ஆமதாபாத் விமான விபத்து நடந்த இடத்தின் கோர நிலையைக் காட்டும் புகைப்படங்கள்

வியாழக்கிழமை புறப்பட்ட சில விநாடிகளில் ஏர் இந்தியாவின் AI 171 விமானம் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பயணிகள் மற்றும் பணியாளர்கள் உள்பட 241 பேர் உயிரிழந்ததாக விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த விமான விபத்தில் பிஜே மருத்துவக் கல்லூரி விடுதிக்குப் பெரும் சேதம் ஏற்பட்டது. விபத்து நடந்தபோது இங்கு மருத்துவம் படிக்கும் மாணவர்கள் மதிய உணவுக்காக டைனிங் ஹாலில் கூடியிருந்தனர்.

இறந்தவர்களின் உறவினர்கள் பலர் ஆமதாபாத்தில் உள்ள சிவில் மருத்துவமனைக்கு வந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு நேற்றிரவு நீளமான, வேதனைமிக்க இரவாக இருந்தது.

சிலர் இன்னும் தங்கள் டிஎன்ஏ மாதிரிகளைக் கொடுக்க வரிசையில் காத்திருக்கிறார்கள். ஏற்கெனவே அவற்றைக் கொடுத்தவர்கள் அதிகாரிகளிடம் இருந்து விவரங்களைத் தெரிந்துகொள்ளக் காத்திருக்கிறார்கள்.

விபத்தில் இறந்தவர்களின் உடல்களை அடையாளம் காண டிஎன்ஏ பரிசோதனை மட்டுமே ஒரே வழி என்று அதிகாரி ஒருவர் பிபிசியிடம் கூறினார்.

தேசிய பேரிடர் மீட்புப் படை அதிகாரி ஹரியோம் காந்தி கூறுகையில், "விமான விபத்து நடந்த இடத்தைச் சுத்தம் செய்யும் பணி நடந்து வருகிறது. இந்தப் பணி முடிந்ததும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை குறித்த தெளிவான புள்ளி விவரத்தை வழங்க முடியும்" என்றார்.

ஆமதாபாத் சிவில் மருத்துவமனையில் இன்று காலை காட்சிகள் முந்தைய நாளைவிட மிகவும் அமைதியாக உள்ளன.

உயிர் பிழைத்தவர்கள் யாரேனும் உள்ளார்களா என்று தேடும் பணி இனி இல்லை, இறந்தவர்களை அடையாளம் காண வேண்டும் என்ற வேதனையான மற்றும் கொடூரமான எதார்த்த நிலை உருவாகியுள்ளது.

அடிக்கடி, உடற்கூறாய்வு அறையில் இருந்து ஒரு சவப்பெட்டி வெளியே வருகிறது. அதைத் தொடர்ந்து துக்கத்தில் இருக்கும் குடும்பங்கள் நெருங்கி வருகின்றன. ஆனால் இன்னும் பலருக்கு, தங்கள் அன்புக்குரியவர்களின் உடல்கள் கிடைக்கச் சில நாட்கள்கூட ஆகலாம் என்ற அவல நிலை உள்ளது.

ஏர் இந்தியா விமானத்தின் பயணிகள் தவிர்த்து, கட்டடத்தில் இருந்த குறைந்தது 8 பேர் இந்த விபத்தில் உயிரிழந்துள்ளதாக ஆமதாபாத்தில் உள்ள ஒரு மூத்த சுகாதார அதிகாரி பிபிசியிடம் தெரிவித்தார்.

சம்பவ இடத்தில் இன்னும் ஏராளமான உடைந்து சிதறிய பாகங்கள் உள்ளன. விமானத்தின் இறக்கை இன்னும் அங்கேயே கிடக்கிறது. அது கருகிவிட்டது.

அந்தப் பகுதியில் மக்கள் கூட்டம் பெரிதும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. செய்தியாளர்கள்கூட விபத்து நடந்த இடத்திற்கு அருகில் செல்ல அனுமதிக்கப்படுவதில்லை. சம்பவ இடத்திற்குப் புலனாய்வாளர்கள் வரத் தொடங்கியுள்ளனர்.

பிபிசி செய்தியாளர் விகாஸ் பாண்டே, விபத்து நடந்த இடத்தில், விமானம் மோதிய உள்ளூர் மருத்துவர்கள் விடுதியின் கட்டடத்தின் புகைப்படத்தை இன்று எடுத்தார்.

அந்தக் கட்டடம் முற்றிலுமாகக் கருகி, கருப்பு நிறத்தில் காட்சியளித்தது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு