You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இந்தியாவுக்கு பலம் சேர்த்த மிக்-21 போர் விமானம் மீது 'பறக்கும் சவப்பெட்டி' என்ற விமர்சனம் ஏன்?
கடந்த பல்லாண்டுகளாக இந்திய விமானப்படையில் பெரும் பங்கு வகித்த மிக்-21 வகை போர் விமானம் வரும் வெள்ளிக்கிழமையுடன் ஓய்வு பெற உள்ளது. சோவியத் யூனியனால் உருவாக்கப்பட்ட இந்த வகை விமானம், இந்திய விமானப்படையில் திறம்பட பங்கு வகித்தது எப்படி? பறக்கும் சவப்பெட்டி என்ற விமர்சனத்துக்கு இந்த வகை விமானம் உள்ளானது ஏன்? இந்த காணொளியில் விளக்கமாக பார்க்கலாம்.
"ஒரு பறவை வானத்தை நேசிப்பது போல மிக்-21-ல் பறப்பது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. சண்டையில் அது என்னை பாதுகாத்தது. பருந்து வரும்போது புத்திசாலித்தனமான பறவை தப்பிச் செல்லும். அப்படித்தான் மிக்-21 எனக்கு இருந்தது" என்கிறார் ஓய்வுபெற்ற ஏர் மார்ஷலான பிரித்வி சிங் பிரார்.
இவர் 1960-ல் விமானப்படையில் சேர்ந்தார்.1966-ல் மிக்-21-ஐ இயக்க தொடங்கிய அவர் அடுத்த 26 ஆண்டுகளுக்கு அதை ஓட்டினார்.
இந்தியாவின் மிக பிரபலமான போர் விமானமாக இருந்த மிக்-21, ஒரு கட்டத்தில் இந்திய விமானப்படையில் மூன்றில் ஒரு பங்கை கொண்டிருந்தது. போற்றுதலுக்கு உரியதாக இருந்த இந்த வகை விமானம், பிற்காலத்தில் கடுமையான விமர்சனங்களையும் சந்தித்தது. தொடர்ச்சியான கொடிய விபத்துகளால் பறக்கும் சவப்பெட்டி என்ற மோசமான பெயரையும் பெற்றது.
அதிகாரப்பூர்வ தரவுகளின்படி, 1966 மற்றும் 1980க்கு இடையில், இந்தியா பல்வேறு மாடல்களில் 872 மிக் போர் விமானங்களை வாங்கியது.
1971‑72 மற்றும் ஏப்ரல் 2012-க்கு இடையில், 482 மிக் விபத்துகள் பதிவாகி உள்ளன. அதில் 171 விமானிகள், 39 பொதுமக்கள், எட்டு சேவை ஊழியர்கள் மற்றும் ஒரு விமானக் குழு நபர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்துகள் மனிதத் தவறு மற்றும் தொழில்நுட்பக் குறைபாடுகளால் ஏற்பட்டவை. அதன் பிறகு தரவுகளில் அதிகாரப்பூர்வ புதுப்பிப்பு எதுவும் இல்லை.
"மிக்-21 தனித்துவமான பாரம்பரியத்தைக் கொண்டுள்ளது. இந்த போர் விமானம் மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக இந்திய விமானப்படையின் முக்கிய தூணாக இருந்தது. 1965 பாகிஸ்தான் போருக்குப் பிறகு இந்தியாவின் அனைத்து மோதல்களிலும் பல்வேறு வகையில் பணியாற்றியது" என்கிறார் புவிசார் அரசியல் சிக்கல் ஆலோசனை நிறுவனமான யூரேசியா குழுமத்தின் ஆய்வாளர் ராகுல் பாட்டியா.
சோவியத் யூனியனால் வடிவமைக்கப்பட்ட இந்த போர் விமானம் முதன்முதலில் 1963-ல் அறிமுகப்படுத்தப்பட்டது. ஊசியான மூக்கு போன்ற அமைப்பு மற்றும் மெல்லிய உருவம் கொண்ட இந்த போர் விமானம், உயரத்தில் அதிவேகமாக பறக்கும் திறன் கொண்டது. அதே போல வானத்தில் அதிவேகமாக ஏறக்கூடியது.
மிகவும் பிரபலமாக இருந்த காலகட்டத்தில் சோவியத் யூனியன், சீனா, இந்தியா, எகிப்து, இராக் உட்பட 50-க்கும் மேற்பட்ட நாடுகள் இதை பயன்படுத்தின. அதன் மூலம் வரலாற்றில் மிகவும் பரவலாக இயக்கப்படும் சூப்பர்சோனிக் ஜெட் விமானம் என்ற பெருமையும் இதற்கு உண்டு.
1960களின் நடுப்பகுதியில் அரசு நிறுவனமாக இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் உரிமம் பெற்று இதை உருவாக்க தொடங்கியவுடன், இந்திய விமானப்படையில் முக்கிய அம்சமாக மிக்-21 விமானங்கள் மாறின.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு