You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
'அந்தரங்க பகுதிகளைத் தொடுவது வன்கொடுமை அல்ல' - என கூறிய உயர் நீதிமன்றத்தை சாடிய உச்சநீதிமன்றம்
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்ற வழக்குகளில் நீதிமன்றங்கள் தெரிவிக்கும் பொருத்தமற்ற கருத்துகள் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரையும், சமூகத்தையும் கடுமையாகப் பாதிக்கும் என்று உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
உயர் நீதிமன்றங்கள் வெளியிடும் சில கருத்துகள் பெண்களின் கண்ணியத்தைக் குறைக்கும் வகையில் இருப்பதாக உச்ச நீதிமன்றம் பல நேரங்களில் கருத்து தெரிவித்துள்ளது.
உடலை நேரடியாகத் தொடாவிட்டால் பாலியல் துன்புறுத்தலாகக் கருத முடியாது என்று ஒரு உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்தது. சிறுமிகள் தங்கள் "பாலியல் ஆசைகளைக் கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும்" என்று மற்றொரு உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியது.
மற்றொரு உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பில் ஒரு பெண்ணை 'சட்டவிரோத மனைவி', 'நம்பிக்கையற்ற துணை' என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.
இத்தகைய கருத்துகள் குறித்து உச்ச நீதிமன்றம் கடுமையான நிலைப்பாட்டை எடுத்தது. பெண்களின் கண்ணியம் குறித்துச் சமரசம் செய்துகொள்ள முடியாது என்று அது தெளிவுபடுத்தியது.
வார்த்தை, நீதி இரண்டுக்கும் உணர்வுப்பூர்வமான அணுகுமுறை தேவை என்றும் உறுதியாகக் கூறியது.
'அந்தரங்க பகுதிகளைத் தொடுவது வன்புணர்வு அல்ல'
பாலியல் வன்கொடுமை முயற்சி வழக்கில் அலகாபாத் உயர் நீதிமன்றம் மார்ச் 17, 2025 அன்று ஒரு தீர்ப்பை வழங்கியது.
சிறுமி ஒருவரின் மார்பகங்களைப் பிடிப்பது, அவரது பைஜாமா நாடாவைப் பிடித்து இழுப்பது, அவர் ஆடைகளைக் களைய முயற்சிப்பது ஆகியவை பாலியல் வன்கொடுமை முயற்சியை நிரூபிக்கப் போதுமானவை அல்ல என்று உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்தது.
குறைந்த தீவிரமான குற்றச்சாட்டுகளை மட்டுமே குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீது சுமத்த வேண்டும் என்றும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. உயர் நீதிமன்றத்தின் இந்த முடிவைச் சட்ட நிபுணர்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த நிபுணர்கள் எதிர்த்தனர்.
இந்த வழக்கைத் தாமாக முன்வந்து விசாரித்த உச்ச நீதிமன்றம், டிசம்பர் 8 அன்று முக்கியக் கருத்துகளை வெளியிட்டது. பாலியல் துன்புறுத்தல் வழக்குகளில் கீழ் நீதிமன்றங்கள் வெளியிடும் பொருத்தமற்ற கருத்துகள் பாதிக்கப்பட்டவர்கள், அவர்களது குடும்பங்கள் மற்றும் சமூகம் மீது கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்தது.
அத்தகைய கருத்துகளைத் தவிர்ப்பதற்காகக் கீழ் நீதிமன்றங்களுக்கு விரிவான வழிகாட்டுதல்களை வழங்குவதை பரிசீலிக்கக்கூடும் என்றும் உச்ச நீதிமன்றம் கூறியது.
"வழிகாட்டுதல்களை வழங்குவதைக் பரிசீலிப்போம். இத்தகைய கருத்துகள் பாதிக்கப்பட்டவர்களையும், அவர்களது குடும்பங்களையும் புகார்களைத் திரும்பப் பெற வைக்கும். சமூகத்திற்குத் தவறான செய்தியை அனுப்பும்" என்று இந்தியத் தலைமை நீதிபதி சூர்யகாந்த் மற்றும் நீதிபதி ஜாய்மல்யா பாக்சி ஆகியோர் கொண்ட அமர்வு குறிப்பிட்டது.
சமீப காலமாகப் பல உயர் நீதிமன்றங்கள் பாலியல் துன்புறுத்தல் வழக்குகளில் இத்தகைய ஆட்சேபனைக்குரிய கருத்துகளை கூறுவதாக மூத்த வழக்கறிஞர் ஷோபா குப்தா மற்றும் பிற வழக்கறிஞர்கள் கூறினர்.
அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்து, வழக்கு விசாரணையை தொடர அனுமதிப்பதாக உச்ச நீதிமன்றம் கூறியது.
'ஆசைகளைக் கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும்'
சிறுவர்களுக்கு எதிரான பாலியல் குற்ற வழக்குகளில் நீதிமன்றங்கள் பொருத்தமற்ற கருத்துகளைத் தெரிவிக்கக் கூடாது என்று கடந்த 2024-ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம், கல்கத்தா உயர் நீதிமன்றத்திற்குச் கடுமையான எச்சரிக்கை விடுத்தது.
இது பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சமூகம் மீது எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால், நீதிமன்றங்கள் தங்கள் முடிவுகளில் அத்தகைய கருத்துகளைத் தவிர்க்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியது.
போக்ஸோ சட்டத்தில் 'பரஸ்பர சம்மதம்' போன்ற விலக்குகள் இல்லை என்றும், சிறுமியின் சம்மதம் இருந்தாலும் அது ஒரு குற்றமே என்றும் உச்ச நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு தெளிவாகக் கூறியது.
வன்கொடுமை, ஆள் கடத்தல் போன்ற கடுமையான குற்றச்சாட்டுகளிலிருந்து ஒரு நபரை விடுவித்து கல்கத்தா உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது.
மாவட்ட நீதிமன்றம் அவருக்கு இருபது ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்திருந்தது.
உயர் நீதிமன்றம் தனது தீர்ப்பில், "பெண்கள் தங்கள் பாலியல் ஆசைகளைக் கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும்" என்று கருத்து கூறியது.
இது ஒரு தவறான கருத்து என்றும், ஆட்சேபனைக்குரியது என்றும் உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது. இத்தகைய வழக்குகளின் தீர்ப்புகளில் பொருத்தமான வார்த்தைகளை பயன்படுத்துவதற்காக மூன்று பேர் கொண்ட குழுவை அமைத்து வழிகாட்டுதல்களை உருவாக்க அது உத்தரவிட்டது.
இந்த வழக்கு 2018 ஆம் ஆண்டைச் சேர்ந்தது. மேற்கு வங்கத்தில் 14 வயதுச் சிறுமி ஒருவர் காணாமல் போனார். பின்னர் அவர் 25 வயதுடைய ஒரு நபருடன் இருப்பது கண்டறியப்பட்டது.
அந்தச் சிறுமியின் தாயார் ஆள் கடத்தல் மற்றும் பாலியல் வன்கொடுமை வழக்குப் பதிவு செய்தார். 2023 இல் உயர் நீதிமன்றத்தில் நடந்த விசாரணையில், அந்தச் சிறுமி தனது விருப்பப்படியே அவருடன் சென்றதாகத் தெரிவித்தார்.
'சட்டவிரோத மனைவி', 'விசுவாசமற்ற துணை'
பிப்ரவரி 2025 இல் மும்பை உயர் நீதிமன்றத்தின் முடிவை உச்ச நீதிமன்றம் கடுமையாக விமர்சித்தது.
2004 ஆம் ஆண்டில், மும்பை உயர் நீதிமன்றம், 'பௌசாஹேப் பனாம் வெர்சஸ் லீலாபாய்' (Bhausaheb Banam vs Leelabai) வழக்கில் இழப்பீடு வழங்க மறுத்து, இரண்டாவது மனைவியை குறிப்பிட 'சட்டவிரோத மனைவி', 'விசுவாசமற்ற துணை' போன்ற அவதூறுச் சொற்களைப் பயன்படுத்தியது.
அத்தகைய மொழி பொருத்தமற்றது மட்டுமல்லாமல், அந்தப் பெண்ணின் அரசியலமைப்பு உரிமைகளையும் மீறுவதாகும் என்று உச்ச நீதிமன்றம் கருத்துத் தெரிவித்ததாக லைவ் லா தெரிவித்தது.
இந்திய அரசியலமைப்பின் பிரிவு 21 இன்படி ஒவ்வொரு நபருக்கும் கண்ணியத்துடன் வாழும் உரிமை உள்ளது என்றும், அத்தகைய வார்த்தைகளால் ஒரு பெண்ணைக் குறிப்பிடுவது அவரது கண்ணியத்தைக் குறைக்கும் என்றும் உச்ச நீதிமன்றம் ஆட்சேபம் தெரிவித்தது.
உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பில் இத்தகைய வார்த்தை பயன்படுத்தியிருப்பது வருந்தத்தக்கது என்று உச்ச நீதிமன்றம் கூறியது.
திருமணம் தொடர்பான வழக்குகளில் ஆண்களுக்கு எதிராக இதுபோன்ற வார்த்தைகள் பயன்படுத்தப்படுவதில்லை, ஆனால் பெண்கள் விஷயத்தில் இது காணப்படுகிறது என்று உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்தது.
சமீபத்தில் உச்ச நீதிமன்றம் 'பாலினப் பொதுமைப்படுத்தலை எதிர்க்கும் கையேட்டையும்' வெளியிட்டது. நீதிமன்றங்கள், வழக்கறிஞர்கள் மற்றும் நீதிபதிகள் பெண் வெறுப்பு மொழியைப் பயன்படுத்தக் கூடாது என்று இது கூறுகிறது.
'அந்தப் பெண்ணே தானாகச் சிக்கல்களைத் தேடிக் கொண்டார்'
மற்றொரு வன்கொடுமை வழக்கில் ஏப்ரல் 10 அன்று அலகாபாத் உயர் நீதிமன்றம் சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிட்டது.
குற்றம்சாட்டப்பட்டவருக்கு ஜாமீன் வழங்கிய உயர் நீதிமன்றம், அந்தப் பெண் தானாகச் சிக்கல்களை வரவழைத்துக் கொண்டார் என்றும், அவருக்கு என்ன நடந்தாலும் அவரே பொறுப்பேற்க வேண்டும் என்றும் கருத்து தெரிவித்தது.
உயர் நீதிமன்றத்தின் கருத்துகளுக்கு உச்ச நீதிமன்ற அமர்வு ஆட்சேபம் தெரிவித்ததுடன், எச்சரிக்கையாக இருக்க உத்தரவிட்டது.
"ஜாமீன் வழங்கலாம்... ஆனால் அவர் சிக்கல்களை வரவழைத்துக் கொள்கிறார் என்ற இந்தக் கருத்துகள் என்ன? அத்தகைய வார்த்தைகளைப் பேசும்போது நாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். குறிப்பாக நம் தரப்பிலிருந்து (நீதிபதிகள்)" என்று நீதிபதி கவய் கருத்து தெரிவித்தார்.
அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் இந்த வழக்கை நீதிபதி சஞ்சய் குமார் விசாரித்தார். உத்தரப் பிரதேசத்தைச்சேர்ந்த எம்.ஏ. படிக்கும் மாணவி ஒருவர் தனது நண்பர் மீது வன்கொடுமை குற்றச்சாட்டுகளைக் சுமத்தியிருந்தார்.
இந்த வழக்கு செப்டம்பர் 2024 ஆம் ஆண்டைச் சேர்ந்தது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவரின் மனுவை விசாரித்த நீதிபதி சஞ்சய் குமார் அவருக்கு ஜாமீன் வழங்கினார்.
"செப்டம்பர் 2024 இல் அந்த மாணவி மூன்று பெண்களுடன் டெல்லியில் உள்ள ஒரு மதுபான விடுதிக்கு சென்றார். அங்கு அவர்களுக்குத் தெரிந்த சில ஆண்களை அவர்கள் சந்தித்தனர். அவர்களில் ஒருவர்தான் குற்றம்சாட்டப்பட்டவர்" என்று பார் & பெஞ்ச் என்ற சட்டச் செய்தி இணையம் தெரிவித்துள்ளது.
தான் மது போதையில் இருந்ததாகவும், இருப்பினும் குற்றம்சாட்டப்பட்டவர் தன்னை அணுகியதாகவும் மாணவி காவல்துறையில் அளித்த புகாரில் தெரிவித்துள்ளார்.
குற்றம்சாட்டப்பட்டவரின் தொடர்ச்சியான வேண்டுகோளின் பேரில், அவருடன் சென்று ஓய்வெடுக்க ஒப்புக்கொண்டதாகவும், ஆனால் குற்றம்சாட்டப்பட்டவர் தன்னை நொய்டாவில் உள்ள தனது வீட்டிற்கு அழைத்துச் செல்வதற்குப் பதிலாக, வேறொரு பிளாட்டுக்கு அழைத்துச் சென்றதாகவும் மாணவி தெரிவித்தார்.
அங்கு அவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக அவர் கூறினார். மாணவியின் புகாரின் அடிப்படையில் காவல்துறை முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்து டிசம்பர் 2024 இல் குற்றம்சாட்டப்பட்டவரை கைது செய்தது.
அந்த நேரத்தில் அப்பெண்ணுக்கு ஆதரவு தேவை என்று நினைத்ததாகவும், தன்னுடன் வரத் தானாகவே முன்வந்து ஒப்புக்கொண்டதாகவும் குற்றம்சாட்டப்பட்டவர் தனது ஜாமீன் மனுவில் நீதிமன்றத்தில் தெரிவித்தார். குற்றச்சாட்டுகளை மறுத்த அவர், இருவருக்கும் இடையே ஒருமித்த சம்மதத்துடன் பாலியல் உறவு நடந்ததாகக் கூறினார்.
"பாதிக்கப்பட்டவரின் குற்றச்சாட்டுகள் உண்மையாக இருந்தாலும், அந்தப் பெண்ணே தானாகச் சிக்கல்களை வரவழைத்துக் கொண்டதாக நீதிமன்றம் நம்புகிறது, இந்தச் சம்பவத்திற்கு அவரே பொறுப்பு" என்று ஜாமீன் மனுவை விசாரித்த அலகாபாத் உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்தது.
"அந்தப் பெண்ணும் தனது வாக்குமூலத்தில் இதே விஷயங்களைத் தெரிவித்தார். மருத்துவப் பரிசோதனைகளிலும் மருத்துவர் பாலியல் வன்முறை குறித்து எதுவும் குறிப்பிடவில்லை."
"அந்தப் பெண் முதுகலை படித்தவர். அவர் தனது நடத்தையின் ஒழுக்கத்தை புரிந்து கொள்ள முடியும்" என்று நீதிபதி சஞ்சய் குமார் கருத்து தெரிவித்தார்.
"அனைத்து உண்மைகள், சூழ்நிலைகள், அத்துடன் குற்றத்தின் தன்மை, ஆதாரம் மற்றும் இரு தரப்பினரின் கருத்துக்களை பரிசீலித்த பிறகு, மனுதாரர் ஜாமீன் பெறத் தகுதியுடையவர் என்று நான் நம்புகிறேன். எனவே, ஜாமீன் வழங்கப்படுகிறது" என்று நீதிபதி சஞ்சய் குமார் கூறினார்.
'உடலை நேரடியாகத் தொடவில்லை'
மும்பை உயர் நீதிமன்றத்தின் நாக்பூர் கிளை அளித்த சர்ச்சைக்குரிய முடிவை உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைத்தது.
ஆடைகளைக் களையாமல் மார்பகங்களைத் தொடுவது போக்ஸோ சட்டத்தின் கீழ் பாலியல் துன்புறுத்தல் அல்ல என்று உயர் நீதிமன்றம் கூறியது.
"12 வயதுச் சிறுமியைப் பாலியல் துன்புறுத்தல் செய்ததற்காக 39 வயதுடைய நபர் குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டது. ஆனால் நீதிமன்றம் அவருக்கு ஒரு வருடம் சிறைத் தண்டனை மட்டுமே விதித்தது" என்று லைவ் லா தெரிவித்தது.
இந்த வழக்கில் 'உடலை நேரடியாகத் தொடவில்லை' என்று மும்பை உயர் நீதிமன்றம் குறிப்பிட்டது.
போக்ஸோ சட்டத்தின் கீழ் குற்றமாகக் கருதப்படுவதற்கு உடலை நேரடியாகத் தொட வேண்டிய அவசியம் இல்லை என்று உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்தது.
மும்பை உயர் நீதிமன்றம் சட்டத்தை மிகவும் குறுகலாக புரிந்துகொண்டதாக உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டது. பாலியல் துன்புறுத்தலிலிருந்து குழந்தைகளைப் பாதுகாப்பதே போக்ஸோ சட்டத்தின் நோக்கம் என்று உச்ச நீதிமன்றம் கூறியது. பாலியல் நோக்கத்துடன் உடலை எப்படித் தொட்டாலும் அது போக்ஸோ சட்டத்தின் கீழ் குற்றமே என்றும், உடலை நேரடியாகத் தொடுவது கட்டாயமில்லை என்றும் உச்ச நீதிமன்றம் விளக்கியது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு