You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
தங்கத்துடன் தாய்ப்பாலை சேர்த்து தயாரிக்கும் தாய்ப்பால் நகைகளை விரும்பும் இளம் தாய்மார்கள்
இன்றைய நவீன உலகில் தாய்மை உணர்வை பரிபூரணமாகக் கொண்டாடும் நோக்கில் தங்களுடைய தாய்ப்பால் கொண்டு செய்யப்படும் நகைகளை வாங்கி அணிந்து கொள்கின்றனர் இன்றைய இளம் தாய்மார்கள். இதற்காகவே பிரத்யேகமாக சமூக ஊடகங்களின் மூலம் தாய்மார்கள் விரும்பும் வடிவங்களில் நகைகளை வடிவமைத்துத் தருகிறார் நகை தயாரிக்கும் தொழில் முனைவோரான மஞ்சு. இவர் தற்போது சென்னையில் வசித்து வருகிறார்.
இளம் தாய்மார்கள் மஞ்சுவுக்கு 10 மில்லி தாய்ப்பாலை அனுப்பி வைக்கின்றனர். அதை இளஞ்சூட்டில் சூடுபடுத்தி, பின்னர் அதில் பூஞ்சைகள் தாக்காமல் இருக்க பிரிசர்வேட்டிவ் துகள்கள் கலந்து, 2 நாட்கள் நிழலில் உலர வைக்கப்படுகிறது. பிறகு அதைப் பொடியாக்கி, இந்த நகைகளுக்கு எனப் பிரத்யேகமாக இருக்கும் சொல்யூஷனோடு சேர்த்து தங்கம் மற்றும் வெள்ளி நகைகளில் நிரப்பப்படுகிறது. இப்படியாக ஒரு நகையைச் செய்ய அதிகபட்சமாக 1 மாத காலம் எடுத்துக் கொள்கிறார் மஞ்சு.
மஞ்சுவுடன் இணைந்து இந்த நகைகளை வடிவமைப்பதில் பெரும் பங்கு வகிக்கும் அவரின் சகோதரர் சபரி, "தாய்ப்பால் மட்டுமின்றி குழந்தைகளின் தலைமுடி, தொப்புள் கொடி போன்றவற்றைக் கொண்டு வடிவமைக்கப்படும் நகைகளுக்கும் இளம் தாய்மார்கள் மத்தியில் வரவேற்பு உள்ளதாக" தெரிவிக்கிறார்.
தங்களுடைய தாய்ப்பால் கொண்டு நகை செய்ய வேண்டும் என நாள் ஒன்றிற்கு 200க்கும் மேற்பட்டவர்கள் தொலைபேசி மூலம் அழைப்பதாகத் தெரிவிக்கும் மஞ்சு வருங்காலத்தில் தாய்ப்பால் நகை வடிவமைப்பிற்குக் கூடுதல் வரவேற்பு இருக்கும் என்றும் தெரிவித்தார்.
தயாரிப்பு: பிபிசி தமிழுக்காக செய்தியாளர் ஹேமா ராகேஷ்
ஒளிப்பதிவு & எடிட்டிங்: ஆர். நிஷாந்த் சாமுவேல்
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)