குளிர் காலத்தில் ஒரே குடும்பத்தில் சிலர் மட்டும் அதிக குளிரை உணர்வது ஏன்?

    • எழுதியவர், சந்தன் குமார் ஜஜ்வாரே
    • பதவி, பிபிசி செய்தியாளர்

குளிர்காலத்தில் பல பகுதிகளில் மூடுபனி ஒரு பெரிய பிரச்னையாக மாறுகிறது. இதன் தாக்கம் பெரும்பாலும் ரயில்கள், விமானப் பயணம் மற்றும் சாலைகளில் உணரப்படுகிறது. அதேபோல, குளிர்காலத்தில் டெல்லி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள மக்களுக்கு காற்றின் தரம் (AQI) ஒரு பிரச்னையாக அமைகிறது.

ஆனால் சிலருக்கு, குளிர்காலம் என்றாலே ஒரு பிரச்னையாக இருக்கிறது. குளிர் காலத்தில் குளிப்பதா, வேண்டாமா என்பது பற்றிய மீம்ஸ், கதைகள் மற்றும் விவாதங்கள் சமூக ஊடகங்களிலும், நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் உரையாடல்களிலும் பரவலாகக் கேட்கப்பட்டு மீண்டும் மீண்டும் பேசப்படுகின்றன.

ஒருவர், "வாழ்க்கையில் முயற்சி செய்வதை ஒருபோதும் கைவிடக்கூடாது. கடந்த 15 நாட்களாக நான் குளிக்க முயற்சி செய்து வருகிறேன், ஆனால் என்னால் அவ்வாறு செய்ய முடியவில்லை. ஆனாலும், நான் இந்த முயற்சியைத் தொடர்கிறேன்" எனக் கூறுகிறார்.

சிலர் குளிர்காலத்தில் குளிக்காமல் இருக்கும் பழக்கத்தை 'குளிப்பதால்' தண்ணீர் வீணாகிறது என்ற வாதத்தோடு இணைத்து தங்கள் செயலை நியாயப்படுத்த முயற்சிக்கிறார்கள். மற்றவர்கள் நேரமின்மை அல்லது பிற காரணங்களைச் சாக்குப்போக்காகக் கூறுகிறார்கள்.

இந்தக் கட்டுரையில், ஒரே குடும்பத்தில் அல்லது ஒரே பகுதியில் வசிக்கும் சிலர் ஏன் அதிகமாகவும், சிலர் ஏன் குறைவாகவும் குளிரை உணர்கிறார்கள் என்பதைப் பார்க்கலாம்.

குளிர்காலத்தில் டெல்லி போன்ற நகரங்களுக்கு, உத்தராகண்ட் அல்லது இமாச்சலப் பிரதேசத்திலிருந்து வருபவர், கேரளா அல்லது தமிழ்நாட்டிலிருந்து வருபவர்களுடன் ஒப்பிடும்போது அதிக குளிரை உணரமாட்டார்.

இதற்கான காரணமும் தெளிவாக உள்ளது. சிறுவயது முதல் மக்கள் எந்த மாதிரியான காலநிலையில் வாழ்கிறார்கள், வளர்கிறார்கள் என்பதைப் பொறுத்து, அவர்களுடைய உடலும் பழக்கவழக்கங்களும் அமைகின்றன.

குளிர்காலத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அல்லது ஒரே பகுதியைச் சேர்ந்தவர்களில், சிலர் குளிரால் நடுங்குவதையும், சிலர் சாதாரணமாக இருப்பதையும் நாம் காண முடியும்.

எந்தெந்த நபர்கள் குளிரை அதிகமாக உணர்வார்கள்?

சிலர் அதிக குளிரை உணர்வதற்கும், சிலர் அதை உணராமல் இருப்பதற்கும் பின் உள்ள மிகப்பெரிய காரணம் என்ன?

டெல்லியில் உள்ள அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகத்தின் (AIIMS) சமூக மருத்துவத் துறையின் பேராசிரியர் சஞ்சய் ராய், "ஒவ்வொரு நபரின் உடலமைப்பும் வேறுபட்டது. எனவே, சிலர் அதிகமாகவும், சிலர் குறைவாகவும் குளிரை உணரலாம். உங்கள் உடல் குளிரை எவ்வாறு எதிர்கொள்கிறது என்பது நீங்கள் எவ்வாறு வளர்ந்திருக்கிறீர்கள் என்பதைப் பொறுத்தது" என்று கூறுகிறார்.

"உங்கள் உடலை நீங்கள் எப்படி தயார்படுத்துகிறீர்கள் என்பதைப் பொறுத்துதான் அது எப்படி நடந்துகொள்கிறது என்பது தீர்மானிக்கப்படும். ஒருவர் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ குளிரை உணர இதுவே அடிப்படைக் காரணம்."

"முன்பு, வெப்பமூட்டிகள் (Geysers) இல்லாத காலத்தில், குளிர்காலத்தில் கூட நாம் சாதாரண தண்ணீரில் குளிப்போம். பின்னர், உடல் வெந்நீருக்கு பழகிவிட்டதால், குளிர்காலத்தில் வெந்நீரில் குளிப்போம். நம் குழந்தைகளுக்கு வேறு ஒரு பழக்கம் உருவாகியிருக்கலாம், அதனால் குளிர் கணிசமாகக் குறைந்த பிறகும் அவர்கள் வெந்நீரில் குளிப்பார்கள்" என்று சஞ்சய் ராய் கூறுகிறார்.

நம்மைச் சுற்றியுள்ளவர்களிடமோ அல்லது நம் குடும்பத்தினரிடமோ இந்தப் பழக்கத்தைக் காணலாம். அவர்களில் சிலர் குளிர்காலத்திலும் சாதாரண நீரில் குளிப்பார்கள், சிலருக்கு குளிப்பதற்கு வெந்நீர் தேவைப்படும்.

மிகவும் குளிராக இருக்கும்போது குளிப்பதைத் தவிர்ப்பவர்கள் பலர் உள்ளனர்.

டெல்லியின் சர் கங்கா ராம் மருத்துவமனையின் மூத்த மருத்துவரான மொஹ்சின் வாலி, "மற்றவர்களை விட தங்களுக்கு அதிகம் குளிர்வதாக ஒருவர் கூறினால், அது பெரும்பாலும் சோம்பல் மற்றும் மனநலம் சார்ந்த சிக்கல்கள் காரணமாக இருக்கலாம்" என்கிறார்.

"தைராய்டு நோயாளிகள், மிகவும் மெலிந்தவர்கள், நீரிழிவு நோயாளிகள் அல்லது ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்திருக்க பீட்டா பிளாக்கர் (Beta Blocker) போன்ற மருந்துகளை உட்கொள்பவர்கள் அதிக குளிரை உணரக்கூடும்."

"இது தவிர, ஒரு ஆரோக்கியமான நபர் அதிக குளிரை உணர்கிறேன் என்று சொன்னால், அவரது உடல் உற்பத்தி செய்யும் வெப்பத்தின் அளவு குறைவாக உள்ளது என அர்த்தம்" என்று அவர் கூறுகிறார்.

'உடல் தன்னைத் தயார்படுத்திக் கொள்கிறது'

'வெப்ப உற்பத்தி' என்பது உங்கள் உடல் எவ்வளவு வெப்பத்தை உற்பத்தி செய்கிறது என்பதைக் குறிக்கிறது. இது உடற்பயிற்சி, செயல்பாடு (Activity) மற்றும் உடல் கொழுப்பு போன்ற காரணிகளைப் பொறுத்தது.

நிபுணர்களின் கூற்றுப்படி, உடல் ஆரோக்கியத்தோடு இருக்கும் இரண்டு சகோதரர்களில் ஒருவருக்கு அதிக குளிர் இருந்தால், அவரது உடலின் வெப்ப உற்பத்தி குறைவாக இருக்கும். இதற்கு அடிப்படைக் காரணம் குறைவான உடல் செயல்பாடு.

"யாராவது அழுகிய அல்லது நச்சு உணவை சாப்பிட்டிருந்தால், உடல் அதை வயிற்றில் இருந்து வெளியேற்ற விரும்பும். அப்போது அவர் வாந்தி எடுக்கத் தொடங்குவார். ஒருவர் மூக்கில் ஏதாவது விசித்திரமாக உணர்ந்தால், மூக்கு அதை வெளியேற்ற விரும்பும். உடனே அவர் தும்மத் தொடங்குவார்" என்று டாக்டர் சஞ்சய் ராய் விளக்குகிறார்.

"உடல் எல்லா வகையான சூழலுக்கும் தன்னைத் தயார்படுத்திக் கொள்கிறது. மிகவும் குளிராக இருந்தால், அதை எதிர்த்துப் போராட உடல் தன்னைத் தயார்படுத்திக் கொண்டே இருக்கும். உங்கள் உடல் எவ்வாறு அதற்கு தயாராகும் என்பது உங்கள் பழக்கவழக்கங்களைப் பொறுத்தது" என சஞ்சய் ராய் கூறுகிறார்.

வேறு காரணங்கள் என்ன?

சிலர் கோடை நாட்களில் ஒன்றுக்கு மேற்பட்ட முறை குளிப்பார்கள், அது அவர்களின் பழக்கமாகிவிடும்.

குளிர்காலத்தில் சிலர் குளிப்பதைத் தவிர்க்கிறார்கள். அதே நேரத்தில் சிலர் கை, கால்களைக் கழுவுவது அல்லது முடியை நனைப்பது குளிப்பதற்குச் சமம் என்று கருதுகிறார்கள்.

புனேவில் உள்ள டிஒய் பாட்டீல் மருத்துவக் கல்லூரியின் பேராசிரியர் அமிதவ் பானர்ஜி, "அத்தகைய நபர்கள் அதிக குளிரை உணர்வது என்பது பல காரணிகளைப் பொறுத்தது. உதாரணமாக, அந்த இடத்தின் வெப்பநிலை, நீங்கள் என்ன உடைகளை அணிந்திருக்கிறீர்கள், எவ்வளவு தண்ணீர் குடிக்கிறீர்கள் (ஏனெனில் தண்ணீர் உடல் வெப்பநிலையை ஒழுங்குபடுத்துகிறது), மற்றும் நீங்கள் உடல் ரீதியாக எவ்வளவு சுறுசுறுப்பாக இருக்கிறீர்கள் போன்றவை" என்று கூறுகிறார்.

"ஒரே பகுதியில் வாழும் வெவ்வேறு நபர்கள் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ குளிரை உணர்வதற்கு மிகப்பெரிய காரணம் அவர்களின் பழக்கங்கள் தான். ஆனால் ஒவ்வொரு நபரின் உடலும் தனித்துவமானது மற்றும் தொடர்ந்து செயல்படுவதால், அதிகமாகவோ அல்லது குறைவாகவோ குளிரை உணர்வது என்பது நபர்களைப் பொருத்து மாறுபடும்" என்று அவர் கூறுகிறார்.

"உடலில் தைராய்டு ஹார்மோன் குறைவாக உள்ள ஒருவர் மற்றவர்களை விட அதிக குளிரை உணரக்கூடும். அதேபோல், உடலில் அதிக கொழுப்பு உள்ள ஒருவர் குறைந்த குளிரை உணரக்கூடும்" என்று அவர் கூறுகிறார்.

"70-80 வயதுடைய முதியவர்கள் அதிக உடல் உழைப்பைச் செய்ய முடியாது, அதாவது அவர்களின் உடல் செயல்பாடு குறைகிறது, எனவே அத்தகையவர்கள் அதிக குளிரை உணர்கிறார்கள்" என்று அமிதவ் பானர்ஜி கூறுகிறார்.

குளிரை உணர்வது, உடல் நிறை குறியீட்டெண் (BMI) மற்றும் உடலின் வளர்சிதை மாற்ற விகிதத்தையும் பொறுத்தது. அதிக தசை நிறை (Muscle mass) உள்ளவர்கள் குறைவாக குளிரை உணரலாம்.

இது மட்டுமல்லாமல், நீங்கள் அணியும் ஆடையும் எவ்வளவு குளிரை உணர்வீர்கள் என்பதை தீர்மானிக்கிறது. உள்ளங்கைகள், கால்கள் மற்றும் தலை போன்ற உடலின் பாகங்கள் மூடப்படாமல் இருக்கும்போது, உடல் வெப்பம் வெளியேறி, வெப்பநிலை குறையும். இதனால் நீங்கள் இன்னும் அதிக குளிரை உணர்வீர்கள்.

இது தவிர, சிலர் குளிர்காலத்தில் தங்கள் உடல் செயல்பாட்டைக் குறைத்துக் கொள்கிறார்கள். சிலர் நீண்ட நேரம் போர்வையை போர்த்திக் கொண்டு இருப்பார்கள். இது அவர்களின் உடலை சூடாக வைத்திருக்கும், ஆனால் அவர்கள் குளிரை எவ்வாறு பொறுத்துக் கொள்கிறார்கள் என்பது மாறுபடும்.

எனவே நீங்கள் ஆரோக்கியமாக இருந்தாலும் கூட இத்தகைய பழக்கத்தை வளர்த்துக் கொண்டால், குளிர்காலத்தில் குளிரைத் தாங்க முடியாமல் குளியலறையின் தரையில் தண்ணீரை அதிகமாகக் கொட்டுவீர்கள், அதனால் வெளியே இருப்பவர்கள் நீங்கள் 'வழக்கம் போல' குளிக்கிறீர்கள் என்று நினைப்பார்கள்.

ஆனால் மருத்துவர்களின் கூற்றுப்படி, அதைத் தவிர்ப்பதற்கான சிறந்த வழி உங்கள் பழக்கவழக்கங்களை மாற்றுவதாகும்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு