You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இந்திய கழிவறை - மேற்கத்திய கழிவறை: யாருக்கு எந்த முறை உகந்தது?
- எழுதியவர், க. சுபகுணம்
- பதவி, பிபிசி தமிழ்
இந்தியா மற்றும் ஆசியாவின் பெரும்பகுதி முழுவதும், கழிவறை செல்வது பற்றிச் சிந்தித்தவுடன் பலருக்கும் கால்களை மடக்கி உட்காரும் முறைதான் மனக் கண்ணில் வரும்.
ஆனால், மேற்கத்திய முறையான நாற்காலியில் அமர்வதைப் போன்ற வகையில் உட்கார்ந்து மலம் கழிக்கும் கழிவறைகளும் தற்போது இந்தியா மட்டுமின்றி ஆசிய கண்டம் முழுவதுமே கணிசமாக பயன்பாட்டில் உள்ளன.
இந்த நிலையில் கழிவறை பயன்பாட்டில் இந்திய பாணி அல்லது மேற்கத்திய பாணி ஆகிய இரண்டில் எது ஆரோக்கியத்திற்கு உகந்தது? என்கிற விவாதம் தொடர்ச்சியாக எழுகிறது.
இதுகுறித்து கடந்த ஜூலை மாதம் அமெரிக்காவின் நேஷனல் லைப்ரரி ஆஃப் மெடிசினில் வெளியான ஓர் ஆய்வு, அறிவியல்பூர்வ பதிலை வழங்குகிறது.
இரண்டுமே மலம் கழிக்க ஏதுவான பாணியாக இருப்பதாகவும் இந்திய பாணி, மேற்கத்திய பாணி இரண்டிலுமே சாதகங்களும் பாதகங்களும் இருப்பதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
மலம் கழிக்கும் முறையின் பின்னுள்ள அறிவியல்
மலம் கழித்தல் என்பது மிகச் சாதாரண விஷயமாக தெரியலாம். ஆனால் உடலின் உட்புறத்தில், "தசைகள், உடல் இயக்கத்தின் கோணங்கள் ஆகியவற்றின் சிக்கலான அமைப்பைப் பொறுத்து, எளிதில் வெளியேறுவதும், சிரமப்படுவதும் இருப்பதாக" ஆய்வு கூறுகிறது.
இதில், மலம் வெளியேறும் பாதையான மலக்குடல்வாய் எந்த அமைப்பில் இருக்கிறது என்பதும் பங்களிப்பதாகக் கூறும் மூத்த இரைப்பை குடல் மருத்துவர் கயல்விழி ஜெயராமன், "இந்த மலக்குடல்வாய் பாதை நேர் கோணத்தில் இருக்கும்போது மலம் எளிதாக வெளியேறுவதாக ஆய்வுகள் கூறுகின்றன. நாற்காலி போன்ற மேற்கத்திய பாணி கழிவறையில் உட்கார்ந்திருக்கும் போது இந்தப் பாதை வளைந்திருப்பதால் சிலர் மலம் கழிப்பதில் சற்று சிரமங்களைச் சந்திக்கலாம்" என்றும் கூறினார்.
அதாவது ஜூலை மாதம் வெளியான ஆய்வு முடிவுகள்படி, மலக்குடல்வாய் பாதை, மலம் கழிக்கும்போது நேராக்கப்பட வேண்டும்.
''அதுதான் இந்திய பாணி டாய்லெட் பயன்பாட்டில் நடக்கிறது." என்கிறார் கயல்விழி ஜெயராமன்
அதாவது, ஒருவர் குத்தவைத்து அமரும்போது, தொடைகள் வயிற்றுடன் அழுந்துகின்றன. அப்போது உடல் இயல்பாகவே முன்னோக்கிச் சாய்கிறது. அதனால், "தசைகள் தளர்வடைவதாகவும் மலக்குடல்வாய் பாதை நேராவதாகவும்" கூறுகிறார் மருத்துவர் கயல்விழி.
"மாறாக, மேற்கத்திய பாணி கழிவறையில், ஒருவர் நிமிர்ந்து உட்கார்ந்திருக்கும் போது தசைகள் இறுக்கமாகவும், மலக்குடல்வாய் வளைந்தும் இருப்பதால், மலத்தை வெளியேற்ற கூடுதலாக அழுத்தம் கொடுத்து வேண்டியிருப்பதாக" ஆய்வு கூறுகிறது.
இருப்பினும், இதை மட்டும் அடிப்படையாக வைத்து மேற்கத்திய பாணி கழிவறை உடல் ஆரோக்கியத்திற்கு உகந்தது அல்ல என்று கூறிவிட முடியாது என்கிறார் மருத்துவர் கயல்விழி.
அவரது கூற்றுப்படி, இரண்டு விதமான கழிவறைகளுமே பல்லாண்டு காலமாகப் பயன்பாட்டில் இருந்து வருகின்றன. "ஒருவேளை மேற்கத்திய பாணியில் பல நடைமுறைச் சிக்கல்கள் இருந்திருந்தால் அதன் பயன்பாடு இவ்வளவு காலம் நீடித்திருக்காது."
அதோடு, "முதியவர்கள், உடல் உபாதைகளால் அவதிப்படுபவர்கள், மாற்றுத் திறனாளிகள் ஆகியோருக்கு மேற்கத்திய பாணி கழிவறை பயனுள்ளதாக இருக்கிறது" என்று அவர் தெரிவித்தார்.
மலம் கழிக்க சிறந்த முறை எது?
மலம் கழிப்பதைப் பொருத்தவரை, "இந்திய பாணியில் முழுமையாகக் குத்தவைப்பது, மேற்கத்திய பாணியில் நாற்காலி வடிவத்தில் உட்காருவது மற்றும் அதே பாணியில், கால்கள் மட்டும் சற்று உயரமாக இருக்கும் வகையில் முக்காலி அல்லது ஸ்டூலை காலுக்கு அடியில் பயன்படுத்திக் கொள்வது ஆகிய மூன்று வழிகள் உலகளவில் பொதுவாகப் பின்பற்றப்படுகின்றன." என்கிறார் மருத்துவர் கயல்விழி.
இதில் எந்த வகையிலும் பெரியளவில் இடையூறுகள் ஏற்படுவதில்லை எனக் குறிப்பிட்ட அவர், இருப்பினும் "நாற்காலி வடிவத்தில் உட்கார்ந்தாலும், கால்களை உயர்த்தி மடக்கியபடி உட்காருவது மலம் கழிப்பதை எளிமையாக்குவதால், மேற்கத்திய பாணியில்கூட இப்படியான மாறுதல்களைச் செய்து கொள்கிறார்கள்," என்று விளக்கினார்.
அதாவது, இந்திய பாணியில் மலம் கழிக்கும்போது மலக்குடல்வாய் நேர்க்கோணத்தில் இருக்கிறது. அதனால், மலம் வெளியேறுவதில் பெரிய பிரச்னை எதுவும் இருப்பதில்லை. ஆனால், நாற்காலி வடிவ கழிவறையைப் பயன்படுத்தும்போது, சில சிரமங்கள் ஏற்படுவதால், அதைத் தவிர்க்க கால்களை ஸ்டூல் வைத்து உயர்த்திக் கொள்ளும் பழக்கம் பலராலும் பின்பற்றப்படுகிறது.
மேலும், ஆய்வில் பங்கெடுத்த தன்னார்வலர்கள், "குந்துதல் முறையில், மலத்தை வெளியேற்றுவதற்குக் குறைந்த அளவிலான உழைப்பையே செலுத்த வேண்டியுள்ளது. மேற்கத்திய பாணியில் இருக்கக்கூடிய, சற்றுக் கூடுதல் அழுத்தம் கொடுத்து மலத்தை வெளியேற்ற வேண்டிய சூழல், இதில் இருக்கவில்லை" எனவும் தெரிவித்துள்ளனர்.
அதோடு, வெளிப்புற அழுத்தம் அதிகப்படியாக கொடுக்கப்படும்போது, அந்த அசௌகரியம், மூல நோய், மலக்குடல் இறக்கம், மலப்புழையில் பிளவுகளை உண்டாக்குவது போன்ற அபாயங்களுக்கு வழிவகுக்கலாம் என்றும் ஆய்வு முடிவு எச்சரிக்கிறது.
இது மட்டுமின்றி, எந்தவித இடையூறுமின்றி மலம் எளிதாக வெளியேறுவதால் இந்திய பாணியிலான குந்துதல் முறை, ஒருவர் கழிவறையில் செலவழிக்கும் நேரத்தையும் குறைப்பதாக அந்த ஆய்வு தெரிவிக்கிறது.
ஜர்னல் ஆஃப் அட்வான்ஸ்டு மெடிக்கல் அண்ட் டென்டல் சயின்சஸ் ரிசர்ச் ஆய்விதழில் வெளியான ஒரு கட்டுரை, இந்திய பாணி கழிவறைகளைப் பயன்படுத்துவதால் மலச்சிக்கல் ஏற்படுவதில்லை எனவும் செரிமானம் சரியான முறையில் நடப்பதாகவும் கூறுகிறது.
அதேவேளையில், "இந்திய பாணி கழிவறைகள், முதியவர்கள், உடல் இயக்கக் குறைபாடுகளைக் கொண்டவர்கள் பயன்படுத்துவதில் சிரமங்கள் இருப்பதாகச் சில ஆய்வுகள் கூறுகின்றன. மேலும், மேற்கத்திய கழிவறைகள் அல்லது ஸ்டூல் போன்ற அமைப்புகளைப் பயன்படுத்தி இந்திய கழிவறைகளைப் பயன்படுத்துவது அவர்களுக்கு வசதியாக இருப்பதை நாமே பல வீடுகளிலும் பார்க்கிறோம்.
எனவே, எந்தக் கழிவறையைப் பயன்படுத்தினாலும், உணவுமுறையை, சரியான அளவுகளில் ஊட்டச்சத்துகளை உட்கொள்வதற்கு ஏற்பத் திட்டமிடுவதும், எந்தச் சிக்கலுமின்றி மலம் வெளியேறுவதை உறுதி செய்வதில் முக்கியப் பங்கு வகிக்கிறது," என்று கூறுகிறார் மருத்துவர் கயல்விழி.
இந்திய கழிவறை வடிவங்களில் மேற்கத்திய பாணி
கடந்த 2014-ஆம் ஆண்டு இந்தியாவில் தொடங்கப்பட்ட தூய்மை இந்தியா திட்டத்தின்கீழ், திறந்தவெளி மலம் கழித்தல் இல்லாத சமூகங்களை உருவாக்க முயல்வதன் மூலம் சுகாதார மேம்பாட்டில் கவனம் செலுத்துவதாக மத்திய அரசு அறிவித்தது.
அந்தத் திட்டம், "மாற்றுத் திறனாளிகள், முதியவர்கள் ஆகியோரும் எளிதில் அணுகுவதற்கு ஏற்ற கழிவறை வடிவங்களைக் கருத்தில் கொண்டிருந்ததாகவும்" அதற்கெனவே, 'குறைபாடுகள் உள்ளோர் அணுக ஏதுவான வீட்டு சுகாதாரம் பற்றிய கையேட்டில்' இந்திய பாணியிலான குந்துதல் முறைக்கு மாறாக "இரண்டு சிக்கனமான கழிவறை வடிவமைப்புகள் பரிந்துரைக்கப்பட்டதாகவும்" நேஷனல் மெடிக்கல் ஜர்னல் ஆஃப் இந்தியா என்ற ஆய்விதழில் வெளியான கட்டுரை கூறுகிறது.
ஆனால், "அந்த மாற்றுத் தீர்வுகள், அதாவது மேற்கத்திய பாணியிலான நாற்காலி போன்ற கழிவறை வடிவங்கள், தூய்மை இந்தியா திட்டத்தில் பயன்படுத்தப்படவில்லையோ என்ற சந்தேகத்தை கள ஆய்வுகள் எழுப்பியிருப்பதாக" கட்டுரையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தக் கட்டுரையின் கூற்றுப்படி, இந்திய பாணி கழிவறை அனைவருக்கும் ஏற்படையதல்ல மற்றும் மேற்கத்திய பாணியிலான கழிவறைகளின் தேவையும் சமூகத்தில் இருக்கவே செய்கிறது.
அதற்காக, "ஸ்டூல் போன்றவற்றைப் பயன்படுத்தி இந்திய கழிவறைகளை மேற்கத்திய பாணிக்கு ஒத்த வகையில் மறுவடிவமைப்பு செய்து, பயன்படுத்தும் முறையைப் பல குடும்பங்களில் நம்மால் அவதானிக்க முடிகிறது. அதற்கேற்ற உபகரணங்களும் சந்தையில் கிடைக்கின்றன." என்று கூறுகிறார் மருத்துவர் கயல்விழி.
மேற்கத்திய பாணியில் காலுக்கு ஸ்டூல் வைப்பது உதவுமா?
இந்திய பாணியிலான குந்துதல் முறையில் மலம் கழித்து முடிக்கும்போது ஏற்படும் தன்னிறைவு, மேற்கத்திய பாணியில் அனைத்து நேரங்களிலும் ஒருவருக்கு ஏற்படுவதில்லை என்று ஜூலை மாதம் வெளியான ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது, "மலம் முழுமையாக வெளியேறவில்லையோ என்ற உணர்வை ஏற்படுகிறது. இது மலச்சிக்கல், செரிமான அசௌகரியத்துடன் தொடர்புடையது. இந்த உணர்வு மேற்கத்திய கழிவறைகளைப் பயன்படுத்தியவர்களிடம் அதிகம் தென்பட்டது," என்றும் அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
அதேவேளையில், இத்தகைய அசௌகரியங்களைச் சமாளிக்க "கால்களுக்கு ஸ்டூல் வைத்துக் கொள்வது ஓரளவு உதவுவதாக" கூறுகிறார் மருத்துவர் கயல்விழி.
"கால்களை ஒரு சிறிய ஸ்டூலில் வைத்து உயரப்படுத்திக் கொள்வது, மலக்குடல்வாய் கோணத்தை மேம்படுத்துகிறது. இதனால், மேற்கத்திய பாணியில் ஏற்படக்கூடிய அசௌகரியங்களை குறைக்கலாம் என்று ஆய்வுகள் கூறுகின்றன" என்றும் அவர் தெரிவித்தார்.
கழிவறைகளும் வாழ்க்கை முறை மாற்றங்களும்
இந்தியாவில் குந்துதல் நிலையிலான கழிவறை பயன்பாட்டு முறையில் இருந்து நாற்காலி வடிவ கழிவறை முறைக்கு நிகழ்ந்த மாற்றம், உலகமயமாக்கப்பட்ட அழகியல் வடிவமைப்புகளுடன் தொடர்புடையது.
கடந்த சில ஆண்டுகளாக நாற்காலி வடிவ கழிவறைகளே, பெரும்பாலான புதிய அடுக்குமாடிக் குடியிருப்புகள், அலுவலகங்களில் பொருத்தப்படுகின்றன.
மலச்சிக்கல், வீக்கம், மூல நோய் போன்ற பாதிப்புகள் இளைஞர்கள் மத்தியில் அதிகரித்து வருவதைக் குறிப்பிட்டு, அதற்கும் இதற்கும் இடையே தொடர்பு இருக்கக்கூடுமா என்று மருத்துவர் கயல்விழியிடம் கேட்டபோது, "கழிவறை வடிவங்களை மட்டுமே அடிப்படையாக வைத்து ஒருவரது உடல் பாதிப்புகளை முடிவு செய்துவிட முடியாது. உணவுமுறை, வழக்கமாக உட்காரும் முறை, மன அழுத்தம் எனப் பலவும் அதற்குப் பங்கு வகிக்கிறது," என்று கூறினார்.
இந்தியாவில் தற்போது இருவிதமான கழிவறை முறைகளும் பழக்கத்தில் உள்ளதைக் குறிப்பிட்ட அவர், "குடல் ஆரோக்கியத்தைப் பேணும் வகையில் நார்ச்சத்து மிக்க உணவுகளை உட்கொள்வது, உடலுக்குத் தேவையான தண்ணீரைப் பருகுவது போன்ற பழக்கங்களை முறையாகப் பின்பற்றினால், எப்படிப்பட்ட கழிவறையைப் பயன்படுத்தினாலும் சரி, மலச்சிக்கல் பிரச்னைகளில் இருந்து விடுபடுவதில் எந்த இடையூறும் இருக்காது," என்றும் கூறினார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு