காலநிலை நெருக்கடி: பட்டினிக்கு இரையாகும் துருவக் கரடிகள் - ஆய்வில் அதிர்ச்சித் தகவல்

    • எழுதியவர், மேட் மெக்ராத்
    • பதவி, சுற்றுச்சூழல் செய்தியாளர்

ஆர்க்டிக் கடல்பகுதியில் உள்ள பனி உருகி வருதால் சில துருவக் கரடிகள் பட்டினியால் அவதிப்படுவதாகவும், நிலத்தில் வாழ்வதற்கு ஏற்றவாறு தங்களது உணவுமுறையை அவற்றால் மாற்றிக்கொள்ள முடியவில்லை எனவும் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

ஆர்க்டிக் பகுதியில் வாழும் இந்த உயிரினம் பொதுவாக கடலில் உள்ள பனிக்கட்டிகள் மீது வாழும் நீர் நாய்களை உணவாக உட்கொள்கின்றன.

ஆனால், புவியின் வெப்பநிலை அதிகமாவதால் பனி அதிகம் உருகும் நிலை ஏற்படுகிறது. இதன் காரணமாக இந்தக் கரடிகள் பெரும்பாலான நேரத்தைக் கரையில் கழிக்கின்றன. அப்போது பறவைகளின் முட்டைகள், பெர்ரி பழங்கள் மற்றும் புற்களை உண்டு உயிர் வாழ்கின்றன.

இதன் காரணமாக இவை வேகமாக எடை குறைந்து, உயிரிழக்கும் அபாயம் ஏற்படுகிறது. இந்த துருவக் கரடிகள் ஆர்க்டிக் பகுதியில் அதிகரித்து வரும் காலநிலை மாற்றத்தின் அச்சுறுத்தல்களுக்கு இரையாக மாறியுள்ளன. ஆனால், காலநிலை மாற்றத்தால் இந்த இனத்தின் மீது ஏற்படும் தாக்கம் மிகவும் சிக்கலானது.

கடந்த 1980கள் வரையிலும் இந்த இனத்தின் எண்ணிக்கை குறைவதற்கு ‘வேட்டை’ முக்கியக் காரணமாக இருந்தது. அதன் பின்னர் சட்டப் பாதுகாப்பின் மூலமாக துருவக் கரடிகளின் எண்ணிக்கை உயர்ந்தது. ஆனால், தற்போது உலகளவில் அதிகரிக்கும் வெப்பநிலை பெரிய அச்சுறுத்தலாக மாறியுள்ளது.

அதற்குக் காரணம், உறைந்துள்ள ஆர்டிக் கடல்தான் இந்த இனத்தின் வாழிடம். இங்குள்ள பனிப்பாறைகளை, கொழுப்புசத்து மிக்க நீர் நாய்களை வேட்டையாட இவை பயன்படுத்திக் கொள்கின்றன. அதுவும் வசந்த காலத்தின் பிற்பகுதி மற்றும் கோடைக்காலத்தின் தொடக்கத்தில் அதிகமாக இவற்றைப் பயன்படுத்துகின்றன.

ஆனால், உயரும் புவி வெப்பநிலை காரணமாக அதிக வெப்பம் நிறைந்த மாதங்களில் ஆர்க்டிக்கின் பல பகுதிகளில் பனி உருகிவிடுகிறது.

இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்ட பகுதியான மேற்கு மனிடோபாவில், 1979 மற்றும் 2015க்கு இடைப்பட்ட காலத்தில் பனி இல்லாத காலம் மேலும் மூன்று வாரங்களுக்கு அதிகரித்துள்ளது.

பனியில்லாத காலங்களில் இந்த உயிரினங்கள் எப்படி பிழைத்திருக்கின்றன என்பதைக் கண்டறிவதற்காக, ஆய்வாளர்கள் தொடர்ந்து மூன்று ஆண்டுகளுக்கு கோடைக்கால மாதங்களில் 20 துருவக் கரடிகளின் செயல்பாடுகளைப் பின்பற்றி ஆய்வு செய்துள்ளனர்.

இதில் அவற்றின் ரத்த மாதிரிகள், எடை ஆகியவை சோதிக்கப்பட்டன. மேலும் ஜிபிஎஸ் உடன் கூடிய வீடியோ கேமரா ஒன்றும் அவற்றில் பொருத்தப்பட்டது. இதன்மூலம் ஆய்வாளர்கள் கரடிகளின் செயல்பாடுகள், இயக்கம் மற்றும் அவை உண்ணும் உணவுகளைப் பதிவு செய்தனர்.

பனி இல்லாத கோடைக்கால மாதங்களில், இவை உயிர்வாழ பல்வேறு உத்திகளைக் கடைபிடிக்கின்றன. அவற்றில் சில, ஓய்வின் மூலம் தங்களது ஆற்றலைச் சேமித்து வைக்கும் உத்தியையும் கையாண்டுள்ளன.

பெரும்பாலானவை உணவுக்காகத் தாவரங்கள் மற்றும் பெர்ரி பழங்களைத் தேடியுள்ளன. மேலும் சில நீந்திச் சென்று வேறு ஏதாவது உணவு கிடைக்குமா என்றும் தேடி பார்த்துள்ளன.

ஆனால், இரண்டுமே தோல்வியில் முடிந்தது. 20 கரடிகளில் 19 தங்களது எடையை இழந்தன. அதிலும் சில கரடிகள் 11% வரை எடையை இழந்துள்ளன.

அவற்றுக்கு சராசரியாக நாளொன்றுக்கு ஒரு கிலோ வரை எடை குறைந்தது. அலாஸ்காவில் உள்ள அமெரிக்க புவியியல் ஆய்வு மையத்தைச் சேர்ந்தவரும் இந்த ஆய்வை மேற்கொண்ட குழுவின் தலைவருமான டாக்டர் அந்தோனி பகானோவின் கூற்றுப்படி, "கரடிகள் எந்த உத்தியைப் பயன்படுத்தினாலும், நிலத்தில் உயிர் வாழக்கூடிய காலம் அதிகரிக்கும் வரை உண்மையில் எதுவுமே பலனளிக்காது."

வாஷிங்டன் மாநில பல்கலைக் கழகத்தின் கரடிகள் ஆய்வு மையத்தைச் சேர்ந்த இணை ஆசிரியர் சார்லஸ் ராபின்ஸ் கூறுகையில், "துருவக் கரடிகள் ஒன்றும் வெள்ளை நிற ரோமங்களைக் கொண்ட கிரிஸ்லி கரடிகள் அல்ல. அவை முற்றிலும் மாறுபட்ட ஓர் இனம்," என்றார்.

உணவு தேடி நீருக்குள் சென்ற மூன்று கரடிகளில் இரண்டுக்கு இறந்த உயிரினங்களின் சடலங்கள் கிடைத்தன. ஆனால், நீண்டநேரமாக உணவு தேடிக் களைத்துப் போனதால் அவற்றால் அதை மிகக் குறுகிய நேரத்திற்கே உண்ண முடிந்தது.

பிபிசியிடம் பேசிய டாக்டர் பகானோ, "முழுமையாக வளர்ச்சியடைந்த ஒரு பெண் கரடி இறந்த பெலுகா திமிங்கலத்தைக் கண்டுபிடித்தது. ஆனால், அதிலிருந்து இரண்டு துண்டுகளை மட்டுமே கடித்துச் சாப்பிட்டது. அந்தத் திமிங்கிலத்தின் பெரும்பாலான உடல் பகுதியை ஓய்வெடுப்பதற்கான மிதவையாகப் பயன்படுத்திக் கொண்டது," என்று கூறினார்.

“இந்தக் கரடிகளால் ஒரே நேரத்தில் நீச்சலடிக்கவும் உணவு உண்ணவும் முடியாது என்பதை இது நமக்கு உணர்த்துகிறது.”

துருவ கரடி குறித்த தகவல்கள்

  • உலகம் முழுவதும் 26,000 துருவக் கரடிகள் உள்ளன. அவற்றில் அதிகமாக கனடாவில் உள்ளன. அதைத் தொடர்ந்து அமெரிக்கா, ரஷ்யா, கிரீன்லாந்து, நார்வேயிலும் அவை காணப்படுகின்றன.
  • துருவக் கரடிகள் அழிவின் விளிம்பில் உள்ள உயிரினமாக சர்வதேச இயற்கை பாதுகாப்பு சங்கத்தால் (IUCN) பட்டியலிடப்பட்டுள்ளது. அவற்றின் வீழ்ச்சிக்கு காலநிலை மாற்றம் முக்கியக் காரணியாக உள்ளது.
  • வயது வந்த ஆண் கரடிகள் 3 மீட்டர் நீளம் மற்றும் 600 கிலோ எடை வரை வளரக் கூடியவை.
  • துருவக் கரடிகள் ஒரே முறையில் 45 கிலோ வரை உண்ணக் கூடியவை
  • இவற்றுக்கு மோப்பத் திறன் அதிகமாக உள்ளது. இதனால் அவை அதன் இரையை 16 கி.மீ. தொலைவில் இருந்தும் கண்டுபிடிக்கும் ஆற்றல் கொண்டவை.
  • துருவக் கரடிகளுக்கு சிறந்த நீச்சல் திறன் உள்ளது. கரையிலிருந்து 100 கி.மீ. தூரத்தில்கூட இவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவற்றின் பாதங்களில் வலையமைப்பு போன்ற அமைவு உள்ளதால், இவற்றால் ஒரு மணிநேரத்திற்கு 10கி.மீ என்ற வேகத்தில் நீந்த முடியும்.

இந்த ஆய்வில் ஒரு கரடிக்கு 32 கிலோ வரை எடை அதிகரித்துள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதிக நேரத்தை ஓய்விலும், தனது ஆற்றலைச் சேமிப்பதிலும் செலவழித்த அந்தக் கரடிக்கு இறந்த உயிரினங்களின் சடலம் கிடைத்தது அதிர்ஷ்டம் என்று ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.

இதற்கு முந்தைய ஆய்வுகள் பலவும் காலநிலை மாற்றத்தால் ஏற்படப் போகும் சவால்களைச் சுட்டிக்காட்டியிருந்தாலும், இந்தப் புதிய ஆய்வு காலநிலை மாற்றத்தை உயிரினங்கள் எப்படி எதிர்கொண்டு தங்களைத் தகவமைத்துக் கொள்ளப் போகின்றன என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.

அதேநேரம் காலநிலை மாற்றத்தால் துருவக் கரடிகளுக்கு ஏற்படும் தாக்கம் இடத்தைப் பொறுத்து மாறுபடும் என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

இந்த ஆய்வுடன் தொடர்பில்லாத நார்வே துருவ ஆய்வு நிறுவனத்தைச் சேர்ந்த ஜான் ஆர்ஸ், "எதிர்காலத்தில் பனி இல்லாத பகுதிகளில் இருந்து துருவக் கரடிகள் மறைந்துவிடும். ஆனால், அது எப்போது, அவை எங்கு செல்லும் எனச் சொல்வது கடினம்," என்று கூறுகிறார்.

அதேவேளையில், "எதிர்காலத்தில் பல தசாப்தங்கள் கழித்து, ஒரு சில பகுதிகள் துருவக் கரடிகள் வாழ ஏதுவான இடமாக இருக்கக்கூடும்" என்றும் அவர் குறிப்பிடுகிறார்.

“ஆய்வு நடத்தப்பட்டுள்ள இந்தப் பகுதியில் இப்படியே தொடர்ந்து பனி உருகிக் கொண்டிருந்தால், மிகக் குறுகிய காலத்திலேயே இது கரடிகள் வாழச் சிக்கலான இடமாக மாறிவிடும்.”

இந்த ஆய்வு நேச்சர் கம்யூனிகேஷன்ஸ் என்ற ஆய்விதழில் வெளியிடப்பட்டுள்ளது.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)