You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
மணிப்பூர் வன்முறையில் கணவரை இழந்த பெண்கள் ஓராண்டுக்குப் பிறகு எப்படி உள்ளனர்?
மணிப்பூரில் குகி இனக்குழுவினருக்கும், மெய்தேயி மக்களுக்கும் இடையே நடைபெற்ற வன்முறை கலவரத்தில் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். ஆயிரக் கணக்கானோர் கலவர பகுதியில் இருந்து வெளியேறி அண்டை மாநிலங்களில் தஞ்சம் அடைந்தனர்.
கலவரம் ஆரம்பித்து ஓராண்டு நிறைவுற்ற நிலையில், அங்குள்ள பெண்களின் நிலை என்ன? அவர்களின் எதிர்காலம் என்ன?
மணிப்பூரில் மொத்தம் 33 லட்சம் பேர் வாழ்கின்றனர். அதில் 50 சதவீதத்திற்கும் அதிகமானோர் மெய்தேயி மக்கள் பெரும்பாலும் இந்துக்கள். 43 சதவீதம் பேர் குகி மற்றும் நாகா இனத்தை சேர்ந்தவர்கள் இவர்கள் பெரும்பாலும் கிருத்துவ மதத்தை பின்பற்றுகின்றனர்.
இங்கே நடந்த வன்முறை குகி மற்றும் மெய்தேயி சமூகம் என இருதரப்பு பெண்களையும் வெகுவாக பாதித்துள்ளது. பலர் தங்களது குழந்தைகளுக்காக குறைந்த ஊதியத்திற்கு கடுமையாக உழைத்தார்கள். தற்போது அந்த வேலைக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. முகாம்களில் அவர்கள் தங்களது சுய மரியாதை, தனிப்பட்ட வாழ்க்கை, வாழ்க்கையை நடத்தி செல்லும் திறன் என அனைத்தையும் இழந்து வாழ்கின்றனர்.
இருசமூகத்திலும் நடைபெற்ற கொலைகள் வன்முறையை மேலும் தூண்டியது. மெய்தேயி சமூக மக்களிடமிருந்து தங்களது கிராமத்தை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டபோது தனது கணவர் கொல்லப்பட்டதாக சாரா கூறுகிறார்.
"எனது நான்கு குழந்தைகளுக்கும் நான் அம்மாவாகவும் அப்பாவாகவும் இருக்கிறேன். எனக்கு அளவுக்கு அதிகமான பொறுப்புகள் உள்ளன. எனது கடைசி குழந்தைக்கு ஆறு வயதுதான் ஆகிறது அவனது தந்தையின் இறப்பை அவனால் புரிந்து கொள்ள முடியவில்லை. தந்தை திரும்பி வருவார் என அவன் நம்பிக் கொண்டிருக்கிறான். அவனுக்கு என்னால் சூழலை விளக்க முடியவில்லை" என்று அவர் தெரிவித்தார்.
மணிப்பூர் வன்முறையால் குக்கி, மெய்தேய் ஆகிய இரு தரப்பிலுமே வலிகள் நிறைந்துள்ளன. யம்லெம்பம் மணிடோம்பி என்ற மெய்தேயி சமூகத்தை சேர்ந்த பெண், தனது 29 வயது மகனை இழந்து நிற்கிறார். அவரது மூத்த மகனான ஷிவா ஆசிரியராக பணியாற்றி குடும்பத்தை பார்த்து வந்தார். அவரின் மற்றொரு மகனுக்கு மனநிலை குறைபாடுகள் உள்ளன.
"அவன் இல்லாமல் வீட்டில் எதுவும் மிச்சமில்லை. அழாமல் அவனைப் பற்றி என்னால் பேச முடியவில்லை. எனது மகன் சென்றுவிட்டான். வாழ்நாள் உள்ளவரை என்னால் அவனை மறக்க முடியாது. நான் பழிவாங்குவது குறித்து நினைக்கவில்லை மாறாக எனது மாநிலத்தில் இம்மாதிரியாக துயரத்தை அனுபவித்தவர்களின் வலியை நினைத்து பார்க்கிறேன். எனக்கு போர் வேண்டாம் அமைதி மட்டுமே வேண்டும்" அந்த தாய் வேண்டுகிறார்.
மெய்தேயி பெண்கள் குழுவான மெய்ரா பாய்பி, வன்முறை தொடங்கிய பிறகு கிராமத்தை காவல் காத்தனர். தங்கள் வீடுகளிலிருந்து வெளியேறியவர்கள் தற்காலிக முகாம்களில் தங்குகின்றனர். அவர்கள் தலைவர்களுடன் அலைப்பேசியில் பேசுகின்றனர். அவர்களில் ஒருவர் அஹெய்பம் சாந்தோய்.
"இந்த பெண்கள் குடும்பத் தலைவிகள், விவசாயிகள், சிலர் கூலி வேலைக்கு சென்றவர்கள். எங்களின் வாழ்க்கை முழுவதிலுமாக மாறிவிட்டது. எங்களுக்கு சந்தேகம் ஏற்படும்போது அல்லது ஏதேனும் நடக்கிறது என தோன்றினால் வாகனங்களை சோதனை செய்யவும் காவல் காக்கவும் நாங்கள் இங்கே அமர்ந்துள்ளோம். நாங்கள் இந்தியர்களாக பார்க்கப்படுகிறோமா? இது அரசிடமும் நாட்டு மக்களிடமும் நான் கேட்கும் கேள்வி. மணிப்பூர் மக்களை அவர்கள் சக குடிமக்களாக பார்க்கிறார்களா?" என்று பிபிசியிடம் பேசிய அஹெய்பம் சாந்தோய் தெரிவித்தார்.
முழு விவரம் காணொளியில்...
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)