You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பீர் தயாரிக்கும் தொட்டிக்குள் சிறுநீர் கழித்த தொழிலாளி - தயாரான மது விற்பனைக்கு சென்றதா?
- எழுதியவர், பேன் வாங்
- பதவி, பிபிசி நியூஸ்
சீனாவில் சிங்தாவோ பீர் தயாரிப்பு நிறுவனத்தின் தொழிலாளி ஒருவர் தொட்டிக்குள் சிறுநீர் கழிப்பதைக் காட்டும் வைரலான வீடியோ சமூக ஊடகங்களில் வெளியானதை அடுத்து அந்நாட்டு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த வீடியோ சமூக ஊடகங்களில் கோடிக்கணக்கானோரால் பார்க்கப்பட்டுள்ளது.
வீடியோ தனது கவனத்திற்கு வந்தவுடன் உடனடியாக காவல்துறைக்கு தகவல் கொடுத்ததாக நிறுவனம் கூறியது. மேலும், தயாரிக்கப்பட்டுள்ள பொருட்களை வைத்துள்ள பகுதிக்கு சீல் வைக்கப்பட்டுள்ளதாகவும் அந்நிறுவனம் கூறியது.
சிங்தாவோ நிறுவனம் சீனாவின் சிறந்த பீர் உற்பத்தியாளர்களில் ஒன்று மற்றும் மிகப்பெரிய பீர் ஏற்றுமதியாளரும் கூட.
கடந்த வியாழக்கிழமை சமூக ஊடகங்களில் வெளிவந்த வீடியோவில், ஒரு தொழிலாளி, ஹெல்மெட்டுடன் சீருடை அணிந்து, உயரமான சுவரின் மீது ஏறி, கொள்கலனில்(Container) ஏறி அதற்குள் சிறுநீர் கழிக்கிறார்.
அந்த வீடியோ எடுக்கப்பட்ட இடமாக "சிங்டாவோ பீர் எண்.3 தொழிற்சாலை" என்று அந்த வீடியோவில் எழுதப்பட்டுள்ளதாக உள்ளூர் பத்திரிகையான தி பேப்பர் செய்தி வெளியிட்டிருந்தது.
'நேஷனல் பிசினஸ் டெய்லி' என்ற வணிக செய்தித்தாள் ஓர் ஆதாரத்தை மேற்கோள் காட்டியது. அதில், வீடியோவை எடுத்தவர் மற்றும் அதில் தோன்றியவர் இருவரும் நிறுவனத்தின் நேரடி ஊழியர்கள் அல்ல என்று குறிப்பிட்டிருந்தனர்.
வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கையில், தொழிற்சாலை அமைந்துள்ள பிங்டு சிட்டியின் சந்தை மேற்பார்வை மற்றும் நிர்வாகப் பணியகம், வீடியோவைக் கண்டறிந்த உடனே ஒரு குழுவை அமைத்து விசாரணையை மேற்கொண்டு வருவதாகவும், முழு பொருட்களையும் சீல் வைத்துள்ளதாகவம் தெரிவித்தனர்.
விவரங்கள் உறுதிப்படுத்தப்பட்டவுடன் பணியகம் இந்த விஷயத்தை தீவிரமாகக் கையாளும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
சமூக ஊடகங்களில் வெளியான வீடியோவிற்கு அதிக முக்கியத்துவம் அளித்துள்ளதாக சிங்தாவோ நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக போலீசாரும் விசாரணையை தொடங்கியுள்ளனர்.
நிறுவனத்தின் கருத்துகளுக்காக பிபிசி நிறுவனத்தை அணுகியுள்ளது.
இந்த பிராண்ட் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் நன்கு அறியப்பட்டதால், சீன சமூக ஊடகங்களில் தோன்றிய இந்த வீடியோவால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளன.
"ஒரு நல்ல விஷயம், நான் பீர் அருந்துவதில்லை - ஆனால், இதன் காரணமாக இந்த பிராண்ட் பெயர் முடிவுக்கு வந்தால், அது கற்பனை கூட செய்து பார்க்க முடியாதது" என்று ஒரு பயனர் கூறினார்.
"இருந்தாலும் இது முதல் முறையா?" என மற்றொருவர் கருத்து தெரிவித்திருந்தார்.
திங்கட்கிழமை காலை ஷாங்காய் பங்குச் சந்தை திறக்கப்பட்டபோது சிங்தாவோ நிறுவனத்தின் பங்குகள் கடுமையாக வீழ்ச்சியடைந்தன, ஆனால் பிற்பகலில் ஒரளவு வர்த்தகம் நடந்தது.
சிங்தாவோ நிறுவனம் பங்குகள் பட்டியலிடப்பட்டுள்ள ஹாங்காங் சந்தை, சுங் யூங் திருவிழா விடுமுறைக்காக திங்கள்கிழமை மூடப்பட்டது.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)