அமெரிக்கா - இஸ்ரேல் உறவில் விரிசலா? சௌதி சென்ற டிரம்ப் இஸ்ரேலை தவிர்த்தது ஏன்?
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வளைகுடா நாடுகளுக்கான தனது நான்கு நாள் பயணத்தை நிறைவு செய்துள்ளார். இந்த பயணத்தின் போது, சவுதி அரேபியா, கத்தார் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு டிரம்ப் சென்றிருந்தார். ஆனால், இஸ்ரேலுக்கு டிரம்ப் செல்லவில்லை.
நீங்கள் இஸ்ரேலுக்கு செல்லவில்லை, இஸ்ரேல் ஓரங்கட்டப்படுகிறதா என மத்திய கிழக்கு பயணத்தின் போது டிரம்பிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த டிரம்ப், நிச்சயமாக இல்லை. இந்த வளைகுடா நாடுகளுடன் நான் கொண்டுள்ள உறவு இஸ்ரேலுக்கு மிகவும் நல்லது என்றார்.
இஸ்ரேல் ஓரங்கட்டுப்படுகிறதா என்ற கருத்தை டிரம்ப் மறுத்தாலும் இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா ஊடகங்கள் இது குறித்து தீவிரமாக விவாதித்து வருகின்றன.
டிரம்ப் நெதன்யாகு மீது ஏமாற்றம் அடைந்துள்ளதாகவும், மத்திய கிழக்கில் அவருக்காக காத்திருக்காமல் டிரம்ப் முன்னேறத் திட்டமிட்டுள்ளதாகவும் அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறியதாக இஸ்ரேலின் செய்தித்தாள் இஸ்ரேல் ஹயேம் செய்தி வெளியிட்டது.
இஸ்ரேலிய ராணுவ வானொலி செய்தியாளர் யானீர் கோசின், இஸ்ரேல் அதிகாரியை மேற்கோள் காட்டி, நெதன்யாகு தன்னை பயன்படுத்திக்கொள்ள முயற்சிக்கிறார் என்ற சந்தேகத்தின் காரணமாக டிரம்ப் இந்த முடிவை எடுத்தார் என்று எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
எனினும், கோசினின் பதிவு குறித்து அமெரிக்க அல்லது இஸ்ரேல் அதிகாரிகள் எந்த கருத்தும் அதிகாரப் பூர்வமாக தெரிவிக்கவில்லை.
பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இடையேயான உறவு நெருக்கடியில் உள்ளதாக அமெரிக்க ஊடகமான NBC நியூஸ் அதிகாரிகளை மேற்கோள் காட்டி செய்தி வெளியிட்டது.
இரான், ஹூத்திகள் மற்றும் காசாவில் நடந்து வரும் போர் தொடர்பாக இருவருக்கும் இடையே வேறுபாடுகள் அதிகரித்து வருவதாக அந்த செய்தி கூறியது.
எனினும், இஸ்ரேலுக்கான அமெரிக்க தூதர் மைக் ஹக்கபி இதனை மறுக்கிறார். தனது எக்ஸ் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் பிரதமர் நெதன்யாகு பற்றிய அனைத்து முட்டாள்தன கருத்துகளும் தங்கள் பெயர்களை வெளியிடாத நபர்களிடம் இருந்து வருகின்றன. நான் என்னுடைய கருத்தை எழுதுகிறேன். இருவருக்கும் இடையேயான கூட்டு வலுவானது." என்று குறிப்பிட்டுள்ளார்.
டொனால்ட் டிரம்ப் இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வந்தபோது, அமெரிக்க-இஸ்ரேல் உறவுகள் வலுவடையும் என தோன்றியது.
2023 அக்டோபர் 7ஆம் தேதி ஹமாஸ் இஸ்ரேலைத் தாக்கியபோது, ஜோ பைடன் அமெரிக்க அதிபராக இருந்தார்.
தாக்குதலுக்கு சில நாட்களுக்குப் பின், டெல் அவிவ் சென்ற பைடன் இஸ்ரேலுடனான அமெரிக்காவின் ஒற்றுமையை வெளிப்படுத்தினார்.
கடந்த சில நாட்களில், டிரம்ப் நெதன்யாகு விரும்பாத சில முடிவுகளை எடுத்ததாகக் கூறப்படுகிறது.
தனது மத்திய கிழக்கு வருகையின் போது, இரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா மிக நெருக்கமாக இருப்பதாக டிரம்ப் கூறினார்.
பிட்ஸ் லா ஸ்கூலில் அரசியல் அறிவியல் மற்றும் சர்வதேச உறவுகள் துறை பேராசிரியர் முஷ்தாக் ஹுசைன் கூறும் போது, இரான் தனது அணுசக்தி திட்டத்தை முற்றிலுமாக நிறுத்த வேண்டும் என்று நெதன்யாகு இரண்டு தசாப்தங்களாகக் கூறி வருகிறார். டிரம்ப் ஒப்பந்தம் செய்தாலும், இரான் தனது அணுசக்தி திட்டத்தை முற்றிலுமாக கைவிடாமல் போகலாம். டிரம்பின் கவனம் ஒப்பந்தத்தில் உள்ளது, பின்னர் நெதன்யாகுவை டிரம்ப் சமாதானப்படுத்துவார். என்றார்
ஏமனில் ஹூத்தி கிளர்ச்சியாளர்கள் மீது அமெரிக்கா குண்டுவீசுவதை நிறுத்தும் என மே 6ஆம் தேதி டிரம்ப் அறிவித்தார். இரானுடன் தொடர்புடைய ஹூத்தி குழு முக்கிய கடல் வர்த்தக பாதைகளில் சீர்குலைவு ஏற்படுத்த மாட்டோம் என ஒப்புக்கொண்டதாக டிரம்ப் கூறினார்.
இந்த ஒப்பந்தமும் நெதன்யாகுக்கு கோபத்தை ஏற்படுத்தியதாக பார்க்கப்படுகிறது.
பேராசிரியர் முஷ்தாக் ஹுசைன் கூறும் போது, உண்மையில் டிரம்ப் நெதன்யாகு அரசாங்கத்தின் மீது அழுத்தம் கொடுக்கிறார். விரைவில் போர்நிறுத்தம் அல்லது அமைதி ஒப்பந்தம் கையெழுத்திடப்பட வேண்டும் என்று அவர் விரும்புகிறார் என்றார்.
கேள்வி என்னவென்றால், டிரம்ப் ஏன் இதைச் செய்கிறார், ஏன் அவர் இஸ்ரேலுக்குச் செல்லவில்லை?
இஸ்ரேல் அரசியல் ஆய்வாளர் அகிவா எல்டார் அல் ஜசீராவிடம் பேசும் போது, டிரம்ப் தனது முதல் பதவிக்காலத்தில் இருந்ததை விட முற்றிலும் மாறுபட்டுள்ளார். நெதன்யாகு தன்னை பயன்படுத்திக் கொள்கிறார் என்பதையும், வணிகத்தைப் புரிந்து கொள்ளவில்லை என்பதையும் டிரம்ப் உணர்ந்துள்ளார். டிரம்ப் போருக்கு முற்றுப்புள்ளி வைக்க விரும்புகிறார். வணிகத்திற்கு போர் நல்லதல்ல என்று அவர் நம்புகிறார். டிரம்ப் முதலில் ஒரு தொழிலதிபர், டிரம்புக்கு வழங்க நெதன்யாகுவிடம் எதுவும் இல்லை. தற்போது இஸ்ரேல் தனது முன்னுரிமை போரா அல்லது டிரம்புடன் பேச்சுவார்த்தை நடத்துவதா என்பதை முடிவு செய்ய வேண்டும். தற்போது இருவரும் ஒரே புள்ளியில் வர முடியாது என நினைக்கிறேன், ஏனெனில் இருவரின் நலன்களும் ஒன்றுக்கொன்று எதிரானவை என்றார்.
கூடுதல் விவரம் காணொளியில்.....
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.



