You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
லடாக்கிற்கு மாநில அந்தஸ்து கோரி கடுங்குளிரிலும் பல ஆயிரம் பேர் பேரணி
லடாக் யூனியன் பிரதேசத்திற்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி லடாக்கில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பேரணி நடத்தினர். கடும் குளிருக்கு மத்தியில் நடந்த இந்த பேரணி நடைபெற்றது.
லடாக்கிற்கு மாநில அந்தஸ்து, பழங்குடி அந்தஸ்து வழங்கும் அரசமைப்பின் ஆறாவது அட்டவணை அமல், உள்ளூர் மக்களுக்கு வேலையில் இடஒதுக்கீடு, லே மற்றும் கார்கிலுக்கு தலா ஒரு நாடாளுமன்ற தொகுதி ஆகிய கோரிக்கைகளை அவர்கள் வலியுறுத்தினர்.
லே அபெக்ஸ் பாடி மற்றும் கார்கில் ஜனநாயக் கூட்டணி ஆகியவை இணைந்து இந்த பேரணியை ஏற்பாடு செய்திருந்தன. ஏ.என்.ஐ. செய்தி முகமையிடம் பேசிய அவற்றின் சட்ட ஆலோசகர் ஹாஜி குலாம் முஸ்தபா , மக்களை மையமாகக் கொண்ட அனைத்து அதிகாரங்களும் பலவீனமடைந்துவிட்டதாக கூறினார்.
ஜம்மு காஷ்மீரின் ஒரு பகுதியாக இருந்த போது சட்டப்பேரவையில் நான்கு உறுப்பினர்கள், மேலவையில் இரண்டு உறுப்பினர்கள் இருந்ததாகவும், தற்போது அவர்களுக்கு எந்தப் பிரதிநித்துவமும் இல்லை என்றும் அவர் கூறினார்.
லடாக் மக்கள் தங்களுக்கான அதிகாரத்தை கோருகிறார்கள் என்ற செய்தியை மத்திய அரசுக்கு அனுப்பவே இந்தப் பேரணி என்று ஹாஜி குலாம் முஸ்தபா கூறினார்.
2019, ஆகஸ்டில் ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்ட பிரிவு 370 நீக்கப்பட்டதற்கு பின்னர், லடாக் மற்றும் ஜம்மு காஷ்மீர் ஆகிய இரண்டும் தனித்தனி யூனியன் பிரதேசங்களாக மாற்றப்பட்டன.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)