காஸாவைத் தொடர்ந்து லெபனான் மீதும் இஸ்ரேல் தாக்குதல் - என்ன காரணம்?

காணொளிக் குறிப்பு, லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: "பதிலடி கொடுக்க ஏவுகணைகள் தயார்" என மிரட்டும் ஹெஸ்புலா
காஸாவைத் தொடர்ந்து லெபனான் மீதும் இஸ்ரேல் தாக்குதல் - என்ன காரணம்?

தெற்கு லெபனானில் ஹெஸ்புலா ஆயுத குழுவின் இலக்குகளை குறித்து இஸ்ரேல் வான் வழித் தாக்குதலை நடத்தியுள்ளது.

இஸ்ரேலில் இருந்து சுமார் 30 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கஸியா பகுதியில் திங்கட்கிழமை அன்று இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தாக்குதலுக்குள்ளான கட்டடங்கள் இடிந்து தரைமட்டமாகின.

ஹெஸ்புலா ஆயுதக் குழுவினர் இஸ்ரேல் எல்லையில் ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்தியதற்கு பதிலடி கொடுக்கவே, ஹெஸ்புலாவின் ஆயுதக் கிடங்குகளை தாக்கி அழித்ததாக இஸ்ரேல் ராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

ஹெஸ்புலாவின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

இந்த தாக்குதலில் குறைந்தது 14 பேர் படுகாயம் அடைந்ததாக ராய்ட்டர்ஸ் செய்தி முகமை தெரிவிக்கிறது. உயிரிழப்புகள் குறித்த விபரம் அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை.

லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதல் தொடர் கதையாகிவிட்டது என்றும் இஸ்ரேலின் தாக்குதலுக்கு மின்சார ஜெனரேட்டர்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலை இலக்காகியிருக்கிறது என்று அந்த கட்டடத்தில் தொழில் செய்து வந்த பெண் ஒருவரை மேற்கோள்காட்டி அல் ஜசீரா செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

காஸா போர் தொடங்கியதில் இருந்து ஹமாஸுக்கு ஆதரவாக இஸ்ரேல் எல்லைக்குள் ஹெஸ்புலா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. முன்னதாக போர் நிறுத்தம் மேற்கொள்ளப்படும் வரை தாக்குதல் தொடரும் என ஹெஸ்புலா அறிவித்திருந்தது.

கடந்த வாரம் பெலனானில் உள்ள குடியிருப்புப் பகுதி மீது இஸ்ரேல் நடத்திய வான் வழித் தாக்குதலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் கொல்லப்பட்டதாக லெபனான் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இந்த தாக்குதலுக்கு ஹெஸ்புலா அமைப்பின் தலைவர் ஹஸன் நஸ்ரல்லா கடுமயாக எதிர்வினையாற்றினார்.

"சமீபத்திய நாட்களில் லெபனானில் தொடர்ச்சியாக மக்கள் கொல்லப்பட்டு வருவதற்கு இஸ்ரேல் பதில் சொல்ல வேண்டி இருக்கும். இஸ்ரேலில் எந்தப் பகுதியையும் தாக்கும் திறன் கொண்ட ஏவுகணைகள் தங்களிடம் தயாராக உள்ளன" என்று ஹஸன் நஸ்ரல்லா எச்சரித்தார்.

காஸா போர் தொடங்கியதில் இருந்து லெபான் மீதான இஸ்ரேலின் தாக்குதலால் குறைந்தது 259 பேர் கொல்லப்பட்டதாக ஏ.எஃப்.பி செய்தி முகமை கூறுகிறது.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)