காணொளி: 'திமுக செய்த தவறுக்கு பழியை சுமந்தவர்கள் நாங்கள்' - மாணிக்கம் தாகூர்
ஆட்சியில் பங்கு கோரி மதுரை தெற்கு மாவட்ட காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் ஆட்சியில் பங்கு, சட்டமன்ற தேர்தலில் அதிக எண்ணிக்கையில் தொகுதிகள், உள்ளாட்சித் தேர்தலில் 30 சதவிகித விழுக்காடு இடங்கள் தரப்பட வேண்டும் என்று, மதுரை தெற்கு மாவட்ட காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இக்கூட்டத்தில் காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் பேசுகையில், "கூட்டணி, தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தைக்காக காங்கிரஸ் குழு அமைத்து 70 நாட்களுக்கும் மேலாகிவிட்டது. இப்போது வரை காத்திருக்கிறோம். பிப்ரவரி 22-ம் தேதி குழு அமைப்பதாக திமுக கூறியிருக்கிறது. அதுவரை நாங்கள் காத்துக் கொண்டிருக்கிறோம்." என்றார்.
"நாம் கேட்பதெல்லாம் மரியாதை மட்டும்தான். நாங்கள் எதை கொடுக்கிறோமோ அதைத்தான் நாங்களும் எதிர்பார்க்கிறோம்."
"காங்கிரசுக்கு வாக்குச்சாவடியில் ஆட்கள் இருக்கின்றனரா, காங்கிரஸ் கட்சிக்கு 3,000 வாக்குகள் தான் இருப்பதாக, திமுக மாவட்ட செயலாளர் ஒருவர் பேசியிருக்கிறார். அதேபோன்று, அமைச்சர்களும் அலட்சியமாக பேசியிருக்கின்றனர். சம்பந்தப்பட்ட மாவட்ட செயலாளர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் இதுவரை எடுக்கவில்லை. அதனால் எல்லா மாவட்ட செயலாளர்களும் இதுபோன்று பேச ஆரம்பித்திருக்கின்றனர்." என்றார் மாணிக்கம் தாகூர்.
பூத் கமிட்டி அமைப்பதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
'திமுக செய்த தவறுகளுக்காக நாங்கள் பழிசுமந்திருக்கிறோம். நான் மீண்டும் எம்.பியாவதற்காக இப்படி பேசுவதாக கூறுகின்றனர். நான் திரும்பி எம்.பியாக நிற்கப் போவதில்லை. எனக்கு கட்சிதான் முக்கியம். காங்கிரஸ் மதுரை வடக்கு தொகுதியில் நிச்சயமாக போட்டியிட வேண்டும். அத்தொகுதியில் வெற்றிபெற்றே ஆக வேண்டும்" என்று மாணிக்கம் தாகூர் கூறினார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



