'பெற்றோரை ஊசி போட்டு கொன்றுவிட்டு நாடகமாடிய மகள்' - போலீசார் கண்டுபிடித்தது எப்படி?

பட மூலாதாரம், Telangana Police
- எழுதியவர், அமரேந்திர யர்லகட்டா
- பதவி, பிபிசி செய்தியாளர்
- வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்
தோள் வலிப்பதாகக் கூறிய பெற்றோரிடம், 'இந்த ஊசியைப் போட்டால் நீங்கள் நன்றாக உறங்குவீர்கள்' என்று கூறி ஊசியிட்டு, மகளே பெற்றோரைக் கொலை செய்ததாக தெலங்கானா மாநிலம் விகராபாத் போலீஸார் தெரிவித்தனர்.
அந்தப் பெண்ணின் காதல் திருமணத்திற்குப் பெற்றோர் முட்டுக்கட்டையாக இருந்ததால் இந்த கொலை நடந்ததாகக் கூறப்படுகிறது.
விகராபாத் மாவட்டம், பந்த்வாரம் மண்டலத்திலுள்ள யாசாரம் கிராமத்தில் இச்சம்பவம் நடந்தது. பெற்றோரின் மரணத்தில் சந்தேகமடைந்த மகன் போலீசில் புகார் அளித்ததையடுத்து இந்தக் கொலை வெளிச்சத்திற்கு வந்தது.
"வீட்டில் ரத்தக்கறை படிந்த ஊசிகள் கண்டெடுக்கப்பட்டதையடுத்து சந்தேகம் வலுத்தது. இது குறித்து விசாரணை நடத்தியபோது, சுரேகா என்ற இளம்பெண் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார்" என்று பந்த்வாரம் காவல் உதவி ஆய்வாளர் விமலா பிபிசியிடம் தெரிவித்தார்.
தனியார் மருத்துவமனை செவிலியர்
விகராபாத் டிஎஸ்பி ஸ்ரீனிவாஸ் ரெட்டி ஊடகங்களுக்கு தெரிவித்த தகவலின்படி, பந்த்வாரம் மண்டலத்தின் யாசாரம் கிராமத்தைச் சேர்ந்த தம்பதி நக்கலி தசரத் மற்றும் லட்சுமி. அவர்களுக்கு சுரேகா என்ற மகளும், அசோக் என்ற மகனும் உள்ளனர்.
சுரேகா சங்கரெட்டி நகரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் செவிலியராக வேலை செய்கிறார். அசோக் விகராபாத்தில் வசித்து வருகிறார்.
இந்த மாதம் 24-ஆம் தேதி இரவு, சுரேகா தனது சகோதரன் அசோக்கிற்கு தொலைபேசி செய்து, பெற்றோர் இருவரும் இறந்துவிட்டதாக தெரிவித்தார்.
"என் தந்தை இருந்த இடத்திலேயே சரிந்து விழுந்தார். அதைப் பார்த்து என் தாய்க்கு அதிர்ச்சியடைந்தார்" என்று அவர் அசோக்கிடம் கூறியதாக காவல்துறை தெரிவித்தது.
ஆனால், தனது பெற்றோர் இறந்த விதம் குறித்து சந்தேகம் ஏற்பட்டதால், அசோக் காவல்துறையில் புகார் அளித்தார்.
இதனைத் தொடர்ந்து விசாரணை நடத்திய காவல்துறை, சுரேகாவின் காதல் தொடர்பான விஷயங்களால் வீட்டில் அடிக்கடி வாக்குவாதங்கள் ஏற்பட்டுவந்ததை கண்டறிந்தது.
"நாங்கள் வீட்டிற்குச் சென்று ஆய்வு செய்தோம். இரு பெற்றோரும் ஒரே நேரத்தில் உயிரிழந்ததால் சந்தேகம் ஏற்பட்டது. அந்தக் கோணத்தில் விசாரணையைத் தொடங்கினோம். சுரேகாவின் காதல் விவகாரம் காரணமாக அடிக்கடி சண்டைகள் நடந்துவந்ததும் எங்களுக்கு தெரியவந்தது," என்று எஸ்ஐ விமலா தெரிவித்தார்.
வீட்டில் மேற்கொண்ட சோதனையில், ரத்தம் படிந்த நிலையில் இரண்டு ஊசிகள் கிடைத்தன.
"முதலில் தாய்க்கும், அதன் பிறகு தந்தைக்கும் ஊசி போடப்பட்டிருக்கிறது" என்று விகராபாத் டிஎஸ்பி ஸ்ரீனிவாஸ் ரெட்டி தெரிவித்தார். சுரேகாவை காவல்துறையினர் காவலில் எடுத்து விசாரணை நடத்தியபோது, அவரது காதல் விவகாரம் வெளிச்சத்துக்கு வந்ததாகவும் அவர் கூறினார்.

பட மூலாதாரம், Telangana Police
"ஜனவரி 24-ஆம் தேதி மாலை 6 மணியளவில் சுரேகா மருத்துவமனையிலிருந்து வீட்டிற்குத் திரும்பினார். அன்று இரவு அவரது தாய் லட்சுமி வீட்டில் சாதம் சமைத்தார். லட்சுமி அடிக்கடி வயிற்று வலி இருப்பதாகக் கூறிவந்ததால், அதையே சுரேகா வாய்ப்பாக பயன்படுத்தினார். வயிற்று வலியைக் குறைக்க மயக்க மருந்து ஊசியை மருத்துவரிடம் கேட்டு கொண்டு வந்ததாக அவர் கூறினார். அந்த ஊசியை அதிக அளவில் செலுத்தியதால், சிறிது நேரத்திலேயே லட்சுமி உயிரிழந்தார்," என்று டிஎஸ்பி தெரிவித்தார்.
"சிறிது நேரத்திற்குப் பிறகு தந்தை தசரத் வீட்டிற்குள் வந்தார். அப்போது, 'அம்மாவுக்கு தோள்பட்டை வலிக்காக ஊசி போட்டேன், அவர் தூங்கிக்கொண்டிருக்கிறார். அப்பா, உங்களுக்கும் முதுகு வலி இருக்கிறதே, உங்களுக்கும் ஒரு ஊசி போடுகிறேன்' என்று கூறி, சுரேகா தந்தைக்கும் ஊசி போட்டார். இதன் காரணமாக தசரத்தும் உயிரிழந்தார்," என்று காவல்துறை தெரிவித்தது.
ஊசியை அதிக அளவில் செலுத்தினால் உயிரிழப்பு ஏற்படும் என்பதை அறிந்திருந்தபடியே, சுரேகா இந்தக் குற்றத்தை செய்ததாக காவல்துறை கூறுகிறது.

காதலாக மாறிய இன்ஸ்டாகிராம் அறிமுகம்
கடந்த ஆண்டு இன்ஸ்டாகிராமில் சங்காரெட்டியைச் சேர்ந்த ஒரு இளைஞருடன் சுரேகாவுக்கு ஏற்பட்ட அறிமுகம், பின்னர் காதலாக மாறியதாக விகராபாத் மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.
"இருவரும் வெவ்வேறு சாதிகளைச் சேர்ந்தவர்கள் என்பதால், அவர்களது திருமணத்திற்கு சுரேகாவின் பெற்றோர் அனுமதி மறுத்தனர்," என்று பந்த்வாரம் எஸ்ஐ விமலா பிபிசியிடம் கூறினார்.
திருமணத்திற்கு பெற்றோரால் ஏற்பட்ட தடைகளை அகற்ற வேண்டும் என்ற முடிவுடன், சுரேகா இந்தக் கொலையை செய்ததாக விசாரணையில் தெரியவந்ததாகவும் அவர் தெரிவித்தார்.
தன் சகோதரி இவ்வளவு கொடூரமான செயலில் ஈடுபடுவார் என்று ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை என அசோக் ஊடகங்களிடம் கூறினார். இந்தச் சம்பவம் குறித்து ஊடகங்கள் கேள்வி எழுப்பியபோது, சுரேகா பேச மறுத்தார். அவரது உறவினர்களையும் தொலைபேசியில் தொடர்புகொண்டபோதும், அவர்கள் இந்த விவகாரம் குறித்து பேச விரும்பவில்லை.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு












