You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஆஸ்டியோபோரோசிஸ்: எலும்புகள் வலு இழப்பது ஏன்? இந்நிலை ஏற்படாமல் தவிர்ப்பது எப்படி?
முதியோர்களுக்கு மட்டுமே ஆஸ்டியோபோரோசிஸ் நிலை ஏற்படும் என்று பரவலாக கருதப்படுகிறது. ஆனால், உண்மை அதுவல்ல. நமது உணவு , வாழ்க்கை முறை ஆகியவற்றின் காரணமாக, எந்த வயதிலும் ஆஸ்டியோபோரோசிஸ் பாதிப்பு ஒருவருக்கு ஏற்படக்கூடும்.
ஆஸ்டியோபோரோசிஸ் என்றால் என்ன?
எலும்புகள் அதன் வலுவை இழப்பதும், தடுக்கி விழுந்தால் கூட எலும்பு முறிவு ஏற்படும் அளவுக்கு பலவீனமாக இருக்கும் நிலையே எலும்பு வலு இழப்பு ஆகும். இது ஆங்கிலத்தில் 'ஆஸ்டியோபோரோசிஸ்' என்று அழைக்கப்படுகிறது. எலும்பு வலிமை இழப்பதால் ஏற்படும் எலும்பு முறிவுகள் 'பிளேகிலிட்டி ஃபிராக்சர்ஸ்' என அழைக்கப்படுகிறது. மேலும் இந்த எலும்பு முறிவுகளில் பல ஆஸ்டியோபோரோசிஸ் காரணமாக ஏற்படுகின்றன.
50 வயதுக்கு மேற்பட்ட பெண்களில் இருவரில் ஒருவருக்கும், ஆண்களில் ஐந்தில் ஒருவருக்கும் எலும்பு முறிவு ஏற்படுகிறது, இது எலும்புகளின் வலிமை குறைவதால் ஏற்படும். உடலில் பல்வேறு பகுதிகளில் சிறிய அளவில் எலும்பு முறிவுகள் ஏற்படலாம். இடுப்பு, மணிக்கட்டுகள், விலா ஆகிய இடங்களில் எலும்பு முறிவு ஏற்படுவதற்கு வாய்ப்புகள் அதிகம்.
35 வயதுக்கு பிறகு எலும்பின் அடர்த்தி குறைகிறது. எனவே, எலும்பு திசுக்களின் அளவும் குறைகிறது. இதை 'எலும்பு இழப்பு அல்லது எலும்பு மெல்லிதாதல் ' என்று கூறுகின்றனர். உங்கள் எலும்பில் வெளிபுறத்தில் எவ்வித பாதிப்பும் தென்படாது. ஆனால், உள்ளுக்குள் சிறு சிறு துளைகள் விழுந்து, எலும்பின் கட்டமைப்பை பலவீனப்படுத்தும். இதனால் சில நேரங்களில் எலும்புகள் முறிந்துபோகின்றன. இந்த நிலையே ஆஸ்டியோபோரோசிஸ் என்று அழைக்கப்படுகிறது. வயது ஆகும்போது இந்த பாதிப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. அதனால், முதுமை காலத்தில் எலும்பு முறிவுகள் ஏற்படுவது, எலும்பு எளிதில் உடையக்கூடியதாக மாறுவது போன்றவை நிகழ்கின்றன.
யாருக்கு எல்லாம் எலும்பு வலு இழப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்?
ஒருவருக்கு ஆஸ்டியோபோரோசிஸ் ஏற்படுவதற்கும் எலும்பு உடைதல் பாதிப்பு அதிகரிப்பதற்கு பல்வேறு காரணிகள் உள்ளன. அவை;
மரபணு: எலும்பின் ஆரோக்கியம் நம் பெற்றோரிடமிருந்து பெறப்பட்ட மரபணுக்களை சார்ந்து இருக்கிறது.
வயது: வயதாகும்போது, எலும்புகள் வலுவிழக்கின்றன. இதனால் அவை உடையக்கூடிய நிலை ஏற்படுகிறது.
இனம்: ஆம், எலும்புகளின் பலத்தில் இனமும் முக்கிய பங்காற்றுகிறது. ஆப்ரோ-கரீபியன் வம்சாவளியினரை விட காகசியன் அல்லது ஆசிய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் எலும்பு வலுவிழப்பில் அதிக ஆபத்தில் உள்ளனர.
பாலினம்: ஆண்களை விட பெண்கள் இந்த நோயால் பாதிக்கப்படுவதற்கு வாய்ப்புகள் அதிகம். ஏனெனில், ஆண்களுடன் ஒப்பிடும்போது பெண்களின் எலும்புகள் சிறியதாக இருக்கும். அதேபோல், மாதவிடாய் நேரங்களில் அவர்களின் எலும்புகள் அதிகளவில் வலு இழக்கின்றன.
குறைந்த உடல் எடை: உங்கள் BMI(உடல் நிறை குறியீட்டெண்) 19 kg/m2 என்ற அளவை விட குறைவாக இருந்தால், நீங்கள் ஆஸ்டியோபோரோசிஸ் , எலும்பு முறிவுகளால் பாதிக்கப்பட அதிக வாய்ப்பு உள்ளது.
புகைப்பிடித்தல்: உங்களுக்கு புகைப்பிடிக்கும் பழக்கம் இருந்தால், நீங்கள் இந்நோயால் பாதிக்கப்பட அதிக வாய்ப்பு உள்ளது.
மது பழக்கம்: அளவுக்கு அதிகமாக மதுவை அருந்துவதும் எலும்பு முறிவு ஏற்படுவதற்காக வாய்ப்பை அதிகப்படுத்தும்.
இதேபோல், முடக்கு வாதம், பெண்களில் ஈஸ்ட்ரோஜனின் அளவு குறைந்திருப்பது (பசியின்மை, அதிகப்படியான உடற்பயிற்சி அல்லது கருப்பை நீக்கம் போன்றவை காரணமாக), ஆண்களில் டெஸ்டோஸ்டிரோன் அளவு குறைந்திருப்பது, தைராய்டு. பக்கவாதம் போன்ற உடல்நல பாதிப்புகளும் ஆஸ்டியோபோரோசிஸ் ஆபத்தை அதிகப்படுத்துகின்றன. சில மருந்துகளை எடுத்துக்கொள்வது மூலமும் ஆபத்து அதிகரிக்கிறது.
எலும்பு வளர்ச்சிக்கான முக்கிய காலக்கட்டம் எது?
குழந்தைப் பருவம், வளர் இளம் பருவம், இளமைப் பருவம் ஆகியவை எலும்பு வலிமை வளர்ச்சிக்கு முக்கியக் காலங்களாகும். அந்த நேரத்தில், உடல் வளர்ச்சி அடைகிறது. அந்த நேரத்தில் எலும்புகளில் கவனம் செலுத்துவதன் மூலம் உடல் வடிவம் சரியாகி வயதானாலும் எலும்புகள் சேதமடைவதை தவிர்க்க முடியும்.
எடை தாங்கும் பயிற்சிகள் மூலம் குழந்தைகளின் எலும்பு வலுவை அதிகரிக்கலாம். மேலும், சமச்சீரான, கால்சியம் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்வது எலும்புகளின் திறனை அதிகரிக்கிறது.
எலும்பு வளர்ச்சிக்கு கால்சியம் முக்கியமானது, அதே நேரத்தில், உணவில் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் பிற ஊட்டச்சத்துக்களும் இருக்க வேண்டும். பழங்கள், காய்கறிகள், கார்போஹைட்ரேட் மற்றும் புரதங்கள் அடங்கிய உணவை உண்ணுவது நல்லது. இந்த சத்துக்களைப் பற்றி மேலும் தெரிந்து கொள்வோம்:
கால்சியம்
வலுவான, உறுதியான பற்கள் மற்றும் எலும்புகளுக்கு கால்சியம் சத்து மிகவும் அவசியம் .
பெரும்பாலான மக்கள் கூடுதல் சப்ளிமெண்ட்ஸ்களை எடுத்துக்கொள்ளாமல் , ஆரோக்கியமான உணவை எடுத்துக்கொள்வது மூலமே தங்களுக்கு தேவையான கால்சியத்தை பெறமுடியும். பால், சோயா, சீஸ், டோஃபூ, மீன்கள், சில காய்கறி வகைகள் மற்றும் கடலை வகைகளில் அதிகளவு கால்சியம் சத்துக்கள் உள்ளன.
வைட்டமின் டி
கால்சியத்தை உடல் உறிஞ்சிக்கொள்ளவும் தசைகளை வலுவாக வைத்துக்கொள்ளவும் வைட்டமின் டி முக்கிய பங்காற்றுகிறது. வயதானவர்களின் உடல் வலுவாக இருக்கும்போது அவர்கள் தடுக்கி விழுவதற்கான வாய்ப்புகள் குறைவு. சூரிய ஒளி, குறிப்பிட்ட சில உணவு மற்றும் திரவங்கள் அல்லது உணவு சப்ளிமெண்ட்ஸ் மூலம் நாம் நம் உடலுக்கு தேவையான வைட்டமின் டி-யை பெற முடியும். எனவே, தினமும் 10 நிமிடங்களாவது சூரிய வெளிச்சம் உடலில் படுவது நல்லது.
சூரிய ஒளியைத் தவிர்த்து, 1 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் ஒரு நாளைக்கு 15 மைக்ரோகிராம் (15 μg அல்லது 600IU) வைட்டமின் டி பெற வேண்டும். (ஒரு வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் 8.5 - 10 மைக்ரோகிராம்கள்).
உங்களுக்கு போதுமான வைட்டமின் டி கிடைக்கவில்லை என்றோ, கூடுதல் சப்ளிமெண்ட் எடுத்துக்கொள்ள வேண்டும் என்றோ நீங்கள் நினைத்தால் தகுந்த மருத்துவரை அணுக வேண்டும்.
மது பழக்கம்
அளவுக்கு அதிகமாக மது அருந்துவது ஆஸ்டியோபோரோசிஸ் மற்றும் எலும்பு முறிவுகள் ஏற்படுவதற்கு காரணியாக பார்க்கப்படுகிறது. நீங்கள் வயதானவராக இருக்கும்பட்சத்தில் குறைந்த அளவு மதுவை அருந்தினாலும் அதனால் நீங்கள் தடுமாறி விழுவதற்கும் அதன் மூலம் எலும்பு முறிவு ஏற்படுவதற்கும் வாய்ப்புகள் அதிகம். எனவே, மது விஷயத்தில் கவனம் தேவை.
உடற்பயிற்சி
உடற்பயிற்சி செய்வது எலும்பு மண்டலத்தை பலப்படுத்தும் என்பதால், எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு உடற்பயிற்சி அவசியம். எடை தூக்குவது நல்ல பலனளிக்கும். ஜாகிங், ஏரோபிக்ஸ், டென்னிஸ், நடனம், வேகமாக நடப்பது ஆகிய பயிற்சிகளை செய்வதும் எலும்புக்கு நல்லது.
நீச்சல் பயிற்சி, தோட்டக் கலையில் ஈடுபடுவது, கோல்ஃப் விளையாடுவது போன்றவை உங்களின் தசை வலிமை, சமநிலை மற்றும் ஒருங்கிணைப்பை மேம்படுத்துகிறது. நீங்கள் இடறி விழுவதற்கான வாய்ப்பையும் குறைக்கிறது. அதேநேரத்தில், ஆஸ்டியோபோரோசிஸ் பாதிக்கப்பட்டவர்கள் கடுமையான உடற்பயிற்சி செய்வது போன்றவற்றில் கவனமாக இருக்க வேண்டும். அத்தகையோர் மருத்துவரின் உதவியை நாடுவது நல்லது.
புகைப்பிடிக்கும் பழக்கம்
புகைப்பிடிக்கும் பழக்கம் உடல் நலத்தில் பாதிப்பை ஏற்படுத்துவது நாம் அனைவருமே அறிந்ததுதான். அதுமட்டுமல்லாமல், ஆஸ்டியோபிளாஸ்ட்கள் எனப்படும் எலும்பு வளர்ச்சி செல்களின் வேலையை புகைப்பிடிக்கும் பழக்கம் தாமதப்படுத்துகிறது. மேலும், புகைப்பிடிப்பதால் பெண்களுக்கு மாதவிடாய் முன்னதாகவே நிற்கவும் வாய்ப்பு உள்ளது. இது வயதான காலத்தில் இடுப்பு எலும்புகள் முறிவதற்கான ஆபத்தை அதிகரிக்கிறது. ஒரு நல்ல விஷயம் என்னவென்றால், புகைப்பிடிப்பதை கைவிடுபவர்களுக்கு எலும்பு முறிவு ஏற்படுவதற்கான ஆபத்துகள் குறைகிறது என்பதே.
உடல் எடை
உடல் எடை குறைவாக இருப்பதோ அல்லது அதிகமாக இருப்பதோ ஆஸ்டியோபோரோசிஸ், எலும்பு முறிவுகள் ஏற்படும் ஆபத்தை அதிகரிக்கிறது. எனவே, உடல் எடையை சீராக வைத்துக்கொள்வதில் அக்கறை காட்ட வேண்டும். உங்கள் உடல் எடை தொடர்பாக ஏதோனும் கவலை இருந்தால் மருத்துவரின் உதவியை நாடலாம். மாதவிடாய் நின்ற பின்னரும், ஆரோக்கியமான உடல் எடையில் இருக்கும் பெண்களுக்கு எலும்புகளை பாதுகாக்கும் ஆஸ்ட்ரோஜென் சிறிய அளவில் சுரக்கிறது.
உடல் பருமனாக இருப்பது என்பது எலும்புகளுக்கு நல்லதல்ல. எலும்பு முறிவு ஏற்படுவதற்கான வாய்ப்புகளை அதிகரிப்பதுடன் வேறு பல்வேறு உடல் பாதிப்புகள் ஏற்படும் வாய்ப்பையும் இது அதிகப்படுத்துகிறது.
எலும்பு அடர்த்தி ஸ்கேன் (DXA) என்றால் என்ன?
நமது எலும்பில் எவ்வளவு ` எலும்பு மினரல்கள்` உள்ளன என்பதை எலும்பு அடத்தி ஸ்கேனான டென்ஸிட்டோமெட்ரி எக்ஸ் ரே மூலம் அளவிட முடியும். எலும்பு அடர்த்தி குறைவாக இருந்தால் எலும்பு முறிவு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கும்.
ஆரோக்கியமான எலும்பு நலத்துக்கு தேவையானவை
உடற்பயிற்சி செய்வது, சுறுசுறுப்பாக இருப்பது, ஆரோக்கியமான உணவுகளை உண்பது, உணவில் கால்சியம், வைட்டமின் டி ஆகியவற்றை போதிய அளவில் சேர்த்துக்கொள்வது, சூரிய ஒளியை பெறுவது ஆஸ்டியோபோரோசிஸ் ஏற்படும் வாய்ப்புகளை குறைக்கிறது. இதேபோல், புகைப்பிடித்தல், அதிகளவில் மது அருந்துதல் போன்ற பழக்கங்களை கைவிடுவதும் உங்களுக்கு ஆஸ்டியோபோரொசிஸ் ஏற்படும் ஆபத்தை குறைக்கிறது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்