You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காணொளி: ரஷ்யா எண்ணெய் வாங்கும் நாடுகள் மீது 500% மசோதா - இந்தியாவை எவ்வாறு பாதிக்கும்?
ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்கும் நாடுகள் மீது 500 சதவீதம் வரை வரி விதிக்க வழிவகுக்கும் அமெரிக்காவின் புதிய மசோதா குறித்த விவாதங்கள் அதிகரித்துள்ளன.
'ரஷ்ய தடைகள் மசோதா' என அழைக்கப்படும் இந்த மசோதா, லிண்ட்சே கிரஹாம் மசோதா என்றும் அழைக்கப்படுகிறது. இந்த மசோதாவை அமெரிக்க குடியரசுக் கட்சி செனட்டர் லிண்ட்சே கிரஹாம் அறிமுகம் செய்தார்.
இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால், ரஷ்யாவிலிருந்து மலிவு விலையில் எண்ணெய் வாங்கும் இந்தியா, சீனா போன்ற நாடுகளுக்கு அழுத்தம் கொடுக்க அமெரிக்காவுக்கு வாய்ப்பு கிடைக்கும் என நம்பப்படுகிறது.
அப்படி நடந்தால் இந்தியாவின் முன் இரண்டு வாய்ப்புகள் மட்டுமே இருக்கக்கூடும். ஒன்று, இந்தியா 500 சதவீத வரி விதிப்பை எதிர்கொள்ள வேண்டும் அல்லது ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதை நிறுத்த வேண்டும்.
இந்த மசோதா குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் கடந்த புதன்கிழமை பதிவிட்டிருந்த கிரஹாம், இந்த மசோதாவுக்கு டிரம்ப் ஒப்புதல் அளித்துள்ளதாகவும், அடுத்த வாரம் வலுவான ஆதரவுடன் இந்த மசோதா நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கிறேன் எனப் பதிவிட்டிருந்தார்.
ரஷ்யாவிடமிருந்து பெருமளவில் எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகளில் இந்தியா முக்கியமானது. ஆனால், அமெரிக்காவின் வரி விதிப்புக்குப் பிறகு, இந்தியா ரஷ்யாவிடமிருந்து இறக்குமதி செய்யும் எண்ணெய் அளவு கணிசமான குறைந்திருப்பதை புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.
ஒருவேளை இந்த மசோதா நிறைவேற்றப்பட்டு, இந்தியா மீது 500 சதவீதம் வரை வரி விதிக்கப்பட்டால், அது இந்தியாவுக்கு எத்தகைய பாதிப்பை ஏற்படுத்தும்?
இது குறித்து கூறும் உலகளாவிய வர்த்தக ஆராய்ச்சி முன்னெடுப்பு (Global Trade Research Initiative) அமைப்பின் நிறுவனர் அஜய் ஸ்ரீவஸ்தவா, "இப்படியொரு சூழல் ஏற்பட்டால் அமெரிக்காவிற்கான இந்தியாவின் ஏற்றுமதி நின்றுவிடும். அதாவது, அமெரிக்காவிற்கு இந்தியா செய்யும் 87.4 பில்லியன் டாலர் மதிப்பிலான ஏற்றுமதி சிக்கலுக்கு உள்ளாகும்," என்கிறார்.
"இதுவரை டிரம்ப் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி இந்தியாவுக்கு எதிராக வரிகளை விதித்தார். ஆனால் தற்போதைய மசோதா அமெரிக்க நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட வேண்டும். இந்த மசோதா நிறைவேறும் என்று நான் நினைக்கவில்லை. இருப்பினும், இந்தியா தனது கொள்கையை தெளிவுபடுத்த வேண்டும். இந்தியா ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்க விரும்பினால், அதை வெளிப்படையாக சொல்ல வேண்டும். வாங்க விரும்பவில்லை என்றால், அதையும் தெளிவாக கூற வேண்டும். ஒரே நேரத்தில் அமெரிக்க வரிகளால் ஏற்படும் இழப்புகளை அனுபவித்துக்கொண்டே, ரஷ்யாவிலிருந்து எண்ணெய் இறக்குமதியையும் குறைப்பது சாத்தியமில்லை." என்றார் அஜய் ஸ்ரீவஸ்தவா.
"டிசம்பர் மாதத்தில் ரஷ்யாவிடமிருந்து இந்தியா இறக்குமதி செய்த எண்ணெயானது, ஜூன் மாதத்தில் இருந்த தினசரி 21 லட்சம் பேரல் என்ற உச்ச அளவை விட 40% குறைந்துள்ளது. இது புதினின் போர் இயந்திரத்திற்கான பணம் கிடைப்பதைத் தடுப்பதற்கும், யுக்ரேன் மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதற்கும் டிரம்ப் மேற்கொண்டு வரும் தீவிர முயற்சிகளுக்குக் கிடைத்த ஒரு குறிப்பிடத்தக்க வெற்றி. 2024-ஆம் ஆண்டில் இந்தியா அமெரிக்காவிற்கு 87.4 பில்லியன் டாலர் மதிப்பிலான பொருட்களை ஏற்றுமதி செய்தது, இது நாட்டின் மொத்த ஏற்றுமதியில் சுமார் ஐந்தில் ஒரு பங்கு" என அமெரிக்க ஊடக நிறுவனமான ப்ளூம்பெர்க் கூறியுள்ளது
அமெரிக்காவின் செயல் குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள தி இந்துவின் சர்வதேச ஆசிரியர் ஸ்டான்லி ஜோனி, ''500 சதவீத வரி அமல்படுத்தப்பட்டால், அமெரிக்காவுடன் இந்தியா கொண்டுள்ள முழுமையான உத்தி ரீதியிலான கூட்டணி என்ற அடிப்படை கருத்தையே இந்தியா மறுபரிசீலனை செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்படும்" என தெரிவித்துள்ளார்.
இது போன்ற கூட்டணியை இந்தியா பரிசீலித்து வருவதாக ராய்ட்டர்ஸ் வெளியிட்ட ஒரு செய்தி கூறுகிறது.
அரசு வட்டாரங்களை மேற்கோள் காட்டி, அரசு ஒப்பந்தங்களுக்கு சீன நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள ஐந்து ஆண்டு கட்டுப்பாடுகளை நீக்க இந்திய நிதியமைச்சகம் திட்டமிட்டு வருவதாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
2020-ஆம் ஆண்டு கல்வான் பள்ளத்தாக்கில் இரு நாடுகளின் படைகளுக்கும் இடையே நடந்த மோதலுக்குப் பிறகு இந்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
அமெரிக்காவின் இந்த உத்தி மற்றும் புதிய மசோதா குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள வெளியுறவுக் கொள்கை குறித்த ஆய்வு மையமான அனந்தா மையத்தின் தலைமை நிர்வாக அதிகாரி இந்திராணி பாக்சி, "இந்தியாவின் கொள்கை எப்போதுமே யதார்த்தம் மற்றும் நடைமுறைச் சிந்தனையின் அடிப்படையிலேயே இருந்து வருகிறது. அதன் அடிப்படையில் பார்த்தால், இந்தியா விரைவில் ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதை பூஜ்ஜிய நிலைக்குக் கொண்டு வரும் என்று நம்புகிறேன். இந்தியா ஏற்கனவே 50 சதவீத வரி விதிப்பால் திணறி வரும் நிலையில், 500 சதவீத வரி விதிப்பை எதிர்கொள்வது சாத்தியமற்றது." என தெரிவித்துள்ளார்
மேலும், ரஷ்ய எண்ணெய் இல்லாமலும் இந்தியாவால் சிறப்பாகச் செயல்பட முடியும் என்றும், தனது வாடிக்கையாளரான இந்தியாவை இழந்தாலும் ரஷ்யாவால் சமாளித்துக்கொள்ள முடியும் என்றும் அவர் கூறுகிறார்.
கடந்த ஓராண்டில் இந்திய-அமெரிக்க உறவுகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், எதிர்வரும் காலங்களில் இந்த உறவு தீவிர சிகிச்சைப் பிரிவில் நீடிக்கவே வாய்ப்புள்ளதாகவும் இந்திராணி பாக்சி குறிப்பிட்டுள்ளார்.
'ஆர்டி இந்தியா செய்தியிடம் பேசிய இந்திய முன்னாள் வர்த்தகச் செயலாளர் அஜய் துவா , "500% வரி என்பது ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் இறக்குமதியைத் தடுப்பதற்கான வழிமுறையே தவிர வேறில்லை. இது வர்த்தகத்தை ஆயுதமாகப் பயன்படுத்தும் செயல்," என்றார்.
"ஒருவேளை 500 சதவீத வரி விதிக்கப்பட்டால், இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களை அமெரிக்காவில் யாரும் வாங்க முடியாது. எனவே, கூடிய விரைவில் இந்தியா மாற்றுச் சந்தைகளைக் கண்டறிய வேண்டும்," என்றும் அவர் கூறுகிறார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு