You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
மரணத்திற்கு பிறகும் குறுஞ்செய்தி மிரட்டல்கள்- டிஜிட்டல் அரெஸ்டுக்கு பலியான மருத்துவர்
ஹைதராபாத்தை சேர்ந்த 76 வயதான ஓய்வுபெற்ற பெண் மருத்துவ அதிகாரி ஒருவர் 'டிஜிட்டல் அரெஸ்ட்' என்ற பெயரில் ஏமாற்றப்பட்டதாக ஹைதராபாத் சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
துரதிர்ஷ்டவசமாக, சைபர் குற்றவாளிகளால் ஏமாற்றப்பட்ட, பாதிக்கப்பட்ட அந்த அதிகாரி 'மாரடைப்பால்' உயிரிழந்தார்.
இந்த விவகாரம் குறித்து ஹைதராபாத் சைபர் குற்றப்பிரிவு டி.சி.பி தாரா கவிதா பிபிசியிடம் பேசினார்.
"1669/2025 என்ற எண்ணின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளோம். விசாரணை நடைபெற்று வருகிறது" என்று அவர் தெரிவித்தார்.
மேலும், பாதிக்கப்பட்டவரின் பெயரையும், அவரது குடும்பத்தினர் குறித்த விவரங்களையும் வெளியிட முடியாது. சைபர் கிரைம் வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்களின் அடையாளம் எப்போதும் ரகசியமாக வைக்கப்படும் என்றும் குறிப்பிட்டார்.
ஷெல் கணக்குக்கு மாற்றப்பட்ட பணம்
செப்டம்பர் முதல் வாரத்தில், ஹைதராபாத் நகரின் யூசுப்குடா பகுதியில் நடந்த இந்த சம்பவம் தாமதமாகவே வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பாதிக்கப்பட்டவர் மலக்பேட்டை மருத்துவமனையில் மருத்துவ அதிகாரியாக பணியாற்றியவர்.
செப்டம்பர் 5 முதல் 8 வரை அவர் 'டிஜிட்டல் அரெஸ்ட்' செய்யப்பட்டதாகவும், மிரட்டல்களும் துன்புறுத்தலும் நடந்ததாகக் கண்டறியப்பட்டது எனவும் டி.சி.பி கவிதா பிபிசியிடம் தெரிவித்தார்.
காவல்துறை விசாரணையில், செப்டம்பர் 5-ஆம் தேதி சைபர் குற்றவாளிகள் முதலில் அவருக்கு அழைப்பு விடுத்தது குறித்து தெரிய வந்துள்ளது.
அடுத்த நாள், செப்டம்பர் 6-ஆம் தேதி, அவரது வங்கிக் கணக்கிலிருந்து ரூ.6,60,543 மகாராஷ்டிராவில் உள்ள ஒரு போலிக் கணக்குக்கு மாற்றப்பட்டது என்று காவல்துறை கூறுகிறது.
சைபர் குற்றவாளிகள் மோசடி செய்த உடனே பணத்தை முதலில் ஒரு போலிக் கணக்கில் போட்டு, அதன் பின் பல வங்கிக் கணக்குகளுக்கு மாற்றி, இறுதியில் கிரிப்டோகரன்சியாக மாற்றி பணத்தை வெள்ளையாக்குவார்கள் என்று கூறப்படுகிறது.
இறுதிச் சடங்கிற்குப் பிறகும் வந்த குறுஞ்செய்திகள்
செப்டம்பர் 8-ஆம் தேதி அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாகவும், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் முன்பே அவர் உயிரிழந்ததாகவும் அவரது குடும்பத்தினர் போலீசாரிடம் தெரிவித்தனர்.
மறுநாள் அவரது இறுதிச்சடங்கு நடைபெற்றது.
ஆனால், அவர் இறந்த பிறகும் அவரது கைப்பேசிக்கு தொடர்ந்து செய்திகள் வந்ததை கவனித்த குடும்பத்தினர், அவர் சைபர் மோசடிக்கு ஆளாகியிருக்கலாம் என்ற சந்தேகத்தில் போலீசில் புகார் அளித்தனர்.
குடும்பத்தினர் அளித்த புகாரில், 'சைபர் குற்றவாளிகளின் துன்புறுத்தலையும் அச்சுறுத்தலையும் தாங்க முடியாமல் அவர் இறந்துவிட்டார்' என்று தெரிவித்துள்ளனர்.
"அவரது மரணத்திற்குப் பிறகும் சைபர் குற்றவாளிகள் அவரது தொலைபேசிக்கு சில செய்திகளை அனுப்பியதை நாங்கள் கண்டறிந்தோம். மேலும், ஆரம்பத்தில் வந்த எண்ணிலிருந்து வேறுபட்ட தொலைபேசி எண்ணிலிருந்தும் அழைப்புகள் வந்தன" என்று காவல்துறை அதிகாரிகள் கூறினர்.
இச்சம்பவம் குறித்து, டைம்ஸ் ஆஃப் இந்தியா வெளியிட்ட தகவலின்படி, அந்த புதிய தொலைபேசி எண்ணை அவர் 'ஜெயசங்கர் சார்' என்ற பெயரில் சேமித்து வைத்திருந்தார். வாட்ஸ்அப்பில் ஒரு போலி நீதிமன்ற அறிவிப்பும் அனுப்பப்பட்டதாகவும், பல வீடியோ அழைப்புகள் வந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.
இந்த நிலையில், அனைத்து விவரங்களையும் இப்போது வெளியிட முடியாது, விசாரணை முடிந்த பின் முழு விவரங்களும் வெளியிடப்படும் என்று டி.சி.பி கவிதா விளக்கினார்.
டிஜிட்டல் அரெஸ்ட் என்றால் என்ன?
சைபர் குற்றங்கள் ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருகின்றன. பொதுமக்கள் இவற்றைப் பற்றி அறிந்தாலும், குற்றங்களின் வடிவங்களும் அதே விகிதத்தில் மாறி வருகின்றன. பிரதமர் நரேந்திர மோதி 2024ம் ஆண்டு அக்டோபரில் டிஜிட்டல் அரெஸ்ட் பற்றி குறிப்பிட்டார்.
மோசடி செய்பவர்கள் பின்னணியில் ஒரு காவல் நிலையம் அல்லது புலனாய்வு நிறுவன அலுவலகம் போன்ற ஒரு அமைப்பை அமைத்து, அதை வீடியோவில் காட்டுகிறார்கள்.
அவர்கள் உண்மையான சீருடைகள் போல தோற்றமளிக்கும் ஒன்றை அணிந்து, ஒரு போலி அடையாள அட்டையைக் காட்டுகிறார்கள்.
சிபிஐ, ஐடி, சுங்கத்துறை, போதைப்பொருள் தடுப்புப் பிரிவு, ரிசர்வ் வங்கி போன்ற பல்வேறு அரசு நிறுவனங்கள் அல்லது துறைகளின் பெயர்களில் அச்சுறுத்தல்கள் செய்யப்படுகின்றன.
நீங்கள் அனுப்பிய பார்சலில் போதைப்பொருள் இருப்பதாகவோ அல்லது உங்கள் தொலைபேசியைப் பயன்படுத்தி சட்டவிரோத செயல்களைச் செய்வதாகவோ கூறி மோசடி செய்பவர்கள் பாதிக்கப்பட்டவர்களை அச்சுறுத்துகிறார்கள்.
சில நேரங்களில் டீப்ஃபேக் (deepfake) வீடியோவையும், போலி கைது வாரண்டுகளையும் உருவாக்குகின்றனர்.
பின்னர் அவர்கள் பாதிக்கப்பட்டவர்களின் வங்கிக் கணக்குகளில் இருந்து பணத்தை மாற்றுவதன் மூலம் அவர்களை ஏமாற்றுகிறார்கள்.
எப்படி புகார் அளிப்பது ?
சைபர் குற்றங்களைப் பற்றித் தெரிந்தாலோ அல்லது அதனால் பாதிக்கப்பட்டாலோ, உடனடியாக 1930 என்ற எண்ணுக்கு அழைத்து புகார் அளிக்கலாம் என்று டி.சி.பி தாரா கவிதா தெரிவித்துள்ளார்.
இது, மத்திய உள்துறை அமைச்சகத்தால் நடத்தப்படும் தேசிய சைபர் குற்றப் பிரிவு உதவி எண்.
மேலும், பாதிக்கப்பட்டவர்கள் https://cybercrime.gov.in என்ற இணையதளத்திலும் புகார் அளிக்கலாம் என்றும் அவர் கூறினார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு