You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
'வல்லவனுக்கு வல்லவன்': இஸ்ரேலை 17 ஆண்டுகள் ரகசியமாக உளவு பார்த்த எகிப்தியரின் அசாதாரண கதை
- எழுதியவர், வலீத் பத்ரான்
- பதவி, பிபிசி நியூஸ், அரபிக்
1980களின் பிற்பகுதியிலும் 1990களின் முற்பகுதியிலும், "ராஃபாத் அல் ஹக்கான்" என்ற தொடர் ஒளிபரப்பப்பட்ட போதெல்லாம் லட்சக்கணக்கான எகிப்தியர்கள் தொலைக்காட்சிகளைச் சுற்றிக் கூடி. எகிப்திய ஏஜென்ட் ராஃபாத், இஸ்ரேலில் உளவு தகவல்களைச் சேகரித்துத் தனது தாய் நாடான எகிப்துக்கு அனுப்புவதை பார்த்தனர்.
ரெஃபாட் அலி சுலைமான் அல் கம்மல் என்ற இயற்பெயர் கொண்ட கொண்ட ராஃபாத் அல் ஹக்கானின் கதை, எகிப்திய உளவுத்துறையின் வரலாற்றில் மிகவும் பரபரப்பான மற்றும் மர்மமான கதைகளில் ஒன்றாகும்.
சலே முர்சி எழுதிய "நான் இஸ்ரேலில் ஒரு உளவாளியாக இருந்தேன்" என்ற புத்தகத்தில் இது ஒரு புனைவுக்கதையாக ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.
கம்மலின் கதையைப் புரிந்துகொள்வதற்கான முக்கிய ஆதாரமான இந்த நாவல், இஸ்ரேலில் 17 ஆண்டுகள் ஒரு போலி அடையாளத்துடன் வாழ்ந்து, எகிப்திய உளவுத்துறைக்கு முக்கியமான தகவல்களை வழங்கிய ஒரு மனிதனின் வாழ்க்கையை விவரிக்கிறது.
முர்சி முதலில் இதை எகிப்திய பத்திரிகையான 'அல் முசாவ்வர்'-ல் தொடராக வெளியிட்டார்.
ஜனவரி 3, 1986 அன்று முதல்முறை வெளியானதிலிருந்தே இது பலரின் கவனத்தைக் கவர்ந்தது.
இந்த அத்தியாயங்கள் "நான் இஸ்ரேலில் ஒரு உளவாளியாக இருந்தேன்" என்ற பெயரில் 1988 இல் புத்தகமாக வெளியிடப்பட்டது. அதே ஆண்டில், இந்த நாவலை தழுவி மூன்று பாகங்களைக் கொண்ட மேற்கூறிய "ராஃபாத் அல் ஹக்கான்" என்ற தொலைக்காட்சித் தொடர் எடுக்கப்பட்டது.
இந்தத் தொடரும் நாவலும் கம்மலை எகிப்தின் தேசிய நாயகனாக காட்டினாலும், அவர் எகிப்துக்கு விசுவாசமாக இருந்தாரா என்று கேள்வி எழுப்பும் இஸ்ரேலிய பதிப்புகளும் வெளிவந்துள்ளன, அவர் ஒரு இரட்டை ஏஜென்ட் என்று அவை கூறுகின்றன.
இந்த மர்மமான கதாபாத்திரத்தின் பின்னணி கதை என்ன?
ஆரம்ப காலமும் 'நியமனமும்'
முர்சியின் கூற்றுப்படி, கம்மல் ஜூலை 1, 1927 அன்று எகிப்தின் டாமியேட்டாவில் (Damietta) பிறந்தார் மற்றும் ஒரு சாதாரண சூழலில் வளர்ந்தார்.
நிலக்கரி வியாபாரியான அவரது தந்தை 1936 இல் இறந்த பிறகு, அவரது மூத்த மாற்றாந்தாய் சகோதரர், குடும்பத்தை டாமியேட்டாவிலிருந்து கெய்ரோவுக்கு மாற்ற முடிவு செய்தார், அங்கு கம்மல் இன்டர்மீடியட் வணிகப் பள்ளியில் சேர்ந்தார்.
பட்டம் பெற்ற பிறகு, செங்கடலில் ஒரு எண்ணெய் நிறுவனத்தில் கணக்காளர் வேலைக்கு விண்ணப்பித்தார். அந்த நிறுவனத்தில் நிதியைக் கையாடல் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு பணியிலிருந்து நீக்கப்பட்டார்.
பின்னர் ஒரு கப்பலில் உதவி கணக்காளராக அவருக்கு வேலை கிடைத்தது. அது அவரை பல்வேறு ஐரோப்பிய துறைமுகங்களுக்குக் கொண்டு சென்றது.
தனது இளமை பருவத்தில், கம்மல் லட்சியம் கொண்டவராகவும், கூர்மையான அறிவையும், நடிப்புத் திறமையையும், பல்வேறு சூழ்நிலைகளுக்கு ஏற்ப தன்னை மாற்றியமைக்கும் திறனையும் கொண்டிருந்தார். அவர் இளம் வயதிலேயே ஆங்கிலம் மற்றும் பிரெஞ்சு மொழிகளில் தேர்ச்சி பெற்றார், இது பின்னர் அவரது பணிக்கு உதவியது.
1952 புரட்சிக்குப் பிறகு சக்காரியா மொஹைதீன் தலைமையில் எகிப்திய பொது உளவு சேவை நிறுவப்பட்ட போது எகிப்திய உளவுத்துறையுடனான கம்மலின் பயணம் தொடங்கியது.
ஐரோப்பாவில் பயணம் செய்தபோது கம்மல் மோசடி மற்றும் போலியான ஆவணங்களை உருவாக்குதலில் ஈடுபட்டிருந்தார். இதனால் 1952 இல் எகிப்தில் கைது செய்யப்பட்டார். அவரது அசாதாரண மாறுவேடமிடும் மற்றும் பல அடையாளங்களைப் பெறும் திறன் காரணமாக அவரை ஒரு உளவாளியாகப் பணியமர்த்திக் கொள்ளும் ஒரு வாய்ப்பை உளவுத்துறை கண்டது.
எகிப்திய உளவுத்துறை அவருக்கு இரண்டு தெரிவுகளை வழங்கியது: சிறை அல்லது அவர்களுக்காக ஒரு ஏஜெண்டாக வேலை செய்வது.
அவர் பிந்தையதைத் தேர்ந்தெடுத்தார், ரகசிய மை உபயோகித்தல், குறியீடுகளைப் புரிந்துகொள்ளுதல், ரேடியோக்களைப் பயன்படுத்துதல் மற்றும் துல்லியமான கேமராக்களை பயன்படுத்தி புகைப்படம் எடுப்பது போன்ற உளவு நுட்பங்களைக் கற்றுக்கொள்வது உட்படத் தீவிரப் பயிற்சியைத் தொடங்கினார்.
அவர் இஸ்ரேலிய சமூகத்துடன் பழகுவதற்காக, அஷ்கெனாஸி மற்றும் செஃபார்டி யூதர்களுக்கு இடையிலான வேறுபாடு உட்பட, யூத பழக்கவழக்கங்கள் மற்றும் கலாசாரம் பற்றியப் பயிற்சியையும் பெற்றார்.
1955 இல் இஸ்ரேலில் குடியேறிய "ஜாக் பிட்டன்" என்ற எகிப்திய யூதர் என்கிற புதிய அடையாளம் அவருக்கு வழங்கப்பட்டது. இவ்வாறு இஸ்ரேலிய சமூகத்தின் மையத்தில் உளவாளியாக அவரது பயணம் தொடங்கியது. எகிப்திய உளவுத்துறையில் அவருக்கு "ஏஜென்ட் 313" என்ற எண் ஒதுக்கப்பட்டது.
இஸ்ரேலின் மையத்தில்
முர்சியின் கூற்றுப்படி, கம்மல் இஸ்ரேலில் விரிவான தொடர்புகளை உருவாக்கிக்கொள்ள முடிந்தது. அவரது மறைமுக செயல்பாடுகளை மறைத்துக் கொள்ள ஏதுவாக ஒரு சுற்றுலா நிறுவனத்தை வெற்றிகரமாக நிறுவினார்.
சீ டூர்ஸ் என்றழைக்கப்பட்ட இந்த நிறுவனம், அரசியல்வாதிகள் மற்றும் ராணுவ அதிகாரிகள் உட்பட இஸ்ரேலிய சமூகத்தில் முக்கியப் பிரமுகர்களுடன் தொடர்பு கொள்ள அவருக்கு உதவியது.
கம்மலிடம் கவர்ச்சி இருந்ததுடன், நம்பிக்கையைத் தூண்டும் மகத்தான திறனையும் கொண்டிருந்தார். இது இஸ்ரேலிய வட்டாரங்களில் ஆழமாக ஊடுருவ அவருக்கு உதவியது.
தனது பணியின்போது எகிப்திய உளவுத்துறைக்கு முக்கியமான தகவல்களை குறிப்பாக இஸ்ரேலிய ராணுவத் தயாரிப்புகள் குறித்த தகவல்களை அவர் வழங்கினார்.
எகிப்து பார்வையில், அவரது மிகவும் குறிப்பிடத்தக்க சாதனைகளில், 1973 அக்டோபர் போரில் அவரது பங்கு இருந்தது. அப்போது அவர் பார் லெவ் கோட்டை பற்றித் துல்லியமான தகவல்களை எகிப்துக்கு வழங்கினார். இது இஸ்ரேலால் சூயஸ் கால்வாயின் கிழக்குக் கடற்கரையில் கட்டப்பட்ட பாதுகாப்பு சங்கிலி அமைப்பாகும்.
அந்தப் போரின் தொடக்கத்தில் எகிப்தியர்களின் வெற்றிக்கு இது பங்களித்தது.
இந்த புத்தகம் கம்மலை, அவரது வாழ்க்கையில் முரண்பாடுகள் இருந்த போதிலும், அவரது நாட்டின் மீதான அன்பால் உந்தப்பட்ட ஒரு தேசபக்தி கொண்ட நபராகச் சித்தரிக்கிறது.
தாய் நாட்டையும் குடும்பத்தையும் விட்டு விலகி வாழ்ந்தது மற்றும் தனது ரகசியத்தைப் பராமரித்ததால் ஏற்பட்ட உளவியல் அழுத்தங்கள் உட்பட அவர் செய்த தியாகங்களை இது எடுத்துக்காட்டுகிறது.
1963ஆம் ஆண்டில் ஜெர்மனிக்கு சென்ற போது வால்ட்ராட் பிட்டன் என்ற பெண்ணை திருமணம் செய்துகொண்டது, அவருடன் டேனியல் என்ற மகனை பெற்றுக்கொண்டது உட்பட கம்மலின் தனிப்பட்ட வாழ்க்கை விவரங்களையும் இந்த நாவல் உள்ளடக்கியது. அவருடைய மனைவிக்கு, தனது கணவர் உண்மையில் யார் என்கிற ரகசியம் தெரியாமலேயே அவர் மரணம் வரையிலும் இந்த உறவு தொடர்ந்தது.
கம்மல் தன்னை பிராங்கோ-எகிப்திய வம்சாவளியைச் சேர்ந்த இஸ்ரேலிய யூதர் ஜாக் பிட்டன் என்று வால்ட்ராடிடம் அறிமுகப்படுத்திக் கொண்டார். அவர் எகிப்தின் மன்சூராவில் ஆகஸ்ட் 23, 1929 அன்று பிறந்ததாக அவரிடம் கூறினார்.
அவரது தந்தை ஒரு எகிப்தியப் பெண்ணை மணந்துகொண்டு இரண்டு மகன்களை பெற்றுக்கொண்ட எகிப்தில் பணிபுரிந்த ஒரு பிரெஞ்சு தொழிலதிபர். இதில் ஜாக் மூத்தவர், இளைய சகோதரரான ராபர்ட் தற்கொலை செய்து கொண்டார். தாயார் இறந்த பிறகு, அவரது தந்தை இரண்டாவது முறையாக இரண்டு மகள்களைக் கொண்ட ஒரு பிரெஞ்சுப் பெண்ணைத் திருமணம் செய்து கொண்டார். அவர்களுடன் வாழ்வதை அவர் சங்கடமாக உணர்ந்ததால் அவர் குடும்பத்தை விட்டுவிட்டு ஓடிவிட்டார்.
ஒரு புத்தகத்தை எழுதியுள்ள வால்ட்ராட் பிட்டன், "கமெல் அமின் தாபெட்" என்ற பெயரில் சிரியாவில் செயல்பட்ட இஸ்ரேலிய உளவாளி எலி கோஹனை கம்மல் எப்படி அம்பலப்படுத்தினார் என்றும் அதில் கூறியுள்ளார்.
1954 இல் கெய்ரோவில் கோஹனை கம்மல் சந்தித்தார் என்றும், இருவரும் இஸ்ரேலுக்காக உளவு பார்த்ததற்காகக் கைது செய்யப்பட்டனர் என்றும் அவர் விவரித்தார்.
ஒரு அரபுப் பத்திரிகையில் சிரிய அதிகாரிகளுடன் கோஹனின் புகைப்படங்களைப் பார்த்தபோது, அவரது அடையாளத்தைப் பற்றி எகிப்திய உளவுத்துறைக்குத் தெரிவித்தார். உளவுத்துறை தகவலைச் சிரியாவிற்கு அனுப்பியது, இது அவரை பிடிப்பதற்கும் மரண தண்டனைக்கும் வழிவகுத்தது.
கோஹனின் வீழ்ச்சி பற்றிய மற்றொரு விதமான விவரிப்பும் உள்ளது. சிரியப் பாதுகாப்புப் படைகளால் மேற்கொள்ளப்பட்டத் தகவல் தொடர்பு கண்காணிப்பு நடவடிக்கையின் விளைவாக அவர் சிரியாவில் கைது செய்யப்பட்டார் என்று அது கூறுகிறது.
இஸ்ரேல் சொல்லும் கதை
எகிப்தை போலல்லாமல், இஸ்ரேலின் பார்வை கம்மலின் வரலாறு குறித்து முற்றிலும் மாறுபட்ட கண்ணோட்டத்தை வழங்குகிறது.
ஹாரெட்ஸ் மற்றும் யெடியோத் அஹ்ரோனோத் போன்ற இஸ்ரேலிய செய்தித்தாள்கள் வெளியிட்ட செய்திகளின்படி, கம்மல் 1955-இல் இஸ்ரேலில் அம்பலப்படுத்தப்பட்டு கைது செய்யப்பட்ட பிறகு இரட்டை ஏஜென்டாக இருந்தார்.
அதன்படி, ஜாக் பிட்டன் என்ற பெயரில் இஸ்ரேலுக்கு வந்த பிறகு, இஸ்ரேலின் உள்நாட்டு உளவுத்துறை சேவை (ஷபாக்), அதற்கு பணிபுரிந்த அவரது தொழில் பங்குதாரர் இம்ரே ஃபிரைட் மூலம் அவரது உளவு நடவடிக்கைகளைக் கண்டுபிடித்தது.
டெல் அவிவ் நகரில் உள்ள அவரது வீடு சோதனை செய்யப்பட்டது. விசாரணையின்போது, அவரது விடுதலைக்கு பிரதிபலனாக இஸ்ரேலுக்காக வேலை செய்ய அவரைச் சம்மதிக்க வைத்தார் உளவுத்துறை அதிகாரி மொர்டெச்சாய் ஷரோன்.
கம்மல் ஒப்புக்கொண்டார் என்றும், எகிப்திய உளவுத்துறைக்குத் தவறானத் தகவலை அனுப்பத் தொடங்கினார் என்றும், இது 1967 போரில் இஸ்ரேலின் வெற்றிக்கு உதவியது என்றும் இஸ்ரேலியர்கள் கூறுகின்றனர்.
எகிப்திய விமானப்படை தளத்தை தாக்க இஸ்ரேல் திட்டமிட்டிருந்த வேளையில், இஸ்ரேல் எகிப்திய விமானப்படையைத் தாக்காது என்று அவர் எகிப்தியர்களுக்குத் தெரிவித்தார். இது தரையில் இருந்த பெரும்பாலான எகிப்திய விமானங்களை அழிக்க வழிவகுத்தது.
இந்த வெற்றி, இஸ்ரேலிய பார்வையில், கம்மலைப் பணியமர்த்தும் நடவடிக்கையை மொசாட்டின் (இஸ்ரேலின் உளவுத்துறை மற்றும் சிறப்பு நடவடிக்கைகள் நிறுவனம்) மிகவும் வெற்றிகரமான நடவடிக்கைகளில் ஒன்றாக மாற்றியது.
சில இஸ்ரேலிய வட்டாரங்கள், 1973 இல் இஸ்ரேலை விட்டு வெளியேறிய பிறகு ஐரோப்பாவில் முதலீடுகளை செய்ய மொசாட் பின்னர் கம்மலுக்கு உதவியது என்றும், இது அவர் ஜெர்மனிக்குச் சென்றதற்குக் காரணத்தை தெளிவுபடுத்துகிறது என்றும் குறிப்பிடுகின்றன.
எனினும், இஸ்ரேலிய கதைகளில் ஒரு முரண்பாடு உள்ளது.
சில செய்தித்தாள்கள் கம்மல் ஒரு இரட்டை ஏஜென்ட் என்று கூறினாலும், ஷின் பெட் (இஸ்ரேலின் உள்நாட்டுப் பாதுகாப்பு சேவை) இன் முன்னாள் துணைத் தலைவர் கிதியோன் எஸ்ரா (Gideon Ezra), ஜாக் பிட்டன் என்ற உளவாளியைப் பற்றித் தனக்குத் தெரியாது என்று மறுத்தார்.
மொசாட்டின் முன்னாள் தலைவர் இஸர் ஹரேல் இஸ்ரேலிய அதிகாரிகள் ஒரு குறிப்பிடத்தக்க பாதுகாப்புக் குறைபாட்டைக் கண்டறிந்தனர். ஆனால் பிட்டன் மீது சந்தேகப்படவில்லை என்றும் சுட்டிக்காட்டினார்.
இந்த முரண்பாடுகள் சில இஸ்ரேலியப் பத்திரிகை செய்திகளின் உண்மைத்தன்மை குறித்துச் சந்தேகங்களை எழுப்பியுள்ளன.
அரபு உலகில் 1988ஆம் ஆண்டு வெளியான "ராஃபாத் அல் ஹக்கான்" தொலைக்காட்சித் தொடரின் மகத்தான வெற்றிக்கு ஒரு பதிலடியாகவே இவை இருந்தன என்று சிலர் நம்புகிறார்கள்.
மறுபுறம், எகிப்திய உளவுத்துறை 1973 அக்டோபர் போரில் உளவாளியின் பங்கை பற்றிய அவரது கதையை ஆதரிக்கிறது.
கம்மல் ஒரு இரட்டை ஏஜெண்டாக இருந்திருந்தால், 1973 தாக்குதலுக்கான எகிப்திய தயாரிப்புகளை இஸ்ரேல் அறிந்திருக்கும் என்றும், அப்படி நடந்திருந்தால் அந்தப் போரின் தொடக்கத்தில் எகிப்து இஸ்ரேலை ஆச்சரியப்படுத்தி இருக்க முடியாது என்றும் எகிப்தியர்கள் வாதிடுகின்றனர்.
1982 இல் அவர் இறந்த பிறகு அவரது மனைவியால் வெளியிடப்பட்ட கம்மலின் நினைவுக் குறிப்புகள், அவர் எகிப்துக்கு விசுவாசமாக இருந்தார் என்றும், தனது நாட்டிற்காகத் தியாகங்கள் நிறைந்த வாழ்க்கையை வாழ்ந்தார் என்றும் உறுதிப்படுத்துகிறது.
மரணம்
கம்மல் நுரையீரல் புற்றுநோய் காரணமாக ஜெர்மனியின் ஃபிராங்பர்ட் அருகிலுள்ள டார்ம்ஸ்டாட்டில் காலமானார்.
எகிப்திய கண்ணோட்டத்தில், கம்மல் 1973 அக்டோபர் போரில் எகிப்தின் வெற்றிக்கு உதவிய முக்கியமான தகவல்களை வழங்கிய ஒரு தேசிய நாயகன்.
சலே முர்சியின் புத்தகம் அவரது குணத்தின் மனிதாபிமான அம்சங்களை எடுத்துக்காட்டுகிறது. அதாவது அவர் குழந்தைகள் மீது கொண்ட அன்பு மற்றும் மற்றவர்களின் துன்பத்தைக் கண்டு அவர் அடைந்த வேதனை, அத்துடன் ஒரு போலி அடையாளத்தின் கீழ் வாழ்ந்ததால் அவர் எதிர்கொண்ட உளவியல் சவால்களையும் விவரிக்கிறது.
இதற்கு மாறாக, இஸ்ரேலிய கண்ணோட்டம் கம்மலை இஸ்ரேலிய உளவுத்துறையால் அவர்களின் நலன்களுக்குச் சேவை செய்ய பயன்படுத்திக் கொள்ளப்பட்ட ஒரு சந்தர்ப்பவாத நபராகச் சித்தரிக்க முயற்சிக்கிறது.
"நான் இஸ்ரேலில் உளவாளியாக இருந்தேன்" என்ற நூல் உளவு இலக்கிய வகையின் கீழ் வருகிறது. இதில் முர்சி வரலாற்று உண்மைகளை பரபரப்பான புனைகதையுடன் இணைத்து ஒரு வசீகரிக்கும் கதையை உருவாக்கியுள்ளார்.
எகிப்திய உளவுத்துறை அவருக்கு வழங்கிய 70 பக்க ஆவணங்களை தனது படைப்புக்கு முர்சி அடிப்படையாகக் கொண்டிருந்தார். ஆனால் கதையை மேலும் நம்பத்தகுந்ததாக மாற்றும் வகையில் அவர் அதில் சில அம்சங்களைச் சேர்த்துள்ளார்.
இந்த புத்தகம் சில கேள்விகளுக்குப் பதிலளிக்காததால், குறிப்பாக 1967 போரில் கம்மலின் தகவல்களால் எகிப்து ஏன் பயனடையவில்லை என்பது போன்ற கேள்விகளுக்குப் பதிலளிக்காததால், இதிலுள்ள உண்மையான தகவல்களின் துல்லியம் குறித்துச் சிலர் கேள்வி எழுப்ப வழிவகுத்தது.
இது அந்த நேரத்தில் எகிப்திய உளவுத்துறை பணியில் இருந்த குறைபாடுகளைப் பிரதிபலிப்பதாகச் சில வாசகர்கள் கருதினர், மற்றவர்கள் இது உளவுத்துறைப் பணியின் சிக்கல்களைப் பிரதிபலிப்பதாக நம்பினர்.
கலாசார ரீதியாக, கம்மலின் கதை, குறிப்பாகத் தொலைக்காட்சிக்குத் தழுவி எடுக்கப்பட்டப் பிறகு, அரபு மனசாட்சியில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தத் தொடர் மகத்தான வெற்றியை அடைந்தது. கம்மல் எகிப்திய தேசபக்தியின் அடையாளமாக மாறினார்.
முடிவில், ராஃபாத் அல் ஹக்கானின் கதை உண்மை மற்றும் புனைகதையை இணைக்கும் ஒரு மர்மமாகவே உள்ளது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு