You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சகாயம் உயிருக்கு யாரால் ஆபத்து? பிபிசி தமிழுக்கு பேட்டி
- எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம்
- பதவி, பிபிசி தமிழ்
"மதுரையில் கிரானைட் வெட்டி எடுப்பதற்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. அரிட்டாபட்டி போன்ற பகுதிகளைக் காப்பாற்றியிருக்கிறேன். இதற்கு அடிப்படையாக நான் சமர்ப்பித்த அறிக்கை உள்ளதால், என் மீது அவர்களுக்கு கோபம் இருக்கலாம்" என்று கூறுகிறார், ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம்.
கிரானைட் முறைகேட்டில் தொடர்புடைய நபர்களால் தனது உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதாக அவர் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.
போலீஸ் பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டது தொடர்பாக சகாயம் முன்வைத்த குற்றச்சாட்டுகளை, காவல்துறை டி.ஜி.பி சங்கர் ஜிவால் மறுத்துள்ளார்.
சகாயத்துக்கு எந்த தரப்பில் இருந்தும் அச்சுறுத்தல் தரப்பட அரசு அனுமதிக்காது என்று தமிழ்நாடு கனிம வளங்கள் மற்றும் சுரங்கங்கள் துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
'1 லட்சம் கோடி ரூபாய் இழப்பு'
மதுரை மாவட்டத்தில் கிரானைட் குவாரிகளில் நடைபெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் குறித்து விசாரிக்க ஐ.ஏ.எஸ் அதிகாரியாக இருந்த சகாயத்தை 2014 ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றம் நியமித்தது.
கிரானைட் கற்களை வெட்டி எடுத்ததில் அரசுக்கு சுமார் 1 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக, 2015ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் சகாயம் குழு அறிக்கையைத் தாக்கல் செய்தது.
தற்போது சட்டவிரோத கிரானைட் குவாரிகள் தொடர்பான வழக்கு மதுரை கனிம வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் ஆஜராக வருமாறு இரண்டு முறை நீதிமன்றம் சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகவில்லை.
கிரானைட் முறைகேட்டை வெளிக்கொண்டு வந்ததால் தன் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதாகவும் தனக்கு வழங்கப்பட்டு வந்த போலீஸ் பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டுவிட்டதால் ஆஜராக முடியவில்லை எனவும் சமீபத்தில் ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் சகாயம் குறிப்பிட்டிருந்தார்.
கடந்த மே 5-ஆம் தேதியன்று மதுரை சிறப்பு நீதிமன்றத்தில் கிரானைட் குவாரி வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போதும் சகாயம் ஆஜராகவில்லை. இதைக் குறிப்பிட்டுப் பேசிய நீதிபதி லோகேஸ்வரன், "சகாயத்துக்கு ஏன் பாதுகாப்பு வழங்கவில்லை. என்ன காரணம் என்பதை நீதிமன்றத்துக்குத் தெரிவிக்க வேண்டும்" என்றார்.
மேலும், "சகாயத்துக்கு பாதுகாப்பு கொடுக்கப்படாவிட்டால் உரிய பாதுகாப்பு வழங்குமாறு மத்திய பாதுகாப்புப் படைக்கு உத்தரவிடப்படும்" எனக் கூறி வழக்கின் விசாரணையை நீதிபதி ஒத்திவைத்தார்.
பிபிசி தமிழிடம் சகாயம் கூறியது என்ன?
"உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதாக எந்த அடிப்படையில் கூறுகிறீர்கள்?" என சகாயத்திடம் பிபிசி தமிழ் கேட்டது.
"2012ஆம் ஆண்டு மதுரை மாவட்ட ஆட்சியராக இருந்த போது கிரானைட் வெட்டி எடுத்ததில் அரசுக்கு 16 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக, அறிக்கை ஒன்றை அனுப்பினேன். இது பேசுபொருளாக மாறியதால் அரசு தரப்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு நிறைய குவாரிகள் மூடப்பட்டன. ஏராளமானோர் மீது வழக்கு தொடரப்பட்டது. எனக்கு பணிமாறுதல் வழங்கப்பட்டதால் கோ ஆப்டெக்ஸ் நிர்வாக இயக்குநராக பணியைத் தொடங்கினேன். அப்போதே கவனமாக இருக்குமாறு பலரும் எச்சரித்தனர்" என்று கூறினார்.
இதன் பிறகு கிரானைட் முறைகேடு வழக்கை விசாரிப்பதற்காக 2014ஆம் ஆண்டு சகாயத்தை நியமித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
"இது சவாலான பணி. இதன் பின்புலத்தில் இருந்தவர்களின் பின்னணி, அவர்களின் கடந்தகால செயல்பாடுகள், முறைகேடுகளின் அளவு, நிதி இழப்பு ஆகியவற்றைக் கணக்கில் கொண்டு பாதுகாப்பு கொடுக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் கூறியது" என்றார் சகாயம்.
சகாயத்துக்கு 2-வது முறையாக பாதுகாப்பு விலக்கம்
நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து, சகாயத்தின் பாதுகாப்புக்கு ஆயுதம் ஏந்திய பாதுகாவலர் ஒருவர் நியமிக்கப்பட்டார். 2014 டிசம்பர் முதல் 2020 ஆம் ஆண்டு வரை இந்தப் பாதுகாப்பு தொடர்ந்தது. "2020 அக்டோபர் மாதத்தில், எனக்கு எந்தப் பிரச்னையும் இல்லை என்று கூறி பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டது" என்றார் சகாயம்.
2021 ஆம் ஆண்டு ஜனவரியில் அரசுப் பணியில் இருந்து சகாயம் விருப்ப ஓய்வு பெற்றார். "பதவியில் இல்லாவிட்டாலும் பாதுகாப்பை விலக்க முடியாது. பதவிக் காலத்தைத் தாண்டியும் அச்சுறுத்தல் நீடிக்கும் என்பது தெரிந்த ஒன்று" என்கிறார் சகாயம்.
பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டது தொடர்பான செய்தி, ஊடகங்களில் வெளியாகவே, 'எங்கள் அனுமதியில்லாமல் பாதுகாப்பை எவ்வாறு விலக்கிக் கொள்ள முடியும்?' என சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். கிரானைட் முறைகேடு தொடர்பான வழக்கின் விசாரணையின்போது இவ்வாறு நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
"நீதிமன்றம் கூறியதால் உடனே பாதுகாப்பு வழங்கினார்கள். ஆனால், 2023 மே மாதம் எந்த தகவலும் இல்லாமல் பாதுகாப்பை விலக்கிக் கொண்டனர். இதன்பிறகு, கீழ்ப்பாக்கத்தில் உள்ள எனது வீட்டுக்கு சந்தேகத்துக்கு இடமான சிலர் வந்து விசாரித்த நிகழ்வுகள் நடந்தன" என்று சகாயம் கூறினார்.
தலைமைச் செயலருக்கு கடிதம்
கிரானைட் முறைகேட்டில் ஈடுபட்டவர்களுக்கு ஆதரவான நிலைப்பாடாக இதைப் பார்ப்பதாகக் கூறிய சகாயம், "இந்தியாவின் மிகப் பெரிய கிரானைட் ஊழலை வெளியில் கொண்டு வந்த அதிகாரிகளுக்குப் பாதுகாப்பில்லாத சூழல் நிலவுகிறது. அதைத் தான் காவல்துறை சொல்ல விரும்புகிறது" எனவும் பிபிசி தமிழிடம் குறிப்பிட்டார்.
2023 மே முதல் தற்போது வரை தனது பாதுகாப்புக்கு காவலர்கள் இல்லை எனக் கூறும் சகாயம், 2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மற்றும் அக்டோபர் ஆகிய மாதங்களில் தலைமைச் செயலாளர், டி.ஜி.பி ஆகியோருக்கு கடிதம் எழுதியதாக கூறினார்.
"நான் எழுதிய கடிதத்துக்கு டிசம்பர் மாதத்தில் டி.ஜி.பி அலுவலகத்தில் இருந்து பதில் வந்தது. பாதுகாப்பு வழங்குவது தொடர்பாக பாதுகாப்பு மறுஆய்வுக் குழுவில் (security reveal commitee) விவாதித்து பிரச்னை இல்லை என்று முடிவுக்கு வந்ததாக கூறப்பட்டிருந்தது. 2023 மார்ச் மாதம் எடுத்த முடிவைக் கூட டிசம்பர் மாதம் தான் தெரிவித்தனர்" என்கிறார் சகாயம்.
'உளவியல் ரீதியாக நெருக்கடி'
"என்னுடைய நடவடிக்கைக்குப் பிறகு மதுரையில் சட்டத்துக்குப் புறம்பாக கிரானைட் வெட்டி எடுப்பதற்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது. அரிட்டாபட்டி போன்ற பகுதிகளைக் காப்பாற்றியிருக்கிறேன். அதனால் என் மீது அவர்களுக்கு (கிரானைட் முறைகேட்டில் ஈடுபட்டவர்கள்) கோபம் இருக்கலாம்" எனவும் அவர் குறிப்பிட்டார்.
பாதுகாப்பை விலக்கும் விவகாரத்தில் பல்வேறு அம்சங்களை ஆராய்ந்து தகவல்களைத் திரட்டிய பிறகே காவல்துறை முடிவை எடுத்திருக்க வேண்டும் என்றார், சகாயம்.
ஏப்ரல் 29-ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு, இதுதொடர்பாக 10 பக்கங்களில் விரிவான கடிதம் ஒன்றையும் தான் அனுப்பியுள்ளதாக, சகாயம் குறிப்பிட்டார்.
"பாதுகாப்பு பிரச்னை நீடிப்பதால், பொது இடங்களுக்குச் செல்வதை பெருமளவு குறைத்துக் கொள்ள வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதன் மூலம் உளவியல் ரீதியாக நெருக்கடி கொடுப்பதாகவே பார்க்கிறேன்" என்றார் சகாயம்.
காவல்துறை டி.ஜி.பி விளக்கம்
ஆனால், இந்தக் குற்றச்சாட்டுகளை தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் சங்கர் ஜிவால் மறுத்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், '2023 மார்ச் 20 ஆம் தேதி நிலவரப்படி, சகாயத்துக்கு அச்சுறுத்தல் உள்ளதா என்பது குறித்து கவனத்துடன் பரிசீலனை செய்யப்பட்டு பாதுகாப்பை விலக்கிக் கொள்ளும் முடிவு எடுக்கப்பட்டது' எனத் தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பு விலக்கப்பட்டு 2 ஆண்டுகளுக்கு பின்னரே இதுகுறித்து சகாயம் பேசி வருவதாக டி.ஜி.பி சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.
'நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஆஜராகும் போது ஏதேனும் குறிப்பிடும் படியான அச்சுறுத்தல் இருந்தால் அவருக்குத் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து தரப்படும்' எனவும் அவர் கூறியுள்ளார்.
தொடர்ந்து அந்த அறிக்கையில், "சட்டவிரோத கிரானைட் சுரங்கம் தொடர்பான முறைகேட்டை விசாரிக்கும் சிறப்பு அதிகாரியாக சகாயம் இருந்த காலத்தில் 2014 நவம்பர் முதல் 2020 அக்டோபர் வரை மெய்க்காப்பாளர் ஒருவர் பாதுகாப்புக்காக அமர்த்தப்பட்டார். 2020 ஆம் ஆண்டு பாதுகாப்பு மறு ஆய்வுக் குழு கூட்டத்தில் பாதுகாப்பை விலக்கிக் கொள்வது என முடிவெடுப்பட்டது. இருப்பினும், உயர் நீதிமன்றத்தின் உத்தரவுப்படி மீண்டும் பாதுகாப்பு வழங்கப்பட்டது" என்று கூறப்பட்டுள்ளது.
'அச்சுறுத்தல் இல்லாத 22 பேர்'
ஜனவரி 2021ஆம் ஆண்டு சகாயம் விருப்ப ஓய்வில் சென்றதை சுட்டிக் காட்டியுள்ள சங்கர் ஜிவால், '2023 ஆம் ஆண்டில் பாதுகாப்பு மதிப்பீட்டு அறிக்கையின் அடிப்படையில் எந்த அச்சுறுத்தலும் இல்லாத 22 நபர்களுக்கு வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டது' எனக் கூறியுள்ளார்.
சகாயத்துக்கு குறிப்பிடத்தக்க எந்தவொரு அச்சுறுத்தலும் இல்லை என்பதால்தான் அவருக்கு வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
2023 ஆகஸ்ட், 2023 அக்டோபர் மாதங்களில் தலைமைச் செயலாளர், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் ஆகியோருக்கு சகாயம் கடிதம் எழுதியுள்ளதைக் குறிப்பிட்டுள்ள சங்கர் ஜிவால், 'எந்த அச்சுறுத்தலும் இல்லாத காரணத்தால் பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டதாக 2023 டிசம்பர் மாதம் சகாயத்துக்கு பதில் கடிதம் ஒன்று அனுப்பப்பட்டது' என்று தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு அமைச்சர் ரகுபதி கூறியது என்ன?
சகாயத்துக்கு எந்த தரப்பில் இருந்தும் அச்சுறுத்தல் தரப்பட அரசு அனுமதிக்காது என்று தமிழ்நாடு கனிம வளங்கள் மற்றும் சுரங்கங்கள் துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், "கனிம வள கொள்ளை தொடர்பான வழக்கில் தனது விசாரணை அறிக்கை குறித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சகாயம் தெரிவிக்கலாம். எந்த விதமான கட்டுப்பாடும் அச்சுறுத்தலும் அவருக்கு எந்த தரப்பில் இருந்தும் கொடுப்பதற்கு அரசு அனுமதிக்காது. அச்சமின்றி அவர் நீதிமன்றத்தில் தன்னுடைய விசாரணை அறிக்கை குறித்து கூறலாம்" என்று தெரிவித்தார்.
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு