன் கருத்து ரீதியாக பிளவுபட்டு அதிலிருந்து வெளியேறி, இந்தியாவில் சாரு மஜூம்தாரால் புதிதாக தொடங்கப்பட்ட, இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) என்ற கட்சியில் புலவர் கலியபெருமாள் 1969ஆம் ஆண்டு இணைந்தார்.
அந்தக் கட்சியின் சார்பாக தமிழ்நாட்டில் அமைப்பை எழுப்பிய 10 பேரில் புலவர் கலியபெருமாளும் ஒருவராக இருந்தார் என முன்னாள் நக்சல்பாரி அமைப்பைச் சேர்ந்தவரும் எழுத்தாளருமான பாரதிநாதன் பிபிசியிடம் கூறினார்.
நக்சல்பாரி கட்சியின் உறுப்பினராக இருந்ததால், அரியலூர், கடலூர் மாவட்டங்களில் உள்ள முந்திரிக் காடுகளில் தலைமறைவாகவே புலவர் கலியபெருமாள் இருந்தார்.
"இரவு நேரங்களில் சாதாரண நபரை போல சைக்கிளில் வந்து, ஆதரவாளர்களிடம் போராட்டங்களை அடுத்த கட்டத்திற்கு எப்படி எடுத்துச் செல்வது என துண்டுச்சீட்டை எங்காவது ஒரு இடத்தில் வைத்து விட்டு சென்று விடுவார். இப்படித்தான் இவரின் தகவல்கள் வட ஆற்காடு, தென் ஆற்காடு மாவட்டங்களில் உள்ள மற்ற நபர்களுக்கு கொண்டு செல்லப்பட்டது" என்கிறார் பாரதிநாதன்.
நிலப்பிரபுகளுக்கு சொந்தமான நிலங்களில் புலவர் கலியபெருமாள் தலைமையிலான நிலமற்ற விவசாயிகள் இரவு நேரங்களில் களத்தில் இறங்கி அறுவடையைக் கைப்பற்றி ஏழை எளிய மக்களுக்கு விநியோகித்த, கட்டாய அறுவடை இயக்கம் மக்கள் மத்தியில் பிரபலமாக இருந்தது.
சீனப் புரட்சியை பின்பற்றி, இந்தியாவில் சாரு மஜூம்தார் தொடங்கிய நக்சல்பாரி கட்சி என்று அழைக்கப்படும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்), மக்களின் எதிரிகளை 'அழித்தொழிப்பு செய்ய வேண்டும்' என்ற முழக்கத்தை முன்வைத்தது.
இந்த முழக்கத்தை முன்வைத்து, மக்களுக்கு எதிரான செயல்பட்டதாக கூறி பல நிலப்பிரபுகள், தமிழரசன் மற்றும் பலரால் வெட்டிக் கொல்லப்பட்டனர். காவல்துறை மற்றும் அரசுக்கு கட்சியை காட்டிக் கொடுக்கும் நபர்களும் அழித்தொழிப்புக்கு உள்ளாக்கப்பட்டனர்.
அழித்தொழிப்பு நடவடிக்கைகள் நடந்து வந்த காலகட்டத்தில், புலவர் கலியபெருமாளுக்கு சொந்தமான தென்னந்தோப்பில் வைத்து நாட்டு வெடிகுண்டுகள் தயாரிக்கப்பட்டன.
1970ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் கலியபெருமாளின் தோட்டத்தில் வெடிகுண்டு செய்து வந்த போது, அவை வெடித்து 3 பேர் இறந்தனர். அந்த வெடிவிபத்தில் சர்ச்சில், கணேசன், காணியப்பன் ஆகிய மூவரும் இறந்தனர்.
புலவர் கலியபெருமாள், படுகாயம் அடைந்ததோடு தலைமறைவாகி விட்டார். இந்த வெடிவிபத்து வெளியே தெரியாமல் இருக்க, இறந்த மூவரையும் தனது தோட்டத்திலேயே கலியபெருமாள் அடக்கம் செய்திருக்கிறார். சில மாதங்களுக்கு பிறகு பக்கத்து ஊரைச் சேர்ந்த ஒருவர் இந்த விஷயத்தை காவல்துறையிடம் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, 1971-ல் கலியபெருமாளும் அவரது குடும்பத்தினரும் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் புலவர் கலியபெருமாளுக்கும் அவரது மூத்த மகன் வள்ளுவனுக்கும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. இரண்டாவது மகன் உள்ளிட்ட குடும்பத்தினருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் செய்யப்பட்ட மேல்முறையீட்டில், வள்ளுவனுக்கு விதிக்கப்பட்ட தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.
புலவர் கலியபெருமாளுக்கு தூக்கு தண்டனையும், மற்றவர்களுக்கு வழங்கப்பட்ட ஆயுள் தண்டனையையும் உயர் நீதிமன்றம் உறுதி செய்தது.
"புலவருக்கு வழங்கப்பட்ட தூக்கு தண்டனையை குறைக்க வேண்டும் என வலியுறுத்தி பல மக்கள் போராட்டங்கள் நடத்தப்பட்டன. ஜனநாயக அமைப்புகள் சார்பாக கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டு, குடியரசு தலைவருக்கு அனுப்பியதன் பேரில் அந்த தண்டனை ஆயுள் தண்டனையாக குறைத்து 1973ஆம் குடியரசுத் தலைவர் உத்தரவை பிறப்பித்தார்," என்று பிபிசியிடம் பேசிய வழக்கறிஞர் புகழேந்தி தெரிவித்தார்.
கலியபெருமாள், குடும்பத்துடன் 12 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருப்பதை அறிந்த டெல்லியைச் சேர்ந்த பத்திரிகையாளர் கன்சியாம் பர்தேசி, அவர்களை விடுதலை செய்ய உத்தரவிடுமாறு உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
கன்சியாம் பர்தேசியின் முயற்சியால், 1983ஆம் ஆண்டு புலவரின் குடும்பத்தை நீண்டகால பரோலில் செல்ல உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.சிறையில் இருந்து வெளியே வந்த புலவர் கலியபெருமாள், தமிழரசனுடன் இணைந்து தனித் தமிழ்நாடு என்ற கோரிக்கையை முன்வைத்து தமிழ்தேசிய அரசியல் களத்தில் தடம் பதித்தார்.
மேலும், தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனையும் கலியப்பெருமாள் சந்தித்திருக்கிறார்.
சென்னை பாண்டி பஜாரில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் அணிக்கும் முகுந்தன் அணிக்கும் மோதல் ஏற்பட்டு பிரபாகரன் கைது செய்யப்பட்டு சென்னை சிறையில் அடைக்கப்பட்டார்.
அப்போது சென்னை சிறையில் இருந்த புலவர் கலியபெருமாள், பிரபாகரனோடு சில முறை சந்தித்து பேசியதாக வழக்கறிஞர் புகழேந்தி கூறினார்.
இந்த சந்திப்பு குறித்து புலவர் கலியபெருமாள், தனது சுயசரிதை நூலான 'மக்கள் துணையோடு மரணத்தை வென்றேன்' என்ற புத்தகத்தில் பின்வருமாறு குறிப்பிடுகிறார்.
"பிரபாகரனை எங்கள் அறைக்கு அருகிலேயே அடைத்தார்கள். அவர் தன் பகுதியிலிருந்து பெரும்பாலும் என்னுடன் பேசுவார். என்னை மருத்துவமனைக்கு அழைத்து செல்லும்போது பிரபாகரன் என்னை இரண்டு முறை வெளியில் சந்தித்து நலம் விசாரித்தார். அதன் பின் பிரபாகரன் விடுதலையாகி சிறையில் இருந்து சென்றுவிட்டார்."
வயது முதிர்வு காரணமாக கடந்த 2007ஆம் ஆண்டு மே 16ஆம் தேதி புலவர் கலியபெருமாள் உயிரிழந்தார். அவரது உடல், சொந்த ஊரான சௌந்திர சோழபுரத்தில், அடக்கம் செய்யப்பட்டது.
கலியபெருமாளின் வாழ்க்கை குறித்து விரிவாக காணொளியில்...
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)