You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இறைச்சிக்காக பண்ணை முறையில் ஆக்டோபஸ் வளர்க்கும் திட்டம்: விஞ்ஞானிகள் எதிர்ப்பது ஏன்?
- எழுதியவர், கிளாரி மார்ஷல்
- பதவி, பிபிசி சுற்றுச்சூழல், கிராமிய விவகார செய்தியாளர்
உலகின் முதல் ஆக்டோபஸ் பண்ணையை உருவாக்கும் திட்டம், இந்த புகழ்பெற்ற உயிரினங்களின் நலன் குறித்து விஞ்ஞானிகள் மத்தியில் ஆழ்ந்த கவலைகளை எழுப்பியுள்ளது.
ஸ்பெயினின் கேனரி தீவுகளில் வரவுள்ள இந்தப் பண்ணையில் ஆண்டுதோறும் உணவுக்காக ஒரு மில்லியன் ஆக்டோபஸ்கள் வளர்க்கப்படும் என்று பிபிசி பார்த்த ரகசிய ஆவணங்கள் தெரிவிக்கின்றன.
அவை இதுவரை ஒருபோதும் தீவிரமாக வளர்க்கப்பட்டதில்லை. இந்த ஆக்டோபஸ்களை இறைச்சிக்காக கொல்வதற்குப் பயன்படுத்த திட்டமிட்டுள்ள ஐஸ் நீர் கொலை முறை "கொடூரமானது" என்று சில விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.
இந்தத் திட்டத்திற்குப் பின்னால் இருக்கும் ஸ்பானிஷ் பன்னாட்டு நிறுவனம் ஆக்டோபஸ்கள் துன்பப்படும் என்ற கருத்தை மறுக்கிறது.
நியூவா பெஸ்கனோவா என்ற இந்த நிறுவனத்தின் ரகசிய திட்டமிடல் முன்மொழிவு ஆவணங்கள் பிபிசிக்கு யூரோகுரூப் ஃபார் அனிமல்ஸ் என்ற பிரசார அமைப்பால் வழங்கப்பட்டது.
கேனரி தீவுகளின் மீன்பிடிக்கான தலைமை இயக்குநரகத்திற்கு நியூவா பெஸ்கனோவா தனது முன்மொழிவை அனுப்பியுள்ளது, இதுகுறித்து கருத்து கேட்டு பிபிசி தொடர்புகொண்டபோது அந்த நிறுவனம் பதிலளிக்கவில்லை.
உலகம் முழுவதும் ஆக்டோபஸ்கள் இயற்கையான சூழ்நிலையில் இருந்து பானைகளைப் பயன்படுத்தி பிடிக்கப்பட்டு, அவற்றின் உடல் பாகங்கள் உணவாகப் பயன்படுத்தப்படுகின்றன. குறிப்பாக மத்தியத் தரைக்கடல், ஆசியா, லத்தீன் அமெரிக்கா முதலிய பகுதிகளில் ஆக்டோபஸ் பாகங்கள் உண்ணப்படுகின்றன.
பிடித்து வைத்து அவற்றை வளர்ப்பதற்குரிய முறையைக் கண்டுபிடிப்பதற்கான முயற்சி நீண்டகாலமாக நடக்கிறது. ஆக்டோபஸின் வளர்ச்சி நிலையில், ஆரம்பகட்ட தலைப்பிரட்டை நிலையில் அது உயிருள்ளவற்றையே உணவாகக் கொள்கிறது.
அதை வளர்ப்பதற்கு கவனமாகக் கட்டுப்படுத்தப்பட்ட சூழ்நிலை தேவைப்படுகிறது. ஆனால், நீயூவோ பெஸ்கனோவா நிறுவனம் இது தொடர்பான கண்டுபிடிப்பை நிகழ்த்தியுள்ளதாக 2019இல் கூறியது.
தீவிரமாக பண்ணைகள் மூலம் ஆக்டோபஸ்களை வளர்ப்பதற்கு ஏற்கெனவே எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்தத் தொழில் தொடங்கும் முன்பாகவே இதைத் தடை செய்வதற்கு அமெரிக்காவின் வாஷிங்டன் மாநில சட்டமன்றம் முன்முயற்சி எடுத்துள்ளது.
எப்போதும் இருட்டில் தனிமையில் இருக்கும் ஆக்டோபஸ்களை தொட்டியில், மற்ற ஆக்டோபஸ்களோடு சேர்த்து வளர்க்கவும் சில நேரங்களில் பளிச்சென்ற ஒளியில் இவற்றை வைத்திருக்கவும் நியூவோ பெஸ்கனோவா திட்டமிட்டுள்ளது.
கிரான் கனாரியாவில் உள்ள லாஸ் பால்மாஸ் துறைமுகத்தில் இரண்டு அடுக்கு கட்டடத்தில் ஆயிரம் தொட்டிகளில் இவற்றை வளர்க்கத் திட்டமிட்டுள்ளது நியூவா பெஸ்கனோவா நிறுவனம்.
மைனஸ் 3 டிகிரி தட்பவெப்ப நிலையில் தொட்டியில் உள்ள தண்ணீரில் விட்டு இவை கொல்லப்படும் என்று அந்த நிறுவனத்தின் ஆவணங்கள் காட்டுகின்றன.
இதுவரை ஆக்டோபஸ்கள் வணிகரீதியாக வளர்க்கப்பட்டதில்லை என்பதால் அவற்றின் நலன் தொடர்பான விதிகள் இதுவரை உருவாக்கப்படவில்லை.
ஆனால், இந்த ஐஸ் நீர் கொலை முறையில் மீன் இனங்கள் நீண்ட நேரம் துன்பத்தை அனுபவித்து உயிரிழக்கும் என்று ஆய்வுகள் காட்டுகின்றன. விலங்கு நலனுக்கான உலக அமைப்பு, இந்த முறை மீன் நலனில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் என்று கூறியுள்ளது. இந்த ஐஸ் நீர் முறையில் கொல்லப்பட்ட மீன்களை விற்பதில்லை என்று டெஸ்கோ, மோரிசன்ஸ் உள்ளிட்ட சில சூப்பர் மார்க்கெட் குழுமங்கள் முடிவெடுத்துள்ளன.
"ஐஸ் கொண்டு அவற்றைக் கொல்வது மெதுவாகக் கொல்வதாகவே இருக்கும். அது மிகக் கொடூரமாக இருக்கும். அதை அனுமதிக்க கூடாது," என்று டார்ட் மௌத் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த நரம்பியல் வல்லுநர் பீட்டர் ட்சே கூறுகிறார்.
ஆக்டோபஸ்கள் பூனை அளவுக்கு அறிவுத்திறன் உள்ளவை என்றும் அவற்றைக் கொல்வதற்கான சிறந்த முறை, மீனவர்கள் செய்வது போல தலையில் தடியால் அடிப்பதுதான் என்றும் அவர் மேலும் கூறுகிறார்.
அமெரிக்கா, தென் கொரியா, ஜப்பான் போன்ற நாடுகளில் விற்பதற்கு ஆண்டுக்கு 3,000 டன் ஆக்டோபஸ் உற்பத்தி செய்ய விரும்புகிறது அந்த நிறுவனம். இதற்கு 10 லட்சம் ஆக்டோபஸ்களை உற்பத்தி செய்யவேண்டியிருக்கும். எனவே ஒவ்வொரு கன மீட்டரிலும் 10-15 ஆக்டோபஸ்கள் வாழ வேண்டியிருக்கும் என்கிறது கம்பேஷன் இன் வேர்ல்ட் ஃபார்மிங் என்ற அமைப்பு. இப்படி வளர்க்கும்போது 10-15 சதவீதம் இறந்துவிட வாய்ப்புண்டு என்று நியூவா பெஸ்கனோவா கருதுகிறது.
வலியையும் மகிழ்ச்சியையும் உணரும் உயிரினங்கள்
லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸ் கல்வி நிறுவனத்தைச் சேர்ந்த இணைப் பேராசிரியர் ஜொனாதன் பிர்ச் 300 மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளைப் படித்தார். அவை ஆக்டோபஸ்கள் வலியையும் மகிழ்ச்சியையும் உணரக்கூடியவை என்று காட்டுகின்றன என்கிறார் அவர்.
ஆக்டோபஸ் நலன்களைப் பாதுகாக்கும் வகையில் அவற்றை பண்ணையில் வளர்ப்பது சாத்தியமில்லை என்றும் ஆய்வகத்தில் அவற்றை ஐஸ் நீரைப் பயன்படுத்திக் கொல்வது ஏற்கத்தக்க முறை அல்ல என்றும் ஜொனாதன் பிர்ச் கூறுகிறார்.
நிறைய எண்ணிக்கையிலான ஆக்டோபஸ்களை நெருக்கமாக வைத்து வளர்க்கக்கூடாது. இப்படிச் செய்வது அவற்றுக்கு மன அழுத்தத்தையும் அவற்றுக்கு இடையே சண்டையையும் ஏற்படுத்தி நிறைய ஆக்டோபஸ்கள் இறப்பதற்குக் காரணமாகும். 10-15 சதவீத இறப்பு என்பது ஏற்கத்தக்கதல்ல என்றும் அவர் கூறுகிறார்.
“ஆக்டோபஸ் அல்லது வேறு எந்த விலங்குகளையும் எங்கள் பண்ணையில் உருவாக்கும்போது கடைபிடிக்கவேண்டிய அந்த விலங்குகளின் நலன் தொடர்பான அளவு கோல் அவை நல்ல முறையில் கையாளப்படும் என்று உத்தரவாதம் செய்யும்.
அதைப்போல அந்த விலங்கை கொல்லும்போதும் வலியோ, பாதிப்போ அந்த விலங்குக்கு ஏற்படுவது தவிர்க்கப்படும்,” என்று பிபிசிக்கு அளித்த அறிக்கையில் தெரிவித்துள்ளது நியூவா பெஸ்கனோவா.
இயற்கை சூழ்நிலையில், தங்கள் பகுதி குறித்த ஆக்ரோஷமுள்ள, திறமையான வேட்டையாடிகள். ஆனால், அவற்றுக்குப் பண்ணையில் தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்படும் உலர் உணவைத் தரப்போவதாகக் கூறுகிறது நியூவா பெஸ்கனோவா. இந்த உணவு ஏற்கெனவே பிடிக்கப்பட்ட மீன்களின் கழிவு உள்ளிட்டவற்றில் இருந்து தயாரிக்கப்படும்.
தொட்டிகள் அருகில் உள்ள விரிகுடாவில் இருந்து குழாய் மூலம் கடல் நீரால் நிரப்பப்படும். ஆக்டோபஸ்களின் வாழ்க்கையின் வெவ்வேறு கட்டங்களுக்கு, தொட்டிகள் வெவ்வேறு அளவுகளில் இருக்கும், உப்புத்தன்மையும் வெப்பநிலையும் நன்கு கட்டுப்படுத்தப்படும்.
100 ஆக்டோபஸ்களின் ஆரம்பக் குஞ்சுகள் - 70 ஆண்களும் 30 பெண்களும் - வடக்கு ஸ்பெயினின் கலீசியாவில் உள்ள பெஸ்கனோவா பயோமரைன் சென்டரில் இருந்து எடுக்கப்படும்.
இந்த உயிரிகள் தற்போது "வீட்டு வளர்ப்பு" நிலையை அடைந்துள்ளன என்றும் இந்த நிறுவனம் கூறுகிறது.
CiWF-இன் எலினா லாரா, கேனரி தீவுகளின் அதிகாரிகளை பண்ணை கட்டுவதைத் தடுக்குமாறு அழைப்பு விடுத்தார், இது "இந்த அறிவார்ந்த, உணர்வுள்ள, கவர்ச்சிகரமான உயிரினங்களுக்குத் தேவையற்ற துன்பத்தை ஏற்படுத்தும்," என்று அவர் கூறினார்.
இரோப் ஃபார் அனிமல்சின் தலைமை நிர்வாக அதிகாரி ரெய்னகீ ஹேம்லீயர்ஸ் மேலும் கூறுகையில், ஐரோப்பிய ஆணையம் தற்போது அதன் விலங்கு நலச் சட்டத்தை மதிப்பாய்வு செய்து வருவதாகவும், "பயங்கரமான துன்பத்தைத் தவிர்க்க" ஓர் "உண்மையான வாய்ப்பு" இருப்பதாகவும் கூறினார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்