You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
அப்போது லலிதா, இப்போது லலித் - பிறப்புறுப்பு அறுவை சிகிச்சைக்குப் பின் தந்தையான காவலர்
லலிதாவிலிருந்து லலிதாக மாறி, தற்போது தந்தையாகியிருக்கும் மகாராஷ்டிராவின் பீட் பகுதியைச் சேர்ந்த லலித் சால்வேயின் கதை இது.
தன் மனைவிக்கு வளைகாப்பு நடந்த சமயத்தில் கலவையான எதிர்வினைகளை சந்தித்தார் லலித். லலித் காவல் துறையில் பணியாற்றி வருகிறார். லலித் பிறப்புறுப்பு மறுசீரமைப்பு அறுவை சிகிச்சை செய்துகொண்டவர். இது பாலின மாற்று அறுவை சிகிச்சை அல்ல. இந்த சிகிச்சைக்கு முன்பு அவர் லலிதா சால்வே என்ற பெண்ணாக அறியப்பட்டார்.
சிறுவயதிலிருந்தே தன் உடல் வித்தியாசமாக இருப்பதாக லலித்திற்கு தோன்றியுள்ளது. தன்னுடைய பிறப்புறுப்புக்கு அருகே சிறு கட்டிகள் இருப்பதை அறிந்த அவர் உடனடியாக மருத்துவரிடம் சென்றார். அவரை பரிசோதித்த மருத்துவர் அவர் ஓர் பெண் அல்ல, ஆண் என அறிந்தார். 2018 முதல் 2020-ம் ஆண்டு வரை லலிதா, லலித் சால்வேயாக மாறுவதற்காக மூன்று அறுவை சிகிச்சைகளை செய்துகொண்டார்.
மூன்று ஆண்டு கால திருமண வாழ்க்கைக்குப் பின் லலித்தும் அவர் மனைவி சீமாவும் குழந்தை பெற்றுக்கொள்ள முடிவெடுத்தனர்.
சீமா 2024, ஜனவரி 15 அன்று குழந்தை பிறந்தது. லலித்தும் சீமாவும் பெற்றோர்களாகினர். அந்த நாளை நினைவுகூரும்போது லலித்திற்கு புல்லரிக்கிறது.
சோதனைக் குழாய் சிகிச்சையையோ அல்லது ஐ.வி.எஃப் எனப்படும் செயற்கை கருத்தரிப்பு உட்பட எந்த சிகிச்சையையும் தாங்கள் மேற்கொள்ளவில்லை என லலித் அழுத்தமாக தெரிவிக்கிறார். மற்ற ஆண்களுடன் ஒப்பிடுகையில் லலித் சால்வே தந்தையாவது எந்தவிதத்தில் வித்தியாசமானது?
2010-ம் ஆண்டு முதல் காவல்துறையில் கான்ஸ்டபிளாக பணிபுரிந்து வருகிறார் லலித். தன் மகனுக்காக சில கனவுகளும் கண்டிருக்கிறார் அவர்.
லலித் தற்போது பலருக்கும் வழிகாட்டுகிறார். பிகார், உத்தர பிரதேசம், இமாச்சல பிரதேசம், குஜராத் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலிருந்து பலரும் அவரிடம் உதவி கேட்கின்றனர்.
எல்.ஜி.பி.டி.க்யூ.ஐ சமூகத்தினரை மனிதநேய கண்ணோட்டத்துடன் அணுக வேண்டும் என்பதுதான் லலித்தின் எதிர்பார்ப்பு.
லலித்தின் வாழ்க்கையை பார்க்கும் எல்ஜிபிடிக்யூ சமூகத்தைச் சேர்ந்த பலரும் நம்பிக்கையுடன் வெளியே வருகின்றனர். குடும்ப வாழ்க்கையை தொடங்குவது குறித்து அவர்கள் யோசிக்கின்றனர்.
செய்தியாளர்: ஸ்ரீகாந்த் பங்காளே
படத்தொகுப்பு: ஷரத் பதே
ஒளிப்பதிவு: கிரண் சக்ளே
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)