தமிழ்நாடு அரசு துறை பெயரில் 'ஆதி திராவிடர்' என்ற சொல்லை நீக்க கோரி வழக்கு - என்ன காரணம்?

    • எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம்
    • பதவி, பிபிசி தமிழ்

தமிழ்நாடு அரசின் 'ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் பெயரில் உள்ள ஆதி திராவிடர் என்கிற சொல்லுக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது அந்த வழக்கில் துறையின் பெயரை நியாயப்படுத்துவதற்கான ஆவணங்களை (Authentic documents) சமர்ப்பிக்குமாறு செப்டம்பர் 11-ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பட்டியல் சாதிப் பிரிவுகளில் ஒன்றாக 'ஆதிதிராவிடர்' உள்ளபோது, துறையின் பெயரை மாற்ற உத்தரவிடுமாறு கோரி மாரிமுத்து என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். ஆதி திராவிடர் நலத்துறையின் பெயரை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை எழுவது ஏன்?

தமிழ்நாட்டில் பட்டியல் சாதியில் 76 பிரிவுகள் கண்டறியப்பட்டு அவர்களின் நலனுக்காக 1988 ஆம் ஆண்டு சமூக நலத் துறையின் கீழ் இயங்கிய ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை தனியாக உருவாக்கப்பட்டது.

"இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு இந்திய அரசியலமைப்புச் சட்டம் இயற்ற முற்பட்ட போது, விளிம்புநிலை மக்களை முன்னேற்றும் வகையில், மாநிலங்களில் அவர்களில் எத்தனை சாதிகள் உள்ளன என்ற கணக்கு வெளியிடப்பட்டது. அதுதான் 'அட்டவணை சாதிகள்' என அழைக்கப்படுகிறது" எனக் கூறுகிறார், வழக்கறிஞர் விஜேந்திரன்.

'ஆதிதிராவிடர் நலத்துறை' என்ற பெயரை மாற்றுமாறு கோரி வழக்கு தொடர்ந்த மாரிமுத்துவின் வழக்கறிஞர் இவர்.

பட்டியல் பிரிவில் 76 சாதிகள்

தமிழ்நாட்டில் உள்ள 76 பட்டியல் சாதிகளின் பட்டியலில் முதலில் ஆதி ஆந்திராவும் அடுத்து ஆதிதிராவிடாவும் உள்ளன. அதற்கு அடுத்து ஆதி கர்நாடகா, அஜிலா, அருந்ததியர் ஆகியவை உள்ளன.

"ஆதிதிராவிடர் என்ற சொல், பட்டியல் பிரிவில் உள்ள சாதிகளில் ஒன்றாக உள்ளது" எனக் கூறும் வழக்கறிஞர் விஜேந்திரன், "அரசியலமைப்புச் சட்டத்தில் வெளிப்படுத்தப்பட்டுள்ள 'பட்டியல் சாதி' என்பதற்கான தமிழ் மொழிபெயர்ப்பாக 'பட்டியல் இனத்தவர்' என உள்ளது" என்கிறார்.

அப்படியிருக்கும் போது, 'பட்டியல் சாதியினருக்கான துறையை 'ஆதிதிராவிடர்' நலத்துறை என்று கூறுவது அரசியலமைப்புச் சட்டத்தை மீறுவதாக உள்ளதால் பெயரை மாற்றக் கோரி தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட வேண்டும்' என்பது அவரது வாதம்.

நீதிமன்றத்தில் என்ன நடந்தது?

இந்த வழக்கில், கடந்த மார்ச் 15, 2018 அன்று இந்திய அரசின் சமூகநீதி மற்றும் அதிகாரப் பரவலாக்கல் துறை அமைச்சகம் வெளியிட்டிருந்த சுற்றறிக்கை ஒன்றையும் அவர் நீதிமன்றத்தில் மேற்கோள் காட்டினார்.

அதில், 'மத்திய மற்றும் மாநில அரசில் உள்ள அதிகாரப்பூர்வ பரிமாற்றங்களில் பட்டியல் சாதி மக்களைக் குறிக்கும் வகையில் 'பட்டியல் சாதி' என அரசியலமைப்பு கூறியுள்ள சொல்லைப் பயன்படுத்த வேண்டும். இதற்கு பிற தேசிய மொழிகளில் பொருத்தமான சொல்லைப் பயன்படுத்த வேண்டும்' எனக் கூறியுள்ளது.

இதனைப் பதிவு செய்த தலைமை நீதிபதி மணீந்திர மோகன் ஸ்ரீவத்சவா மற்றும் நீதிபதி சுந்தர் மோகன் அமர்வு, 'மனுதாரரின் மனுவில் பரிசீலிக்க வேண்டிய விஷயம், 'பட்டியல் சாதி (scheduled caste)' என்ற வார்த்தையின் தமிழ் மொழிபெயர்ப்பு என்ன என்பது தான்' எனத் தெரிவித்தது.

தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த பதில் மனுவில், குழு ஒன்று அமைக்கப்பட்டு அக்குழுவினர் அளித்த பரிந்துரையின் அடிப்படையில் ஆதிதிராவிடர் என்ற பெயரை சூட்டப்பட்டதாகத் தெரிவித்தது.

இதற்குப் பதில் அளித்த நீதிபதிகள், 'தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த பதில் மனுவில் 'ஆதிதிராவிடர்' என்ற அம்சம் எவ்வாறு எடுத்துக் கொள்ளப்பட்டது என்பது வெளிப்படவில்லை. ஆதிதிராவிடர் என்பது பட்டியல் சாதி என்ற சொல்லுக்கான மொழிபெயர்ப்பா என்பதை தெளிவாகக் குறிப்பிட வேண்டும்' என உத்தரவிட்டனர்.

இதுதொடர்பாக அரசு பின்பற்றக் கூடிய அகராதிக் குறிப்புகள் மற்றும் ஆவணங்களை சமர்ப்பிக்குமாறு கூறி செப்டம்பர் 26-ஆம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்தனர்.

'கோரிக்கை விடுத்தும் நிறைவேற்றப்படவில்லை'

"பட்டியல் சாதி தொடர்பாக அரசியலமைப்புச் சட்டத்தில் என்ன பெயர் பயன்படுத்தப்படுகிறதோ அதே பெயரைப் பயன்படுத்த வேண்டும் என மத்திய அரசு கூறுகிறது. மொழிபெயர்ப்பு செய்தால்கூட அரசியலமைப்பில் சொல்லப்பட்டதற்கேற்ற வார்த்தைகளையே பயன்படுத்த வேண்டும்" என்கிறார், வழக்கறிஞர் விஜேந்திரன்.

அதேநேரம், இந்த வழக்கில் இடையீட்டு மனு (Impleading Petition) ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார், தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணையத்தின் முன்னாள் துணைத் தலைவர் புனிதப் பாண்டியன்.

இந்த வழக்கில் தனது தரப்பு வாதத்தை முன்வைக்கும் வகையில் இடையீட்டு மனுவைத் தாக்கல் செய்திருப்பதாகக் கூறுகிறார், புனிதப் பாண்டியன்.

1922ஆம் ஆண்டு தீர்மானம் என்ன?

"அனைத்து பட்டியல் சாதியினரையும் உள்ளடக்கிய, சாதியற்ற குறியீடாக உள்ள 'ஆதிதிராவிடர்' என்ற பெயரே நலத்துறைக்குப் பொருத்தமான பெயராகப் பார்க்கிறேன். அதை ஒருபோதும் மாற்றக் கூடாது. அவ்வாறு மாற்றுவது வரலாற்றைத் திரிப்பதற்கு வழிவகுக்கும்" எனக் கூறும் புனிதப் பாண்டியன், அதற்கான ஆதாரங்களைப் பிரமாணப் பத்திரமாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

"1988 ஆம் ஆண்டு 'ஆதிதிராவிடர் நலத்துறை' உருவாக்கப்பட்டது. அதற்கு முன்பு, அது சமூக நலத்துறையின்கீழ் இருந்தது. ஆனால், அரசு ஆவணங்களில் அனைத்துப் பட்டியல் சாதியினரையும் குறிப்பிடுவதற்கு 'ஆதிதிராவிடர்' என்ற சொல்லே நூறாண்டு காலமாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது" என்கிறார், புனிதப் பாண்டியன்.

இதுதொடர்பாக, 20.01.1922 அன்று மதராஸ் மாகாண சட்ட மேலவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் ஒன்றையும் அவர் மேற்கோள் காட்டினார்.

1922 ஆம் ஆண்டு எம்.சி.ராஜா கொண்டு வந்த தீர்மானம், ' எங்களை பஞ்சமர், பறையர் போன்ற பெயர்களால் அழைக்காமல் 'ஆதி திராவிடர்' என்றே அழைக்க வேண்டும்' என்று கூறுவதாக ஆ.பெருமாள் பிள்ளை எழுதிய 'ஆதி திராவிடர் வரலாறு' என்ற நூல் தெரிவிக்கிறது.

இதே தீர்மானம் பிறகு அரசாணையாகவும் (G. O. No. 817/25.03.1922) அன்றைய மதராஸ் மாகாண அரசால் வெளியிடப்பட்டுள்ளது.

'எப்படி சாதி அடையாளமாக மாறும்?'

"திராவிடர் என்ற சொல் தென்னிந்தியாவைச் சேர்ந்த பட்டியல் சாதியினர் உள்ளிட்ட மொத்த மக்களையும் குறிக்கும் நிலையில், அதனுடன் 'ஆதி' என்ற சொல்லைச் சேர்த்தவுடன் அது எப்படி சாதி அடையாளமாக மாறும்?" எனக் கேள்வி எழுப்புகிறார், புனிதப் பாண்டியன்.

"பட்டியலில் உள்ள பெயர்கள்தான் சாதிப் பெயர்களாக அறியப்படுகின்றனவே தவிர, வரலாற்றில் எப்போதும் எங்கேயும் 'ஆதிதிராவிடர்' என்றொரு சாதியோ, உட்சாதியோ இருந்ததற்கான ஆதாரமே இல்லை" எனவும் அவர் குறிப்பிட்டார்.

அதேநேரம், "ஆதிதிராவிடர் என்ற குறியீட்டுச் சொல், மத்திய அரசு வெளியிட்டுள்ள பட்டியல் பிரிவில் தவறாக சேர்க்கப்பட்டிருப்பதை நீக்க வேண்டும் என்று கோரிக்கையை வைப்பதுதான் சரியாக இருக்கும்" எனவும் அவர் கூறுகிறார்.

"மாறாக, மாநில அரசுத்துறையின் பெயரை மாற்றக் கோருவது அம்மக்களின் ஒற்றுமையைச் சிதைக்கும் உள்நோக்கம் கொண்டது" எனவும் புனிதப் பாண்டியன் தெரிவித்தார்.

'ஆதிதிராவிடர் என்பது சாதியை குறிக்காது'

'எஸ்.சி' என்பது எப்படி ஓர் உட்சாதியைக் குறிக்கும் சொல்லாக ஆகாதோ, அதேபோல 'ஆதிதிராவிடர்' என்ற வகைப்பாடும் (Classification) ஓர் உட்சாதியைக் குறிப்பதாக ஒருபோதும் ஆகாது" என்று புனிதப் பாண்டியன் குறிப்பிட்டார்.

தொடர்ந்து பேசிய அவர், "ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக பட்டியல் சாதியில் உள்ள 76 பிரிவினரையும் குறிக்கும் வகையில் ஆதிதிராவிடர் என்ற சொல் பயன்பாட்டில் உள்ளது" என்றார்.

'பட்டியல் இனத்தவர் என்பதும் தவறு'

"பட்டியல் சாதியினர் என்பதற்கான நேரடி மொழிபெயர்ப்பாக ஆதிதிராவிடர் என்ற சொல் இல்லையே?" என்கிற கேள்வியை புனிதப் பாண்டியனிடம் பிபிசி தமிழ் முன்வைத்தது.

அதற்கு பதிலளித்த அவர், "மத்திய அரசு ஆவணங்களில் பயன்படுத்தப்படும் 'பட்டியல் சாதியினர்' (Scheduled Castes) என்பதற்கான நேரடி மொழிபெயர்ப்பாக 'ஆதிதிராவிடர்' என்ற சொல் இல்லை. ஆனால், அதில் இருப்பது போல் 'சாதியினர்' என்ற சொல், தமிழக அரசு பயன்படுத்தும் சொல்லில் இல்லை என்பதை நீதிமன்றம் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்" என, இடையீட்டு மனுவில் தான் குறிப்பிட்டுள்ளதாகக் கூறுகிறார்.

"பெயரை மாற்றுமாறு வழக்கு தொடர்ந்த மனுதாரர் கூறுவதைப்போல, 'பட்டியல் இனத்தவர்' என்கிற மொழிபெயர்ப்பும் தவறுதான். ஏனெனில், அம்பேத்கரின் வார்த்தைகளின்படி, சாதியையோ, உட்சாதியையோ 'இனம்' என்று குறிப்பிடுவது பிழையானது" என்கிறார், புனிதப் பாண்டியன்.

இந்திய அரசியலமைப்பை உருவாக்கிய டாக்டர் அம்பேத்கர், 'பட்டியல் சாதியினர் அனைவரும் வெவ்வேறு பெயர்களால் அழைக்கப்பட்டாலும் அவர்கள் ஒரு தாய் மக்களே' எனத் தெரிவித்ததாகக் கூறுகிறார் புனிதப் பாண்டியன்.

ஆனால், இந்த ஒற்றுமையைச் சிதைக்கும் வகையில் முன்வைக்கப்பட்டுள்ள பெயர் மாற்றக் கோரிக்கை தொடர்பாக, நீதிமன்றம் தான் முடிவைத் தெரிவிக்க வேண்டும் என்பதையே தனது இடையீட்டு மனுவிலும் தெரிவித்துள்ளதாக கூறுகிறார், புனிதப் பாண்டியன்.

"ஆதிதிராவிடர் நலத்துறையைப் போல பிற்படுத்தப்பட்ட நலத்துறைக்கும் அதில் உள்ள ஏதேனும் ஒரு சாதியின் பெயரை வைத்தால் சரியானதாக இருக்குமா?" எனக் கேள்வி எழுப்பும் விஜேந்திரன், "ஒரு சாதியின் பெயரை 76 சாதிகளுக்கும் பொதுவான பெயராக வைக்க முடியாது. அரசியலமைப்புச் சட்டத்தின்படி பெயர் சூட்ட வேண்டும் என்பதே எங்களின் கோரிக்கை" என்கிறார்.

தமிழ்நாடு அமைச்சர் பதில்

தமிழ்நாடு ஆதிதிராவிடர் நலத்துறையின் பெயரை மாற்றக் கோரும் வழக்கு தொடர்பாக துறையின் அமைச்சர் மதிவேந்தன் பதில் அளித்துள்ளார்.

செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மதிவேந்தன், "ஆதிதிராவிடர் நலத்துறையின் பெயரை மாற்றுவது குறித்து முதலமைச்சர் தான் பரிசீலிக்க வேண்டும். ஆதிதிராவிடர் நலத்துறை என்ற பெயரில் இருந்தாலும் அனைத்து பட்டியல் சாதி மற்றும் பழங்குடிகளின் நலனுக்காகவே இத்துறை செயல்பட்டு வருகிறது" எனத் தெரிவித்துள்ளார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு