காணொளி: துப்பாக்கிச் சுடுதலில் சாதனைகள் படைக்கும் இந்திய நட்சத்திரம் சுருச்சி சிங்
பிபிசி இந்திய விளையாட்டு வீராங்கனை விருதின் (Indian Sportswoman of the Year) 6-ஆவது பதிப்புக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள 5 வீராங்கனைகளின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. கிரிக்கெட் வீராங்கனைகள் ஹர்மன்ப்ரீத் கௌர் மற்றும் ஸ்மிருதி மந்தனா, சதுரங்க வீராங்கனை திவ்யா தேஷ்முக், துப்பாக்கிச் சுடுதல் வீராங்கனை சுருச்சி சிங், தடகள வீராங்கனை ஜோதி யாராஜி ஆகியோர் இந்தப் பட்டியலில் உள்ளனர்.
2025-ஆம் ஆண்டில் இந்திய விளையாட்டு வீராங்கனைகளின் பங்களிப்பை கௌரவிக்கும் விதமாகவும் விளையாட்டு துறையில் அனைத்து பெண்களின் சாதனைகளை கொண்டாடும் விதமாகவும் இந்த விருது வழங்கப்படுகிறது.
துப்பாக்கி சுடும் வீரர்களை உருவாக்குவதில் சிறப்பான வரலாற்றைக் கொண்ட ஹரியானாவைச் சேர்ந்த சுருச்சி சிங், 2024-ஆம் ஆண்டில் தேசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப்பில் 7 தங்கப் பதக்கங்களை வென்று தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்தார்.
19 வயதான அவர் அடுத்த ஓராண்டிற்குள் சர்வதேச அளவில் சீனியர் பிரிவு போட்டிகளில் அறிமுகமாகி, விரைவிலேயே உலக அரங்கில் தன்னை நிலைநிறுத்திக்கொண்டார். 2025-ஆம் ஆண்டில் சர்வதேச துப்பாக்கி சுடுதல் விளையாட்டு கூட்டமைப்பின் (ஐஎஸ்எஸ்எஃப் - ISSF) உலகக் கோப்பைத் தொடரில் பியூனஸ் அயர்ஸ் (Buenos Aires), லிமா மற்றும் மியூனிக் ஆகிய இடங்களில் தலா ஒன்று என 3 தங்கப் பதக்கங்களை வென்றார். லிமாவில் ஆண், பெண் இணைந்த கலப்பு குழு போட்டியில் அவர் தங்கம் வென்றார்.
கஜகஸ்தானில் நடைபெற்ற ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் -2025 தொடரில் மகளிர் குழு போட்டியில் மனு பாக்கர் மற்றும் பாலக் குலியாவுடன் இணைந்து வெண்கலம் வென்றார்.
கடந்தாண்டு செப்டம்பரில் ஐஎஸ்எஸ்எஃப்-யின் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் முதலிடத்தைப் பிடித்தார் சுருச்சி சிங்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



