டெல்லியில் இரான் - ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அமைச்சர்கள் மோதல் ஏன்? முழு பின்னணி

ஐக்கிய அரபு எமிரேட்ஸ், இரான், பிரிக்ஸ், இஸ்ரேல்

பட மூலாதாரம், @Iran_in_India

படக்குறிப்பு, இரானின் துணை வெளியுறவு அமைச்சர் காசெம் கரீபாபாடி
பிரசுரிக்கப்பட்டது
வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

டெல்லியில் நடைபெற்ற பிரிக்ஸ் (BRICS) நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தின் போது, தனது நாட்டுக்கு எதிரான ராணுவ நடவடிக்கைகளில் ஐக்கிய அரபு எமிரேட்ஸிற்கு நேரடித் தொடர்பு இருப்பதாக இரானிய வெளியுறவு அமைச்சர் செய்யது அப்பாஸ் அராக்சி வியாழக்கிழமை (மே 15) குற்றம் சாட்டினார்.

இரானுடனான போருக்கு மத்தியில் தங்களது பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஐக்கிய அரபு எமிரேட்ஸிற்கு ரகசியப் பயணம் மேற்கொண்டதாக இஸ்ரேல் ஒரு நாளைக்கு முன்புதான் கூறியிருந்தது.

இருப்பினும், இஸ்ரேலின் கூற்றை ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நிராகரித்தது. இவை அனைத்தும் நடக்கும் போது இரானிய வெளியுறவு அமைச்சர் டெல்லியில் இருந்தார்.

இஸ்ரேல் அதன் 'செயல்களுக்கு' பொறுப்பேற்க வேண்டியிருக்கும் என்று அவர் கூறினார்.

இரான் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய இரண்டுமே பிரிக்ஸ் கூட்டமைப்பில் உறுப்பினர்களாக உள்ளன. இரு நாடுகளின் பிரதிநிதிகளும் டெல்லியில் இருந்தனர், அவர்களுக்கு இடையிலான பதற்றம் கூட்டத்தின் போது தெளிவாகத் தெரிந்தது.

இரானிய அரசு ஊடகங்களின்படி, வியாழக்கிழமை ஐக்கிய அரபு எமிரேட்ஸ் பிரதிநிதியின் கருத்துகளுக்கு பதிலளித்த அராக்சி, "பிரிக்ஸ் அமைப்பிற்குள் ஒற்றுமையைப் பேணுவதற்காக எனது உரையில் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் பெயரை நான் குறிப்பிடவில்லை. ஆனால் உண்மை என்னவென்றால், இரானுக்கு எதிரான ஆக்கிரமிப்பில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நேரடியாக ஈடுபட்டிருந்தது. (இரான் மீதான) தாக்குதல்கள் தொடங்கிய போது, அவர்கள் அதைக் கண்டிக்கக் கூட இல்லை." என்று தெரிவித்தார்.

இந்த முழுச் சம்பவம் குறித்தும் இந்தியாவில் உள்ள இரானிய தூதரகத்தின் அதிகாரப்பூர்வ எக்ஸ் கணக்கில் தெரிவிக்கப்பட்டது.

"பிரிக்ஸ் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தின் இரண்டாவது அமர்வில், சட்டம் மற்றும் சர்வதேச விவகாரங்களுக்கான இரானின் துணை வெளியுறவு அமைச்சர் காசெம் கரீபாபாடி, ஐக்கிய அரபு எமிரேட்ஸின் வெளியுறவுத்துறை இணை அமைச்சர் முன்வைத்த குற்றச்சாட்டுகளுக்கு வலுவான பதிலடி கொடுத்தார். இரான், ஐக்கிய அரபு எமிரேட்ஸை தாக்கியதாக அவர் குற்றம் சாட்டினார்" என இரானிய தூதரகம் கூறியது.

ஐக்கிய அரபு எமிரேட்ஸ், இரான், பிரிக்ஸ், இஸ்ரேல்

பட மூலாதாரம், @Iran_in_India

படக்குறிப்பு, டெல்லியில் நடைபெற்ற பிரிக்ஸ் நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தின் போது இரான் பிரதிநிதிகள்

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மீதான இரானின் குற்றச்சாட்டு

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

"இரானுக்கு எதிரான ராணுவ ஆக்கிரமிப்பை ஆதரிப்பதிலும் எளிதாக்குவதிலும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் முக்கிய பங்கு வகித்தது. எனவே, பதற்றங்களை உருவாக்குவதிலும் அதிகரிப்பதிலும் ஈடுபடும் எவருக்கும் இரானுக்கு எதிராக அரசியல் குற்றச்சாட்டுகளையோ அல்லது உரிமை கோரல்களையோ முன்வைக்க எந்த தார்மீக அல்லது சட்டபூர்வமான உரிமையும் இல்லை" என காசெம் கரீபாபாடி கூறினார்.

"நாங்கள் ஒரு சக்திவாய்ந்த மற்றும் பெரிய நாடு. ஆக்கிரமிப்பாளர்கள் எங்களது மக்களையும் உள் கட்டமைப்பையும் குறிவைப்பதை எங்களால் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது, குறிப்பாக எங்களது அண்டை நாடான ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இதில் ஈடுபட்டிருக்கும் போது." என்றும் அவர் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், "ஐக்கிய அரபு எமிரேட்ஸில் அமெரிக்கா பங்கு வகித்த அல்லது ஈடுபட்டிருந்த அனைத்து அமெரிக்க தளங்கள் மற்றும் கட்டமைப்புகளைக் குறிவைப்பதைத் தவிர எங்களுக்கு வேறு வழியில்லை. இது ஒரு போர், அந்தப் போரில் நாங்கள் எங்கள் நாட்டைத் தற்காத்துக் கொண்டோம். ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஒரு ஆக்கிரமிப்பாளர். தவறான மற்றும் வெற்று குற்றச்சாட்டுகளுக்குப் பின்னால் நீங்கள் ஒளிந்து கொள்ள முடியாது. சர்வதேச சட்டத்தின் கீழ் பொறுப்பேற்கும் கடமை எமிரேட்ஸிற்கு உள்ளது," என்று கரீபாபாடி கூறினார்.

"ஆக்கிரமிப்பு தொடங்குவதற்கு சில நாட்களுக்கு முன்பே அதிகாரப்பூர்வ செய்திகள் ஐக்கிய அரபு எமிரேட்ஸிற்கு அனுப்பப்பட்டன என்பதை நான் உங்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன். அவர்கள் ஆக்கிரமிப்பாளர்களுக்கு உதவி செய்து, தனது நிலப்பரப்பை பயன்படுத்த அனுமதி வழங்கினால், எங்களது தற்காப்பு உரிமையைப் பயன்படுத்தி அந்த கட்டமைப்புகளைக் குறிவைப்பதைத் தவிர இரானுக்கு வேறு வழியில்லை என்று நாங்கள் எச்சரித்தோம்." என இரான் தெரிவித்துள்ளது.

"யதார்த்தத்திற்கு மாறாக இருக்கும் தவறான கூற்றுகள் மற்றும் கதைகளுக்கு பின்னால் இனி நீங்கள் ஒளிந்து கொள்ள முடியாது. நீங்கள் தான் ஆக்கிரமிப்பாளர், எனவே இரானை ஆக்கிரமிப்பாளர் என்று உங்களால் குற்றம் சாட்ட முடியாது. ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து புறப்பட்ட ஒவ்வொரு போர் விமானத்தின் துல்லியமான நேரம், தேதி மற்றும் பாதை உள்ளிட்ட பதிவுகளை நாங்கள் சேகரித்து வைத்துள்ளோம்." என்றும் இரான் கூறியது.

பிப்ரவரி 28 அன்று அமெரிக்கா மற்றும் இஸ்ரேல், இரான் மீது தாக்குதல்களைத் தொடங்கிய பின்னர் பல வாரங்களாகப் போர் நீடித்தது. இதற்குப் பதிலடியாக, வளைகுடா பகுதியில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள் மற்றும் பிற இலக்குகள் மீது இரான் ஏவுகணை மற்றும் டிரோன் தாக்குதல்களை நடத்தியது.

ஐக்கிய அரபு எமிரேட்ஸ், இரான், பிரிக்ஸ், இஸ்ரேல்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்று (மே 15) ஐக்கிய அரபு எமிரேட்ஸிற்கு செல்கிறார்.

பதற்றங்களுக்கு மத்தியில் இந்திய பிரதமர் மோதியின் பயணம்

அமெரிக்க செய்தித்தாளான வால் ஸ்ட்ரீட் ஜர்னல் (Wall Street Journal) திங்களன்று (மே 11) ஓர் அறிக்கையை வெளியிட்டது, அதில் ஏப்ரல் தொடக்கத்தில் இரானுக்கு எதிராக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டதாகக் கூறப்பட்டது.

மேற்கத்திய மற்றும் இரானிய அதிகாரிகளின் கூற்றுப்படி, சௌதி அரேபியாவும் இரானுக்கு எதிராக பகிரங்கப்படுத்தப்படாத பல தாக்குதல்களை நடத்தியுள்ளது.

இந்தியாவில் நடைபெற்ற பிரிக்ஸ் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில் பங்கேற்ற இரான் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இடையிலான கருத்து வேறுபாடுகள் காரணமாகக் கூட்டறிக்கை வெளியிடுவது கடினம் என இரானிய ஊடகங்களும் சந்தேகம் தெரிவிக்கின்றன.

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இருப்பதால் நிலைமை சிக்கலாகிவிட்டதாக இரானின் துணை வெளியுறவு அமைச்சர் காசெம் கரீபாபாடி கூறியதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இரான் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இடையே பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி வெள்ளிக்கிழமை (மே 15) ஐக்கிய அரபு எமிரேட்ஸ் செல்கிறார்.

பிரதமர் நரேந்திர மோதி, அபுதாபியில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யானைச் சந்திக்கிறார். இந்தியாவும் ஐக்கிய அரபு எமிரேட்ஸும் ஏற்கனவே வலுவான இருதரப்பு உறவுகளைக் கொண்டுள்ளன.

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இந்தியாவின் மூன்றாவது பெரிய வர்த்தக கூட்டாளியாகும். அங்கு 4.5 மில்லியனுக்கும் அதிகமான இந்தியர்கள் வசிக்கின்றனர்.

ஜனவரியில், இந்தியாவும் ஐக்கிய அரபு எமிரேட்ஸும் ஓர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன, அதன் கீழ் இந்தியா எமிரேட்ஸின் மிகப்பெரிய எல்என்ஜி (LNG) வாடிக்கையாளராக மாறும்.

இந்த 3 பில்லியன் டாலர் ஒப்பந்தத்தின் கீழ், ஐக்கிய அரபு எமிரேட்ஸின் அட்னாக் கேஸ் (ADNOC Gas), 2028 முதல் பத்து ஆண்டுகளுக்கு இந்திய அரசுக்கு சொந்தமான ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷனுக்கு ஆண்டுதோறும் 0.5 மில்லியன் டன் எல்என்ஜியை வழங்கும்.

இதற்கிடையில், வியாழக்கிழமை ஓமன் வளைகுடாவில் இந்தியக் கப்பல் ஒன்று தாக்கப்பட்டு மூழ்கடிக்கப்பட்டது. இந்தச் சம்பவத்தை இந்தியா "ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று" என்று விவரித்துள்ளது.

கப்பல் போக்குவரத்து அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் முகேஷ் மங்கள் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசுகையில், சோமாலியாவிலிருந்து ஷார்ஜாவிற்குச் சென்று கொண்டிருந்த போது அந்த கப்பல் தாக்கப்பட்டதாகத் தெரிவித்தார்.

"அதிலிருந்து 14 மாலுமிகள் ஓமன் கடலோரக் காவல்படையினரால் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்" என்று அவர் கூறினார். தாக்குதலுக்கு யார் காரணம் அல்லது எங்கிருந்து ஏவப்பட்டது என்று இந்திய அதிகாரிகள் கூறவில்லை.

ஐக்கிய அரபு எமிரேட்ஸ், இரான், பிரிக்ஸ், இஸ்ரேல்

பட மூலாதாரம், Getty Images

இஸ்ரேலின் கூற்றால் அதிருப்தியில் இரான்

தங்கள் நாட்டின் பிரதமர் ஐக்கிய அரபு எமிரேட்ஸிற்கு ரகசியமாகச் சென்றதாக இஸ்ரேல் கூறியது, இரானுக்கு கோபத்தை ஏற்படுத்தியது. ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இஸ்ரேலுடன் கூட்டுச் சேர்ந்து செயல்படுவதாக இரான் கூறத் தொடங்கியது.

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இந்த விவகாரம் காரணமாக சங்கடத்தை எதிர்கொண்டதுடன், இஸ்ரேலின் கூற்றையும் நிராகரித்தது.

இஸ்ரேலின் கூற்றுகள் குறித்து அமெரிக்காவின் ஜான்ஸ் ஹோப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் மத்திய கிழக்கு நிபுணரும் பேராசிரியருமான வாலி நஸ்ர், "ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இந்தப் பயணத்தை வெளிப்படையாக அங்கீகரிக்க விரும்பாத போது, இஸ்ரேல் ஏன் அதை பகிரங்கப்படுத்தியது என்பதுதான் கேள்வி. இந்த உறவை பொதுவில் காண்பிப்பது இஸ்ரேலுக்குப் பயனளிக்கலாம், ஆனால் அது ஐக்கிய அரபு எமிரேட்ஸை தர்மசங்கடத்தில் ஆழ்த்தும் அல்லவா?" என்றார்.

இராக் மற்றும் இரான் செய்திகளை ஆய்வு செய்யும் வலைதளமான அம்வாஜ் மீடியாவின் ஆசிரியர் முகமது அலி ஷபானி, இஸ்ரேலின் கூற்றுகள் குறித்து எழுதியுள்ளார். "இஸ்ரேல்-ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஒத்துழைப்பு தொடர்பான சமீபத்திய வெளிப்பாடுகள், அது போருக்கு முன்பாகவோ, போரின் போதோ அல்லது போருக்குப் பின்னரோ எதுவாக இருந்தாலும், இரான் தான் தேர்ந்தெடுத்த இலக்குகள் நியாயமானவை என்று கருதுகிறதா என்பது குறித்த விவாதத்தை மேலும் தூண்டியுள்ளது." என்கிறார் அவர்.

"ஆனால் முக்கியமான கேள்வி என்னவென்றால் அடுத்து என்ன நடக்கும் என்பதுதான். போர் மீண்டும் மூண்டால், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஒரு முக்கியப் பங்கு வகிக்கும் வகையில் சூழ்நிலை இப்போதே மாற்றி அமைக்கப்பட்டு வருவதாகத் தெரிகிறது."

சிந்தனைக்குழுவான குவின்சி இன்ஸ்டிடியூட்டின் துணைத் தலைவர் ட்ரிட்டா பார்சி, இஸ்ரேல் விவகாரத்தில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் சிக்கிக் கொண்டுள்ளதாக நம்புகிறார்.

"ஒப்பந்தத்தில் இணைந்ததன் மூலம் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஒரு பெரிய மூலோபாயத் தவற்றைச் செய்துள்ளது. இந்த ஒப்பந்தத்தின் அசல் நோக்கம் இரானுக்கு எதிராக ஒரு அரபு-இஸ்ரேல் கூட்டணியை உருவாக்குவதாகும். இரான் மீதான இஸ்ரேலிய மற்றும் அமெரிக்கப் போருக்குப் பிறகு இது இப்போது முழுமையாகத் தெளிவாகியுள்ளது."என்று அவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

இது ஐக்கிய அரபு எமிரேட்ஸ் செய்த ஒரு பெரிய தவறாக அமைந்தது, ஏனெனில் அது இஸ்ரேலின் இரான் எதிர்ப்பு கொள்கையுடன் தன்னை இணைத்துக் கொண்டது.

உண்மை என்னவென்றால், இரானுடனான ஐக்கிய அரபு எமிரேட்ஸின் பதற்றம், இஸ்ரேலின் பகையை விட மோசமானது அல்ல. ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இரானின் அண்டை நாடு என்பதும், இஸ்ரேல் சுமார் 1,000 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆனால் இப்போது ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இதில் சிக்கியுள்ளது. ஒரு வகையில், இரான் போர் என்பது பாதுகாப்பின் பெயரால் ஜிசிசி (GCC) நாடுகளை இஸ்ரேலுக்கு நெருக்கமாகத் தள்ளுவதை நோக்கமாகக் கொண்டிருந்தது போல் தெரிகிறது.

இந்தச் சூழலில், போரின் போது நெதன்யாகு ரகசியமாக அபுதாபிக்கு பயணம் செய்ததாகவும், ஐக்கிய அரபு எமிரேட்ஸிற்கு 'அயன் டோம்' (Iron Dome) பாதுகாப்பை வழங்க முன்வந்ததாகவும் கூறப்படுகிறது. இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் இதை ஒரு பெரிய திருப்புமுனையாக இஸ்ரேல் கருதுகிறது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு