திருப்பரங்குன்றம் செல்ல முயன்ற பாஜக நிர்வாகி வேலூர் இப்ராஹிம் கைது - இன்றைய முக்கிய செய்திகள்

இன்றைய (ஜனவரி 28, 2025) தமிழ் நாளிதழ்கள் மற்றும் டிஜிட்டல் ஊடகங்கள் வெளியிட்டுள்ள முக்கிய செய்திகளின் தொகுப்பு.
பாஜக சிறுபான்மை பிரிவு தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம் திருப்பரங்குன்றம் மலையில் உள்ள சிக்கந்தர் தர்கா பள்ளிவாசலில் தொழுகைக்காக செல்ல முயன்ற போது கைது செய்யப்பட்டதாக இந்து தமிழ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
பிறந்தநாளையொட்டி மதுரை திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் தரிசனம் மற்றும் மலைமேலுள்ள சிக்கந்தர் தர்கா பள்ளிவாசலில் சிறப்பு தொழுகை மேற்கொள்ள அவர் திட்டமிட்டிருந்ததாக அந்த செய்தி கூறுகிறது. இதற்காக தனது மனைவியுடன் நேற்று மதுரை வந்த அவர், பிற்பகலில் காரில் திருப்பரங்குன்றம் நோக்கிச் சென்றார்.
இந்நிலையில் மதுரை-திருமங்கலம் ரோட்டில் தனக்கன்குளம் அருகே காவல் உதவி ஆணையர் குருசாமி தலைமையில் ஆய்வாளர் மதுரைவீரன் உள்ளிட்ட போலீஸார் இப்ராஹிம் வந்த காரை தடுத்து நிறுத்தினர்.
இதுபற்றி தகவல் அறிந்த பாஜகவினர் சிலரும் அங்கு வந்தனர். திருப்பரங்குன்றம் மலைமேலுள்ள தர்காவுக்கு செல்ல தடை இருப்பதாலும், சட்டம், ஒழுங்கு காரணமாகவும் அங்கு போகக் கூடாது என அவரிடம் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இது தொடர்பாக இரு தரப்பிலும் வாக்குவாதம் ஏற்பட்டது. இருப்பினும், தடையை மீறி செல்வேன் எனக் கூறியதால் இப்ராஹிம், அவரது மனைவி மற்றும் பாஜக சிறுபான்மை பிரிவு பொதுச் செயலாளர் கல்வாரி தியாகராஜன், மாநிலச் செயலாளர் சிரில் ராயப்பன் உள்ளிட்டோரை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீஸார் கைது செய்தனர்.
- போபால் விஷவாயு கசிவு: ஆலையின் நச்சுக்கழிவுகள் இந்த கிராமத்திற்கு கொண்டு வரப்பட்டது ஏன்?
- '15 ஆண்டு காத்திருப்புக்குப் பின் பிறந்த மகளுக்கு இந்த நிலையா?' - சென்னை சிறுமியின் தாய் கலக்கம்
- கபடியால் மாறிய வாழ்க்கை - ஒரு கிராமத்துப் பெண்களின் நெகிழ்ச்சி கதை
- அடர்த்தியாக வளர்ந்து நிழல் தரும் இந்த அழகான மரங்களை வளர்க்க தமிழ்நாட்டில் தடை ஏன்?

சாம்சங் இந்தியா தொழிற்சங்கத்துக்கு அங்கீகாரம்
'சாம்சங் இந்தியா' தொழிற்சங்கத்தை பதிவு செய்துள்ளதாக தமிழ்நாடு தொழிலாளர்கள் நலத்துறை அறிவித்துள்ளது என்று தினமணி தன்னுடைய செய்தியில் தெரிவித்துள்ளது.
ஶ்ரீபெரும்புதூர் அருகே சுங்குவார்சத்திரம் பகுதியில் செயல்படும் சாம்சங் தொழிற்சாலையில் ஊதிய உயர்வு, தொழிற்சங்க அங்கீகாரம் போனஸ் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர் அந்த ஆலையின் தொழிலாளர்கள். சி.ஐ.டி.யு ஆதரவுடன் நடைபெற்ற இந்த போராட்டம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தமிழக அரசுடனான பேச்சுவாரத்தைகளுக்குப் பிறகு போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது. தொழிற்சங்கத்திற்கு அங்கீகாரம் வழங்கப்படும் என்று அரசு சார்பில் உறுதியளிக்கப்பட்டது.
தொழிற்சங்கத்தை அங்கீகரித்து பதிவு செய்யாததற்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்தது சி.ஐ.டி.யு. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் தொழிற்சங்க பதிவு குறித்து தமிழக அரசும் பதிவுத்துறையும் 6 வார காலத்தில் முடிவெடுக்க வேண்டும் என்று அவகாசம் அளித்தது.
அந்த காலக்கெடு ஜனவரி 27-ஆம் தேதி அன்று நிறைவடைய இருந்த நிலையில் அங்கீகாரம் அளிக்கப்பட்டு அறிவிப்பு வெளியானது என்று தினமணி நாளிதழில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பட மூலாதாரம், Getty Images
பொது இடங்களில் உள்ள கொடிக் கம்பங்களை அகற்ற உத்தரவு
தமிழ்நாடு முழுவதும் உள்ள பேருந்து நிலையம், மக்கள் அதிகம் கூடும் பொது இடங்களில் அரசியல் கட்சிகள் சார்பில் நடப்பட்டுள்ள கொடிக் கம்பங்களை அகற்ற சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளதாக தினத்தந்தி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
அதிமுகவின் 53-ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு கூடல்புதூர் பகுதியில் உள்ள கட்சிக்கொடி கம்பத்தை அகற்றி புதிய கொடிக்கம்பம் அமைக்கவும், மதுரை பைபாஸ் பேருந்து நிறுத்தம் அருகே போக்குவரத்துக்கு இடையூறு அளிக்காத வகையில் கொடிக்கம்பம் நடுவதற்கும் அனுமதிக்க வேண்டும் என்று இரு வேறு மனுதாரர்கள் நீதிமன்றத்தை நாடினர்.
தமிழக அரசின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் முகமது ஜின்னா, "ஏற்கனவே தமிழகத்தில் கொடிக்கம்பங்கள் மற்றும் பேனர்கள் தொடர்பாக 114 வழக்குகள் பதிவாகியுள்ளது என்றும், இதுபோன்ற பிளக்ஸ் பேனர்களை வைக்க தற்காலிகமாக தடையில்லா சான்றிதழை வழங்க மட்டுமே காவல்துறையினருக்கு அதிகாரம் உள்ளது. இதனை பெற்று மாநகராட்சி அல்லது நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான இடங்களில் பிளக்ஸ் பேனர்கள், கொடிக்கம்பங்கள் வைக்கப்படுகின்றன" என்று தெரிவித்தார்.
எவ்விதமான வழிகாட்டுதல்களும், விதிகளும் சட்டத்தில் இல்லாத நிலையில், பொது இடங்களில் பல அடி உயரத்துக்கு கட்சிக்கொடி கம்பங்கள் எதன் அடிப்படையில் நிரந்தரமாக வைக்கப்படுகின்றன? இவ்வாறு வைக்கப்படும் கம்பங்களுக்கு ஏன் வாடகை வசூலிக்கக் கூடாது? என்று கேள்வி எழுப்பிய நீதிபதி தேதி குறிப்பிடாமல் வழக்கை ஒதுக்கி வைத்தார்.
இந்த வழக்கின் தீர்ப்பு நேற்று (ஜனவரி 27) வெளியானது. அதில் நெடுஞ்சாலைகள், உள்ளாட்சி துறைக்கு சொந்தமான இடங்களில் வைக்கப்பட்டுள்ள கட்சி, இயக்க கொடிக்கம்பங்கள், மத ரீதியான கொடிக்கம்பங்கள் அனைத்தையும் 12 வாரங்களுக்குள் நீக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
வருங்காலத்தில் பொது இடங்களில் கொடிக்கம்பங்கள் அமைப்பதற்கு அதிகாரிகள் அனுமதிக்கக் கூடாது. கட்சி அலுவலகங்களிலோ, தனியாருக்கு சொந்தமான இடங்களிலோ கொடிக்கம்பங்கள் அமைத்துக் கொள்ளலாம் என்றும் அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டது என்று தந்தி செய்தி வெளியிட்டுள்ளது.
சென்னை பள்ளிகளில் காலை உணவை வெளி நிறுவனங்கள் மூலம் வழங்க திட்டம்
சென்னை மாநகராட்சி பள்ளிகளுக்கு காலை உணவை வழங்கும் திட்டத்தை வெளிநிறுவனங்கள் மூலம் தயாரித்து வழங்க ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது என தினமணி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
சென்னை மாநகராட்சியில் காலை உணவுத் திட்டம் 2023-ஆம் ஆண்டில் இருந்து நடைமுறையில் உள்ளது. நகர்ப்புற பகுதிகளில் செயல்படும் அரசுப் பள்ளிகளுக்கு வெளி நிறுவனங்கள் மூலம் காலை உணவுத் திட்டத்தின் கீழ் உணவை வழங்க சென்னை மாநகராட்சி மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அரசின் ஒப்புதலைப் பெற அனுப்பப்பட்டது. சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை கடந்த டிசம்பர் 2-ஆம் தேதி அன்று ஒப்புதலை வழங்கியது.
இதனைத் தொடர்ந்து சென்னை மாநகராட்சியில் உள்ள பள்ளிகள், அரசுப் பள்ளிகள், ஆதி திராவிடர் தொடக்கப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு ஓராண்டு காலத்துக்கு காலை உணவுத் திட்டத்தின் கீழ் உணவு வழங்க வெளி நிறுவனங்களை நியமிப்பதற்கான ஒப்பந்தங்கள் கோரப்பட்டுள்ளன என்று அந்த செய்தி தெரிவிக்கிறது.

பட மூலாதாரம், Arivalayam/X
நாமல் ராஜபக்ஸவை 2 வாரங்களில் கைது செய்ய முயற்சியா?
இலங்கையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ மகன் நாமல் ராஜபக்ஸவை இன்னும் இரு வாரங்களில் கைது செய்ய அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது என்று மஹிந்த ராஜபக்ஸவின் ஊடக பேச்சாளர் சட்டத்தரணி மனோஜ் கமகே தெரிவித்ததாக வீரகேசரி இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.
கொழும்பு புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் பேசிய அவர், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் மகன் யோஷித்த ராஜபக்ஸவை நிதி சுத்திகரிப்பு தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதாக குறிப்பிடப்படுகிறது. ஆனால் அச்சட்டத்தின் பிரகாரம் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவில்லை.

பட மூலாதாரம், Getty Images
2015 ஆம் ஆண்டு நல்லாட்சி அரசாங்கம் மக்களின் அடிப்படை பிரச்சினைகள் தொடர்பில் கவனம் செலுத்தாமல் அரசியல் பழிவாங்கல்களுக்கு முன்னுரிமை வழங்கியது. அதுபோலவே தற்போதைய அரசாங்கமும் செயற்படுகிறது. பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸவை இன்னும் இரண்டு வார காலத்துக்குள் கைது செய்வதற்கு அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது.
இந்த அரசாங்கம் பலவீனமடைவது உறுதி. ராஜபக்ஸக்களை அரசியலில் இருந்து முழுமையாக புறக்கணிப்பதற்கு அரசாங்கம் அரசியல் பழிவாங்கல்களை முன்னெடுத்துள்ளது என்று கூறியதாக வீரகேசரி இணையதளம் கூறுகிறது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












