42 வயதிலும் சிக்ஸர்களை பறக்கவிட்ட தோனி, தோல்வியிலும் கொண்டாடிய சிஎஸ்கே ரசிகர்கள் - காணொளி

42 வயதிலும் சிக்ஸர்களை பறக்கவிட்ட தோனி, தோல்வியிலும் கொண்டாடிய சிஎஸ்கே ரசிகர்கள் - காணொளி

6 பந்துகளில் சி.எஸ்.கேவின் வெற்றிக்கு 41 ரன்கள் தேவை. வெற்றி சாத்தியம் இல்லை என்றாலும் பெரும்பாலான சி.எஸ்.கே. ரசிகர்கள் பெரிதாக கவலைப்பட்டதை போன்று தெரியவில்லை. காரணம் களத்தில் நின்று கொண்டிருந்தது எம்.எஸ்.தோனி.

நடப்பு தொடரில் முதல்முறையாக டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பேட்டிங் ஆட களமிறங்கியிருந்தார் தோனி. சென்னை அணி விளையாடிய முதல் இரு ஆட்டங்களிலும் தோனிக்கு பேட்டிங் ஆடும் வாய்ப்பு கிடைக்கவில்லை.

விசாகப்பட்டினத்தில் டெல்லி கேப்பிடல்ஸ்க்கு எதிராக சி.எஸ்.கே விளையாடிய 3வது ஆட்டத்தில் டாப் ஆர்டரின் தடுமாற்றத்தால் தோனிக்கு பேட்டிங் வாய்ப்பு கிடைத்தது.

ஷிவம் துபே ஆட்டமிழந்த பிறகு களத்திற்குள் நுழைந்தார் தோனி. தான் எதிர்கொண்ட முதல் பந்தையே பவுண்டரிக்கு விளாசி தனது அதிரடியை தொடங்கினார். கடைசி ஓவரை நார்ட்ஜே வீசினார். ஸ்டிரைக்கில் நின்றது தோனி. முதல் பந்து பவுண்டரி. 2வது பந்தில் மிட் விக்கெட்டில் ஒற்றை கையால் சிக்சருக்கு விளாசினார் தோனி. அரங்களில் இருந்த மஞ்சள் ரசிகர்கள் ஆர்ப்பரித்தனர். 3வது பந்தில் ரன் ஏதுமில்லை. 4வது பந்து மீண்டும் பவுண்டரி. 5வது பந்தில் ரன் ஏதுமில்லை. கடைசி பந்தில் ஒரு சிக்சர்.

இப்படியாக தனி ஆளாக ஒரு ஓவரை விளையாடி 20 ரன்களை விளாசித் தள்ளினார் தோனி. மொத்தமாக அவர் சேர்த்தது 37 ரன்கள். அதுவும் 16 பந்துகளில். இதில் 4 பவுண்டரி, 3 சிக்சர்கள் அடக்கம். 3 ரன்களை தவிர்த்து இதர ரன்கள் அனைத்துமே பவுண்டரி, சிக்சர்களும் மூலம் சேர்த்திருக்கிறார். தோனியின் ஸ்டிரைக் ரேட் 231.25. நேற்றைய ஆட்டத்தில் தோனியை தவிர்த்து வேறு எந்த ஒரு வீரரின் ஸ்டிரைக் ரேட்டும் 200-ஐ கூட தாண்ட வில்லை. ஆட்டம் முடிந்தது Electric Striker of the match விருது தோனி வசம் வந்தது.

தோனிக்கு 42 வயதாகிறது. கடந்த ஆண்டு ஐபிஎல் தொடர் முடிந்த பிறகு மூட்டு அறுவை சிகிச்சை செய்து கொண்டார். ஆனாலும் உலகின் வேகமான பந்துவீச்சாளர்களில் ஒருவரான நார்ட்ஜே உள்பட பவுலர்களை தனக்கே உரிய ஆட்டப்பாணியில் எதிர்கொண்டு ரசிகர்களை கவர்ந்தார் தோனி. சமூக ஊடகங்களிலும் தோனியே ஆதிக்கம் செலுத்துகிறார். ஐபிஎல்லில் சென்னை அணி தோற்ற தருணங்களில் பெரும்பாலும் கடுமையான விமர்சனங்களையே எதிர்கொண்டிருக்கிறது. ஆனால் இந்த முறை தோற்றதையே மறந்துவிட்டு ரசிகர்கள் தோனியை கொண்டாடிக்கொண்டிருக்கின்றனர்.

தோனியின் மனைவி ஷாக்‌ஷி உள்பட பலரும், தோற்றதைக் கூட உணராமல் தோனியின் ஆட்டத்தில் மெய் மறந்துவிட்டதாக சமூக ஊடகங்களில் கருத்து பதிவிட்டு வருகின்றனர். தோனியின் பேட்டிங் பிரமாதமாக இருந்தது. கடினமான நாளாக இருந்தாலும் தோனி நேர்மறையான உணர்வுகளை தந்திருக்கிறார் என சி.எஸ்.கே பயிற்சியாளர் ஃப்ளெம்மிங் குறிப்பிட்டுள்ளார். முன்னதாக, நேற்றைய ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 191 ரன்களை சேர்த்தது. பின்னர் களமிறங்கிய சென்னை அணி 20 ஓவர்களில் 171 ரன்கள் மட்டுமே எடுத்து நடப்பு தொடரில் முதல் தோல்வியை தழுவியிருக்கிறது.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)