You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஜப்பானில் அமெரிக்காவின் அணுகுண்டு தாக்குதலில் உயிர் பிழைத்தவர்களுக்கு அமைதிக்கான நோபல் பரிசு
ஜப்பானில் நடந்த அணுகுண்டு வெடிப்பில் உயிர் பிழைத்தவர்களின் குழுவான நிஹான் ஹிடான்கியோ அமைப்பிற்கு, 2024 ஆம் ஆண்டிற்கான அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
ஹிரோஷிமா மற்றும் நாகசாகி அணுகுண்டு வெடிப்பில் இருந்து உயிர் பிழைத்தவர்களை கொண்ட இந்த அமைப்பு, அணு ஆயுதங்கள் இல்லாத உலகை உருவாக்க முயற்சிகளை எடுத்து வருகிறது. அதை அங்கீகரிக்கும் விதமாக அந்த அமைப்பிற்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட உள்ளது.
அவர்களுக்கு 11 மில்லியன் ஸ்வீடிஷ் க்ரோனா (£810,000) பரிசுத் தொகையாக வழங்கப்படும்.
"மோதல்களில் அணு ஆயுதங்களை பயன்படுத்துவதில்லை என்ற ஒருமித்த கருத்து உருவானதில் இந்த அமைப்பு பெரும்பங்கு வகித்தது", என்று நோபல் கமிட்டியின் தலைவர் ஜோர்கன் வாட்னே ஃப்ரைட்னெஸ் கூறினார்.
அந்த உறுதிப்பாடு தொடர்வதே தற்போது நெருக்கடியில் இருப்பதாக ஜோர்கன் வாட்னே ஃப்ரைட்னெஸ் கூறினார். அணு ஆயுதங்கள் இனி ஒருபோதும் பயன்படுத்தப்படக் கூடாது என்பதை உறுதிப்படுத்துவதற்காக இந்த குழுவின் முயற்சிகளை அவர் பாராட்டினார்.
இந்த அமைப்பு 1956 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. நிஹான் ஹிடான்கியோ அமைப்பின் இணையதளத்தின் படி, அணுகுண்டு வெடிப்பில் உயிர் பிழைத்தவர்களை உலகெங்கும் அனுப்பி, அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவதால் ஏற்படும் கடுமையான சேதங்கள் மற்றும் அவர்கள் அனுபவித்த துன்பங்கள் பற்றிய கதைகளை இந்த அமைப்பு பகிர்ந்து கொள்கிறது.
ஹிரோஷிமா மற்றும் நாகசாகி பேரழிவிற்குப் பிறகு சுமார் 10 ஆண்டுகள் கழித்து இந்த அமைப்பு அதன் பணிகளை தொடங்கியது.
ஏற்கனவே கடந்த ஆண்டுகளில் பல முறை இந்த அமைப்பு அமைதிக்கான நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது என்று அதன் இணையதளம் கூறுகிறது. மேலும் 2005 ஆம் ஆண்டு நோபல் கமிட்டியின் சிறப்பு பாராட்டையும் பெற்றது.
"சுமார் 80 ஆண்டுகளாக போரில் எந்த ஒரு அணு ஆயுதமும் பயன்படுத்தப்படவில்லை. நிஹான் ஹிடான்கியோ அமைப்பும் அதன் உறுப்பினர்களும் இதற்கு முக்கிய பங்காற்றி உள்ளன", என்று நோர்வே நோபல் கமிட்டி அதன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
1945 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 6 ஆம் தேதி அன்று ஹிரோஷிமா நகரின் மீது அமெரிக்கா அணுகுண்டை வீசியது. இதில் 1,40,000 மக்கள் உயிரிழந்தனர்.
இது நடந்த மூன்று நாட்களுக்கு பிறகு நாகசாகி மீது இரண்டாவது அணு குண்டை அமெரிக்கா வீசியது. இரண்டு வாரங்களுக்குப் பிறகு ஜப்பான் சரணடைந்ததும் இரண்டாம் உலகப் போர் முடிவுக்கு வந்தது.
நோபல் பரிசு அறிவிக்கப்பட்ட பின்னர் ஜப்பானில் செய்தியாளர்களிடம் பேசிய அந்த அமைப்பின் இணைத் தலைவர் தோஷியுகி மிமாக்கி, "இது கிடைக்கும் என்று நான் கனவிலும் நினைக்கவில்லை" என்று கூறியதாக AFP செய்தி முகமை குறிப்பிட்டுள்ளது.
நோபல் பரிசு தேர்வில் எழுந்த சர்ச்சை
நிஹான் ஹிடான்கியோ அமைப்பை அங்கீகரிப்பது என்பது நோபல் கமிட்டி அமைதிக்கான நோபல் பரிசுக்காக பரிந்துரைக்கப்பட்ட சர்ச்சைக்குரியவர்களிடமிருந்து விலகி இருப்பதை குறிக்கிறது.
பாலத்தீனர்களை ஆதரிக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் அமைப்பான UNWRA, இந்த ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசுக்காக பரிசீலிக்கப்படுகிறது என்று பரவலான ஊகங்கள் இருந்தன.
இந்த அமைப்பு காஸாவில் உள்ள பொதுமக்களுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்கும் முக்கிய நிறுவனமாக இருந்தது. ஆனால் கடந்த ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதி இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்குதலில் தொடர்பு இருப்பதாக எழுந்த சர்ச்சையால் அதன் உறுப்பினர்கள் ஒன்பது பேர் நீக்கப்பட்டனர்.
12,000-க்கும் மேற்பட்டோர் UNWRA- க்கு நோபல் பரிசு வழங்கக் கூடாது என்று தேர்வு குழுவை வலியுறுத்தி ஒரு மனுவில் கையெழுத்திட்டனர்.
ஆனால் நிஹான் ஹிடான்கியோ அமைப்பிற்கு நோபல் பரிசை வழங்குவது சர்ச்சைக்கு அப்பாற்பட்ட தேர்வாக இருக்கிறது. மேலும் யுக்ரேன் மற்றும் மத்திய கிழக்கு ஆகிய பகுதிகளில் நீடிக்கும் மோதல்கள் மீதான உலகின் கவனத்தை அணு ஆயுத பயன்பாடு குறித்த அச்சுறுத்தலின் மீது திருப்புவதாக இந்த முடிவு இருக்கிறது.
இந்த ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசுக்காக 197 தனிநபர்கள் மற்றும் 89 அமைப்புக்கள் என, 286 பரிந்துரைகள் இருந்தன.
இரானிய மனித உரிமை ஆர்வலர் நர்கேஸ் முகமதி 2023 ஆம் ஆண்டு இந்த நோபல் பரிசை வென்றார். அவர் இரானில் பெண்கள் மீதான அடக்குமுறைக்கு எதிராக போராடியதற்காக அவர் இந்த பரிசு பெற்றார்.
2014 ஆம் ஆண்டு இந்தியாவின் கைலாஷ் சத்யார்த்தி, பாகிஸ்தானின் மலாலாவுடன் இணைந்து அமைதிக்கான நோபல் பரிசை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)