You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இந்திய குடும்பங்களின் சேமிப்பு குறைந்து கடன் உயர்வு - கடந்த 10 ஆண்டுகளாக என்ன நடக்கிறது?
இந்திய குடும்பங்களில் பாரம்பரியமாக காணப்படும் சேமிக்கும் வழக்கத்தில் மிகப்பெரிய மாற்றம் தெரிகிறது. இந்திய ரிசர்வ் வங்கியின் சமீபத்திய தரவுகளின்படி, இந்தியாவில் நிகர உள்நாட்டு சேமிப்பு 47 ஆண்டுகளில் இல்லாத அளவுக்குக் குறைந்துள்ளது.
ஒரு குடும்பத்தின் கடன், செலவு போக அவர்களிடம் மீதமுள்ள பணம், முதலீடு போன்றவை நிகர குடும்ப சேமிப்பு என்று அழைக்கப்படுகிறது.
கடந்த 2022ஆம் ஆண்டு 7.3 சதவீதமாக இருந்த நிகர குடும்ப சேமிப்பு 2023-ல் 5 சதவீதமாக குறைந்து போனது. இதே காலகட்டத்தில், குடும்பங்களின் கடன் சீராக அதிகரித்து மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5.8 சதவீதத்தை எட்டியுள்ளது. இது 1970-ம் ஆண்டிற்கு பிறகு இதுவே அதிகபட்ச அளவாகும்.
மக்கள் தங்கள் அன்றாட வாழ்க்கைச் செலவுகளுக்காக கடன் வாங்குவதால், அவர்களின் சேமிப்பு குறைந்து வருகிறது. அதிகளவில் கடன் வாங்கும் சந்தர்ப்பங்களில் குடும்பம் எதிர்கொள்ளும் சிரமம் என்னவென்றால், அவர்கள் வாங்கிய கடனையும் அதன் வட்டியையும் திருப்பிச் செலுத்துவதற்கு தங்கள் வருமானத்தில் ஒரு பகுதியை செலவிட வேண்டியிருக்கிறது. அத்தகைய சூழ்நிலையில், குடும்பத்தின் சேமிப்பிற்கென மிகக் குறைந்த பணமே மீதம் இருக்கும்.
மோதிலால் ஓஸ்வால் ஃபைனான்சியல் சர்வீசஸ் நிறுவனத்தைச் சேர்ந்த பொருளாதார நிபுணர் நிகில் குப்தாவின் கூற்றுப்படி, இந்தியாவில் அதிகரித்துவரும் குடும்ப கடன்களில் பெரும்பகுதி அடகு இல்லாமல் பெறக்கூடிய கடன்கள் ஆகும். இதில் பாதிக்கும் மேற்பட்டவை விவசாயம் மற்றும் வணிகம் சார்ந்தவை.
கிரெடிட் கார்டு கடன்கள், திருமணம் மற்றும் மருத்துவ அவசர நிலைகளுக்கான கடன்கள் ஆகியவை மொத்த குடும்பம் சார்ந்த கடன்களில் 20 சதவீதத்திற்கும் குறைவாகவே இருந்தாலும், இத்தகைய கடன்கள் வேகமாக அதிகரித்து வருகிறது என்றும் குப்தா கூறுகிறார்.
குறைந்த சேமிப்பு, அதிகக் கடன் என்ற இந்த போக்கு, இந்தியாவின் பொருளாதாரம் குறித்து நமக்கு உணர்த்துவது என்ன?
கடன், செலவு போன்றவை அதிகரிப்பது எதிர்காலத்துக்கு உகந்ததா? வருமானம் குறைதல், பண வீக்கம், பொருளாதார அழுத்தம் போன்ற சவால்கள் குறித்து இவை எச்சரிக்கிறதா?
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)