You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காணொளி: அமெரிக்காவின் பயங்கரவாதி பட்டியலில் இருந்தவர் டிரம்பை நெருங்கியது எப்படி?
இஸ்லாமிக் ஸ்டேட் எனப்படும் ஐ.எஸ். குழுவை எதிர்த்துப் போராடும் சர்வதேச கூட்டணியில் சிரியா இணைய உள்ளதை டிரம்ப் அரசாங்கத்தைச் சேர்ந்த ஒரு மூத்த அதிகாரி பிபிசியிடம் உறுதிப்படுத்தி உள்ளார். இது மத்திய கிழக்கில் அமெரிக்க வெளியுறவுக் கொள்கையில் மாற்றத்தைக் குறிக்கிறது.
சிரியாவின் புதிய அதிபர் அகமது அல்-ஷரா வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் டிரம்பை சந்தித்ததைத் தொடர்ந்து இந்த தகவலை அவர் அளித்தார்.
ஃபாக்ஸ் நியூசுக்கு அளித்த பேட்டியில், இந்த வருகை அமெரிக்காவுடன் ஒத்துழைக்கும் புதிய சகாப்தத்தின் ஒரு பகுதி என அல்-ஷரா கூறினார்.
சிரியா அதிபர் ஒருவர் வெள்ளை மாளிகைக்கு வருகை தந்தது இதுவே முதல்முறையாகும். மற்றொரு விஷயத்தையும் இங்கு குறிப்பிட்டாக வேண்டும். ஒரு காலத்தில் அல்-ஷராவின் தலைக்கு அமெரிக்கா 10 மில்லியன் டாலர் பரிசு அறிவித்திருந்தது. தங்களின் உலகளாவிய பயங்கரவாதிகள் பட்டியலிலும் அவரை வைத்திருந்தது. தற்போது இந்த பட்டியலில் இருந்தும் அவரை அமெரிக்கா விடுவித்துள்ளது.
ஒரு காலத்தில் இஸ்லாமிய கிளர்ச்சிக் குழு தலைவராக இருந்த அல்-ஷரா, இன்று உலகின் சக்தி வாய்ந்த தலைவரான டிரம்புடன் நெருக்கம் காட்டும் அளவுக்கு உயர்ந்தது எப்படி?
சிரியாவில் கடந்த ஆண்டு ரஷ்ய ஆதரவு கொண்ட அதிபரான அல்-அசத் ஆட்சியை கிளர்ச்சி குழுக்கள் வீழ்த்தின. அதையடுத்து, அல்-ஷரா அதிபரானார்.
இந்தாண்டு அமெரிக்க அதிபர் டிரம்பை அல்-ஷரா சந்திப்பது இது இரண்டாவது முறை. முன்னதாக, கடந்த மே மாதம் சௌதி அரேபியாவில் இருவரும் சந்தித்திருந்தனர்.
ஆட்சிக்கு வந்தது முதலே, 13 ஆண்டுகளாக உள்நாட்டு போர் மற்றும் அசத் ஆட்சியின் கீழ் பல தசாப்தங்களாக தனிமைப்பட்டிருந்த சிரியாவை உலக அரங்கில் மீண்டும் நிலைநாட்ட அல்-ஷரா முயற்சித்து வருகிறார்.
கடந்த செப்டம்பரில் ஐ.நா. பொதுச் சபையில் உரையாற்றிய அவர், உலக நாடுகள் மத்தியில் சிரியா அதன் சரியான இடத்தை மீண்டும் பெறுவதாக கூறினார். மேலும், சிரியா மீதான தடைகளை நீக்கவும் சர்வதேச சமூகத்திற்கு அழைப்பு விடுத்தார்.
அல்-ஷராவின் பேச்சு, சர்வதேச ஊடகங்களுடனான நேர்காணல் மற்றும் அவரது தோற்றத்திலும் தெளிவான மாற்றம் தெரிகிறது. ஒரு தசாப்தத்துக்கு மேலாக இதில் அவர் கவனம் செலுத்தி வருகிறார்.
அடையாளங்களில் வலுவான புரிதல் கொண்ட மனிதராக அல்-ஷரா இருப்பதாக தெரிகிறது.
ஒரு காலத்தில் பாரம்பரிய ஜிஹாதி குழுவினர் உடையில் இருந்த இவர், கடந்த சில ஆண்டுகளில் மேற்கத்திய உடையை ஏற்றுக்கொண்டார். கடந்த ஆண்டு அசத் ஆட்சியை கவிழ்த்த தாக்குதலின் போது, ராணுவ உடையில் காணப்பட்டார். இது செயல்பாட்டு அறையின் தளபதியாக அவரது பங்கை காட்டும் வகையில் இருந்தது.
அவரது கடந்த காலத்தை திருப்பிப் பார்த்தால் அல்-ஷராவிடம் எவ்வளவு மாற்றம் உள்ளது என்பதை புரிந்துகொள்ளலாம்.
HTS என சுருக்கமாக அழைக்கப்படும் ஹயத் தஹ்ரிர் அல்-ஷாம் குழுவின் தலைவராக இருந்த போது அபு முகமது அல்-ஜோலானி என்ற மாற்றுப்பெயரையே அல்-ஷரா பயன்படுத்தினார். இந்தக் குழு 2016 வரை அல்-கய்தாவுடன் தொடர்பு வைத்திருந்தது. பின்னர் அதனுடனான உறவை அல்-ஷரா துண்டித்தார்.
HTS குழுவை வழிநடத்தும் முன் அல்-ஷரா இராக்கில் அல்-கய்தாவுக்காக சண்டையிட்டுள்ளார். இதனால் சிறிது காலம் அமெரிக்கப் படைகளால் சிறையிலும் அடைக்கப்பட்டார்.
அல்-ஷரா தலைமையின் போது கிளர்ச்சி குழுக்கள் வலுவாக உள்ள சிரியாவின் இட்லிப்பில் HTS ஆதிக்க சக்தியாக மாறியது.
இந்தப் பகுதி கிளர்ச்சி குழுக்களால் ஆளப்படுகிறது என்ற மக்களின் கவலையை தீர்க்க, HTS 2017ஆம் ஆண்டு அதன் அரசியல் மற்றும் நிர்வாகப் பிரிவாக சிரிய ரட்சிப்பு அரசாங்கத்தை (Syrian Salvation Government) நிறுவியது.
பிரதமர், அமைச்சர்கள் உள்ளிட்ட கட்டமைப்புகளுடன் ஒரு அரசை போலவே சிரிய ரட்சிப்பு அரசாங்கம் செயல்பட்டது.
தனது பிம்பத்தை மேலும் மேம்படுத்த, இடம்பெயர்ந்தோர் முகாம்களை பார்வையிடுவது, பொதுநிகழ்வுகளில் பங்கெடுப்பது, நிவாரண நடவடிக்கைகளை மேற்பார்வையிடுவது என மக்களுக்கு நெருக்கமாக சென்றார் அல்-ஷரா.
தங்கள் ஆட்சியை சட்டப்பூர்வமாக்கவும், மக்களுக்கு சேவை செய்வதற்கான தங்கள் திறனை நிரூபிக்கவும் நிர்வாகம் மற்றும் உள்கட்டமைப்பில் தாங்கள் செய்த சாதனைகளை HTS மக்களிடம் எடுத்துரைத்தது.
2021-ல் ஆப்கானிஸ்தானில் தாலிபன்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்ததையும் அவர்கள் பாராட்டினர். ஜிகாதி முயற்சி மற்றும் அரசியல் லட்சியங்களுக்கு இடையே சமநிலையை பராமரிக்க தாலிபன்களை முன்மாதிரியாக பார்த்தனர்.
இட்லிப்பில் அல்-ஷரா மேற்கொண்ட முயற்சிகள், ஜிஹாத் மட்டுமல்லாமல், திறம்பட ஆட்சி செய்வதற்கான HTS-ன் திறனை நிரூபிப்பதற்கான உத்திகளையும் பிரதிபலித்தன.
நிலைத்தன்மை, பொது சேவைகள் மற்றும் மறுகட்டமைப்புக்கு முன்னுரிமை அளிப்பதன் மூலம், HTS ஆட்சியின் கீழ் இட்லிப்பை வெற்றியின் மாதிரியாக காட்டுவதை அவர் நோக்கமாகக் கொண்டிருந்தார்.
இந்த சீர்திருத்தங்களுக்கு பதிலளிக்கும் விதமாக, இந்த ஆண்டு தொடக்கத்தில் HTS மீதான தடைகளை அமெரிக்கா நீக்கியது.
அதே நேரம், அல்-ஷரா தலைமையின் கீழ் HTS களத்தில் ஆதிக்கம் செலுத்துவதற்காக பிற ஜிஹாதிகள் மற்றும் கிளர்ச்சி குழுக்களை நசுக்கியதாக குற்றச்சாட்டும் உள்ளது.
இத்தகைய பின்னணி இருந்தாலும், சிரியாவின் பல்வேறு இனக்குழுக்கள் மற்றும் பிரிவுகளின் ஆதரவைப் பெறக்கூடிய ஒரு மிதமான அரசாங்கத்தை வழிநடத்துவதாக சபதம் செய்ததன் மூலம், அசத் ஆட்சியை எதிர்த்த அரசுகளின் ஆதரவை கூட அல்-ஷரா பெற்றிருக்கிறார்.
பழிவாங்குவதன் அடிப்படையில் எதிர்காலத்தை உருவாக்க முடியாது. வெற்றியாளர்களுக்கு மட்டுமல்ல, சிரியா அதன் அனைத்து மக்களுக்கும் வீடாக இருக்க வேண்டும் என கடந்த மே மாதம் தி எகனாமிஸ்ட் செய்தித்தாளுக்கு அளித்த பேட்டியில் அல்-ஷரா கூறி இருந்தார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு