You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பிளஸ் டூ மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் பெண் கராத்தே பயிற்சியாளருக்கு 20 ஆண்டு சிறை
- எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம்
- பதவி, பிபிசி தமிழ்
சென்னையில் பிளஸ் 2 மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் பெண் கராத்தே பயிற்சியாளருக்கு 20 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.
"போக்சோ வழக்கில் தமிழ்நாட்டில் ஒரு பெண்ணுக்கு அதிக ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படுவது இதுவே முதல்முறை" எனக் கூறுகிறார், சிறப்பு அரசு வழக்கறிஞர் அனிதா.
என்ன நடந்தது?
'பள்ளிக்குச் சென்ற தன் மகளைக் காணவில்லை' எனக் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம், சென்னையில் உள்ள காவல் நிலையம் ஒன்றில் மாணவியின் தந்தை புகார் மனுவைக் கொடுத்துள்ளார்.
அவர் தனது மனுவில், சென்னையில் உள்ள பெண்கள் பள்ளியில் தங்களின் இரண்டாவது மகள் பிளஸ் 2 படித்து வருவதாகவும் அக்டோபர் 17 (2024-ஆம் ஆண்டு) அன்று பள்ளிக்குச் செல்வதாகக் கூறிவிட்டு வீட்டை விட்டுக் கிளம்பிய மகள் வீடு திரும்பவில்லை எனவும் தெரிவித்திருந்தார்.
'வாட்ஸ்ஆப் குழு கொடுத்த அதிர்ச்சி'
"வழக்கமாக காலை 8 மணிக்கு பள்ளிக்குச் சென்றால் மாலை 5 மணிக்கு மாணவி வீடு திரும்பிவிடுவார். சம்பவம் நடந்த நாளில் காலை 7.30 மணியளவில் வீட்டை விட்டுக் கிளம்பினார். ஆனால், 'மாணவி பள்ளிக்கு வரவில்லை' எனப் பள்ளியின் வாட்ஸ்ஆப் குழுவில் பதிவிடப்பட்டுள்ளது'" என தந்தை அளித்த புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது.
'இதன்பிறகு உறவினர்களின் வீடுகளில் தேடியும் மகளைக் கண்டறிய முடியவில்லை' என்று குறிப்பிட்டிருந்த அவர், பெண் கராத்தே பயிற்சியாளர் மீதான தனது சந்தேகத்தையும் தனது மனுவில் தெரிவித்திருந்தார்.
'நோட்டீஸ் அனுப்பியும் ஆஜராகவில்லை'
"பள்ளி உள்ளிட்ட இடங்களில் விசாரித்த பிறகு, கராத்தே பயிற்சியாளர் வீட்டில் சோதனை நடத்திய காவல்துறை, மாணவியை அந்த பெண் பயிற்சியாளர் கடத்திச் சென்றதை உறுதி செய்தது. ஆனாலும், ஜெயசுதாவை காவல்துறை உடனே கைது செய்யவில்லை" எனக் கூறுகிறார், போக்சோ வழக்குகளுக்கான சிறப்பு அரசு வழக்கறிஞர் எஸ்.அனிதா.
பிபிசி தமிழிடம் பேசிய அவர், "அவர் பெண் என்பதால் வழக்கில் 41ஏ நோட்டீஸ் கொடுத்து பதில் அளிக்க வருமாறு காவல்துறை கூறியுள்ளது. இரண்டு முறை நோட்டீஸ் அனுப்பியும் அவர் ஆஜராகவில்லை" என்கிறார்.
41ஏ நோட்டீஸ் என்பது விதிவிலக்கான போக்சோ வழக்குகளில் கடைபிடிக்கப்படும் நடைமுறையாக உள்ளது. "குழந்தைத் திருமண விவகாரங்களில் மகப்பேறுக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்படும் போது தான் பெண்ணின் வயது பெரும்பாலும் தெரியவரும். காவல்துறைக்கும் தகவல் தெரிவிக்கப்படும்" எனக் கூறுகிறார், சிறப்பு அரசு வழக்கறிஞர் எஸ்.அனிதா.
"குழந்தையின் தந்தையை சிறையில் அடைத்தால் அந்தப் பெண் பாதிக்கப்படுவார் என்பதால் கைது செய்யாமல் தவிர்ப்பதற்காக 41ஏ நோட்டீஸ் கொடுக்கப்படுகிறது. தேவைப்படும் போது அவர் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும். அவ்வாறு ஆஜராகவிட்டால் நீதிமன்றத்தால் பிணையில் வெளிவர முடியாத பிடியாணை (Non-bailable warrrant) பிறப்பிக்கப்படும்" எனவும் அவர் தெரிவித்தார்.
அந்த வகையில், 6 மாதங்களுக்கும் முன்பாக ஜெயசுதா கைது செய்யப்பட்டதாக அவர் கூறினார்.
தீர்ப்பில் கூறப்பட்டிருப்பது என்ன?
பாதிக்கப்பட்டவர் சிறுமி என்பதால் ஜெயசுதா மீது போக்சோ சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் ஒன்பது சாட்சிகளும் 15 ஆவணங்களும் சமர்ப்பிக்கப்பட்டதாக நீதிமன்றம் கடந்த செப்டம்பர் 30-ஆம் தேதி வழங்கிய தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது.
மாணவியை வேண்டுமென்றே கராத்தே பயிற்சியாளர் ஜெயசுதா தவறாக வழிநடத்தியிருப்பதாக சிறப்பு நீதிமன்ற நீதிபதி எஸ்.பத்மா, தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.
ஜெயசுதாவுக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்ததுடன், பாதிக்கப்பட்ட மாணவிக்கு 1.5 லட்ச ரூபாய் இழப்பீட்டை தமிழ்நாடு அரசு வழங்கவும் அவர் உத்தரவிட்டார்.
"இந்த வழக்கில் பெண் எப்படி தவறு செய்திருப்பார் என்ற கேள்வி எழும். ஆனால், போக்சோ சட்டப்பிரிவில் உள்ள அனைத்து குற்றங்களையும் அவர் செய்துள்ளார். போக்சோ பிரிவில் ஒரு பெண்ணுக்கு அதிக ஆண்டுகள் தண்டனை விதிக்கப்படுவது என்பது தமிழ்நாட்டில் இதுவே முதல்முறையாக உள்ளது" என்று கூறுகிறார் சிறப்பு அரசு வழக்கறிஞர் அனிதா.
'குழந்தையின் சிறந்த நலனே முக்கியம்'
"சட்டத்தைப் பொறுத்தவரை குழந்தையின் நலன் எது என்பதையே பார்க்கிறது. 18 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைக்கு ஏதேனும் நெருக்கடியோ, தூண்டுதலோ கொடுக்கப்பட்டிருக்கலாம் என்ற நோக்கில் பார்க்க வேண்டும் என சட்டப் பிரிவுகள் சொல்கின்றன" குழந்தைகள் நல செயற்பாட்டாளர் தேவநேயன் அரசு பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய தேவநேயன் அரசு, "பாலின சமத்துவத்தையே போக்சோ சட்டப் பிரிவுகள் குறிக்கின்றன. அதாவது, பாதிக்கப்பட்டவரோ அல்லது குற்றம் சாட்டப்பட்டவரோ யாராக இருந்தாலும் பேதம் கிடையாது. 18 வயதுக்கு கீழ் உள்ள குழந்தையிடம் அவரது விருப்பத்தின் பேரில் பாலியல் செயலில் ஈடுபட்டாலும் அது குற்றம்தான்" என்று திட்டவட்டமாக கூறினார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு