You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஆந்திரா: மருந்து தொழிற்சாலையில் உலை வெடித்து விபத்து- 16 பேர் இறப்பு
- எழுதியவர், லக்கோஜு ஸ்ரீனிவாஸ்
- பதவி, பிபிசி தெலுங்குக்காக
ஆந்திரப் பிரதேசத்தின் அனகாபள்ளி மாவட்டத்தின் சிறப்பு பொருளாதார மண்டலப் (SEZ) பகுதியில் உள்ள ‘எசென்ஷியா அட்வான்ஸ்டு சயின்ஸ் பிரைவேட் லிமிடெட்’ நிறுவனத்தில், இன்று (21.08.2024) உலை வெடித்ததால் கட்டடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது.
இந்த வெடிப்பில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 16ஆக உயர்ந்துள்ளதாக ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் தனது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.
முன்னதாக அனகாபள்ளி மாவட்ட ஆட்சியர் விஜய கிருஷ்ணன் பிபிசி தெலுங்குடன் பேசியபோது 15 பேர் உயிரிழந்ததை உறுதி செய்தார்.
மேலும் இந்த விபத்தில் ஏராளமானோர் காயமடைந்துள்ளனர் என்றும், விபத்தின் அளவைக் கருத்தில் கொண்டு, பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுவதாகவும் அவர் கூறினார்.
ஆந்திராவின் அச்சுதாபுரத்தில் உள்ள இந்த சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் உள்ள மருந்து நிறுவனத்தில்தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. இங்கு மதிய உணவு நேரத்தில் நடைபெற்ற விபத்தால் பலத்த வெடி சத்தம் கேட்டு, அந்தப் பகுதி முழுவதும் அடர் புகை மூட்டம் பரவியது.
விபத்து நடந்த போது தொழிற்சாலையில் 300க்கும் மேற்பட்டோர் இருந்தனர். பல ஊழியர்கள் இடிபாடுகளுக்குள் புதைந்துள்ளனர்.
பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
காயமடைந்தவர்கள் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். உலையில் இந்த வெடிப்பு ஏற்பட்டதாகவும், இதன் காரணமாக கட்டடத்தின் ஒரு தளம் இடிந்து விழுந்ததாகவும் கூறப்படுகிறது.
ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அனகாபல்லி மாவட்ட ஆட்சியரிடம் தொலைபேசியில் பேசியுள்ளார். காயமடைந்தவர்களுக்கு சிறந்த சிகிச்சை அளிக்கவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
தேவைப்பட்டால், ஏர் ஆம்புலன்ஸையும் பயன்படுத்தி காயமடைந்தவர்களை வெளியேற்றலாம் என்று சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார்.
மாநில சுகாதாரத்துறை செயலாளரை அச்சுதாபுரம் செல்லவும் சந்திரபாபு நாயுடு உத்தரவிட்டுள்ளார். விபத்து நடந்த இடத்தைப் பார்வையிட நாளை செல்லவுள்ளார் (வியாழக்கிழமை) சந்திரபாபு நாயுடு.
இந்த சிறப்புப் பொருளாதார மண்டலம் ஆந்திராவின் அனகாபள்ளி மாவட்டத்தில் சுமார் 10 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இதில், மூவாயிரம் ஏக்கரில் மருந்து தொழிற்சாலைகள் அமைந்துள்ளன.
இந்த பகுதி அச்சுதாபுரம் ஃபார்மா SEZ என்று அழைக்கப்படுகிறது. இங்குள்ள தொழிற்சாலைகளில் ரசாயனங்கள் தயாரிக்கப்பட்டு, சேமிக்கப்படுகின்றன. இங்கு அடிக்கடி தீ விபத்து ஏற்படுகிறது.
அனகாபள்ளி மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த மண்டலத்தில் பெரும்பாலும் மருந்து நிறுவனங்களே உள்ளன. இந்த SEZ பகுதியில் மொத்தம் 208 நிறுவனங்கள் உள்ளன. ஆனால் இவ்வளவு நிறுவனங்கள் இருந்தும் இங்கு ஒரே ஒரு தீயணைப்பு வாகனம் மட்டுமே உள்ளது.
இதனால் அருகில் உள்ள தீயணைப்பு நிலையங்களில் இருந்து தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு தீயை அணைத்தனர்.
கடந்த ஆண்டு, இங்குள்ள ‘சாகித்யா சால்வென்ட்ஸ்’ நிறுவனத்தில் நான்கு பேர் இறந்தனர்.
ஆந்திர மாநிலத்தின் தொழிலாளர், தொழிற்சாலைகள், கொதிகலன்கள் மற்றும் காப்பீட்டு மருத்துவ சேவைகள் அமைச்சர் வாசமெட்டி சுபாஷ் ஏஎன்ஐ செய்தி முகாமையிடம் பேசுகையில் , "அடர்த்தியான புகை காரணமாக நிவாரணம் மற்றும் மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ள குழுவினர் தொழிற்சாலை வளாகத்திற்குள் செல்லவதில் சிக்கல்களை எதிர்கொண்டனர்.” என்றார்.
மேலும், “மீட்பு பணிகள் நடந்து வருகின்றன. எத்தனை பேர் உள்ளே சிக்கியுள்ளனர் என்பது தெளிவாகத் தெரியவில்லை, அவர்களை விரைவில் அடைய மீட்புக் குழுவினர் முயற்சித்து வருகின்றனர்.” என்றும் கூறினார்.
இந்த விபத்து மதியம் 2 மணியளவில் நடந்ததாக அனகாபள்ளி மாவட்ட ஆட்சியர் விஜய கிருஷ்ணன் கூறியதாக பிடிஐ செய்தி முகமை கூறியுள்ளது.
இருப்பினும், உலை வெடித்ததே இந்த விபத்துக்கான காரணம் என்று அவர் கூறவில்லை. மாறாக மின்கசிவு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.
விபத்தில் காயமடைந்த சுமார் 30 பேர் அனகாபள்ளி மற்றும் அச்சுதாபுரத்தில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)