40 ஆண்டுகள் கழித்து ஃபிஃபா உலகக் கோப்பையில் இடம்பிடித்த இராக் கடந்து வந்த பாதை

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், ஜான் டுவெர்டென்
- பதவி, பிபிசி ஸ்போர்ட்
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்
மெக்சிகோவில் பொலிவியாவை தோற்கடித்து 2026 ஃபிஃபா கால்பந்து உலகக் கோப்பைக்கு இராக் தகுதி பெற்றது, அந்த நாட்டிற்கு ஒரு சிறப்பான தருணம். இது மிகவும் அர்த்தமுள்ளதாக இருந்தது. ஏனெனில், 1986இல் இராக் தனது முதல் உலகக் கோப்பையை விளையாடிய இடமும் மெக்சிகோதான்.
நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு, இராக்கின் முன்னாள் வீரர் கரீம் அல்லாவி தேசிய அணியில் ஓர் அங்கமாக இருந்தார். 'மெசபடோமியாவின் சிங்கங்கள்' என்று அழைக்கப்பட்ட அந்த அணி, பராகுவே, பெல்ஜியம் மற்றும் போட்டியை முன்னின்று நடத்தும் நாடான மெக்சிகோ ஆகியவற்றுக்கு எதிரான தனது மூன்று போட்டிகளிலும் தோல்வியடைந்தது.
இன்று, அல்லாவி ஒரு வீரராக அல்லாமல், அணியின் ஆதரவாளராக இருக்கிறார். நார்வே, பிரான்ஸ், செனகல் ஆகிய நாடுகள் அடங்கிய மிகவும் கடினமான குழுவை இராக் எதிர்கொண்டாலும், தற்போதைய தலைமுறை சிறந்த முடிவுகளை அடைய முடியும் என்று அவர் நம்புகிறார்.
இராக்கின் கால்பந்தை விரும்பும் 46 மில்லியன் குடிமக்களில் பெரும்பாலானோரைப் போலவே, ஜூன் 16ஆம் தேதியன்று பாஸ்டனில் இராக் நார்வேவுடன் மோதும் போட்டியைத் தானும் உன்னிப்பாகக் கவனிக்கப் போவதாக 66 வயதான அவர் கூறினார். நார்வே அணியில் நட்சத்திர முன்கள வீரர் எர்லிங் ஹாலண்ட் இடம்பெற்றுள்ளார்.
"இது உண்மையிலேயே ஒரு கடினமான குழு. மேலும் 1986ஐ விடக் கடினமானது" என்று அல்லாவி பிபிசி ஸ்போர்ட்டிடம் கூறினார்.
பிரான்ஸ் பலமுறை உலக சாம்பியன் பட்டம் வென்ற அணி. நார்வே வலுவாக வளர்ந்து வரும் ஐரோக்கிய அணிகளில் ஒன்று. செனகல் பலமுறை உலகக் கோப்பைக்குத் தகுதி பெற்ற ஆப்பிரிக்க சாம்பியன்.
"அவர்கள் வலுவான ஆட்டத்தை வெளிப்படுத்தி, 1986இல் நாங்கள் பெற்றதைவிடச் சிறந்த முடிவுகளை அடைவார்கள் என்று நம்புகிறேன்."
கடந்த கால இராக் அணியுடன் ஒப்பிடுகையில், தற்போதைய அணியிடம் அதிக சர்வதேச அனுபவம் உள்ளது. உலகத் தரவரிசையில் 57வது இடத்தில் உள்ள இராக் அணியில், ஐரோப்பாவில் விளையாடிய பல வீரர்கள் உள்ளனர்.
இவர்களில் இப்ஸ்விச் டவுன் அணியின் அலி அல்-ஹமாதி, தற்போது நெதர்லாந்தில் உள்ள உட்ரெக்ட் அணிக்காக விளையாடும் முன்னாள் மான்செஸ்டர் யுனைடெட் நடுக்கள வீரர் ஜிதான் இக்பால், சமீபத்தில் ஏ.ஜி.எஃப் அணி டேனிஷ் சாம்பியன்ஷிப்பை வெல்ல உதவிய கெவின் யாகோப் ஆகியோர் அடங்குவர்.
கடந்த 2025இல் கிரஹாம் அர்னால்ட் தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டதும் அணியின் முன்னேற்றத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது. அர்னால்ட் இதற்கு முன்பு 2022 உலகக் கோப்பையின் இரண்டாம் சுற்றுக்கு ஆஸ்திரேலியாவை வழிநடத்தியிருந்தார்.

பட மூலாதாரம், Getty Images
தகுதிச் சுற்றின் மூன்றாவது மற்றும் நான்காவது சுற்றுகளில் இராக் வெற்றிகரமாக முன்னேற, 62 வயதான இந்தப் பயிற்சியாளர் உதவினார். மேலும், இராக் அணி ஒரு பரபரப்பான பிளே-ஆஃப் போட்டியிலும் வெற்றி பெற்றது. பொலிவியாவை வீழ்த்துவதற்கூ முன்பு ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு எதிரான போட்டியில் இராக் வெற்றி பெற்றது.
நீண்ட மற்றும் கடினமான தகுதிச் சுற்றுப் பயணத்தின்போது, பொலிவியாவுகுக் எதிரான இந்த வெற்றி இராக்கின் 21வது போட்டியாகும்.
தகுதி பெற்ற பிறகு கொண்டாட்டங்கள் குறைந்து காணப்பட்டாலும், நாடு முழுவதும் உற்சாகம் அதிகமாகவே உள்ளது.
தொலைக்காட்சி விளையாட்டு செய்தியாளர் நவார் ஃபாய்க் அல்-ரிகாபி பிபிசியிடம் பேசியபோது, "குழுவில் நாங்கள்தான் பலவீனமான அணி என்று மக்கள் நினைக்கலாம். ஆனால் களத்தில் எதுவும் நடக்கலாம்," என்றார்.
"நாங்கள் நன்றாக இருப்போம், இராக் வீரர்கள் மீது எந்த அழுத்தமும் இல்லை. அவர்கள் சிறப்பாகச் செயல்பட்டால் மட்டுமே போதுமானது. எங்களிடம் சிறப்பாகச் செயல்படக்கூடிய தரமான வீரர்கள் உள்ளனர்."
பயிற்சியாலர் கிரஹாம் அர்னால்ட் இராக்கிற்கு ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்று அல்-ரிகாபி நம்புகிறார்.
மேலும், "கடந்த 2022இல் அர்ஜென்டினா ஆஸ்திரேலியாவை வெல்வது மிகவும் கடினமாக இருந்தது. எங்களுக்கும் அதுபோலவே இருக்கும். அவர் மிகவும் அனுபவம் வாய்ந்தவர், நாங்கள் உண்மையிலேயே சிறப்பாகச் செயல்படுவோம் என்று நினைக்கிறேன்," என்று அல்-ரிகாபி கூறினார்.
கடந்த 1986இல் நடந்ததைவிட சிறப்பாகச் செயல்படுவதே இராக்கின் முக்கிய இலக்காக உள்ளது.
"ஒன்றுக்கும் மேற்பட்ட கோல்களை அடிப்பது ஒரு புதிய சாதனையாக இருக்கும். ஒரு போட்டியில் வெற்றி பெறுவது ஒரு மாபெரும் சாதனையாக இருக்கும். அடுத்த கட்டத்திற்குத் தகுதி பெறுவது அற்புதமாக இருக்கும். மக்கள் நீண்ட காலமாகக் காத்திருந்தனர், நாங்கள் இப்போது தயாராக இருக்கிறோம்."

பட மூலாதாரம், Getty Images
போர்கள், அரசியல் சவால்கள், தடைகள்
இராக்கில் எப்போதும் திறமையான கால்பந்து வீரர்கள் இருந்துள்ளனர். இருப்பினும், கால்பந்து விளையாட்டிற்கு அப்பாற்பட்ட பல பிரச்னைகளின் காரணமாக, அந்த நாடு மீண்டும் ஃபிஃபா உலகக் கோப்பைக்குத் தகுதி பெற 40 ஆண்டுகள் ஆனது.
தேசிய அணி எதிர்கொண்ட இடர்பாடுகள், அந்நாடு ஒட்டுமொத்தமாக எதிர்கொண்ட சவால்களையே ஒத்திருந்தனர் என்று இராக்கின் முன்னாள் வீரர் கரீம் அல்லாவி விளக்கினார்.
"நாட்டைப் போலவே, தேசிய அணியும் போர்கள், அரசியல் மற்றும் பொருளாதார சவால்கள், சில நேரங்களில் சர்வதேச தடைகள் எனப் பல கடினமான சூழல்களைக் கடந்து வந்தது" என்று அல்லாவி கூறினார்.
"சில நேரங்களில், தகுதிச்சுற்றுப் போட்டிகளுக்கான முறையான திட்டமிடல் இல்லாமையும், போட்டிகளுக்கான போதிய பயிற்சியின்மையும் நிலவின. அதனால்தான் இவ்வளவு நீண்ட காலம் எடுத்தது."
அந்தக் காலகட்டத்தில் நிலவிய மற்றொரு முக்கியப் பிரச்னை, சதாம் ஹுசைன் ஆட்சியின் ஆதிக்கமாகும்.
கடந்த 1984ஆம் ஆண்டில், இராக்கின் சர்வாதிகாரியான சதாம் ஹுசைன், தனது மகன் உதய் ஹுசைனை இராக் கால்பந்து நிர்வாகத்தின் பொறுப்பில் அமர்த்தினார்.
உதய் ஹுசைன் தலைமையின் கீழ், தேசிய அணி அச்சமும் கொடுமைகளும் நிறைந்த ஒரு காலகட்டத்தை எதிர்கொண்டது. 2003ஆம் ஆண்டில் சதாம் ஹுசைன் ஆட்சி வீழ்ந்த பிறகு, பல விவரங்கள் வெளிச்சத்திற்கு வந்தன. வீரர்கள் கொடூரமான தண்டனைகளுக்கும் சித்திரவதைகளுக்கும் உட்படுத்தப்பட்டதாக செய்திகள் தெரிவித்தன. சில வீரர்கள் கான்கிரீட்டால் செய்யப்பட்ட பந்துகளைக் கொண்டு பயிற்சி செய்யக் கட்டாயப்படுத்தப்பட்டனர். வேறு சில வீரர்கள் சவுக்கடிக்கு உள்ளாக்கப்பட்டனர், சிறையில் அடைக்கப்பட்டனர் மற்றும் பல்வேறு வடிவங்களில் கொடுமைப்படுத்தப்பட்டனர்.
அந்தக் காலகட்டத்தைப் பற்றி விரிவாகப் பேசுவதை கரீம் அல்லாவி விரும்புவதில்லை.
"சுருக்கமாகச் சொல்வதானால், அக்காலகட்டத்தில் 'பரிசு மற்றும் தண்டனை' என்னும் மிகக் கடுமையான கோட்பாடு நடைமுறையில் இருந்தது" என்று அவர் கூறினார்.
சதாம் ஹுசைனை அதிகாரத்தில் இருந்து அகற்றிய அமெரிக்கா தலைமையிலான படையெடுப்பு, இராக்கில் பல ஆண்டுகள் நீடித்த அரசியல் நிலையற்ற தன்மையையும் ஏற்படுத்தியது. அந்த நிலையற்ற தன்மையின் விளைவுகள் இன்றும் இராக் கால்பந்து விளையாட்டைப் பாதித்து வருகின்றன.
பாதுகாப்பு சார்ந்த கவலைகளின் காரணமாக, இராக் தேசிய அணி அதன் பிறகு பாக்தாத் நகரில் எந்தவொரு உலகக் கோப்பை தகுதிச் சுற்றுப் போட்டியிலும் விளையாடவில்லை.
மார்ச் 2020இல் ஒரு நேர்மறையான மாற்றம் நிகழ்ந்தது. இராக்கின் தெற்கு நகரமான பஸ்ராவை சர்வதேசப் போட்டிகளுக்கான இடமாக ஃபிஃபா அங்கீகரித்தது. இதன் மூலம், முக்கியமான 'சொந்த மண்ணில் நடைபெறும்' போட்டிகளை ஜோர்டான், மலேசியா, இரான் போன்ற பிற நாடுகளில் சென்று விளையாட வேண்டிய அவசியம் இனி இல்லை என்ற நிலை உருவானது.
தற்போதும், 2026 உலகக் கோப்பைக்கான இராக்கின் வெற்றிகரமான தகுதிச் சுற்றுப் பயணத்தின்போதும்கூட, பிராந்திய பிரச்னைகள் சில இடர்பாடுகளை உருவாக்கின.
மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் நிலவிய மோதல்கள் காரணமாக, மார்ச் 2026இல் பொலியாவுக்கு எதிராக இராக் விளையாடவிருந்த 'பிளே-ஆஃப்' போட்டி கிட்டத்தட்ட ஒத்திவைக்கப்படும் நிலைக்குச் சென்றது. இராக் அணியின் சில வீரர்கள் மற்றும் தலைமைப் பயிற்சியாளர் கிரஹாம் அர்னால்ட், நாட்டைவிட்டு வெளியேறி மெக்சிகோவுக்கு சென்று போட்டியில் பங்கேற்பதில் பல சிரமங்களை எதிர்கொண்டனர். அந்தச் சிக்கல்கள் அனைத்தையும் மீறி, அந்த அணி மெக்சிகோவை சென்றடைந்து போட்டியில் விளையாடியது.
அவர்கள் பொலிவியாவை வீழ்த்தி, உலகக் கோப்பைத் தொடருக்குத் தகுதி பெற்றனர். அவர்கள் தாயகம் திரும்பியபோது, அவர்களுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. ஆயிரக்கணக்கான மகிழ்ச்சி நிறைந்த ரசிகர்கள் அவர்களின் சாதனையைக் கொண்டாடிட, அந்த அணி பாக்தாத்தின் மக்கள் நிறைந்த வீதிகளின் வழியாக ஒரு திறந்த மேற்கூரை கொண்ட பேருந்தில் பயணித்தது.

பட மூலாதாரம், Getty Images
1986 உலகக் கோப்பையில் என்ன நடந்தது?
கடந்த 1985இல் சிரியாவை 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி, இராக் 1986 ஃபிஃபா உலகக் கோப்பைக்குத் தகுதி பெற்றது. இருப்பினும், அந்த நேரத்தில், இரான்-இராக் போர் நடந்து கொண்டிருந்ததால், அந்தப் போட்டியை இராக்கில் நடத்த முடியவில்லை. அதற்குப் பதிலாக, அது சௌதி அரேபியாவில் நடத்தப்பட்டது.
அணி முக்கியமான போட்டிகளைத் தங்கள் சொந்த நாட்டில் இருந்து தொலைவில் விளையாட வேண்டியிருந்ததால், இந்தச் சாதனை இன்னும் சிறப்பு வாய்ந்ததாக உணரப்பட்டது என்று இராக்கின் முன்னாள் வீரர் கரீம் அல்லாவி கூறினார்.
"நாங்கள் எங்கள் போட்டிகளை நாட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்தோம். அது அந்த உணர்வை இன்னும் பெரிதாக்கியது" என்கிறார் அல்லாவி.
தகுதி பெற்ற பிறகு அணி தாயகம் திரும்பியபோது, பொது மக்களிடம் இருந்து அவர்களுக்கு ஒரு மாபெரும் வரவேற்பு கிடைத்தது.
"நாங்கள் திரும்பி வந்தபோதும் அதுபோலவே இருந்தது. அங்கும் ஏராளமான மக்கள் கலந்துகொண்டனர். மேலும் மக்களால் பல கொண்டாட்டங்கள், குறிப்பாக விழாக்கள் மற்றும் பொதுக் கூட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டன. நாங்கள் ஒரு சிறந்த அணியாக இருந்தோம்."
அந்த இராக் அணி பெரும்பாலும் ஒரு "பொற்காலத் தலைமுறை" என்று நினைவுகூரப்படுகிறது. 1980களில் அவர்கள் மூன்று ஒலிம்பிக் போட்டிகளுக்கும் தகுதி பெற்றதுடன், பல பிராந்திய கால்பந்து சாம்பியன்ஷிப் பட்டங்களையும் வென்றனர்.
கடந்த 1986 உலகக் கோப்பைக்கு இராக் தகுதி பெறுவதற்கு கரீம் அல்லாவி ஒரு முக்கியப் பங்காற்றினார். தகுதிச் சுற்றுப் போட்டிகள் முழுவதும், அவர் அணியில் ஒரு வழக்கமான தொடக்க வீரராக இருந்தார். இருப்பினும், அவரது உலகக் கோப்பை அனுபவம் துரதிர்ஷ்டத்தால் பாதிக்கப்பட்டது.
"தகுதிச் சுற்றுப் போட்டிகள் அனைத்திலும் நான் தொடக்க வீரராக இருந்தேன். ஆனால் பராகுவே ஆட்டத்திற்கு முந்தைய நாள் எனக்கு ஏற்பட்ட காயம் காரணமாக உலகக் கோப்பையில் நான் மாற்று வீரராகவே இருந்தேன். அது மிகவும் துரதிர்ஷ்டவசமானது."
இராக்கின் உலகக் கோப்பை பயணத்தில், பாக்தாத்தில் உள்ள கால்பந்து ரசிகர்கள் இன்றும் பேசும் ஒரு சர்ச்சைக்குரிய தருணமும் இடம்பெற்றது.
பராகுவேக்கு எதிரான போட்டியில் இராக் 1-0 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்தது. அந்தப் போட்டியில், இராக்கிய கால்பந்து ஜாம்பவான் அகமது ரஹ்தி தலையால் முட்டி கோல் அடித்து சமன் செய்யும் கோலை அடித்ததாகத் தோன்றியது.
இருப்பினும், கார்னர் கிக்கில் இருந்து பந்து பெனால்டி பகுதியை அடைவதற்கு முன்பே, நடுவர் பாதி நேரத்திற்கான விசில் ஊதினார். இதன் விளைவாக, அந்த கோல் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவில்லை.
"நடுவர் கோலை கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை. நாங்கள் தவறான முடிவுகளால் பாதிக்கப்பட்டோம். பெல்ஜியத்திற்கு எதிரான போட்டியிலும், எங்களுக்கு ஒரு ரெட் கார்டு வழங்கப்பட்டது. நாங்கள் சமன் செய்யும் நிலைக்கு மிக அருகில் வந்திருந்தோம்" என்று அல்லாவி கூறினார்.
இராக் தாங்கள் எதிர்பார்த்த முடிவுகளைப் பெறவில்லை என்றாலும், அல்லாவி அந்தப் போட்டித் தொடரை ஒரு மிகச் சிறப்பான அனுபவமாக இன்றும் நினைவுகூர்கிறார்.
"அதுவொரு சிறப்பான தருணமாக இருந்தது. பெருந்திரளான மக்கள், எங்கும் புகழ்பெற்ற வீரர்கள் என உலகக் கோப்பையின் சூழல் மற்ற எந்தப் போட்டியில் இருந்தும் முற்றிலும் மாறுபட்டது."
அவருக்கும் அவரது அணி வீரர்களுக்கும், உலகெங்கிலும் உள்ள வீரர்களைச் சந்தித்ததுதான் உலகக் கோப்பையின் மிகவும் மறக்க முடியாத தருணங்களில் ஒன்றாக அமைந்தது.
"அவர்களைப் பற்றி அறிந்துகொள்ளவும், வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்த வீரர்களுடன் உரையாடவும் முயன்றோம்."
பல ஆண்டுகளுக்குப் பிறகு அதைத் திரும்பிப் பார்க்கையில், அந்த அனுபவங்கள் தனது மகிழ்ச்சியான கால்பந்து நினைவுகளில் சிலவாக இருப்பதாகவும் அல்லாவி கூறுகிறார்.
"அவை எங்களுக்கு மிகவும் நல்ல நினைவுகளாகவே இருக்கின்றன. மேலும், இப்போது அணியில் உள்ள வீரர்களும் வரும் ஆண்டுகளில் அதையே கூறுவார்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன்."
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு































