You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
'இலவச ரேஷன்' பணம் வருவது எப்படி? பெட்ரோல், டீசல் மூலம் கிடைக்கும் பல லட்சம் கோடி ரூபாய் என்ன ஆகிறது?
- எழுதியவர், தினேஷ் உப்ரேதி
- பதவி, பிபிசி செய்தியாளர்
“இப்போது நம் நாட்டில் இலவச பொருட்களை விநியோகம் செய்து வாக்கு சேகரிக்கும் கலாசாரத்தை கொண்டு வர எல்லா முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த இலவச கலாசாரம் நாட்டின் வளர்ச்சிக்கு மிகவும் ஆபத்தானது. இலவச பொருட்களை வினியோகம் செய்து பொதுமக்களை விலைக்கு வாங்கி விடலாம் என்று இவர்கள் நினைக்கின்றனர். நாம் அனைவரும் ஒன்றிணைந்து நாட்டின் அரசியலில் இருந்து இலவச கலாசாரத்தை அகற்ற வேண்டும்.”
2022 ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோதி வெளியிட்ட இந்த அறிக்கை குறித்து பல விவாதங்கள் நடந்தன.
"வேறு யாரோ (அரசியல் கட்சி) கொடுத்தால் அது தவறு. ஆனால் அவர்கள் (மோதி அரசு) விநியோகித்தால் அது வைட்டமின் மாத்திரைகள்..."
மக்களுக்கு இலவச பொருட்களையோ பணத்தையோ வழங்குவதன் மூலமான அரசியல் கட்சிகளின் வாக்குறுதிகள் குறித்த ஊடக விவாதங்களின் போது எதிர்க்கட்சித் தலைவர்கள் இந்த வாதங்களை முன்வைப்பதை அடிக்கடி காணலாம் மற்றும் கேட்கலாம்.
இந்த விவகாரம் உச்ச நீதிமன்றத்திற்கு சென்றது. உச்ச நீதிமன்றம் இதை ஒரு தீவிரமான பிரச்னை என்று குறிப்பிட்டது. ஏழைகளுக்கு இலவசங்களை வழங்க வேண்டும். ஆனால் பொருளாதாரத்திற்கு ஏற்படும் இழப்பை சமநிலைப்படுத்த வேண்டிய அவசியமும் உள்ளது என்று நீதிமன்றம் குறிப்பிட்டது.
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2024 பிப்ரவரியில் தனது பட்ஜெட் உரையில் நடப்பு நிதியாண்டில் இலவச ரேஷன் திட்டத்திற்கு 2 லட்சம் கோடி ரூபாய் செலவிடப்படும் என்று கூறினார்.
இந்த திட்டம் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு அதாவது 2028 வரை தொடரும் என்று 2023 நவம்பரில் நரேந்திர மோதி அரசு அறிவித்தது.
நிதியமைச்சரின் பட்ஜெட் மதிப்பீட்டை அடிப்படையாக எடுத்துக் கொண்டால், இந்தத் திட்டத்தால் அரசின் கருவூலத்துக்கு ஏறக்குறைய 10 லட்சம் கோடி ரூபாய் சுமை ஏற்படும்.
இந்த திட்டம் 2020 ஜூன் மாதம் தொடங்கப்பட்டது, அதன் பிறகு அதன் காலக்கெடு பல முறை நீட்டிக்கப்பட்டுள்ளது. இப்போது அதன் காலக்கெடு 2028 டிசம்பர் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஆண்டுக்கு ரூ.2 லட்சம் கோடியை மோதி அரசு எவ்வாறு திரட்டுகிறது?
ஆனால் இந்த இலவசப் பொருட்களுக்கு அரசுக்கு எங்கிருந்து பணம் கிடைக்கிறது என்ற கேள்வி எழுகிறது.
2014 இல் மன்மோகன் சிங் அரசை அகற்றி நரேந்திர மோதி அரசு ஆட்சிக்கு வந்தபோது மானிய செலவில் அதற்கு கிடைத்த மிகப்பெரிய நிவாரணம், பெட்ரோல், டீசல், உரம் ஆகியவற்றின் சர்வதேச விலை வீழ்ச்சிதான்.
மோதி அரசின் முதலாவது பதவிக் காலத்தில், அதாவது 2014-15 முதல் 2018-19 வரை, இந்திய சுத்திகரிப்பு நிறுவனங்கள் கச்சா எண்ணெயை பீப்பாய் ஒன்றுக்கு 60.84 டாலர் என்ற விலையில் இறக்குமதி செய்தன. அதேசமயம் முந்தைய ஐந்து நிதியாண்டுகளில் (மன்மோகன் சிங் அரசு 2.0) இந்த விலை ஒரு பீப்பாய்க்கு சராசரியாக 96.05 டாலராக இருந்தது.
"மோதி அரசின் முதல் ஆட்சிக் காலத்தில் குறைந்த விலையில் இறக்குமதி செய்யப்பட்ட கச்சா எண்ணெய், அரசின் கருவூலத்தை சமநிலைப்படுத்துவதில் முக்கியப் பங்காற்றியது. அதன் முழுப் பலனையும் பெறும் வகையில் மோதி அரசு புத்திசாலித்தனமாக இருந்தது.
இந்திய நுகர்வோருக்கு குறைந்த விலையில் இறக்குமதி செய்யப்படும் எண்ணெயின் பலன் கொடுக்கப்படவில்லை. அதாவது பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படவில்லை. மாறாக பெட்ரோல், டீசல் தவிர மற்ற எரிபொருள் பொருட்களின் மீதான கலால் வரியும் அதிகரிக்கப்பட்டது,” என்று ரிஸர்ச் ஆய்வாளர் ஆசிஃப் இக்பால் கூறினார்.
2012-13 ஆம் ஆண்டில் பெட்ரோலியப் பொருட்களுக்கு மத்திய அரசு 96,800 கோடி ரூபாய் மானியம் அளித்து வந்த நிலையில், கலால் வரியாக 63,478 கோடி ரூபாய் மட்டுமே வருவாய் ஈட்டி வந்தது.
2013-14ஆம் ஆண்டில் எரிபொருள் மானியம் 85,378 கோடி ரூபாயாக இருந்தபோதும், அதன் மூலம் கிடைத்த கலால் வருவாய் 67,234 கோடி ரூபாய் மட்டுமே.
ஆனால் இதன் பிறகு நிலைமை தலைகீழாக மாறியது. 2017-18 மற்றும் 2018-19 ஆம் ஆண்டுகளில் எரிபொருள் மானியம் முறையே 24,460 கோடி ரூபாயாகவும், 24,837 கோடி ரூபாயாகவும் இருந்த நிலையில், இவற்றின் மீதான கலால் வரி வசூல் முறையே 2 லட்சத்து 29,716 கோடியாகவும், 2 லட்சத்து 14,369 கோடியாகவும் இருந்தது.
பெட்ரோல், டீசல் மூலம் கிடைக்கும் பல லட்சம் கோடி ரூபாய் என்ன ஆகிறது?
2014 இல் மோதி அரசு ஆட்சிக்கு வந்தபோது, பெட்ரோல் மீதான கலால் வரி லிட்டருக்கு 9 ரூபாய் 48 பைசாவாகவும், டீசல் மீதான கலால் வரி லிட்டருக்கு 3 ரூபாய் 56 பைசாவாகவும் இருந்தது.
இதற்குப் பிறகு 2014 நவம்பர் முதல் 2016 ஜனவரி வரை பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை அரசு 9 முறை உயர்த்தியது.
அதாவது இந்த 15 மாதங்களில் பெட்ரோல் மீதான கலால் வரி அதிகரிப்பு 11 ரூபாய் 77 பைசாவும், டீசல் மீதான கலால் வரி அதிகரிப்பு 13 ரூபாய் 47 பைசாவும் இருந்தது.
இதனால் அரசு கருவூலத்துக்கு ஏராளமான பணம் வந்தது. 2014-15 ஆம் ஆண்டில் பெட்ரோல், டீசல் மூலம் கலால் வரி வருவாய் 99 ஆயிரம் கோடியாக இருந்த நிலையில், 2016 இல் அது கிட்டத்தட்ட இரண்டரை மடங்காக (ரூ. 2 லட்சத்து 42 ஆயிரம் கோடி) ஆனது.
"மோதி அரசு மலிவாக இறக்குமதி செய்யப்பட்ட கச்சா எண்ணெய் மூலம் எரிபொருள் மானிய செலவை குறைத்தது மட்டுமல்லாமல் அதிலிருந்து வரும் வருமானத்தை மற்ற நிதி செலவுகளுக்கும் பயன்படுத்தியது என்பது தரவுகளிலிருந்து தெளிவாகிறது. எல்பிஜி சிலிண்டர்களுக்கும், ஓரளவிற்கு உஜ்வாலா திட்டத்திற்கும் மானியம் அளிக்கப்பட்டது. மறுபுறம், பெட்ரோல் மற்றும் டீசல் மூலம் கலால் வருமானம் பன்மடங்கு அதிகரித்துள்ளது." என்று ஆசிஃப் கூறுகிறார்.
தேர்தல் காலங்களைத் தவிர பெட்ரோல், டீசல் விலையை மோதி அரசு தொடக்கூட இல்லை. மக்களவை தேர்தல் மே மாதம் நடைபெற உள்ள நிலையில் அதற்கு முன் மார்ச் 15ம் தேதி பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்டது. இதற்கு முன், பெட்ரோல் மற்றும் டீசல் விலை கடைசியாக 2022 மே 22 ஆம் தேதி குறைக்கப்பட்டது.
தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம் 2013 ஜூலை 5 ஆம் தேதி அமல்படுத்தப்பட்ட பிறகு, பொது விநியோகத் திட்டத்தின் கீழ் கோதுமையின் விலை கிலோவுக்கு ரூ.2 ஆகவும், அரிசியின் விலை கிலோவுக்கு ரூ.3 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டது.
ஆட்சிக்கு வந்த பிறகு மோதி அரசு இந்த கட்டணங்களை அதிகரிக்கவில்லை. மாறாக 2023 ஜனவரி 1 முதல் விலையை பூஜ்ஜியமாகக் குறைத்தது. அதாவது கோதுமை மற்றும் அரிசி இப்போது PDS இன் கீழ் இலவசமாகக் கிடைக்கிறது.
இலவசங்கள் அறிவிப்பதில் போட்டி
இலவச திட்டங்களை அறிவிப்பதில் மத்திய அரசை விட மாநில அரசுகள் முன்னணியில் உள்ளன. ஆட்சிக்கு வருவதற்காக அரசியல் கட்சிகள் பெரிய அறிவிப்புகளை வெளியிடுகின்றன. ஆட்சிக்கு வந்த பிறகு அவற்றின் நேரடி தாக்கம் அரசின் கருவூலம் மற்றும் பிற திட்டங்களில் தெரியத் தொடங்குகிறது.
PRS Legislative Research அக்டோபர் 2023 இல் ஒரு ஆய்வு அறிக்கையை வெளியிட்டது. அதில் குறைந்தது 11 மாநிலங்களின் வருவாய் பற்றாக்குறை மிக அதிகமாக இருந்தது.
இவற்றில், பஞ்சாப், இமாச்சலப் பிரதேசம், மேற்கு வங்கம், ஆந்திரா மற்றும் ஹரியாணா மாநிலங்களின் வருவாய் பற்றாக்குறை மிகவும் அதிகமாக உள்ளது. மாறாக, சுரங்கத் தொழிலின் மூலம் நல்ல வருமானம் ஈட்டும் ஜார்கண்ட், ஒடிஷா போன்ற மாநிலங்களின் பொருளாதார நிலை இவற்றை ஒப்பிடும்போது சிறப்பாக உள்ளது. .
மானியச்சுமை மிக அதிகமாக இருப்பதால் மாநிலங்களின் வருவாயின் பெரும்பகுதி அதில் செலவிடப்படுகிறது. 2022-23 ஆம் ஆண்டில் மாநிலங்கள் தங்களின் வருவாயில் சராசரியாக 9 சதவிகிதத்தை மானியங்களுக்காக செலவிட்டுள்ளன என்று இந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
சில மாநிலங்களில் மானியத்தின் பெரும்பகுதி மின்சார மானியத்திற்காக செலவிடப்படுகிறது. உதாரணமாக ராஜஸ்தான் அதன் மொத்த மானியத்தில் 97 சதவிகிதத்தை மின்சாரத்திற்காக செலவழித்தது, பஞ்சாப் 80 சதவிகிதத்தை செலவிட்டது.
இலவசம் என்று சொல்வது சரியா?
தற்போது பிஓஎஸ் முறையின் மூலம் ரேஷன் விநியோகம் செய்யப்படுகிறது
அரசின் எந்தத் திட்டங்களை அத்தியாவசிய மக்கள் நலத் திட்டங்கள் என்று அழைக்கலாம், எவற்றை இலவசங்கள் என்று அழைப்பது சரியாக இருக்கும் என்ற கேள்வி எழுகிறது.
"இலவசம் எது, எது இல்லை என்று சொல்லும் அமைப்பு நம்மிடம் இல்லை. இலவச தானியங்கள் விநியோகிப்பதை இலவசங்கள் என்று சொல்ல முடியுமா? சில மாநிலங்களில் தண்ணீர் மலைகளுக்குச் சென்றடைவதில்லை. அங்கு அரசு இலவசமாகத் தண்ணீர் வழங்குகிறது. அதை இலவசம் என்று சொல்லலாமா? அப்படிப்பட்ட சூழ்நிலையில் இந்த முழு விவாதத்திலும் யதார்த்தத்தின் பற்றாக்குறை உள்ளது." என்று மணி நைனின் ஆசிரியரும் பொருளாதார நிபுணருமான அன்ஷுமான் திவாரி சுட்டிக்காட்டினார்.
"இதை பார்ப்பதற்கு நம்மிடம் ஒரே ஒரு வழிதான் உள்ளது. இந்தியாவில் பத்து ஆண்டுகளுக்கு முன்பு வரை உண்மைகளை அடிப்படையாக கொண்டு விவாதங்கள் இருந்தன. அதில் தகுதி மற்றும் தகுதி இல்லாத மானியங்கள் வரையறுக்கப்பட்டன. இதைப் பார்க்க நம்மிடம் இந்த வழிதான் உள்ளது. இது இந்திய நிதி அமைப்பு முறைக்கு ஏற்றதாகும்,” என்றார் அவர்.
"இதன் அடிப்படையில், இலவச ரேஷன் மற்றும் இலவச கல்வி ஆகியவை தகுதி மானியங்கள். ஆனால் ஒரு மாணவருக்கு கல்வி கொடுப்பது தகுதி மானியம் என்றால், அவருக்கு லேப்டாப் கொடுப்பது தகுதி மானியமா என்று சொல்வது கடினம்.
ஆனால் மானியம் என்பது தகுதி அல்லது தகுதி அல்லாத பிரிவில் வந்தாலும், இந்த இரண்டிற்குமே வரி செலுத்துவோரின் பணம் செலவிடப்படுகிறது.
மக்கள் வறுமையில் இருந்து விடுபட்டனரா அல்லது வறுமை அதிகரித்ததா?
ஏழைகளை முன்னிறுத்தி இலவச திட்டங்கள் அல்லது இலவசங்கள் அடிக்கடி அறிவிக்கப்படுகின்றன என்ற விவாதமும் உள்ளது. தனது ஆட்சிக் காலத்தில் நாடு மிகவும் முன்னேறியுள்ளதாகவும், கோடிக்கணக்கான மக்கள் வறுமைக் கோட்டிலிருந்து வெளியே வந்துள்ளதாகவும் அரசு கூறுகிறது.
25 கோடி பேர் வறுமைக் கோட்டிலிருந்து வெளியே வந்துள்ளனர் என்று சமீபத்தில் மோதி அரசு கூறியது. இதை தொடர்ந்து பல அரசியல் கட்சிகளோடு கூடவே சமூக வலைதளங்களில் சிலரும், 25 கோடி பேர் வறுமையில் இருந்து வெளியே வந்துள்ளனர் என்றால், 80 கோடி பேருக்கு ஏன் இலவச உணவு வழங்கப்படுகிறது என்று கேள்விகளை கேட்கத் தொடங்கினர்.
இது குதர்க்கமான கேள்வி என்று கூறிய பிரதமர் நரேந்திர மோதி மாநிலங்களவையில் அதற்குப் பதிலளித்தார். “நோய்வாய்ப்பட்ட ஒருவர் மருத்துவமனையில் இருந்து வெளியே வந்தாலும், அவரை சில நாட்கள் இப்படித்தான் கவனித்துக் கொள்ள வேண்டும் என்று டாக்டர் சொல்வார்.. இவற்றை சாப்பிடாதீர்கள் ,,..இனிமேலும் அதே பிரச்சனையில் சிக்காதீர்கள் என்று சொல்வார்.”
“வறுமையிலிருந்து வெளியே வந்த ஒருவருக்கு மீண்டும் நெருக்கடி வந்துவிடாமல், அவர் மீண்டும் வறுமையில் வாடாமல் இருக்க அதிக கவனம் செலுத்த வேண்டும். எனவே நிலைமையை வலுப்படுத்த கால அவகாசம் வழங்க வேண்டும். அவர் மீண்டும் அந்த நரகத்தில் மூழ்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்,” என்றார் பிரதமர் மோதி.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)