You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
58 வயதில் குழந்தை பெற்ற பஞ்சாபி பாடகரின் தாய் - எப்படி சாத்தியமானது?
மறைந்த பஞ்சாபி பாடகர் சித்து மூசேவாலாவின் தாய், ஐ.வி.எஃப் எனப்படும் செயற்கை கருத்தரிப்பு முறை மூலம் சமீபத்தில் ஆண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார். இதையொட்டி, முதிர்ந்த வயதில் குழந்தை பெற்றுக்கொள்வது குறித்தும் ஐ.வி.எஃப் குறித்தும் பல்வேறு கேள்விகள் எழுப்பப்படுகின்றன.
ஐ.வி.எஃப் முறை மூலம் முதிர்ந்த வயதில் குழந்தை பெற்றுக்கொள்வது எந்தளவுக்கு பாதுகாப்பானது? கருப்பை சுருக்கத்திற்கு என்ன சிகிச்சை அளிக்கப்படுகிறது? மாதவிடாய் முற்றிலும் நின்றுவிட்டு, மெனோபாஸ் கட்டத்தை அடைந்தாலும் ஒரு பெண் கர்ப்பமடைய முடியுமா? இத்தகைய கேள்விகளுக்கு இந்த காணொளியில் பதில் அளிக்கப்பட்டுள்ளது.
மார்ச் 17 அன்று சித்து மூசேவாலாவின் தாய் குழந்தையை பெற்றெடுத்தார். இதன்மூலம், மறைந்த பாடகர் சித்துவின் பெற்றோர் மீண்டும் தாய், தந்தையாகியுள்ளனர்.
அக்குழந்தை ஐ.வி.எஃப் சிகிச்சை மூலம் இந்த உலகத்திற்கு வந்துள்ளது. சித்து மூசேவாலாவின் தாய்க்கு சிகிச்சையளித்த மருத்துவமனையின் மருத்துவர் ரஜ்னி ஜிண்டால், தங்கள் உடல் ஆரோக்கியத்தை பரிசோதித்த பிறகே இத்தகைய சிகிச்சைகளை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.
சித்து மூசேவாலாவின் தாய், உடல் ஆரோக்கியத்துடன் இருப்பதால் இந்த முடிவை எடுத்தார். ஆனால், இது தவறான செய்திகளை வழங்கிவிட கூடாது என்பதை நாங்கள் உறுதிசெய்ய விரும்புகிறோம். முதிர்ந்த வயதில் கர்ப்பமாகும்போது தாயின் ஆரோக்கியம் மிகவும் முக்கியம், அதனை பரிசோதிக்க வேண்டும். தாய் ஆரோக்கியமாக இல்லையென்றால் இத்தகைய சிகிச்சைகள் மேற்கொள்ளப்படாது. ரத்த அழுத்தம் நீரிழிவு இல்லாதவர்கள், இதய பிரச்னை உள்ளிட்ட எந்த உடல்நல பிரச்னைகளும் இல்லாதவர்கள் இந்த சிகிச்சையை மேற்கொள்ளலாம்.
வயதான காலத்தில் கர்ப்பப்பை சுருங்குவதற்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்தும் கேள்விகள் எழுந்துள்ளன.
கர்ப்பப்பை சுருக்கத்திற்கு என்ன மாதிரியான சிகிச்சைகள் வழங்கப்படும்?
வயதாகும்போது உடலில் ஹார்மோன்கள் குறையும் என்பதால், கர்ப்பப்பை சுருங்கும் என்று மகப்பேறு மருத்துவர் ஷிவானி கூறுகிறார். எனவே, செயற்கை முறையில் ஹார்மோன்கள் உடலுக்குள் செலுத்தப்படும். இதனால்தான் சில சமயங்களில் அதிக டோஸ் வழங்கப்படுகிறது. இதன்மூலம், கர்ப்பப்பை மீண்டும் செயல்பட ஆரம்பிக்கும்.
மாதவிடாய் முற்றிலும் நின்றுவிட்டு மெனோபாஸ் கட்டத்தை அடைந்த பின்பும் ஒரு பெண் கர்ப்பமாக முடியுமா?
மெனோபாஸ் கட்டத்தை அடைந்தவுடன் ஐ.வி.எஃப் மூலம் கர்ப்பமாவது மிகவும் கடினம் என்கிறார் மருத்துவர் ஷிவானி. ஏனெனில், மெனோபாஸ் கட்டத்தில் கருமுட்டைகள் உற்பத்தியாகாது. எனவே, மெனோபாஸ் கட்டத்தை அடைந்த பெண்ணுக்கு ஐ.வி.எஃப் சிகிச்சை மேற்கொள்ள வேறொருவரிடமிருந்து கருமுட்டையை தானம் பெற்று, அவரின் கருப்பையை கருப்பைக்குள் செலுத்த வேண்டும். இதன்மூலம் அவர் கர்ப்பமடைய முடியும்.
முதிர்ந்த வயதில் ஐ.வி.எஃப் சிகிச்சை மேற்கொள்வது எவ்வளவு ஆபத்தானது?
ஐ.வி.எஃப் சிகிச்சையை வயதான காலத்தில் மேற்கொள்வது ஆபத்தானது என்கிறார் மருத்துவர் ஷிவானி. ஏனெனில், ஏற்கனவே வயதான காலத்தில் உடல் அதிக மாற்றங்களுக்கு உள்ளாகியிருக்கும். அத்துடன் கர்ப்ப காலத்தில் இன்னும் மாற்றங்கள் ஏற்படும். மேலும், IVF சிகிச்சையின்போது பலவித ஹார்மோன்கள் செலுத்தப்படும். இத்தகைய காரணங்களால், உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய், கொலஸ்டிரால் அதிகரிப்பு போன்றவை ஏற்படும் ஆபத்து அதிகம்.
ஐ.வி.எஃப் முறை என்பது என்ன?
இயற்கையாகவே கர்ப்பமடைய முடியாத போதோ அல்லது மற்ற சிகிச்சைகள் பலனளிக்காத போதோ ஐ.வி.எஃப் சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது.
ஐ.வி.எஃப் முறை 1978-ம் ஆண்டில் ஆரம்பமானதாக மருத்துவர் நயனா படேல் தெரிவித்தார்.
குஜராத்தில் உள்ள அகான்ஷா மருத்துவமனை மற்றும் ஆய்வு மையத்தின் மருத்துவ இயக்குநரான நயனா படேல், தொற்று அல்லது வேறு காரணங்களுக்காக கருமுட்டை குழாயில் பிரச்னை இருப்பவர்களுக்கு IVF மேற்கொள்ளப்படுவதாக தெரிவித்தார்.
இந்த சிகிச்சையில், கருமுட்டை மற்றும் விந்தணு ஆய்வகத்தில் வைக்கப்பட்டு கருவூட்டப்படும்.
கரு உருவானவுடன் அக்கருமுட்டை பெண்ணின் கருப்பைக்குள் செலுத்தப்படும் என அவர் கூறினார்.
அரசு நிர்வாகம் என்ன சொல்கிறது?
இதனிடையே, இந்திய சட்டத்தின்படி, 50 வயது வரைதான் இத்தகைய ஐ.வி.எஃப் முறை மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள முடியும்.
இந்தியாவில் இனப்பெருக்க உதவி தொழில்நுட்பம் - 2021 சட்டத்தின்படி, தொழில்நுட்ப உதவியுடன் குழந்தை பெற்றெடுப்பதற்கு பெண்களுக்கு அதிகபட்சமாக 50 வயது ஆண்களுக்கு 55 வயது என வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஆனால், சித்து மூசேவாலாவின் தாய்க்கு 60 வயதான நிலையில், அவர் குழந்தை பெற்றிருப்பது குறித்து சர்ச்சை எழுந்துள்ளது. இதனால், குழந்தையின் சட்டப்பூர்வ ஆவணங்கள் குறித்து பஞ்சாப் அரசு பெற்றோரிடம் கேட்டதாக தகவல் வெளியானது.
ஆனால், பதிண்டா மாவட்ட தலைமை மருத்துவர் தேஜ்வந்த் சிங் தில்லான், சட்டப்பூர்வ ஆதாரங்களை பெற்றோரிடம் கேட்டதாக எழும் குற்றச்சாட்டை நிராகரித்துள்ளதாக, பிபிசி பத்திரிகையாளர் ககன்தீப் சிங் ஜஸ்ஸோவால் தெரிவித்தார். குழந்தைகளின் சட்டப்பூர்வ ஆதாரத்தை பெற்றோரிடம் கேட்க சட்டத்தில் இடமில்லை என்று தேஜ்வந்த் சிங் தில்லான் கூறினர்.
இது குறித்து மான்சா துணை ஆணையர் பரம்வீர் சிங் கூறுகையில், "குழந்தை பிறப்பு தொடர்பான சட்ட அம்சங்களை விசாரிக்குமாறு மாவட்ட நிர்வாகம் கேட்கவில்லை” என தெரிவித்தார்.
இதுவரை கிடைத்த தகவலின்படி, இதுதொடர்பாக பதில் அளிக்குமாறு மத்திய சுகாதார அமைச்சகம் பஞ்சாப் சுகாதார அமைச்சகத்துக்கு கடிதம் எழுதியுள்ளது.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)