You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காணொளி: கத்தாரை பாகிஸ்தானுடன் ஒப்பிட்ட இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
கத்தார் தலைநகர் தோஹாவில் நடத்திய தாக்குதலை இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு நியாயப்படுத்தி பேசியுள்ளார். அமெரிக்காவில் இரட்டை கோபுரங்கள் தகர்க்கப்பட்ட 9/11 தாக்குதலின் 24 வது ஆண்டு நிறைவு தின உரையில் கத்தார் மீதான தாக்குதலை நெதன்யாகு நியாயப்படுத்தினார். அதோடு, கத்தாரை பாகிஸ்தானோடும் அவர் ஒப்பிட்டு பேசினார். இதற்கு கத்தார் எதிர்வினையாற்றி உள்ளது. என்ன நடந்தது?
கடந்த செவ்வாய்க்கிழமை கத்தார் தலைநகர் தோஹாவில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. ஹமாஸ் மூத்த தலைவர்களை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் கூறுகிறது. இது சர்வதேச விதிகளை மீறும் செயல் என்றும் இதை பொறுத்துக்கொள்ளமாட்டோம் என்றும் கத்தார் கூறியது.
இந்த நிலையில், அமெரிக்காவில் இரட்டை கோபுரங்கள் தகர்க்கப்பட்ட 9/11 தாக்குதலின் 24 வது ஆண்டு நிறைவு தினத்தையொட்டி வெளியிட்ட காணொளியில் இந்தத் தாக்குதல் குறித்து நெதன்யாகு பேசினார்.
அமெரிக்காவுக்கு செப்டம்பர் 11 இருப்பதைப் போல இஸ்ரேலுக்கு அக்டோபர் 7 உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
அந்த நாளில், இஸ்லாமிய பயங்கரவாதிகள் ஹோலோகாஸ்டுக்குபிறகு யூத மக்களுக்கு எதிராக மிக மோசமான காட்டுமிராண்டித்தனத்தை செய்தனர் என அவர் குறிப்பிட்டார்.
செப்டம்பர் 11-க்குப் பிறகு அமெரிக்கா பயங்கரவாதிகளை எங்கிருந்தாலும் வேட்டயாடுவதாக உறுதியளித்து ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் அரசாங்கங்கள் பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுக்க முடியாது என்று ஒரு தீர்மானத்தையும் நிறைவேற்றியதை அவர் நினைவு கூர்ந்தார்.
தாங்களும் அதே வழியில் செயல்பட்டதாகவுட்டதாகவும். அக்டோபர் 7 படுகொலையைச் செய்த பயங்கரவாத மூளைகளை பின்தொடர்ந்ததாகவும். அவர்களுக்கு பாதுகாப்பான புகலிடமாக இருக்கும் கத்தாரில் அதை செய்ததாகவும் கூறினார். அது பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் அளிக்கிறது. ஹமாஸுக்கு நிதியளிக்கிறது, அதன் பயங்கரவாதத் தலைவர்களுக்கு ஆடம்பரமான வில்லாக்களை வழங்குகிறது என குற்றம்சாட்டினார்.
அமெரிக்கா செய்ததையே தாங்களும் செய்ததாகவும். ஆப்கானிஸ்தானில் அல்கொய்தா பயங்கரவாதிகளைத் துரத்திச் சென்றனர், பின் பாகிஸ்தானில் ஒசாமா பின்லேடனை கொன்றனர் என சுட்டிக்காட்டினார்.
லும், ஹமாஸ் தலைவர்களை வெளியேற்ற வேண்டும் அல்லது அவர்களை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என கத்தார் மற்றும் பிற நாடுகளை நெதன்யாகு எச்சரித்தார். . நீங்கள் அவ்வாறு செய்யவில்லை என்றால் நாங்கள் செய்வோம் என்றும் நெதன்யாகு கூறினார்.
நெதன்யாகு பேசியதை கத்தார் வெளியுறவு அமைச்சகம் கண்டித்துள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், இது இஸ்ரேலின் கோழைத்தனமான தாக்குதலை நியாயப்படுத்தும் முயற்சி மட்டுமல்ல, எதிர்காலத்தில் இறையாண்மையை மீறுவதை நியாயப்படுத்தும் வெட்கக்கேடான முயற்சியும் கூட என்று கூறப்பட்டுள்ளது.
ஹமாஸ் உறுப்பினர்களுக்கு விருந்தளிப்பது கத்தாரின் மத்தியஸ்த முயற்சிகளின் ஒரு பகுதி என்பதை நெதன்யாகு முழுமையாக அறிந்திருந்தார், இது இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் கோரிக்கையால் ஏற்பாடு செய்யப்பட்டது என்றும் கூறியுள்ள கத்தார், ஹமாஸ் தூதுக்குழுவுக்கு கத்தார் ரகசியமாக அடைக்கலம் அளித்தது என்ற நெதன்யாகுவின் குற்றச்சாட்டு, முழு உலகத்தாலும் கண்டிக்கப்பட்ட ஒரு குற்றத்தை நியாயப்படுத்துவதற்கான முயற்சி என குறிப்பிட்டுள்ளது.
தனது இறையாண்மை மற்றும் பிராந்தியத்தைப் பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் கத்தார் எடுக்கும் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்தச் சூழலில், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் வியாழக்கிழமை கத்தார் புறப்பட்டார்.
அவரது பயணம் குறித்து பாகிஸ்தான் பிரதமர் அலுவலகம் தெரிவித்த தகவல்களின் படி, "பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் ஒரு உயர்மட்ட தூதுக்குழுவுடன் இஸ்லாமாபாத்தில் இருந்து தோஹாவுக்கு சென்றுள்ளார்.
இது தொடர்பாக பாகிஸ்தான் பாகிஸ்தான் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள பதிவில் தோஹாவில் நடந்த இஸ்ரேலின் கொடூரமான தாக்குதல்களை அடுத்து கத்தாருக்கு ஆதரவு தெரிவிக்க ஷெபாஸ் ஷெரீப் இந்த பயணத்தை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு