You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஷெங்கன் விசா: 29 ஐரோப்பிய நாடுகளில் இந்தியர்கள் நுழைய சிறப்புச் சலுகை என்ன?
ஐரோப்பாவில் ஷெங்கன் நாடுகள் இந்தியர்களுக்கு ஒரு சிறப்பு சலுகைத் திட்டத்தைக் கொண்டு வந்துள்ளன. அதன்படி, இந்தியர்கள் ஒருமுறை விசா பெற்ற பின்னர், 5 ஆண்டுகள் வரை எத்தனை முறை வேண்டுமானாலும் ஐரோப்பாவிற்கு பயணிக்கலாம். மீண்டும் மீண்டும் புதிதாக விசாவிற்கு விண்ணப்பிக்க வேண்டியதில்லை.
விதிகளில் கொண்டு வரப்பட்டிருக்கும் புதிய மாற்றத்தால் வணிக நோக்கங்களுக்காக அடிக்கடி ஐரோப்பாவுக்கு செல்பவர்களின் பயணம் எளிதாகும் என்று கூறப்படுகிறது.
ஷெங்கன் விசா என்றால் என்ன?
ஐரோப்பியர் அல்லாதவர்கள் ஐரோப்பாவின் 29 நாடுகளுக்கு செல்ல அனுமதிக்கும் ஒருவகை விசா தான் இந்த ஷெங்கன் விசா. ஷெங்கன் பிராந்தியம் என்பது சுவிட்சர்லாந்து, ஜெர்மனி, ஃபிரான்ஸ், ஸ்பெயின், நார்வே உட்பட 29 ஐரோப்பிய நாடுகளை உள்ளடக்கியதாகும். இதில் 25 நாடுகள் ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பு நாடுகள் ஆகும். இந்த நாடுகளுக்குச் செல்ல ஷெங்கன் விசா வழங்கப்படுகிறது.
இதற்காக 90/180 Day விதி அமலில் உள்ளது. இந்த விதியின்படி, எந்த வெளிநாட்டவரும் இந்த நாடுகளில் ஏதேனும் 180 நாட்களில் 90 நாட்கள் வரை தங்கி இருக்க முடியும். 90 நாட்களுக்கு மேல் தங்கியிருந்தால் நாடு கடத்தல், அபராதம் விதித்தல், ஷெங்கன் நாடுகளுக்குள் நுழைய தடை போன்ற நடவடிக்கைகளுக்கு உள்ளாக நேரிடும்.
கடந்த ஏப்ரல் 18ஆம் தேதி அன்று, இந்திய குடிமக்களுக்குப் பலமுனை நுழைவு விசாக்களை வழங்குவதற்கான புதிய விதிகளை ஐரோப்பிய ஆணையம் வெளியிட்டது. அதன்படி, இந்திய பாஸ்போர்ட் வைத்திருக்கும் ஒருவர் கடந்த காலத்தில் ஐரோப்பாவுக்கு பயணம் செய்த விவரங்கள் சரியாக இருந்தால், இந்தப் பலமுனை நுழைவு ஷெங்க்கன் விசாவை எளிதாகப் பெறலாம்.
கடந்த மூன்று ஆண்டுகளில் இரண்டு முறை தங்களின் ஷெங்கன் விசாவை சட்டப்பூர்வமாக பயன்படுத்தியிருக்கும் இந்தியர்களும், இரண்டு ஆண்டு காலத்திற்குப் பலமுனை நுழைவு ஷெங்கன் விசாவை பெறலாம். இரண்டு ஆண்டு கால விசாவிற்கு பிறகு பாஸ்போர்ட் போதுமான காலத்திற்கு செல்லுபடியாகும் பட்சத்தில் 5 ஆண்டுகால ஷெங்கன் விசா வழங்கப்படும்.
எனினும், அந்த குறிப்பிட்ட 29 ஐரோப்பிய நாடுகளிலும் வேலை செய்வதற்கு ஷெங்கன் விசாவின் கீழ் அனுமதி கிடையாது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். சௌதி அரேபியா, ஓமன் மற்றும் பஹ்ரைன் ஆகிய நாட்டின் குடிமக்களுக்கும் இந்த சலுகைகளை ஷெங்கன் நாடுகள் வழங்கியுள்ளன.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)