You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கேரள ஆளுநர் திடீரென சாலையில் இறங்கி போராட்டம் - நடந்தது என்ன?
கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான் திடீரென்று சாலையில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டது அந்த மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனை தொடர்ந்து அவரது பாதுகாப்பை அதிகப்படுத்தியுள்ளது மத்திய அரசு.
கேரள ஆளுநர் ஆரிப் முகமது கானுக்கும், அம்மாநில அரசுக்கும் இடையே மோதல் நீடித்து வருகிறது. கவர்னருக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் அம்மாநில அரசு வழக்கு தொடர்ந்துள்ளது.
இந்நிலையில், ஆரிப் முகமது கான் கொல்லம் அடுத்த கொட்டாரக்கரா என்ற இடத்தில் உள்ள சுவாமி சதாநந்தா ஆசிரமத்துக்கு சென்றார். அப்போது கொல்லம் அருகே நிலமேல் பகுதியில் ஆளுநருக்கு எதிராக SFI மாணவர் சங்கத்தினர் கருப்புக் கொடி காட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒரு கட்டத்தில் அவர்கள், ஆளுநர் வாகனம் அருகில் செல்ல முயன்றபோது போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர்.
திடீரென காரில் இருந்து கீழே இறங்கிய ஆரிப் முகமது கான் போராட்டம் நடத்தியவர்களை நோக்கி சென்று அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின், அங்குள்ள டீக்கடை முன்பு சேர் போட்டு அமர்ந்து ஆளுநர் போராட்டத்தில் ஈடுபட்டார்.
போராட்டம் செய்தவர்கள் மீது வழக்கு பதியப்பட்ட பிறகே அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.
புறப்படும் முன் செய்தியாளர்களை சந்தித்த ஆளுநர் ஆரிப் முகமது கான், ‘‘மாணவர் அமைப்பு என்ற பெயரில் குண்டர்கள் என் காரின் அருகே வந்து தாக்க முயன்றனர். ஆனால், கேரள போலீஸார், போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக செயல்பட்டு அவர்களை காப்பாற்ற முயற்சிக்கின்றனர். சட்டத்தை காக்க வேண்டிய காவல்துறையே அதைச் செய்யவில்லை எனில் சட்டத்தை யார் காப்பது? இதுவே முதல்வருக்கு நடந்திருந்தால் போலீஸார் இப்படியா செயல்பட்டிருப்பார்கள்?
கேரள முதல்வர் பினராயி விஜயன் ஆதரவில் தான் மாணவர் அமைப்பு என்ற பெயரில் இந்தப் போராட்டங்கள் நடக்கின்றன. ஒட்டுமொத்த காவல்துறையும் முதல்வரின் பேச்சைக் கேட்டு அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கின்றனர். இவை குறித்து மத்திய அரசுக்கு அறிக்கை அனுப்புவேன்,’’ எனக்கூறினார்.
ஆளுநர் புறப்பட்ட சில மணி நேர;jpjல், கேரள ஆளுநருக்கு மத்திய உள்துறை அமைச்சகம், மத்திய ரிசர்வ் படையைக் கொண்ட இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கி உத்தரவிட்டுள்ளது.
முழு விவரம் காணொளியில்...
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)