இரான் போர் நிறுத்த ஒப்பந்தத்தில் இஸ்ரேல் முரண்படுகிறதா? - நெதன்யாகு கூறுவது என்ன?

பட மூலாதாரம், Reuters
இரானுக்கு அமெரிக்கா விதித்த கெடு முடிவதற்கு சற்று முன்பு இருநாடுகளுக்கும் இடையே இரண்டு வாரகால போர்நிறுத்தம் ஏற்பட்டதாக பாகிஸ்தான் தரப்பிலிருந்து அறிவிக்கப்பட்டது.
இந்த அறிவிப்பைத் தொடர்ந்து அமெரிக்கா மற்றும் இரான் தரப்பிலிருந்து முதலில் போர்நிறுத்தம் உறுதி செய்யப்பட்டது. அதன் பின்னர் இஸ்ரேல் தரப்பிலிருந்து போர்நிறுத்தத்திற்கு ஆதரவு அளிப்பதாக தெரிவிக்கப்பட்டது.
பாகிஸ்தான் வெளியிட்ட அறிக்கையில் இந்தப் போர்நிறுத்தத்தில் லெபனானும் உள்ளடங்கும் எனக் குறிப்பிட்டிருந்தது.
இரான் வழங்கிய 10 புள்ளிகள் கொண்ட முன்மொழிவிலும் லெபனானில் நடைபெற்று வரும் போரை நிறுத்த வேண்டும் என்பது குறிப்பிடப்பட்டிருந்தது.
ஆனால் இஸ்ரேல் இந்த போர்நிறுத்தம் லெபனானுக்குப் பொருந்தாது எனத் தெரிவித்துள்ளது.
முன்னதாக இரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களுக்கு பதிலடியாக, இஸ்ரேல் மீது ஹெஸ்போலா அமைப்பு தாக்குதல் நடத்தியதன் மூலம் லெபனானில் இயங்கி வரும் அந்த அமைப்பு போரில் இணைந்தது.
இஸ்ரேலின் பதில் என்ன?

பட மூலாதாரம், Reuters
அமெரிக்கா - இரான் போர்நிறுத்த அறிவிப்பை ஆதரிப்பதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக இஸ்ரேல் பிரதமரின் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "இரான் உடனடியாக நீரிணையைத் திறப்பதோடு அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் பிராந்தியத்தில் உள்ள நாடுகள் மீதான தாக்குதல்களை நிறுத்துவதற்கு உட்பட்டு இரானுக்கு எதிரான தாக்குதல்களை இரண்டு வாரங்களுக்கு நிறுத்தி வைக்கும் அதிபர் டிரம்பின் முடிவை இஸ்ரேல் ஆதரிக்கிறது." என நெதன்யாகு குறிப்பிட்டுள்ளார்.
மேலும்," அமெரிக்கா, இஸ்ரேல் இரானின் அரபு அண்டை நாடுகள் மற்றும் உலகத்திற்கு, அணுசக்தி, ஏவுகணை மற்றும் பயங்கரவாத அச்சுறுத்தலாக இரான் இல்லாமல் இருப்பதை உறுதி செய்வதற்கான அமெரிக்காவின் முயற்சிகளையும் இஸ்ரேல் ஆதரிக்கிறது." என அந்த அறிக்கை கூறுகிறது.
மேலும்,"அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் இஸ்ரேலின் பிராந்திய கூட்டாளிகள் பகிர்ந்துகொள்ளும் இந்த நோக்கங்களை வரவிருக்கும் பேச்சுவார்த்தைகளில் அடைய உறுதியாக இருப்பதாக இஸ்ரேலிடம் அமெரிக்கா தெரிவித்துள்ளது. இந்த இரண்டு வாரகால போர்நிறுத்தம் லெபனானை உள்ளடக்காது." எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
"லெபனான் குறித்து நிலவும் குழப்பம்"
டேனியல் டி சிமோன், பிபிசி செய்தியாளர்

பட மூலாதாரம், Getty Images
இரான் மற்றும் இந்தப் போர்நிறுத்தத்தை ஏற்படுத்திய உதவிய பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப் என இரு தரப்பும் இந்த ஒப்பந்தம் லெபனானையும் உள்ளடக்கும் எனக் கூறுகின்றன. அங்கு இரான் ஆதரவு பெற்ற ஹெஸ்பொல்லாவுக்கு எதிராக இஸ்ரேல் சண்டையிட்டு வருகிறது.
ஆனால் இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், இந்தப் போர்நிறுத்தம் "லெபனான உள்ளடக்காது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த முக்கியமான விவகாரம் தெளிவுபடுத்தப்பட வேண்டியுள்ளது.
சமீப வாரங்களில் தெற்கு லெபனானுக்குள் தரைப் படைகளை இஸ்ரேல் அனுப்பியுள்ளது. ஹெஸ்பொல்லாவிடம் இருந்து வரும் எந்த அச்சுறுத்தலும் நீக்கப்படும் வரை லிடானி நதிக்கு தெற்கே உள்ள பகுதிகளைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கப்போவதாவும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
ஹெஸ்போலா இயங்கி வருவதாகத் தான் கூறும் பகுதிகளில் உள்ள வீடுகள் மற்றும் கிராமங்களை இஸ்ரேல் அழித்து வருகிறது.
போர்நிறுத்தம் அறிவிக்கப்படுவதற்கு சற்று முன்பு, தெற்கு லெபனானில் உள்ள சிடோன் நகரில் நிகழ்ந்த இஸ்ரேலிய தாக்குதலில் 8 பேர் கொல்லப்பட்டதாகவும் 22 பேர் காயமடைந்ததாகவும் லெபனான் சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது.
கடந்த சில வாரங்களில், இஸ்ரேலை நோக்கி ஹெஸ்போலா தரப்பிலிருந்து ராக்கெட்டுகள் ஏவப்பட்டன.

"தீவிர வலதுசாரிகள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்"
டொனால்ட் டிரம்பின் இந்த முடிவெடுக்கும் செயல்பாடுகளில் இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு எந்த அளவுக்கு பங்கேற்றார் என்பது தெளிவாகத் தெரியவில்லை.
அமெரிக்கா மற்றும் இரான் வெற்றி கோருவதைப் போல அதே வழியில் நெதன்யாகுவால் கோர முடியும் என்பது சாத்தியமற்றதாக இருக்கிறது.
பிப்ரவரி 28-ஆம் தேதி அன்று போரை அறிவித்து ஆற்றிய உரையில், "இரானில் ஆயதுல்லா ஆட்சியிலிருந்து வரும் அச்சுறுத்தலுக்கு முடிவு கட்டுவதே இதன் இலக்கு" என்றும் "தேவைப்படும் வரை இந்த நடவடிக்கை தொடரும்" என்றும் நெதன்யாகு பேசியிருந்தார்.
நெதன்யாகு அமைச்சரவையின் தீவிர வலதுசாரி உறுப்பினர்கள் எந்தப் போர் நிறுத்த ஒப்பந்தம் அல்லது போர் முடிவுக்கு வருவதை, குறிப்பாக அது லெபனானையும் உள்ளடக்கும் என்றால் அதை நிராகரிக்க வாய்ப்புள்ளது. தேர்தல் நடக்கும் ஆண்டில் அவருக்கு ஒரு அரசியல் சவாலை இது உருவாக்கலாம்.
நெதன்யாகு தோற்றுவிட்டார் - இஸ்ரேல் எதிர்க்கட்சித் தலைவர்

பட மூலாதாரம், EPA/Shutterstock
டிரம்பின் போர்நிறுத்தத்திற்கு ஆதரவாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அறிக்கை வெளியிட்ட பிறகு இந்தப் போரை அவர் கையாண்ட விதத்தை இஸ்ரேல் எதிர்க்கட்சித் தலைவர் யாயிர் லபிட் விமர்சித்துள்ளார்.
இந்தச் சூழ்நிலையை இஸ்ரேலுக்கு ஒரு 'அரசியல் பேரழிவு' என அவர் குறிப்பிட்டுள்ளார்.
"நமது தேசிய பாதுகாப்பின் அடிப்படை தொடர்பான முடிவுகள் எடுக்கப்பட்டபோது, இஸ்ரேல் அந்தப் பேச்சுவார்த்தை குழுவில் கூட இடம்பெறவில்லை. ராணுவம் அதனிடம் கேட்கப்பட்ட அனைத்தையும் செய்தது, மக்கள் வியக்கத்தக்க எதிர்ப்பை வெளிப்படுத்தினர், ஆனால் நெதன்யாகு அரசியல் ரீதியாகவும் உத்தி ரீதியாகவும் தோற்றுவிட்டார். தான் வைத்த இலக்குகளைக் கூட அவர் அடையவில்லை," என அவர் தெரிவித்துள்ளார்.
லெபனானில் நிலவும் நிச்சயமற்றத்தன்மை
ஹியூகோ பசேகா, மத்திய கிழக்கு செய்தியாளர்
இந்தப் போர் நிறுத்த அறிவிப்பு தொடர்பாக லெபனான அரசாங்கம் அல்லது ஹெஸ்பொல்லாவிடமிருந்து எந்த எதிர்வினையும் வரவில்லை.
லெபனானுக்கு இந்தப் போர் அழிவுகரமானதாக இருந்து வருகிறது. 1.2 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர், நாட்டில் மக்கள்தொகையில் கிட்டத்தட்ட ஐந்தில் ஒரு பங்கு இது. மேலும் 1,500-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
ஹெஸ்போலாவை விரட்டியடிக்க இஸ்ரேலிய அதிகாரிகளால் பாதுகாப்பு மண்டலம் (Buffer Zone) என அழைக்கப்படும் பகுதியை உருவாக்க, இஸ்ரேலிய படைகள் முனையும் நிலையில் எல்லைப் பகுதிக்கு அருகே உள்ள கிராமங்கள் அழிக்கப்பட்டுள்ளன.
இது போர் முடிந்த பிறகும் சில பகுதிகள் ஆக்கிரமிப்பிலே இருக்கலாம் மற்றும் குடும்பங்கள் எப்போதுமே திரும்ப முடியாது என்கிற அச்சத்தை உருவாக்கியுள்ளது.
இரான் உடன் ஒப்பந்தம் ஏற்பட்டாலும் லெபனானில் தங்களுடைய நடவடிக்கைகளை தொடரும் நோக்கத்தை இஸ்ரேலிய அதிகாரிகள் வெளிப்படுத்தியுள்ளனர்.
ஹெஸ்போலாவின் திறன்கள் மீது பார்வையாளர்களும் இஸ்ரேலில் உள்ள சிலரும் ஆச்சரியத்தை வெளிப்படுத்தியுள்ளனர். நவம்பர் 2024-இல் முடிவுக்கு வந்த கடைசி போரில் இது கடுமையாக பலவீனமடைந்தது என நம்பப்பட்டு வந்தது.
ஹெஸ்போலா தொடர்ந்து வடக்கு இஸ்ரேலுக்குள் ராக்கெட்டுகள் மற்றும் டிரோன்களைச் செலுத்தி வந்த நிலையில் தெற்கு லெபனானில் இஸ்ரேலிய படைகளை எதிர்கொண்டு வருகிறது.
லெபனானுக்கு உள்ளே கடும் விமர்சனங்களை ஹெஸ்போலா எதிர்கொண்டு வருகிறது. தங்களின் நாட்டை தேவையில்லாத போருக்குள் இழுத்துவிட்டதாக பலரும் குற்றம் சுமத்தி வருகின்றனர்.
லெபனானில் பலி எண்ணிக்கை எவ்வளவு?

பட மூலாதாரம், Getty Images
இஸ்ரேல் மற்றும் ஹெஸ்பொல்லா இடையே ஒரு மாதத்துக்கும் மேலாக நடைபெற்ற போரில் பலி எண்ணிக்கை செவ்வாய்க்கிழமை அன்று 1,530-ஐ எட்டியதாக லெபனான் சுகாதார அமைச்சகத்தை மேற்கோள்காட்டி ஏஎஃப்பி செய்தி முகமை தெரிவித்துள்ளது. இதில் 130 குழந்தைகளும் 102 பெண்களும் அடங்குவர்.
மேலும் இந்த மோதலில் 4,812 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரச்னைகளைப் பேசுவோம் - 2 | பெண்கள் பாதுகாப்பு
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
































