பேச்சுவார்த்தைக்கு ஆதரவாக ஆர்எஸ்எஸ் மூத்த தலைவர் கருத்து - பாகிஸ்தான் எதிர்வினை என்ன?

ஆர்எஸ்எஸ், இந்தியா, பாகிஸ்தான்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் பொதுச் செயலாலர் தத்தாத்ரேயா ஹோசாபலே
    • எழுதியவர், ஷுமைலா ஜபின்
    • பதவி, பிபிசி செய்தியாளர், கராச்சி
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

இந்தியாவில் முக்கியமான தலைவர்கள் சிலர் தெரிவித்த கருத்துக்கள் இந்தியா - பாகிஸ்தான் உறவுகளின் எதிர்காலம் பற்றிய விவாதங்களை மீண்டும் உயிர்ப்பித்துள்ளது.

இரு நாடுகளுக்கும் இடையே தொடர்பை பராமரிப்பது முக்கியமானது என்பதை இந்தக் கருத்துக்கள் சுட்டிக்காட்டுகின்றன.

பாகிஸ்தான் உடன் பேச்சுவார்த்தைக்கான கதவை முழுவதுமாக மூடிவிடக்கூடாது என, ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் பொதுச் செயலாலர் தத்தாத்ரேயா ஹோசபலே தெரிவித்துள்ளார். அதே வேளையில் பயங்கரவாதத்துக்கு எதிரான நிலைப்பாட்டில் இந்தியா எந்த விதமான மென்மையும் கடைபிடிக்கக்கூடாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஹோசபலேவின் கருத்தைத் தொடர்ந்து தொடர்பை பராமரிக்க வேண்டும் என்பதை இந்திய முன்னாள் ராணுவ தளபதி மனோஜ் நரவனே ஆதரித்து பேசியுள்ளார்.

"எல்லையின் இரு பக்கத்திலும் சாதாரண மக்கள் வாழ்கின்றனர், அவர்களின் அன்றாட பிரச்னைகள் ஒரே மாதிரியானவை," என்றும் அவர் தெரிவித்தார்.

மக்களுக்கு இடையேயான தொடர்பை பராமரிக்க வேண்டும் எனக் கூறிய அவர், அது உறவுகளை மேம்படுத்த உதவும் என்றும் தெரிவித்தார்.

இதற்குப் பதிலளித்த பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம், இந்தக் கருத்துக்கள் "நேர்மறையானவை" என்றும் இறுக்கமான உறவுகளுக்கு மத்தியில் பேச்சுவார்த்தையை ஒரு வாய்ப்பாக ஏற்றுக்கொள்வது வரவேற்கத்தக்கது என்றும் கூறியுள்ளது.

இது தொடர்பாக பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் தஹிர் அன்ட்ராபி கூறுகையில், "இந்தியாவில் தர்க்கமான குரல்கள் வலுப்பெறும் என நாங்கள் நம்புகிறோம். போரைத் தூண்டும் பேச்சுக்கள் மற்றும் அச்சுறுத்தல்கள் முடிவுக்கு வந்து இத்தகைய தர்க்கரீதியான குரல்களுக்கான வழிகள் பிறக்கும். ஆனால், இந்தக் கருத்துக்களுக்கு இந்தியாவிடமிருந்து அதிகாரப்பூர்வமாக பதில் எதுவும் வருகிறதா என பார்க்க வேண்டும்." என்றார்.

அதிகாரப்பூர்வமற்ற தொடர்புகள் பற்றிய யூகங்களின் மீது பாகிஸ்தான் கருத்து தெரிவிக்காது என்றும் அவர் கூறினார்.

"அதிகாரப்பூர்வமற்ற பேச்சுக்கள் தொடர்பாக என்னிடம் எந்த தகவலும் இல்லை, அதைப்பற்றி கருத்து கூறவும் நான் விரும்பவில்லை. அதைப்பற்றி நான் கருத்து கூற வேண்டுமென்றால், அப்படி எந்த தொடர்பும் இல்லை. அது தெளிவாக உள்ளது," என்று அவர் தெரிவித்தார்.

பாகிஸ்தானில் ஆர்எஸ்எஸ் அமைப்பு பற்றிய பார்வை, இந்திய ஆளும் வர்க்கத்துடன் தொடர்புடைய ஒரு தீவிர இந்து தேசியவாத அமைப்பு என்பதாகவே உள்ளது.

பாகிஸ்தானிலிருந்து வரும் எதிர்வினை

ஆர்எஸ்எஸ், இந்தியா, பாகிஸ்தான்
படக்குறிப்பு, இந்தியாவுக்கான பாகிஸ்தான் முன்னாள் தூதர் அப்துல் பசித்
வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

இந்தக் கருத்தில் அதிகம் அர்த்தம் கொள்ள வேண்டாம் என, இந்தியாவுக்கான பாகிஸ்தான் முன்னாள் தூதர் அப்துல் பசித் பிபிசியிடம் தெரிவித்தார்.

பாகிஸ்தான் இதைப்பற்றி அதிகம் உற்சாகமடையக்கூடாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

"இந்தியாவுடனான உறவுகளை இயல்பாக்குவதைப் பொருத்தவரை ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா உறுதியாக உள்ளது என்பதை நினைவில் கொள்ள வேண்டியது முக்கியமானது. இந்த மோதலை மொத்தமாக முடிவுக்குக் கொண்டு வருவதற்கு இந்தியாவிடம் எந்த உறுதிப்பாட்டையும் நான் பார்க்கவில்லை," என அவர் தெரிவித்தார்.

"காஷ்மீர் இணைப்பு பற்றிய தனது நிலைப்பாட்டை இந்தியா மேலும் வலுப்படுத்த உதவும் மற்றுமொரு இருதரப்பு பேச்சுவார்த்தையை பாகிஸ்தான் தவிர்க்க வேண்டும்." என பாசித் கூறினார்.

அவரின் கூற்றுப்படி, இரு நாடுகளும் ரகசிய ராஜாங்க வழியில் பேச்சுவார்த்தை நடத்தலாம். ஆனால் "காஷ்மீர் மற்றும் பயங்கரவாதம்" அதில் மையமாக இருக்க வேண்டும்.

இது தொடர்பாக மேலும் கூறிய அவர், "ஆர்எஸ்எஸ் கருத்து சர்வதேச அரங்கில் அதன் பிம்பத்தை மேம்படுத்துவதற்கானதாக தெரிகிறது. அதே வேளையில், பாகிஸ்தான் மற்றும் அமெரிக்கா இடையே இணக்கம் அதிகரித்து வருவதால் இந்தியா அசௌகரியமாக உணரும் சூழலில் பாகிஸ்தானின் எதிர்வினையை மதிப்பிடுவதற்கானதாகவும் இருக்கலாம்." என்றார்.

பாகிஸ்தான் - அமெரிக்கா உறவுகள் மற்றும் அமெரிக்கா - சீனா உறவுகள் மேம்பட்டு வருவதற்கான அறிகுறிகள் பற்றி பேசிய அவர், "ஒரு விதத்தில் அமெரிக்கா - சீனா உச்சி மாநாடு இந்தியாவைவிடவும் பாகிஸ்தானுக்கு தான் பலனுள்ளதாக இருக்கிறது. குவாட் அமைப்பும் இதனால் ஆபத்தைச் சந்திக்கலாம்." எனத் தெரிவித்தார்.

அமெரிக்கா, இந்தியா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா அடங்கிய குவாட் அமைப்பு சீனாவின் அதிகரித்து வரும் பிராந்திய செல்வாக்கை எதிர்கொள்வதற்கான முயற்சிகளின் ஒரு அங்கமாகப் பார்க்கப்படுகிறது.

இந்தியாவின் முக்கியமான நபர்கள் தெரிவித்த இந்தக் கருத்துக்களுக்கு அரசியல்வாதிகள், நிபுணர்கள் இடையே மிகவும் கவனமான, நேர்மறையான எதிர்வினைகளே வந்துள்ளன.

பாகிஸ்தானில் ஆர்எஸ்எஸ் பிம்பத்தைப் பொருத்தவரை இந்தச் சம்பவம் எதிர்பாராதது எனப் பலரும் தெரிவிக்கின்றனர். பல அரசியல்வாதிகளும் பத்திரிகையாளர்களும் தங்களின் எதிர்வினைகளை சமூக ஊடகங்களில் பதிவு செய்துள்ளனர்.

முன்னாள் நிதி அமைச்சர் ஆசாத் உமர், இந்தக் கருத்துக்களை குறிப்பிடத்தகுந்த முன்னேற்றம் எனக் குறிப்பிட்டார். "பாகிஸ்தான் உடன் மீண்டும் தொடர்பு மேற்கொள்வது பற்றி இந்தியாவில் முக்கியமான நபர்கள் பேசுவதைப் பார்ப்பதற்கு நன்றாக உள்ளது." என்று அவர் தெரிவித்தார்.

ஹோசபலே மற்றும் நரவனே தெரிவித்த கருத்துக்களை மேற்கோள்காட்டி பேசிய அவர், "தெற்கு ஆசியாவில் வாழும் 2 பில்லியன் மக்களின் நலனுக்காக இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையேயான வேற்றுமைகள் தீர்க்கப்படுவது முக்கியமானது." எனத் தெரிவித்தார்.

பாகிஸ்தான் முன்னாள் தகவல் துறை அமைச்சர் ஃபவாத் சௌத்ரி இந்த கருத்தை "நிலைப்பாட்டில் ஏற்பட்ட மாற்றம்" என விவரித்தார்.

"பேச்சுவார்த்தை தொடங்குவது கூட இருநாடுகளின் பொருளாதார வாய்ப்புகளை மாற்றி அமைக்கும்," என்றும் அவர் குறிப்பிட்டார்.

உறவுகள் மேம்பட்டால் இந்து மற்றும் முஸ்லிம் கடும்போக்குவாதிகள் பலவீனமடைவார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

பாகிஸ்தான் அரசியல்வாதி முஷாஹித் ஹுசைன் இதனை "மிகவும் நேர்மறையான கருத்து" எனத் தெரிவித்தார். மக்களிடையே தொடர்பு ஏற்படுவதற்கான அழைப்பை புகழ்ந்து பேசிய அவர், இது 'காலத்தின் அவசியம்' என்றும் குறிப்பிட்டார். '

அரசியல் ஆய்வாளரும் எழுத்தாளருமான ராஸா ரூமி, "இந்தக் கருத்துக்கள், அதிலும் குறிப்பாக "மக்கள் இடையே தொடர்பு, பேச்சுவார்த்தை, விசா மற்றும் அமைதியைக் கட்டமைப்பதில் சிவில் சமூகத்தின் பங்கு." ஆகியவை பற்றிய குறிப்பு "மிகவும் ஊக்கமளிக்கக்கூடியவை," எனத் தெரிவித்தார்.

"இனி, இந்திய அரசு தனது அதிகாரத்தை தக்கவைத்துக் கொள்ளும் சித்தாந்த சக்தியின் ஆலோசனைக்கு செவிமடுக்குமா என்பதைப் பார்க்க வேண்டும்," என்றும் அவர் தெரிவித்தார்.

மூத்த பத்திரிகையாளர் கம்ரான் யூசுஃப், இந்தக் கருத்துக்கள், "இந்தியாவின் தற்போதைய நிலைப்பாடு ஏற்கத்தக்கது அல்ல என்கிற புரிதலை ஏற்படுத்தி வருவதைக் காட்டுகிறது" எனத் தெரிவித்தார்.

ஆர்எஸ்எஸ்-இன் செல்வாக்கு மிக்க பங்கு இருந்தபோதிலும் இந்தியாவில் அதற்கான வரவேற்பு ஒப்பீட்டளவில் குறைவாகவே உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

எனினும், இந்தக் கருத்துக்களிலிருந்து அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டாம் என சில பார்வையாளர்கள் கவனமுடன் இருக்கின்றனர்.

பத்திரிகையாளர் ஷாஸாத் இக்பால், "இந்தியாவின் வெளியுறவு கொள்கையில் எந்த உடனடி மாற்றத்துக்கான அறிகுறியும் இல்லை. எதிர்காலத்தில் இரு நாடுகளுக்கும் இடையேயான உறவுகளில் எந்த மாற்றமும் இருக்கப்போவதில்லை" என்றும் தெரிவித்தார்.

முன்னாள் கல்வி அமைச்சரான ஷஃப்லத் மெஹ்மூத் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்துகிறார். "இந்தியாவிலிருந்து வரும் இத்தகைய குரல்களை வரவேற்பதில் பாகிஸ்தான் வெளியுறவு அலுவலகம் இயல்பாகவே கவனமுடன் இருந்துள்ளது. ஏனெனில், கடந்த காலங்களில் இத்தகைய பல முன்னெடுப்புகள் எந்த முடிவுகளையும் கொடுத்ததில்லை." எனத் தெரிவித்தார்.

எனினும், இந்தியாவில் தீவிரமான நோக்கம் காணப்பட்டால் அது பாகிஸ்தானிலும் நேர்மறையான வரவேற்பைப் பெற வாய்ப்புள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

இறுக்கமான இருதரப்பு உறவுகள்

ஆர்எஸ்எஸ், இந்தியா, பாகிஸ்தான்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப், இந்திய பிரதமர் நரேந்திர மோதி

தத்தாத்ரேயா ஹோசபலேவின் கருத்து பாகிஸ்தான் உடனான தொடர்புக்கான சாத்தியத்தின் அறிகுறி என சிலர் பார்த்தாலும் பாகிஸ்தான் ஆய்வாளர்கள் மற்றும் முன்னாள் ராஜதந்திரிகள் பலருக்கும் ஆச்சர்யம் அளிப்பதாக உள்ளது.

இந்த எதிர்வினை பாகிஸ்தானில் ஆர்எஸ்எஸ் பற்றி நீண்டகாலமாக இருக்கும் பிம்பத்தை பிரதிபலிக்கிறது. பாகிஸ்தானில் அந்த அமைப்பு, கடும்போக்கு கொண்ட இந்து தேசியவாதத்தை ஊக்குவிக்கும் சித்தாந்த சக்தியாகவும் இந்தியா - பாகிஸ்தான் உறவுகள் குறிப்பாக ஜம்மு காஷ்மீர் போன்ற முக்கியமான விவகாரங்களில் கடுமையான நிலைப்பாடு கொண்டதாகவும் பார்க்கப்படுகிறது.

இந்தக் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்ட காலமும் அதற்கு முக்கியத்தை அதிகரிக்கின்றன. இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையேயான இருதரப்பு உறவுகள் சமீப ஆண்டுகளில் மிகவும் பின்னடைவைச் சந்தித்த நிலையில் இருப்பதாகக் கருதப்படுகிறது.

முறையான பேச்சுவார்த்தைகள் தடைபட்டுள்ளன, ராஜாங்க தொடர்புகளும் கடுமையாக குறைந்துள்ளன, இரு தரப்பில் பொதுப் பேச்சுக்கள் அதிகரித்த மோதல் போக்கு கொண்டதாக உள்ளது.

சமீபத்தில் இருநாடுகளும் 'ஆபரேஷன் சிந்தூரின்' முதலாம் ஆண்டு பற்றி தத்தமது வெற்றி தொடர்பாக வெவ்வேறு விதமான கதைகளை முன்வைத்தன. இரு தரப்புக்கும் இடையே உள்ள ஆழமான நம்பிக்கையின்மையே இது காட்டுகிறது.

இந்தியா - பாகிஸ்தான் இடையேயான உறவு முழுவதும் இயல்பு நிலைக்குத் திரும்பவில்லை என்பதையும் 2019 முதல் சீராக சரிந்து வருவதையும் குறிப்பிட வேண்டியுள்ளது.

பிப்ரவரி 2019-இல் பாகிஸ்தானில் இந்தியா வான்வழித் தாக்குதல் நடத்தியது, அதே ஆண்டில் பிரிவு 370 நீக்கம் மற்றும் ஜம்மு காஷ்மீரை யூனியன் பிரதேசமாக மாற்றியமைத்தைத் தொடர்ந்து இருநாடுகளுக்கு இடையேயான உறவுகள் இறுக்கமடைந்துள்ளன.

ஏப்ரல் 2025-இல் நடைபெற்ற பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து அது மேலும் மோசமடைந்தது. அந்த தாக்குதல், மே 2025-இல் இரு நாடுகளுக்கும் இடையே நான்கு-நாள் ராணுவ மோதலுக்கு வித்திட்டது.

அப்போது இருந்து முறையான ராஜாங்கம் என்பது கடுமையாக குறைந்துவிட்டது. எல்லைகள் மூடப்பட்டன, கிரிக்கெட் உறவுகள் ரத்து செய்யப்பட்டன, வர்த்தகம் தடைபட்டது, சிந்து நதி நீர் ஒப்பந்தம் அழுத்தத்தில் உள்ளது.

தீர்வுகள் என்ன?

ஆர்எஸ்எஸ், இந்தியா, பாகிஸ்தான்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இந்திய முன்னாள் ராணுவ தளபதி மனோஜ் நரவனே

ஹோசபலேவின் கருத்தை, பேச்சுவார்த்தைக்கான தேவையை ஒரு மூத்த ஆர்எஸ்எஸ் தலைவர் ஆமோதிக்கும் அரிய அறிகுறியாக சிலர் பார்த்தாலும் வேறு சிலர் அதை ஆக்கப்பூர்வமான கொள்கை மாற்றமாக பார்க்க வேண்டாம் என எச்சரிக்கின்றனர்.

பாகிஸ்தானிலிருந்து வரும் எதிர்வினை என்பது, ஆர்எஸ்எஸ் எவ்வாறு பார்க்கப்படுகிறது என்பதைப் பொருத்த நீண்ட வரலாற்று மற்றும் அரசியல் பின்னணியால் செல்வாக்கு செலுத்தப்படுகிறது.

இந்தப் பார்வை, பாகிஸ்தானுடன் தொடர்புகொள்ள வேண்டும் என்பது தொடர்பான சமீபத்திய கருத்துக்கள் உள்பட பொதுப் பேச்சுக்கள் எவ்வாறு புரிந்துகொள்ளப்படுகின்றன என்பதை தீர்மானிக்கிறது. இதற்கான எதிர்வினை என்பது உடனடி கொள்கை மாற்றம் பற்றிய எச்சரிக்கை உடன் கூடிய ஆர்வம் முதல் சந்தேக மனநிலை வரை உள்ளது.

முன்னாள் வெளியுறவு செயலாளரான ஜலில் அப்பாஸ் ஜிலானி இந்தியா உடனான பதற்றங்களுக்கு மத்தியில் பாகிஸ்தான் நிலைப்பாட்டை வழங்கிய ராஜாங்க குழுவில் ராஜதந்திரியாகவும் உள்ளார்.

இந்தக் கருத்துக்கள் பாகிஸ்தானில் நேர்மறையாகப் பார்க்கப்படுவதாக அவர் தெரிவிக்கிறார்.

"பாகிஸ்தான் உடனான பேச்சுவார்த்தை தொடர்பாக ஆர்எஸ்எஸ் பொதுச் செயலாளர் தெரிவித்த கருத்துக்களை நாம் பார்த்தோம். அவரின் கருத்தும் முன்னாள் ராணுவ தளபதியின் கருத்தும் பாகிஸ்தானில் நேர்மறையாக புரிந்துகொள்ளப்படுகிறது," எனத் தெரிவித்தார்.

"அணு ஆயுதம் கொண்ட இரு அண்டை நாடுகளுக்கு போர் என்பது ஒரு வாய்ப்பு கிடையாது என்பதையும் பிராந்தியத்துக்கு அது அழிவுகரமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதையும் பாகிஸ்தான் தொடர்ந்து தெரிவித்து வருகிறது. பாகிஸ்தானும் இந்தியாவும் பேச்சுவார்த்தை மூலம் தங்களின் பிரச்னைகளைத் தீர்க்க வேண்டும். ஹோசபலேவின் கருத்துக்களைத் தொடர்ந்து ஜம்மு காஷ்மீர் விவகாரம் உள்பட அனைத்து பிரச்னைகளுக்கும் அமைதியான தீர்வை நோக்கி இந்திய அரசு நகரும் என நம்புகிறோம்," என்றும் அவர் தெரிவித்தார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு