You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
புத்தர் குறித்த தொடரை தயாரிக்க டிடி தமிழ் அனுமதி மறுத்ததா? தூர்தர்ஷன் அளித்த விளக்கம் என்ன?
- எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம்
- பதவி, பிபிசி தமிழ்
'புத்தமும் அவர் தம்மமும்' என்ற தொடரை தயாரிப்பது தொடர்பாக ஆறு வாரங்களில் தூர்தர்ஷன் நிர்வாகம் முடிவெடுக்க வேண்டும் என, சென்னை உயர் நீதிமன்றம் கடந்த ஆகஸ்ட் 7 அன்று உத்தரவிட்டுள்ளது.
புத்தர் தொடர்பான தொலைக்காட்சித் தொடரை (serial) எடுப்பதற்கு தூர்தர்ஷன் நிர்வாகம் அனுமதியளிக்காமல் காலதாமதம் செய்வதாக அதன் ஊழியர் ஒருவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
தொலைக்காட்சித் தொடரை வெளியிடுவதில் என்ன சிக்கல்? தூர்தர்ஷன் நிர்வாகம் பிபிசி தமிழிடம் கூறியது என்ன?
சென்னை டிடி தமிழ் தொலைக்காட்சியில் இரண்டாம் நிலை ஒளிப்பதிவாளராக பணியாற்றும் ஆனந்தன், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடர்ந்திருந்தார்.
வழக்கின் மனுவில் கூறப்பட்டது என்ன?
வழக்கின் மனுவில், 'புத்தமும் அவர் தம்மமும்' என அம்பேத்கர் எழுதிய புத்தகத்தை அடிப்படையாக வைத்து டிடி தமிழ் தொலைக்காட்சியில் தொடர் ஒன்றைத் தயாரிக்க திட்டமிட்டேன். இதுதொடர்பான முன்மொழிவை 28.11.2023 அன்று நிர்வாகத்திடம் சமர்ப்பித்தேன்' எனக் கூறியுள்ளார்.
தொலைக்காட்சி தொடரை 52 எபிசோடுகளாக கொண்டு வருவதற்குத் திட்டமிட்டிருந்தாகவும் இதற்கான தயாரிப்பு, செலவீனம் உள்பட அனைத்தையும் உள்ளடக்கிய முன்மொழிவை (proposal) வழங்கியதாகவும் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால், 'கடந்த 2023 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை புத்தமும் அவர் தம்மமும் தொலைக்காட்சித் தொடரைத் தயாரிப்பதற்கான அனுமதியை தூர்தர்ஷன் நிர்வாகம் வழங்கவில்லை' எனவும் வழக்கின் மனுவில் அவர் தெரிவித்திருந்தார்.
ஆனந்தனிடம் பிபிசி தமிழ் பேசியது. "மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் 1999 ஆம் ஆண்டு இரண்டாம் நிலை ஒளிப்பதிவாளராக தேர்வு செய்யப்பட்டேன். ஒளிப்பதிவாளராக இருந்தாலும் சில தொடர்களை தூர்தர்ஷனில் தயாரித்துள்ளேன்" எனக் கூறினார்.
மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நியமிக்கப்பட்ட தூர்தர்ஷன் ஒளிப்பதிவாளர்கள் சங்கத்தின் (Association of UPSC-Recruited Cameramen of Doordarshan) செயலராகவும் இவர் இருக்கிறார்.
கொரோனா காலத்தில் மீனவர்களை மையமாக வைத்து 'ஆழி' என்ற தொலைக்காட்சி தொடரை ஆனந்தன் தயாரித்துள்ளார். "இது 26 எபிசோடுகளாக வெளிவந்தது" என்றவர், புத்தர் தொடர்பான சர்ச்சை குறித்து விவரித்தார்.
"கர்நாடகாவில் இருந்து சென்னை தூர்தர்ஷனுக்கு இயக்குநராக நியமிக்கப்பட்ட ரகு என்பவர் புதிய ஆலோசனை ஒன்றை முன்வைத்தார். காவிரி நீர் விவகாரத்தில் கர்நாடகா-தமிழ்நாடு இடையே மோதல் நீடிக்கிறது. நீர்ப் பங்கீடு மோதலுக்கு புத்த தம்மம் கூறும் தீர்வு குறித்து தொடர் எடுக்கலாம் என்ற யோசனையை அவர் முன்வைத்தார்" என்கிறார், ஆனந்தன்.
புத்தர் வாழ்ந்த பகுதியில் நீர்ப் பங்கீடு தொடர்பாக இரண்டு குழுக்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. "இதனை விரும்பாத புத்தர், 'அடுத்தவர்களை அழித்து அந்த ரத்தத்தில் தண்ணீர் வரவேண்டும் என்ற அவசியம் இல்லை' எனக் கூறி துறவறம் சென்றார். இது டாக்டர் அம்பேத்கர் எழுதிய 'புத்தா அண்ட் ஹிஸ் தம்மா' புத்தகத்தில் கூறப்பட்டுள்ளது" எனவும் அவர் தெரிவித்தார்.
புத்தர் கொடுத்த தீர்வு என்ன?
இதனை, 'புத்தமும் அவர் தம்மமும்' என்ற பெயரில் பேராசிரியர் பெரியார்தாசன் மொழிபெயர்த்துள்ளார். 'சங்கத்துடன் கொண்ட முரண்பாடு' என்ற தலைப்பில் தண்ணீர் தொடர்பான பிரச்னை குறித்து புத்தகத்தில் விவரிக்கப்பட்டுள்ளது.
அதில், சாக்கியர்களின் அரசு எல்லையில் கோலியர்களின் அரசு இருந்தது. இரு அரச எல்லைகளும் ரோகினி ஆற்றால் பிரிக்கப்பட்டிருந்தன. ரோகினியின் நீர், தங்கள் வயல்களின் பாசனத்துக்காக சாக்கியர்கள், கோலியர்கள் என இரு தரப்பாலும் பயன்படுத்தப்பட்டு வந்தது' எனக் கூறப்பட்டுள்ளது.
'ஒவ்வொரு பருவத்திலும் யார் முதலில் ரோகிணியாற்றின் நீரை எடுப்பது, எவ்வளவு எடுப்பது என்ற வாக்குவாதங்கள் நடைபெறுவது உண்டு. இவை முற்றி சண்டையிலும் சில சமயம் பெரும் கைகலப்பிலும் முடிவது உண்டு' என, 'புத்தமும் அவர் தம்மமும்' புத்தகம் கூறுகிறது.
'ஒருமுறை ஆற்று நீர் குறித்து பெரும் மோதல் நிகழ்ந்துவிட்டது. இரு பக்கத்தில் இருந்தவர்களுக்கும் பலத்த காயங்கள் ஏற்பட்டன. இதையறிந்த சாக்கியர்களும் கோலியர்களும் இந்தப் பிரச்னை போர் மூலம் தீர்க்கப்பட வேண்டும்' எனக் கருதியதாக புத்தகத்தில் கூறப்பட்டுள்ளது.
'கோலியர்கள் மீது போர் அறிவிப்பு செய்ய வேண்டும்' என சங்க உறுப்பினர்களிடம் சேனாபதி கூறவே, இதனை சித்தார்த்த கௌதமர் (புத்தர்) எதிர்த்ததாக 'புத்தமும் அவர் தம்மமும்' புத்தகத்தில் அம்பேத்கர் தெரிவித்துள்ளார்.
மேலும், 'எந்தப் பிரச்னையையும் போர் தீர்ப்பதில்லை. போர் தொடுப்பது நம் நோக்கத்துக்கு உதவப் போவதில்லை. அது மற்றொரு போருக்குத் தான் விதை தெளிக்கும். அழிக்கிறவன் அழிக்கப்படுவான்' என புத்தர் கூறியதாகவும் விவரிக்கப்பட்டுள்ளது.
"இரு மாநில பிரச்னைக்குத் தீர்வை முன்வைக்கும் வித்தியாசமான முயற்சியாக இது இருந்ததால் நிகழ்ச்சித் தயாரிப்புப் பணிகளில் இறங்கினேன்" எனக் கூறுகிறார், ஆனந்தன்.
'இதுவரை தூர்தர்ஷன் பார்க்காத ஒரு விஷயம்'
"சென்னையில் தூர்தர்ஷன் தொடங்கி இந்த ஆண்டுடன் 50 ஆண்டுகள் (ஆகஸ்ட் 15, 1975) நிறைவடைகின்றன. தூர்தர்ஷன் வரலாற்றில் புத்தர் தொடர்பாக எந்த தொடரும் ஒளிபரப்பானதில்லை. அம்பேத்கர் தொடர்பாக சில ஆவணப்படங்கள் மட்டுமே வெளிவந்துள்ளன" என்கிறார், ஆனந்தன்.
தொடர்ந்து பேசிய அவர், "தொலைக்காட்சி தொடரை தயாரிப்பது தொடர்பாக, 2023 ஆம் ஆண்டில் இருந்து 2025 ஆம் ஆண்டு வரை பல்வேறு கேள்விகளை தலைமை அலுவலகத்தில் இருந்து எழுப்பினர். 52 தொடர்களாக வெளியிடுவதை 13 தொடர்களாக மாற்றுமாறு கூறினர்" என்கிறார்.
"புத்த தம்மத்தின் கருத்தை மக்களிடம் சென்று சேர்க்கும் அளவு வெளியிட வேண்டும் என்றால் 13 தொடர்கள் என்பது சரியானதாக இருக்காது. அதனால் எந்த நன்மையும் இல்லை' எனத் தான் பதில் அனுப்பியதாகவும் அவர் தெரிவித்தார்.
"ஒருகட்டத்தில், தூர்தர்ஷனின் வேவ் (Wave) ஓடிடி தளத்துக்கு தயாரிக்குமாறு அவர்கள் கூறினர். இதுதொடர்பான கோப்புகளில், 'இதுவரை தூர்தர்ஷன் பார்க்காத ஒரு விஷயம்' என நிர்வாகத்தில் உள்ளவர்கள் எழுதினர்.இதற்கென தனியாக குழு ஒன்றையும் அமைத்தனர்" என்கிறார், ஆனந்தன்.
நீதிமன்றத்தில் தூர்தர்ஷன் கூறியது என்ன?
இந்த வழக்கு ஆகஸ்ட் 7 அன்று விசாரணைக்கு வந்தது.
'மைத்ரி' என்ற தலைப்பில் கதை, வசனம் ஆகியவற்றைத் தயாரித்ததாகக் கூறும் ஆனந்தன், "உள்ளடக்கத்தைத் தயாரிப்பதற்கு லட்சக்கணக்கில் செலவானது. திட்டம் நின்றுவிடக் கூடாது என்பதால் தூர்தர்ஷனின் இயக்குநர் ஜெனரலுக்கு இமெயில் அனுப்பினேன்" என்கிறார்.
'திட்டம் பரிசீலனையில் உள்ளது' என்று பதில் வந்துள்ளது. ஆனால், எப்போது தயாரிக்கப்படும் என்ற விவரம் எதுவும் குறிப்பிடப்படாமல் தொடர்ந்து காலதாமதம் செய்ததால் சென்னை உயர் நீதிமன்றத்தை நாடியதாகவும் அவர் குறிப்பிட்டார்.
வழக்கில் இந்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறையின் சார்பாக ஆஜராக வழக்கறிஞர், "மனுதாரரின் கோரிக்கையின் மீது தகுதிவாய்ந்த அதிகாரி முடிவு செய்ய வேண்டும் என்பதால் கோப்புகள் திருப்பி அனுப்பப்பட்டன" எனத் தெரிவித்தார்.
'அதிக மக்களைச் சென்றடையும்' - நீதிபதி
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், "புத்தம் மற்றும் தம்மம் தொடரை எடுப்பதற்கு மனுதாரர் மிகுந்த முயற்சிகளை மேற்கொண்டுள்ளார். தூர்தர்ஷன் மூலம் அதை ஒளிபரப்புவதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டால் அது இந்திய அளவில் அதிக மக்களைச் சென்றடையும்" எனத் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.
'2024 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் மனுதாரர் அளித்த முன்மொழிவை (proposal) தீர்ப்பு வெளியான ஆறு வாரங்களுக்குள் முடிவை தெரிவிக்க வேண்டும்' எனவும் நீதிபதி தெரிவித்துள்ளார்.
தூர்தர்ஷன் நிர்வாகத்துக்கு எதிராக ஆனந்தன் தொடர்ந்த வழக்கின் விசாரணை நடந்துகொண்டிருந்த சூழலில், கடந்த மாதம் 29 ஆம் தேதியன்று அவரை சிம்லாவுக்கு பணிமாறுதல் செய்துள்ளதாக அறிவிப்பு வந்துள்ளது.
தூர்தர்ஷன் நிர்வாகப் பிரிவின் துணை இயக்குநர் ரமேஷ்சிங் சௌகான் அனுப்பியுள்ள கடிதத்தில், ஆனந்தன் உள்பட 17 பேருக்கு பணியிட மாறுதல் வழங்கப்பட்டுள்ளதாகக் கடிதத்தில் தெரிவித்திருந்தார்.
நிர்வாகத்துக்கு எதிராக தான் தொடர்ந்த வழக்கு நிலுவையில் உள்ளதாகக் கூறியும் பணிமாறுதல் செய்துவிட்டதாக அவர் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.
"தூர்தர்ஷன் நிர்வாகமே தயாரிக்கும் (in house production) நிகழ்ச்சிகளை வெகுவாக குறைத்துவிட்டனர். ஆனால், வெளி நபர்களுக்கு அதிக வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன. புத்தர் பற்றிய தொடர் வரக் கூடாது என்ற எண்ணமும் காரணமாக இருப்பதாக அறிகிறேன்" எனவும் அவர் கூறினார்.
டிடி தமிழ் நிர்வாகம் கூறுவது என்ன?
ஆனால், இந்தக் குற்றச்சாட்டுகளை முழுமையாக மறுக்கிறார், டிடி தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிப் பிரிவின் தலைவர் சீனிவாசன்.
பிபிசி தமிழிடம் பேசிய அவர், "புத்தர் தொடர்பான தொடருக்கு எதிராக நாங்கள் இல்லை. நிகழ்ச்சித் தயாரிப்பு தொடர்பான விதிகள் கடைபிடிக்கப்பட வேண்டும் என்பது நோக்கம். ஆனால், புத்தருக்கு எதிராக உள்ளது போன்று சித்தரிக்கின்றனர்" எனக் கூறினார்.
'புத்தமும் அவர் தம்மமும்' தொடர்பான தொடரை பரிசீலித்து முடிவெடுக்குமாறு நீதிமன்றம் கூறியுள்ளதை மேற்கோள் காட்டிய சீனிவாசன், "நிகழ்ச்சி தயாரிப்புக்கு குறிப்பிட்ட செலவீன மதிப்பீடு என்பது 1.25 கோடி ரூபாய். இவ்வளவு பெரிய தொகையை ஒதுக்குவது தொடர்பாக தலைமை தான் முடிவெடுக்க வேண்டும்" என்கிறார்.
"தவிர, ஒளிப்பதிவாளரின் பணி என்பது நிகழ்ச்சி தயாரிப்பு கிடையாது. அவருக்கு ஒதுக்கப்படும் பணியை அவர் செய்வதில்லை. ஆனந்தனுக்கு வாய்ப்பு கொடுத்தால் இதர ஒளிப்பதிவாளர்களும் நிகழ்ச்சி தயாரிப்புக்கு அனுமதி கேட்பார்கள்" என்கிறார் சீனிவாசன்.
ஏற்கெனவே சில தொடர்களை அவர் தயாரித்திருப்பது குறித்துக் கேட்டபோது, "அவை சிறிய பட்ஜெட்டில் வெளிவந்துள்ளன. புத்தர் தொடர்பான தொடருக்கு சிறிய பட்ஜெட்டை கொடுத்திருந்தால் எங்களால் பரிசீலித்திருக்க முடியும்" என்கிறார்.
சிம்லாவுக்கு பணி மாறுதல் வழங்கப்பட்டுள்ளதால், அதைத் தவிர்ப்பதற்காக இதுபோன்ற குற்றச்சாட்டுகளை ஆனந்தன் முன்வைப்பதாகக் கூறிய சீனிவாசன், "நிகழ்ச்சி தயாரிப்பாளர்களுக்கு வேறு மாநிலங்களுக்கு பணி மாறுதல் வழங்கப்படுவதில்லை. ஆனால், ஒளிப்பதிவாளர்களுக்கு எந்த விதிமுறைகளும் இல்லை" எனக் கூறினார்.
தூர்தர்ஷனின் சொந்த தயாரிப்பு குறைந்துவிட்டதாகக் கூறப்படுவது குறித்துக் கேட்டபோது, "அதற்கு எந்த தரவுகளும் இல்லை. முக்கிய நிகழ்வுகளை சொந்த தயாரிப்பில் வெளியிடுகிறோம்" எனத் தெரிவித்தார்.
"புத்தர் பற்றிய நிறைய நிகழ்ச்சிகளைத் தயாரித்திருக்கிறோம். இதுதொடர்பாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் தவறானவை" எனவும் சீனிவாசன் குறிப்பிட்டார்.
-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு